பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2005

இரயில் சிநேகம்

பொது :: 7 மறுமொழிகள் »

நீண்ட இரயில் பயணங்களில் சீக்கிரத்தில் போரடித்துப் போய்விடும். எவ்வளவு நேரம்தான் படிப்பது, வேடிக்கை பார்ப்பது. அதுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் வெளியே பார்க்கக்கூட முடியாது. இதனால் சக பயணிகளிடம் பேச்சுக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வரும். சின்னசின்ன வார்த்தைகள். புன்சிரிப்பு. பின் பேப்பர் பரிமாற்றம். பின் குசல விசாரிப்பு. “எங்க வேலை பாக்கிறீங்க?”- இதிலே ஆரம்பிக்கும். பின் “உங்க வீட்டிலே தண்ணீ வருதா?” (சென்னைவாசியாக இருந்தால் இந்தக் கேள்வியை மூளையின் பங்கெடுப்பு இல்லாமலேயே வாய் தானாகக் கேட்கும்!) போன்ற விசாரிப்புகளைக் கடந்து சிறிது நேரத்தில் பேச்சு நெருக்கமாகிவிடும். இவ்வித உரையாடல்களின் முத்தாய்ப்பாக "நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்" என்ற மன நெகிழ்ச்சியுடனான அழைப்புகள் கொடுக்கப்படும். பலவித பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதிகள் அளிக்கப்படும்.

ஒரு விநோதமான விஷயம் என்னவென்றால், சாதாரணமாக பிறரிடம் மனம் விட்டுப் பேசாத உம்மணாமூஞ்சிகள்கூட இதுபோன்ற நேரங்களில் தங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடும்ப சமாசாரங்கள் போன்றவற்றை கொஞ்சம் மனம் திறந்து பேசுவார்கள். அந்த பயணச் சூழ்நிலை அதுபோல் செய்ய வைக்கிறது என்று என்ணுகிறேன். வண்டியைவிட்டு இறங்குமுன் கையெல்லாம் கொடுத்து உருக்கமாக விடைபெறுதலும் நடக்கும். ஆனால் அவரவர் தத்தம் கூண்டுக்குச் சென்றடைந்தபின் இந்த அறிமுகங்கள் (பெரும்பாலும்) முழுதும் மறந்து போய்விடுகின்றன. ஏன் இப்படி? பயணத்தின்போது நம் மனத்தில் இறுக்கமில்லாத ஒரு நிலை; நம்வாழ்வில் ஒன்றியுள்ள பல அன்றாடப் பிரச்னைகள் தலைதூக்கி "இதோ, என்னைப்பார் முதலில்" என்று கூவாமல் ஒதுங்கியிருப்பது - இது போன்ற சூழ்நிலையால்தான் மனிதன் நீண்ட பயணங்களின்போது தன் அடிப்படை இயல்பிலிருந்து சிறிது வேறுபட்ட அணுகுமுறை கொள்கிறான் என்று என்ணுகிறேன். ஆனால் அன்றாட "ரொட்டீனு"க்கு திரும்பியவுடன் இவையெல்லாம் கவனத்தில் வருவதில்லை. ஆகையால்தான் ஆழமில்லாத உறவுகளைக் குறிக்க "இரயில் சிநேகிதம் போல" என்ற சொற்றொடர் வழக்கிலிருக்கிறது என்று நினைக்கிறேன்.
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1244 முறை) ::

ஓவியம் படைக்கும் ஓவியர்!

பொது :: 2 மறுமொழிகள் »

மனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை! ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட "நெட்"டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் "அகலப் பாட்டை" (Broadband) போட்டுவிட்டபின் "வளை"யில் குடியிருப்பவர்களெல்லாம் "வலை"யில் குடியிருக்கத் தொடங்கி விட்டனர்! வெளிநாட்டில் வாழும் நம் மக்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் வசிக்கும் நாடுகளில் இணையம் ஒரு பெரிய குழாயில் வந்து byte-களைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது!

ஓவியர் கனேஷ்இந்த சூழ்நிலையில் தம் தாய்மொழியிலேயே இணையம் காணப்படுமானால் அது எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்! அந்த தாகத்தைத் தணிப்பதற்காகத் தோன்றியுள்ள பல இணைய இதழ்களில் முக்கியமான ஒன்று "தமிழோவியம்" ஆகும். அது ஒரு பல்சுவை இதழாக வாரந்தோரும் மலர்கிறது. பல பிரபல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அதில் அளிக்கிறார்கள். அதை நடத்தும் திரு. கனேஷ் சந்திரா அவர்கள் ஒரு பல்துறை வல்லுனர். பழகுவதற்கு எளியவர். தமிழின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரை யாஹூ தூதுவன் மூலம் நான் கண்ட பேட்டியினை உங்கள்முன் இடுகிறேன். இனி அவரிடமிருந்தே தமிழோவியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஆம், அவர் சிறந்த ஓவியரும் ஆவார்!
=========================================================

தமிழோவியம் யாரால், எப்படி, எப்போது தொடங்கப்பட்டது ?

