ஓவியம் படைக்கும் ஓவியர்!

மனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை! ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட “நெட்”டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் “அகலப் பாட்டை” (Broadband) போட்டுவிட்டபின் “வளை”யில் குடியிருப்பவர்களெல்லாம் “வலை”யில் குடியிருக்கத் தொடங்கி விட்டனர்! வெளிநாட்டில் வாழும் நம் மக்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் வசிக்கும் நாடுகளில் இணையம் ஒரு பெரிய குழாயில் வந்து byte-களைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது!

Ganesh Chandraஇந்த சூழ்நிலையில் தம் தாய்மொழியிலேயே இணையம் காணப்படுமானால் அது எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்! அந்த தாகத்தைத் தணிப்பதற்காகத் தோன்றியுள்ள பல இணைய இதழ்களில் முக்கியமான ஒன்று “தமிழோவியம்” ஆகும். அது ஒரு பல்சுவை இதழாக வாரந்தோரும் மலர்கிறது. பல பிரபல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அதில் அளிக்கிறார்கள். அதை நடத்தும் திரு. கனேஷ் சந்திரா அவர்கள் ஒரு பல்துறை வல்லுனர். பழகுவதற்கு எளியவர். தமிழின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரை யாஹூ தூதுவன் மூலம் நான் கண்ட பேட்டியினை உங்கள்முன் இடுகிறேன். இனி அவரிடமிருந்தே தமிழோவியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஆம், அவர் சிறந்த ஓவியரும் ஆவார்!
=========================================================

தமிழோவியம் யாரால், எப்படி, எப்போது தொடங்கப்பட்டது ?

எனது நண்பர் அருணும், நானும் சேர்ந்து ஜன. 1 2002 தொடங்கினோம். அருண் ஆசிரியர் பொறுப்பையும், நான் இணைய நிர்வாக பொறுப்பையும் ஏற்றோம்.
திரு. முத்துநெடுமாறன் உதவியால் டிஸ்கி 1.7 இயங்கு எழுத்துருவில் தமிழோவியம் முதன் முதலில் அறிமுகம் ஆனது. தமிழோவியத்தில் தினமும் புதிதாய் ஏதாவது இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அப்போது தினமும் ஒரு பகுதியை வலையேற்றம் செய்து வந்தோம்.

2003 ஆண்டில் அருண் திரைப்பட துறையில் கலக்க விரும்பியதால், 2003 செப்டம்பரில் மீனாக்ஷி ஆசிரியராய் பொறுப்பேற்றார்.

பின்னர் 2003 இறுதியில் சென்னை சென்றிருந்த போது, நண்பர் பா.ராகவனின் உதவியால் பல எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர்களில் பலர் தினசரியை விட வார இதழ் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். ஆகவே 2004ம் ஆண்டு முதல் தமிழோவியத்தை வார இதழாக மாற்றினோம்.

ஆனால் ஒன்று. தினசரியோ / வார இதழோ தமிழோவியத்தின் தாரக மந்திரம் ‘infotainment”

இது ஒரு “ஒன் மேன் ஷோ” போல இருக்கிறதே ?

இல்லை நிச்சயம் இல்லை. முன்வரிசையில் என் பெயர் வருவதால் அப்படித் தோன்றும். எங்கள் அணியில்:

ஆசிரியர் : மீனாக்ஷி

ஆலோசகர்கள் : பாஸ்டன் பாலாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி

தொடர்பாளர் : ரஜினி ராம்கி

மற்றும் ஆர்வத்தோடு வாரா வாரம் கட்டுரைகள் எழுதும் கட்டுரையாளர்கள் என பலர் இதன் பின்னணியில் உள்ளனர்.

திண்ணை, திசைகள் போல் இலக்கிய இதழ்களாக இல்லாமல், விகடன், குமுதம் போல் கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் தமிழோவியம் தத்தளிப்பது போல் தெரிகிறதே ?

