இணையம் என்றொரு போதை!

கணினி என்பதே இணையத்தினுள் நம்மை இட்டுச் செல்லும் ஒரு ஒடமாகக் கருதப்படும் நிலை வந்து விட்டதைப் பற்றி சென்ற இடுகையில் உரையாடினோம். அவ்வாறு இணையத்தினுள் தளம் தளமாகத் தாவித் தாவித் திரியும்போது, எங்காவது நின்று, நிதானித்து, மனத்தை ஊன்றிப் படித்துப் பார்க்கிறோமா? இல்லையே.

சிறு குழந்தைகள் பலருக்கு கவனக் குறைபாடு (Attention Deficit Disorder) தோன்றுவதுண்டு. கவனம் ஓரிடத்தில் நில்லாமல் அலை பாய்ந்துகொண்டே யிருத்தல். பிறகு சிறிது நாட்களில் அவர்களுக்கு சரியாகிவிடும். ஆனால் இணையத்தில் உலா வருவதால் நமக்கு ஏற்படும் கவனக் குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புக்களே குறைவு என்று தோன்றும் நிலை இருக்கிறது. ஒரு தளத்தில் மேயத் தொடங்கியவுடனேயே அங்கே “பளிச்” என்று மின்னும் ஒரு சுட்டியை கிளிக்கென்று கிள்ளி விட்டு ஒரு வீடியோவைக் காணத் துடிக்கிறது மனம். அங்கே சென்றால் வீடியோ கீழிறங்க நேரம் பிடிக்கிறது (சில சமயம் கழுநீர் மாதிரி கூட இறங்கும்). அந்த நேரத்தில் “டிங்” என்று ஒரு சத்தம் யாஹூவிலிருந்தோ, ஜீடாக்கிலிருந்தோ – அவ்வளவுதான் கவனம் சிதறி வேறிடத்துக்குத் தாவி விட்டது! இப்படி தளத் தவளைகளாய் தத்திக் கொண்டிருந்தால் முழுமையான செய்தியை, அறிவைப் பெறுவதென்பதேது!

இப்படி கிளிக்கிட்டுக் கொண்டே செல்லும்போது இந்த “வெட்டி புரௌசிங்”கிலேயே நெரம் கழிந்து விடுகிறது. இரண்டு, மூன்று மணி நேரம் இணையத்தில் மேய்ந்து விட்ட பிறகு சற்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை யென்பது தெளிவாகும்.

நம்மை இன்னும் ஆழமாக இந்தப் புதை மணலில் உள்ளிழுத்துக் கொண்டிருப்பவை, “ப்ளாக்” என்றழைக்கப்படும் வலைப் பதிவுகள்தான்! ஐந்து நிமிஷத்தில் பதிவை அமைத்து விட்டு (Push-button Publishing), ஏதேதோ மனதில் பட்டதைக் கொட்டி விடுவார்கள். அதில் இன்னும் பலர் சென்று அங்கேயிருக்கும் கருத்துப் பெட்டியில் அவர்கள்தம் மேதா விலாசத்தைக் காண்பிக்க ஏதோ உளறி வைப்பார்கள். அதோடு நிற்பதில்லை. இணையத்தின் பெயரறியா நிலையைப் (anonymity) பயன்படுத்தி ஒருவருக்கொருவர் கண்டபடி திட்டிக் கொண்டிருப்பர். இதை சுவாரசியமாக ரசித்துப் படித்துக் கொண்டிக்கும் சிலர் அரிப்பை அடக்க முடியாமல், நாய் கரண்டுக் கம்பத்தைக் கண்டால் “சிர்ர்க்” என்று சிறிது பீய்ச்சுமே அதைப்போல் எதோ இரண்டு வார்த்தைகள் சிந்தி விட்டுச் செல்வர். அவ்வளவுதான். மனம் அங்கேஏயே சுற்றும். நம் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினை வந்திருக்கிறதா பார்ப்போமே”!

வலைப் பதிவு எழுதுவோரும் இப்படித்தான். ஏதோ மேதாவித்தனமாக எழுதுவதாக என்ணிக் கொண்டு இரண்டு பத்தி கிறுக்கி விட்டு, கூகிளில் தேடி இரண்டு படங்க்களையும் போட்டுவிட்டு. சிலந்தி வலை பின்னி விட்டுக் காத்திருப்பதுபோல் யாராவது மறுமொழி (“பின்னூட்டம்” என்றும் சிலர் அழைப்பர். ஆனால் அந்தச் சொல் “ஒரு மாதிரி” பொருளைத் தோற்றுவிப்பதால் அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்). இடுவார்களா ஏன்று காத்திருப்பது சிலர் வழக்கம்.

எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான். ஆனால் நம்மால் அந்தத் தகவல் ஒன்றையும் நிதானமாகப் பொறுக்கி உள்வாங்கத்தான் இயலவில்லை.

முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு “ஹாயா”க எங்காவது போய் ஒவ்வொரு பக்கமாகப் படித்து, அதில் ஆழ்ந்து, அந்த உணர்வுகளைத் துய்த்து, அந்த கதா பாத்திரங்களாகவே மாறி, கற்பனையில் துய்ந்து … ஆகா அந்த அனுபவம் போல் வருமா!

சரி சரி . நேரமாகி விட்டது. எனக்கு இன்னும் இரண்டு வலைப் பதிவுகள் எழுதியாக வேண்டும்!

4 Comments


  1. நல்ல,இப்போதைக்குத் தேவையான பதிவு.
    முன்பெல்லாம் டி.வி.ரிமோட்டை அழுத்திக் கொண்டே நேரம் போயிற்று.இப்போது மௌஸை கிளிக்கிக் கொண்டே வீணாய்ப் போகிறது.வலைத்தளங்களும்,வலைப்பதிவுகளும் நூற்றுக்கணக்கில் பெருகினாலும்,பயனுள்ளவைகள் மிகக் குறைவு தான்.


  2. நன்றி, பிரகாஷ்.

    நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பயனுள்ள தளங்கள் நமக்குக் கிட்ட விடாமல் சில வலைத் தளங்கள் கண்கட்டு வித்தைகள் செய்து தங்களுடையவைகளே கூகிள் தேடல் மூலம் முதல் பக்கத்தில் நம் கண்முன் தோன்றும்படி செய்கின்றனர். இது ஒரு பெரிய வணிக உத்தி. இதனால் நாம் தேடும் செய்தி நமக்குக் கிடைக்காமலேயே போய்விடுவதும் உண்டு.

    ரொம்பவும் சீரியஸாக ஒரு விஷயத்தைப் பற்றித் தேடும்போது கூகிளோடு நிறுத்திக் கொள்ளாமல் யாஹூ, க்ளஸ்டி, எம்.எஸ்.என் பொன்ற வேறு தேடல் பொறிகளையும் பயன்படுத்தினால் நலம்.

    எஸ்.கே


  3. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்


  4. Very Very Correct, We Waste So many Time In this net.

    //எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான்.//

    For Use Full think vist my blog jagadeesktp.blogspot.com.

    In that WebSite is Fully Covered computer Tips And Tricks In TAMIL.

    Thank U

Leave a Reply

Your email address will not be published.