எனது நண்பர் அருணும், நானும் சேர்ந்து ஜன. 1 2002 தொடங்கினோம். அருண் ஆசிரியர் பொறுப்பையும், நான் இணைய நிர்வாக பொறுப்பையும் ஏற்றோம்.
திரு. முத்துநெடுமாறன் உதவியால் டிஸ்கி 1.7 இயங்கு எழுத்துருவில் தமிழோவியம் முதன் முதலில் அறிமுகம் ஆனது. தமிழோவியத்தில் தினமும் புதிதாய் ஏதாவது இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அப்போது தினமும் ஒரு பகுதியை வலையேற்றம் செய்து வந்தோம்.

2003 ஆண்டில் அருண் திரைப்பட துறையில் கலக்க விரும்பியதால், 2003 செப்டம்பரில் மீனாக்ஷி ஆசிரியராய் பொறுப்பேற்றார்.

பின்னர் 2003 இறுதியில் சென்னை சென்றிருந்த போது, நண்பர் பா.ராகவனின் உதவியால் பல எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர்களில் பலர் தினசரியை விட வார இதழ் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். ஆகவே 2004ம் ஆண்டு முதல் தமிழோவியத்தை வார இதழாக மாற்றினோம்.

ஆனால் ஒன்று. தினசரியோ / வார இதழோ தமிழோவியத்தின் தாரக மந்திரம் 'infotainment"

இது ஒரு "ஒன் மேன் ஷோ" போல இருக்கிறதே ?

இல்லை நிச்சயம் இல்லை. முன்வரிசையில் என் பெயர் வருவதால் அப்படித் தோன்றும். எங்கள் அணியில்:

ஆசிரியர் : மீனாக்ஷி

ஆலோசகர்கள் : பாஸ்டன் பாலாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி

தொடர்பாளர் : ரஜினி ராம்கி

மற்றும் ஆர்வத்தோடு வாரா வாரம் கட்டுரைகள் எழுதும் கட்டுரையாளர்கள் என பலர் இதன் பின்னணியில் உள்ளனர்.

திண்ணை, திசைகள் போல் இலக்கிய இதழ்களாக இல்லாமல், விகடன், குமுதம் போல் கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் தமிழோவியம் தத்தளிப்பது போல் தெரிகிறதே ?

நான் முன்பு சொன்னது போல் இது ஒரு infotainment site. தமிழோவியத்தில் இதுதான் வரும் என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் பலதரப்பட்ட விஷயங்களை தருகிறோம்.
முக்கியமாக கிசுகிசுவோ, மலிவான படைப்புகளோ, தனி மனித துதிகளோ இதில் இருக்காது.

தமிழோவியத்தின் வளர்ச்சி மற்று எதிர்கால திட்டங்கள் என்ன ?

தமிழோவியம் தொடங்கிய காலத்திலிருந்து Rediff.com/Sulekha.com போல் ஒரு முழுமையான போர்டல்லாக ஆக்க வேண்டும் என்பதே இலக்கு. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். மின்புத்தகங்கள், தமிழ்ப்பதிவு என்று பல வழிகளில் முயன்று வருகிறோம்.

இது முற்றிலும் தமிழ் சார்ந்து, தமிழில் வருவதால் வாசகர்களின் எண்ணிக்கை பெருக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

வாசகர்களின் எண்ணிக்கை வளராமலிருப்பதற்கு தமிழ் எழுத்துருக்கள் பிரச்னைதான் காரணமா? உலாவியை(browser)த் திறந்தவுடன், எந்தவித திருகாணி வேலை செய்யாமலேயே, (out of the box) தமிழ் எழுத்துக்கள் தோன்றும் காலம் எப்போது வரும்?

நீங்கள் சொல்வது ஒரு முக்கிய காரணம்.

இப்போதைக்கு Out of the box ஆக Windows XP ல் 'லதா' எழுத்துரு கிடைகிறது.
இணையத்தில் யுனிகோட் பிரபலம் அடைந்து வருகிறது.
Internet explorer / Netscape 7.2 உலாவிகளில் யுனிகோட் சரியாகத் தெரிகிறது.