நான் முன்பு சொன்னது போல் இது ஒரு infotainment site. தமிழோவியத்தில் இதுதான் வரும் என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் பலதரப்பட்ட விஷயங்களை தருகிறோம்.
முக்கியமாக கிசுகிசுவோ, மலிவான படைப்புகளோ, தனி மனித துதிகளோ இதில் இருக்காது.

தமிழோவியத்தின் வளர்ச்சி மற்று எதிர்கால திட்டங்கள் என்ன ?

தமிழோவியம் தொடங்கிய காலத்திலிருந்து Rediff.com/Sulekha.com போல் ஒரு முழுமையான போர்டல்லாக ஆக்க வேண்டும் என்பதே இலக்கு. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். மின்புத்தகங்கள், தமிழ்ப்பதிவு என்று பல வழிகளில் முயன்று வருகிறோம்.

இது முற்றிலும் தமிழ் சார்ந்து, தமிழில் வருவதால் வாசகர்களின் எண்ணிக்கை பெருக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

வாசகர்களின் எண்ணிக்கை வளராமலிருப்பதற்கு தமிழ் எழுத்துருக்கள் பிரச்னைதான் காரணமா? உலாவியை(browser)த் திறந்தவுடன், எந்தவித திருகாணி வேலை செய்யாமலேயே, (out of the box) தமிழ் எழுத்துக்கள் தோன்றும் காலம் எப்போது வரும்?

நீங்கள் சொல்வது ஒரு முக்கிய காரணம்.

இப்போதைக்கு Out of the box ஆக Windows XP ல் ‘லதா’ எழுத்துரு கிடைகிறது.
இணையத்தில் யுனிகோட் பிரபலம் அடைந்து வருகிறது.
Internet explorer / Netscape 7.2 உலாவிகளில் யுனிகோட் சரியாகத் தெரிகிறது.

தமிழகத்திலிருந்து வரும் நாளிதழ்களும், வார இதழ்களும் யுனிகோடிற்கு மாறினால், யுனிகோடிற்கு பெரும்பான்மை கிடைக்கும்.

புதிய OSகளும், உலாவிகளும் தமிழை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்.

தமிழோவியத்தின் அடிப்படை டெக்னாலஜி என்ன ?

மைக்ரோஸாப்ட் ASP யில் இயங்குகிறது. முதலில் Tscii 1.7ல் இயக்கி வந்தோம், இப்போது யுனிகோடில். தமிழோவியத்திற்கென ஒரு CMS (content Management system) ஐ உருவாக்கியிருக்கிறேன். இது XML/XSL/SQLServer ஆகியவற்றின் பின்புலத்தில் வேலை செய்கிறது.

அடிப்படையில் நான் ஒரு system analyst. நமக்கு முழு நேர வேலையே இணைய பக்கங்கள் வடிவமைப்பதுதான். ஆகவே இந்த ஏற்பாடு.

இத்தனை இலவச/ ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இருக்க, சொந்தமாய் எழுத வேண்டிய அவசியம்?

எந்த ஒரு படைப்பாளிக்கும் தன் திறமையில் சின்ன கர்வம் இருக்கும். முழு நேர கணிணி பொறியாளராக இருந்து ஓபன் சோர்ஸ் மென்பொருட்களை உபயோகிக்க மனம் ஒப்பவில்லை. மேலும் நாமே செய்வதால் புதிதாய் கற்றுக்கொண்ட திருப்தியும் கிடைக்கிறது.

We don’t want to reinvent the wheel. ஓபன் சோர்ஸ் ஒரு வசதி அதுவே எல்லாம் இல்லை. நமக்கு துணியோ, அரிசியோ யாரும் இலவசமாய் தந்து சமைத்துகொள், தைத்துகொள் என்று தருவதில்லை. ஆகவே எனக்கு ஓபன் சோர்ஸ் மேல் ஒரு பெரிய அபிப்பராயம் இல்லை.