தமிழகத்திலிருந்து வரும் நாளிதழ்களும், வார இதழ்களும் யுனிகோடிற்கு மாறினால், யுனிகோடிற்கு பெரும்பான்மை கிடைக்கும்.

புதிய OSகளும், உலாவிகளும் தமிழை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்.

தமிழோவியத்தின் அடிப்படை டெக்னாலஜி என்ன ?

மைக்ரோஸாப்ட் ASP யில் இயங்குகிறது. முதலில் Tscii 1.7ல் இயக்கி வந்தோம், இப்போது யுனிகோடில். தமிழோவியத்திற்கென ஒரு CMS (content Management system) ஐ உருவாக்கியிருக்கிறேன். இது XML/XSL/SQLServer ஆகியவற்றின் பின்புலத்தில் வேலை செய்கிறது.

அடிப்படையில் நான் ஒரு system analyst. நமக்கு முழு நேர வேலையே இணைய பக்கங்கள் வடிவமைப்பதுதான். ஆகவே இந்த ஏற்பாடு.

இத்தனை இலவச/ ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இருக்க, சொந்தமாய் எழுத வேண்டிய அவசியம்?

எந்த ஒரு படைப்பாளிக்கும் தன் திறமையில் சின்ன கர்வம் இருக்கும். முழு நேர கணிணி பொறியாளராக இருந்து ஓபன் சோர்ஸ் மென்பொருட்களை உபயோகிக்க மனம் ஒப்பவில்லை. மேலும் நாமே செய்வதால் புதிதாய் கற்றுக்கொண்ட திருப்தியும் கிடைக்கிறது.

We don't want to reinvent the wheel. ஓபன் சோர்ஸ் ஒரு வசதி அதுவே எல்லாம் இல்லை. நமக்கு துணியோ, அரிசியோ யாரும் இலவசமாய் தந்து சமைத்துகொள், தைத்துகொள் என்று தருவதில்லை. ஆகவே எனக்கு ஓபன் சோர்ஸ் மேல் ஒரு பெரிய அபிப்பராயம் இல்லை.

அதற்காக மைக்ரோஸாஃப்டின் மென்பொருட்களையே பாவிக்க வேண்டுமா? இலவச "தளையறு மென்கலன்கள்" பல உள்ளனவே. அவை சிலவில்லாமல் இதே வேலைகளை செவ்வனே செய்யும் திறன் கொண்டவைதானே? அதிருக்கட்டும். கணினித் துறையில் உள்ளவவர்கள்தானே "திறமூல" சேவைகளில் தீவிரமாக உள்ளனர்? அவர்களின் மத்தியில் உங்களுக்கு ஒரு ஓட்டுகூட விழாது!

அலுவலகத்தில் மைக்ரோஸாப்ட் ASP மற்றும் ASP.NET உபயோகிக்கிறோம். இது போன்ற இலவச மென்கலன்கள் பிரபலம் ஆவதற்கு முன்பே மைக்ரோஸாப்ட் வழியில் நெடுதூரம் வந்து விட்டேன். ஆகவே தமிழோவியத்திலும் ASP உபயோகம் செய்யப்படுகிறது. இதில் புதிதாய் படிப்பது அலுவலக பணிகளுக்கு உபயோகமாய் இருக்கிறது.

ஒரு வேளை கணிணி பொறியாளனாய் இல்லாமல் இருந்திருந்தால் நானும் நீங்கள் சொல்வது மைக்ரோஸாப்டை ஒரு கை பார்த்து, இலவச தளையறுகளை தழுவியிருப்பேனோ என்னாவோ.

மணிக்கணக்காய் புதிய புதிய மென்கலன்கள் செய்து, அதை இலவசமாய் கொடுத்து பின்பு ஐயா முடிந்தால் Paypal-லுங்கள் என்பது பரிதாபமான விஷயம். இவர்கள் ஓட்டு இல்லாவிட்டால் பரவாயில்லை, நான் வேறு தொகுதியில் நிற்கிறேன்.

இணைய பத்திரிகைகளில் 'ஸ்ரீராமஜெயம்' எழுதினால்கூட பிரசுரம் செய்து விடுவார்கள் என்று ஒரு பேச்சு உள்ளதே ? ஏன் அப்படி ?

இது சற்று மிகைப்படுத்த பட்ட பேச்சு. ஒரு சில பத்திரிகைகள் புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த அப்படி செய்கிறார்கள். அது அவர்களுக்கே வினையாக முடிகிறது.

வலைப்பதிவுகள் வந்த பிறகு இணைய பத்திரிகைகளில் எழுதுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், சொந்த வலைப்பதிவில் எதைப்பற்றியும் எழுதலாம், எழுதாமலும் இருக்கலாம். சுதந்திரம். இப்படி பலர் ஒதுங்குவதால் சரி, கிடைக்கிற கட்டுரையைப் போடலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

அச்சு பத்திரிகைகளில் துணுக்கு எழுதினால் கூட ஐம்பதோ, நூறோ கிடைக்கிறது. இணையத்தில் அப்படி இல்லையே, ஏன் ?

அதில் போதிய வருமானம் இருக்கிறது சின்ன துணுக்குகளுக்கு கூட தருகிறார்கள். விரைவில் இணையத்திலும் அது போல் நடக்கும், நம்பிக்கை இருக்கிறது.

மின்புத்தகங்கள் தொடங்கிய போது இருந்த வேகம் இப்போதும் இருக்கிறதா ?

அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் தமிழோவியத்தில் பல புதிய மின் புத்தகங்கள் கிடைக்கும்.

தமிழோவியம் வலைப்பதிவுகளை ஏன் blogger.com போல் ஏன் பொதுவில் வைக்கவில்லை?

ப்ளாகர் போல் செய்ய சில infrastructure பிரச்சனைகள் இருக்கிறது. ஆகவே அதை பொதுவில் வைக்க முடியவில்லை. விருப்பப்படும் அன்பர்களுக்கு அந்த வசதியை செய்து தருகிறோம்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி உங்களை பாதிக்கும் என்ற பயம் இருக்கிறதா ?

ஏன்? எதற்காக பயப்பட வேண்டும். சொல்லப்போனால் வலைப்பதிவின் வரவு மிக மிக நல்ல விஷயம். நிறைவான நமக்கு பிடித்த எழுத்துக்களை இனம் காண இது பெரிதும் உதவுகிறது.
அனைவரும் நன்றாக எழுதினாலும், ஒரு சிலரின் எழுத்துக்கள் நமக்கு பிடித்து போகும். இவர் விஷயம் தெரிந்து எழுதுகிறார், இவர் பொழுது போகமல் எழுதுகிறார், இவருக்கு நகைச்சுவை எளிதாக வருகிறது, இவர் வம்பிழுக்க எழுதுகிறார் என்று எழுத்தாளர்களை தரம் பிரித்து அதில் நமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

இதை சிறப்பாக செய்ய உதவும் தமிழ்மணத்திற்கு ஒரு சபாஷ்.

அடிக்கடி பத்திரிகையின் வடிவமைப்பை மாற்றுவது தேவைதனா?

இணையம் வளர்ந்து வரும் வேகத்திற்கு புதிது புதிதாய் எதுவும் செய்யாவிட்டால் கமர்ஷியல் போட்டியை சமாளிக்க முடியாது. சாமான்ய வாசகர்களை மீண்டும் மீண்டும் வரவழைக்க மாற்றம் தேவைதான். சமயத்தில் இணைய நிர்வாகிகளுக்கு அதுவே பிரச்சனையாகிவிடும். அழகாய்/புதுமையாய் செய்கிறேன் என்று ஓவராக செய்துவிடும் அபாயம் இருக்கிறது.

உங்களின் பொழுது போக்கு ?

டி.வி பார்ப்பது, Videography and editing, மேடை நாடகங்களில் நடிப்பது.

உங்கள் நாடகங்கள் மற்றும் இலக்கியத்துறை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

நாடகத்துறை அனுபவங்கள் என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நியுஜெர்சி 'ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ்' மற்றும் நியுஜெர்சி 'USIA' நாடக குழுவில் பங்குபெற்று நடித்து வருகிறேன். நாடக மேடை அனுபவங்களை விட ஒத்திகை அனுபவங்கள் மிகவும் அருமையானவை.

உங்கள் பிறப்பு, வளர்ப்பு, சேட்டைகள், ஊர், படிப்பு, குடும்பம்……….?

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். படித்தது MCA. கடந்த ஐந்தரை வருடங்களாக நியுஜெர்சியில் ஜாகை. அப்பா - S. சந்திரசேகரன் , அம்மா - சந்திரா தற்போது சென்னையில் இருக்கிறார்கள் . மனைவி - மீனாக்ஷி.

தமிழோவியம் படைப்பதால் நீங்கள் எத்தகைய நிறைவைப் பெறுகிறீர்கள்?

ஒரு மன நிறைவு, பலர் மத்தியில் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது.

ஆசைக்கு தமிழோவியம், தோசைக்கு??

Merril Lynch-ல் முழு நேர வேலை!

:: (பார்வை 1358 முறை) ::

தமிழ் வாழ்க!