அதற்காக மைக்ரோஸாஃப்டின் மென்பொருட்களையே பாவிக்க வேண்டுமா? இலவச “தளையறு மென்கலன்கள்” பல உள்ளனவே. அவை சிலவில்லாமல் இதே வேலைகளை செவ்வனே செய்யும் திறன் கொண்டவைதானே? அதிருக்கட்டும். கணினித் துறையில் உள்ளவவர்கள்தானே “திறமூல” சேவைகளில் தீவிரமாக உள்ளனர்? அவர்களின் மத்தியில் உங்களுக்கு ஒரு ஓட்டுகூட விழாது!

அலுவலகத்தில் மைக்ரோஸாப்ட் ASP மற்றும் ASP.NET உபயோகிக்கிறோம். இது போன்ற இலவச மென்கலன்கள் பிரபலம் ஆவதற்கு முன்பே மைக்ரோஸாப்ட் வழியில் நெடுதூரம் வந்து விட்டேன். ஆகவே தமிழோவியத்திலும் ASP உபயோகம் செய்யப்படுகிறது. இதில் புதிதாய் படிப்பது அலுவலக பணிகளுக்கு உபயோகமாய் இருக்கிறது.

ஒரு வேளை கணிணி பொறியாளனாய் இல்லாமல் இருந்திருந்தால் நானும் நீங்கள் சொல்வது மைக்ரோஸாப்டை ஒரு கை பார்த்து, இலவச தளையறுகளை தழுவியிருப்பேனோ என்னாவோ.

மணிக்கணக்காய் புதிய புதிய மென்கலன்கள் செய்து, அதை இலவசமாய் கொடுத்து பின்பு ஐயா முடிந்தால் Paypal-லுங்கள் என்பது பரிதாபமான விஷயம். இவர்கள் ஓட்டு இல்லாவிட்டால் பரவாயில்லை, நான் வேறு தொகுதியில் நிற்கிறேன்.

இணைய பத்திரிகைகளில் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதினால்கூட பிரசுரம் செய்து விடுவார்கள் என்று ஒரு பேச்சு உள்ளதே ? ஏன் அப்படி ?

இது சற்று மிகைப்படுத்த பட்ட பேச்சு. ஒரு சில பத்திரிகைகள் புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த அப்படி செய்கிறார்கள். அது அவர்களுக்கே வினையாக முடிகிறது.

வலைப்பதிவுகள் வந்த பிறகு இணைய பத்திரிகைகளில் எழுதுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், சொந்த வலைப்பதிவில் எதைப்பற்றியும் எழுதலாம், எழுதாமலும் இருக்கலாம். சுதந்திரம். இப்படி பலர் ஒதுங்குவதால் சரி, கிடைக்கிற கட்டுரையைப் போடலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

அச்சு பத்திரிகைகளில் துணுக்கு எழுதினால் கூட ஐம்பதோ, நூறோ கிடைக்கிறது. இணையத்தில் அப்படி இல்லையே, ஏன் ?

அதில் போதிய வருமானம் இருக்கிறது சின்ன துணுக்குகளுக்கு கூட தருகிறார்கள். விரைவில் இணையத்திலும் அது போல் நடக்கும், நம்பிக்கை இருக்கிறது.

மின்புத்தகங்கள் தொடங்கிய போது இருந்த வேகம் இப்போதும் இருக்கிறதா ?

அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் தமிழோவியத்தில் பல புதிய மின் புத்தகங்கள் கிடைக்கும்.

தமிழோவியம் வலைப்பதிவுகளை ஏன் blogger.com போல் ஏன் பொதுவில் வைக்கவில்லை?

ப்ளாகர் போல் செய்ய சில infrastructure பிரச்சனைகள் இருக்கிறது. ஆகவே அதை பொதுவில் வைக்க முடியவில்லை. விருப்பப்படும் அன்பர்களுக்கு அந்த வசதியை செய்து தருகிறோம்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி உங்களை பாதிக்கும் என்ற பயம் இருக்கிறதா ?