பொது :: 9 மறுமொழிகள் »

ழகரம்இணையத்தில் நானே முதன்முதலில் தமிழில் எழுதி, அதனை வலையேற்றியபின் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பையும், மகிழ்ச்சியும் மனநிறைவையும் என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. ஆனால் இங்கு பரவலாக அன்றாடம் மலர்ந்து நிற்கும் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றைத் தமிழ்மணம் மூலமாகப் படிக்கும்போது பெரும்பாலும் மகிழ்ச்சியும், சில சமயம் விசனமும் தோன்றுகிறது.

சமீபத்தில் சன் டிவி காலை நிகழ்ச்சியில் ஒரு தமிழறிஞரைப் பேட்டி கண்டார்கள். அவர் பல்வேறு மொழிகளில் தென்படும் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் இணைத்து, இதிலிருந்து அது தோன்றியதா, அதிலிருந்து இது கடன் பெற்றதா என்று நாம் குழப்பமடையும் வகையில் விவரித்துக் கொண்டிருந்தார். எல்லா மொழிகளிலும், காலப்போக்கில் மக்கள் பல மொழிபேசும் மக்களுடன் கலந்து உறவாடும்போது பிறமொழிச் சொற்கள் கலப்பது தவிர்க்க இயலாது. இதனை மொழி வல்லுனர்கள் ஒவ்வொரு சொல்லின் ஆணிவேரையும் தோண்டி ஆரய்ந்து இதன் மூலம் அது என்று பதிவு செய்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்த விவரத்தைக் காணலாம். அது அந்த சொல்லைப் பற்றிய மேலதிக விவரம் என்ற அளவில் மட்டும் வாசித்துவிட்டு, அந்தச் சொல் எதைக் குறிக்கிறது, அதனை எந்த முறையில் ஒரு வாக்கியத்தில் இடலாம் என்று மட்டும் தெரிந்து கொண்டு அகராதியை மூடிவிடுகிறோம். மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும், இலக்கியத்தைப் பாடமாகக் கற்பவர்களுக்கும், எழுத்தாண்மைத்துறையில் உள்ளவர்களுக்கும் இந்த etimology, philology என்றழைக்கப்படும் விவரங்கள் பயன்படும். அவ்வளவே. அதனைத்தாண்டி, "இந்தச் சொல் அங்கிருந்து இங்கு வந்ததல்ல, இங்கிருந்துதான் அங்கு சென்றது" என்று சிலர் வாதிடத் தொடங்குவதால்தான் விபரீதமான விளைவுகள் தோன்றுகின்றன. வெள்ளையர்கள் நம் நாட்டை ஆள்வதற்கான தார்மீக நியாயத்தைக் கற்பிப்பதற்காக "ஆரியப் படையெடுப்பு" என்னும் புனைகருத்தை (Aryan invation theory) வெளியிட்டு அதனை எல்லோரும் நம்பும் வண்ணம் பரப்பினார்கள். நம்மிடையே பெருகி நின்ற பிளவுகளுக்கு இது மேலும் தீனி போடுவதுபோல் ஆகியது. அதற்கு ஆதாரமாக ஜெர்மனியிலும், ரஷ்யாவிலும் மற்றும் மத்தியக் கிழக்கு ஆசியாவிலும் வழங்கும் மொழிகளுக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவாக உள்ள சொற்களை வைத்து ஆராய்ச்சி செய்து மாக்ஸ்ம்யுல்லர் போறவர்கள் "அங்கிருந்து வந்தவர்கள்தான் ஆரியர்கள், ஆதிகுடிகள் திராவிடர்கள்" என்னும் கட்டுக்கதைகளைப் பரப்பினார்கள். ஆரியர்கள் படையெடுத்தார்களா, குடியேறினார்களா என்றெல்லாம் வாக்குவாதம் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதனைப் பற்றி பலர் பல புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்கள். கூகிளில் சென்று தேடுங்கள் - 75400 சுட்டிகள் கிட்டும்!
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1297 முறை) ::

ஒரு வளையலின் கதை

என்ன நடக்குது இங்கே :: Comments Off

ஒரு வளையல் என்னை இந்தப் பாடு படுத்தப்போகிறதென்று என்னிடம் எந்த ஜோஸியரும் கூறவேயில்லை. ஹிந்துவில் வரும் சூரிய முறை ராசிபலனோ, சந்திரமுறை ராசி பலனோ சிறிதும் கோடி காட்டவில்லை.

நடந்தது இதுதான். சென்ற வாரம் புது டில்லிக்குச் செல்ல "தமிழ்நாட்"டில் ஏறி அமர்ந்தேன். எதிர்ப்் படுக்கை காலியாக இருந்தது. நாக்பூர் கோட்டா என்றார்கள். வண்டி கிளம்பும்போது ஒரு பெண்மணி (இருபதின் ஒரமோ, முப்பதின் துவக்கமோ என்ற தோற்றம்) ஏறி அமர்ந்தார். அவருடன் பிரயாணம் செய்யும் பேறு பெற்றமைக்காக எங்களை நோக்கி ஒரு "பளீர்" சிரிப்பை சிந்தினார் (அந்தத் தருணத்தில் ஒரிரண்டு பிராயம் கம்மியாயிற்று). அவர் செய்த சேட்டைகளை என் கையிலிருந்த புத்தகத்தின் மேல் விளிம்பிணூடே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

("சீ, இதென்ன கெட்ட பழக்கம்." — "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. 'ரசித்தேன்'னு சொன்னவுடனே ஏதோ தப்பர்த்தம் பண்ணீட்டீங்க போல. அவிங்க பொட்டியை மூடினாங்க, தொறந்தாங்க. மறுபடி, மறுபடி. இடையிடையே செல்லிடைப் பேச்சு. ஒரே சங்கதியை மீண்டும் மீண்டும்." — "அப்படி என்னதான் பேசினாங்க?" — "யாருக்குத் தெரியும். அத்தனையும் தெலுங்கு")

சீட்டுப் பரிசோதகரிடம் அந்தப் பெண்மணி "சீட்டு" கேட்டார். நடைமேடை அனுமதியுடன்தான் வண்டி ஏறியிருந்தார் என்பது தெரிந்தது. அவர் சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு ரூ. 1200 என்றார். "சரக்"கென்று ரூபாய் நோட்டுகளை உருவிக் கொடுத்தார் அந்த பணக்காரக் குடும்பத்துப்் பெண். உடம்பு பூரா மஞ்சள் உலோகக் கஜானாதான்!

லேசாக பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணிய நான் எதை வைத்து ஐஸை உடைப்பது என்று கணக்குப் பண்ணிக் கொண்டிருந்த வேளையில், "மீரு விஜயவாடாவா" என்று கேட்டுக் கொண்டே இன்னொரு பயணி மீதமிருந்த படுக்கைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து "மாக்கு மாக்குனு" மாட்லாடிக்கொண்டிருந்ததால், அரவத்தில் இடைச் செருகலாமென்ற என் முயற்சி வீண். "சரி, அதனாலென்ன, அப்படி ஒன்றும் அழகில் சேர்த்தியில்லை. கல்லூரி நாட்கள் போலிருந்தால் 45 மார்க்தான் போட்டிருப்பேன்." அதற்குள் பணியாளர்கள் படுக்கையை விரித்து வைத்தார்கள். நானும் பி.ஜி.வுட் ஹௌஸை விரித்தேன்

காலையில் எழுந்து பார்த்தால் மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 870 முறை) ::

மடலாடும் மௌனங்கள்

குழுமங்கள் :: மறுமொழி இனிமேல்தான் »

எனக்கு இரண்டுதான் பழக்கம்.
ஒன்று ஒரு கசப்பான அனுபவம். ஆனால் அங்கு நாலும்தான் வருமென்பதால் பரவாயில்லை.
மிகுந்த சலசலப்பாக இருந்த இடம் இப்போ சந்தடி குறைந்து கொண்டே வரும் டிரெண்டைக் காண முடிகிறது.

மார்ச் 2004 = 1062
மார்ச் 2005 = 742

ஏப்ரல் 2004 = 926
ஏப்ரல் 2005 = 247

நான் அடிக்கடி பங்கெடுக்கும் கிளப்போ 'ஜிலோ' - வென்றிருக்கிறது. அவ்வப்போது ஹரி கிருஷ்ணன் பா.ச. பகுதி - 2 பாட்டு 5 என்று எழுதுவார். அனைவரும் படித்து மௌனமாகிவிடுவர். பின் அன்புடன் ஒருவர் வந்து தலைகாட்டுவார். அவ்வளவுதான். இப்படியே போனால் அது ஒரிஜினல் கச்சேரி ரோடு கிளப்பைப் போன்றே "பொய்யாய், கனவாய், பழங்கதையாய்" ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆஸாத் போல் ஓரிருவர் ஏதோ சுலுப்பிவிட்டுப் பார்த்தனர். ம்ஹூம். நானும் "பார்ப்பனீயம்" என்று கூட எழுதிப் பார்த்தேன். அதற்கும் "பெப்பே"தான்! ஒருவேளை டோண்டுவின் பின்னூட்டக் குப்பியைத்தான் ரொப்புவார்கள் போலிருக்கிறது!