ஏன்? எதற்காக பயப்பட வேண்டும். சொல்லப்போனால் வலைப்பதிவின் வரவு மிக மிக நல்ல விஷயம். நிறைவான நமக்கு பிடித்த எழுத்துக்களை இனம் காண இது பெரிதும் உதவுகிறது.
அனைவரும் நன்றாக எழுதினாலும், ஒரு சிலரின் எழுத்துக்கள் நமக்கு பிடித்து போகும். இவர் விஷயம் தெரிந்து எழுதுகிறார், இவர் பொழுது போகமல் எழுதுகிறார், இவருக்கு நகைச்சுவை எளிதாக வருகிறது, இவர் வம்பிழுக்க எழுதுகிறார் என்று எழுத்தாளர்களை தரம் பிரித்து அதில் நமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

இதை சிறப்பாக செய்ய உதவும் தமிழ்மணத்திற்கு ஒரு சபாஷ்.

அடிக்கடி பத்திரிகையின் வடிவமைப்பை மாற்றுவது தேவைதனா?

இணையம் வளர்ந்து வரும் வேகத்திற்கு புதிது புதிதாய் எதுவும் செய்யாவிட்டால் கமர்ஷியல் போட்டியை சமாளிக்க முடியாது. சாமான்ய வாசகர்களை மீண்டும் மீண்டும் வரவழைக்க மாற்றம் தேவைதான். சமயத்தில் இணைய நிர்வாகிகளுக்கு அதுவே பிரச்சனையாகிவிடும். அழகாய்/புதுமையாய் செய்கிறேன் என்று ஓவராக செய்துவிடும் அபாயம் இருக்கிறது.

உங்களின் பொழுது போக்கு ?

டி.வி பார்ப்பது, Videography and editing, மேடை நாடகங்களில் நடிப்பது.

உங்கள் நாடகங்கள் மற்றும் இலக்கியத்துறை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

நாடகத்துறை அனுபவங்கள் என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நியுஜெர்சி ‘ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ்‘ மற்றும் நியுஜெர்சி ‘USIA’ நாடக குழுவில் பங்குபெற்று நடித்து வருகிறேன். நாடக மேடை அனுபவங்களை விட ஒத்திகை அனுபவங்கள் மிகவும் அருமையானவை.

உங்கள் பிறப்பு, வளர்ப்பு, சேட்டைகள், ஊர், படிப்பு, குடும்பம்……….?

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். படித்தது MCA. கடந்த ஐந்தரை வருடங்களாக நியுஜெர்சியில் ஜாகை. அப்பா – S. சந்திரசேகரன் , அம்மா – சந்திரா தற்போது சென்னையில் இருக்கிறார்கள் . மனைவி – மீனாக்ஷி.

தமிழோவியம் படைப்பதால் நீங்கள் எத்தகைய நிறைவைப் பெறுகிறீர்கள்?

ஒரு மன நிறைவு, பலர் மத்தியில் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது.

ஆசைக்கு தமிழோவியம், தோசைக்கு??

Merril Lynch-ல் முழு நேர வேலை!

2 Comments


  1. How come the interview was not done with the editor? From your question, it is easy to interpret that thinnai & thisaigal are the lit. mags in the tamil net. Is that so?

    & question to tamiloviam:
    How to set off the course of action for a blog page in Tamiloviam?


  2. # எண்ணற்ற பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுதச் சொல்லும் தலைசிறந்த குணம் கொண்டவர். எல்லோரிடத்தும் எளிமையாகப் பழகும் குணம் கொண்டவர். நல்ல ஓவியர். அருமையான எழுத்தாளர். தமிழோவியம் கணேஷ் அவர்களின் பேட்டி உண்மையில் நன்றாகவே இருந்தது.

Comments are closed.