ஆமாம், இதற்கு என்ன காரணம்? வலைப்பூக்களின் பெருக்கத்தின் தாக்கமா? இயல்பான சோர்வா?(burnout?) முக்கிய கர்த்தாக்களின் விருப்பமின்மையா? அல்லது " வழுவல கால வகையினானே" என்று கழண்டுவிடுவதுதான் வழியா?

அறிஞர்கள்தான் பதிலுரைக்க வேண்டும்.

:: (பார்வை 931 முறை) ::

இல்லவே இல்லை!

பொது :: மறுமொழி ஒன்று »

அரசு அலுவலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்), அவர்கள்தம் திருமணத்தின்போது எவ்வளவு வரதட்சிணை பெற்றார்கள் என்பதை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. விவரம் இதோ.

இதோ அறிவித்துவிட்டேன் - நான் வரதட்சிணை வாங்கவில்லை, வாங்கவேயில்லை!

உண்மையைச் சொல்லப் போனால், யாராவது கொடுக்கத் தயாராயிருந்தால்தானே வாங்குவதற்கு!

ஆமாம், யார் உண்மையை அறிவிப்பார்கள்? ஒருவேளை மனசாட்சி குடையட்டுமே என்று எண்ணினார்கள் போலிருக்கிறது!

சௌதியில் பெண்கள் நிறைய வரதட்சிணை வாங்குவதாக சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு திசைகள் இதழில் படித்த ஞாபகம். அந்த நாட்டில் இதுபோன்ற சட்டம் பெண்களுக்கு மட்டும் என்று இயற்றுவார்கள் போல!

:: (பார்வை 698 முறை) ::

திரை விலகுமா?

என்ன நடக்குது இங்கே :: 5 மறுமொழிகள் »

சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவர் ஒரு மூத்த அரசுத்துறை அதிகாரி. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? நடிகர் விவேக். நிகழ்ச்சி தொடங்கி வெகு நேரம் கழித்து, வரவேற்புரையெல்லாம் கடந்து, அந்த அரசு அதிகாரி தன் உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மிகவும் ஆர்ப்பாட்டமாக வந்தார் விவேக் - ஒரு கசமுசா சட்டை, குள்ளமான உருவம், முழு மேக்கப், மேடையில் ஏறியபின் ஒரு பெரிய கும்பிடு!

அந்த அதிகாரி பாவம். அவர் தயாரித்து வந்திருந்த உரையை ஏராளமான புள்ளி விவரங்களுடன் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்வையாளர் மத்தியிலிருந்து தொடர்ந்து கைதட்டல்கள். "ஓ" என்ற இரைச்சல். அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பேச்சில்தான் ஏதோ குறை என்றெண்ணி "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். புள்ளிவிவரங்கள் அவ்வளவாக சுவாரஸியமாக இருக்காதுதான். ஆனாலும் என் கடமையைச் செய்யவேண்டாமா" என்று கூறிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் கைதட்டல், கூச்சல், "விவேக் பேசட்டும்".

ஆச்சு, அந்த ஆளை விரட்டியாயிற்று. அவரும் "கிரைண்ட்" பண்ணிக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம். விவேக் மைக்கைப் பிடித்தார். "என்னை வாழவைக்கும் ரசிகப் பெருமக்களே!" - பெருத்த கரகோஷம். முதலில் தனக்குமுன் பேசியவரை மறைமுகமாக கிண்டலடித்தார், "என்ன, ரொம்ப நொந்து போயிருக்கீங்களா? அன்ரிஸர்வ்டுல பிரயாணம் பண்ணினவங்க மாதிரி களைச்சுப் போயிருக்கீங்க". பிறகு அரதப் பழசு இரெயில்வே சம்பந்தமான ஜோக்குகள் சிலவற்றை தட்டுத் தடுமாறி உதிர்த்தார். பிறகு எங்கே விட்டுவிடுவாரோ என்று நினைத்த "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" அயிட்டத்தையும் அவிழ்த்து விட்டார். பிறகு? பிறகென்ன, கைவசம் சரக்கு அவ்வளவுதான். "எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள், நல்ல உள்ளங்களே" என்று விளம்பரம் வைத்தார். சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி, ஒரே சொதப்பல்தான்.

இதிலிருந்து நம் மக்களுக்கு தெளிவாக ஒன்று புரிதல் வேண்டும். நடிகர்களுக்கு வரும் புகழுக்கு முக்கிய காரணம், வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களின் முக்கிய பங்களிப்புதான். அவர்கள் இல்லையெனில் இவர்கள் வெறும் ஓட்டைக் காலணாதான்! ஆனால் நம் மக்கள்தான் சினிமா நடிகர்களின்மேல் உள்ள மோகத்தில் மயங்கியிருக்கிறார்களே! அன்று பல சின்னஞ்சிறிசுகள் விவேக் என்ன உளறினாலும் சிரிப்பு என்று மயங்கி நின்றதைக் கண்டேன். அவரைக் "கண்ணால் காண்பதே எங்கள் பாக்கியம்" என்று முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள் பலர்.

என்று வரும் இவர்களுக்கு விவேகம்?

:: (பார்வை 1011 முறை) ::

இரத்தினச் சுருக்கம்!

கணினி :: Comments Off

துளித்துளிஇந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது! தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், "அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி" என்பதுபோல்! நான் சொல்வது உலகிலேயே மிகச் சிறிய வலைத்தளத்தைப் பற்றி. சரி, அதைப் பார்த்தேயாக வேண்டுமா?
இங்கே சென்றால் தெரியப் போகிறது!

ஆனால் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அலங்காரம் செய்யவேண்டி வந்து, அதற்கு சம்பந்தமில்லாதபடி அநியாயமாக "மூக்குக் கண்ணாடி" என்று பெயரிட்டு, உங்கள் மூக்குக்கு என் மேல் கோபம் வந்தால் நான் ஜவாப்தாரியல்ல! அதுவும் என் இந்தப் பதிவுக்கு அப்புறம்!

:: (பார்வை 901 முறை) ::

ஆஸ்கார்!

பொது :: Comments Off

சரித்திரம் படைப்போம்

சமாதானம ஒருநாள் நிச்சயம்.

(நன்றி :: ஹிந்து)

வெற்றியா, தோல்வியா?

வெற்றியா, தோல்வியா?

(நன்றி :: தினமலர்)

:: (பார்வை 722 முறை) ::

கட்டங்கள் கஷ்டங்கள்

பொது :: 12 மறுமொழிகள் »

திரைப்படங்களும், ஊடகங்களூம், நாவல்களும் ஏதோ காதல் செய்வதுதான் இளைஞர்களின் வாழ்வின் மிக அத்தியாவசியமான கடமை போன்ற - அன்றாடம் சாப்பாடு சாப்பிட்டு பாத்ரூம் போவது போல் - ஒரு தோற்றத்தை உண்டாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அதைப் பற்றியே துவைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. 45-50 வயது தாத்தாக்களெல்லாம் (டை, விக், பான்கேக் சகிதம்) கல்லூரி இளைஞர் வேஷம் போட்டுக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கால இளைஞர்கள் (நகரங்களில் வசிக்கும் படித்தவர்களைக் குறிப்பிடுகிறேன்) அப்படி ஒன்றும் காதல் திருமணம் செய்வதில் அவ்வளவு முனைப்பாய் இருப்பதுபோல் தோன்றவில்லை. இன்றைய நிலையில் எல்லோர் மனமும் தன் எதிர்காலத்தை நிலைப்படுத்தும் வேலையிலேயே வியாபித்து நிற்கின்றது. They have become so career-oriented that they have neither the time nor inclination for indulging in such fancies!

எனக்குப் பழக்கமான ஒரு இளம்பெண்ணை அன்றைய தினம் இஸ்பஹானி சென்டரில் சந்தித்துக் கேட்டேன், "என்ன மத்ஸ், BPO வேலையிலே சேர்ந்தாச்சு; அடுத்தது யாராவது பையன்களை லவ் பண்ணி அதிலே ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. பார்க்க கொஞ்சம் பரவாயில்லாம இருக்கேயே, பசங்க ஒத்தனும் கண்டுக்கல்லையா" அப்படீன்னு கேட்டேன். அதற்கு அவள், "அங்க்ஸ், கல்யாணமெல்லாம் பெரிய responsibility. அதெல்லாம் அப்பா, அம்மா பாத்துக்குவாங்க. எனக்கு லைஃப்ல செட்டில் ஆகணும். MBA பண்ணனும் (சில படிப்பெல்லாம் "படிக்கிறது" கிடையாது - "பண்ணறது" தான்!). கைல கொஞ்சம் காசு சேக்கணும், நல்லா டிரெஸ் பண்ணனும், ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கணும். அவ்வளவ்தான்" இப்படிப் போகிறது அவளுடைய சிந்தனைகள்.

சரி. இவர்களின் பெற்றோர்கள் செயல்பாடுதான் என்ன? மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1537 முறை) ::

 

5-ல் இது-3«12345»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in