எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் கர்நாடக இசையைப் பற்றி மட்டும் இல்லாமல் மனித நேயம், அக்கால வாழ்க்கையின் கூறுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: அக் 30th, 2009. மறுமொழி இடுக.
நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை – ஓதுவித்து – அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.
அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” – பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு.
பிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.
ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.
பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:
“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”
காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!
இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:
- சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,
- ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,
- பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,
- மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,
- சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது
- பெரிய இடத்து சம்பந்தம்
இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.
சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: மே 28th, 2009. மறுமொழி இடுக.
இப்படிச் சொல்பவர் யார்?
“உலகத்துக்கு காமசூத்ரா கொடுத்த நாடு இந்தியா. ஆனால் இங்குதான் பெண்களுக்கு ‘தெய்வம், புனிதம்’ என்று பட்டம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். ’காதல்’ என்னும் சொல்லே சுத்த ஹம்பக். பெண்ணின் உடலைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம்தான் காதலுக்கு மூல காரணம். பெண்ணின் உடலமைப்பின் மர்மம், அவள் ‘தேவதையோ’ என்று கற்பனை செய்யவைத்து ஆண்களை ஈர்க்கிறது.
மூடி மறைத்தால்தான் எதன்மீதும் ஆர்வம் பெருகும். திறந்து வைத்துவிட்டால் ஆர்வம் ஆவியாகிவிடும்”
இந்தக் கருத்தைச் சொல்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன்.
அத்தகைய ஆர்வம் குறையவேண்டும் என்ற எண்ணத்தில்தன் இப்போதெல்லாம் பெண்கள் திறந்து போட்டுக்கொண்டு வருகிறார்களோ!
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: ஜன 12th, 2009. 1 மறுமொழி.
நித்யா தன்னம்பிக்கை மிக்கவள். அது தகுதி மற்றும் திட்டமிடல் அடிப்படையில் அமைந்த தன்னம்பிக்கை. எதைச் செய்தாலும் அதை பூர்த்தியாக செவ்வனே செய்து முடிப்பவள் என்று அவள் படிக்கும் கல்லூரியிலும் வீட்டிலும் பெயர் வாங்கியவள். அதனாலேயே அவளுடைய கல்லூரியில் எந்த நிகழ்ச்சியானாலும் அதை நடத்துவதற்கு கூப்பிடு நித்யாவை என்பதுதான் முதலில் காதில் விழும்.
அவள் இளங்கலை பொறியியலை முடிக்கும் நேரம். அனைத்து நதிகளும் கடலில் சங்கமமாகிறாற்போல் எந்த பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் வேலை தேடுவது என்னவோ கணினி மென்பொருள் துறைதான் என்றிருக்கும் இன்றைய நிலையில், நித்யாவோ தான் படித்துக் கொண்டிருக்கும் மின்னியல் துறையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கேற்றாற்போல் ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள்.
நித்யாவின் சுபாவப்படி அவள் தகுந்த முன்னேற்பாட்டுடன் தேர்வுக்குச் சென்றாள். அவளுடைய பாடத்திலும் சரி, நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஆளுமை போன்ற எந்தத் துறையிலும் எல்லோரைக்காட்டிலும் சிறந்த திறமைசாலியாக அவள் விளங்குவாள் என்பதில் அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதுபோல் அவள் பூர்வாங்கத் தேர்வுகளை வெற்றிகரமாகத் தாண்டி நேர்முகத் தேர்விலும் அனைத்து கேள்விகளுக்கும் தீர்மானமன தன்னம்பிக்கையுடன் சரியாக விடையளித்திருந்தாள். அந்தத் தேர்வை தலைமையேற்று நடத்திய நிர்வாகியும் மிகத்திருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினார்.
அந்த நிறுவனம் பெருமை வாய்ந்த ஒன்று. நித்யாவுக்கு நிச்சயம் கிட்டப்போகிற அதிர்ஷ்டத்தை எண்ணி அவளுடைய பெற்றோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ஆனால் வேலைக்கான ஆணையேதும் வரவில்லை. சில காலம் பொருத்துப் பார்த்துவிட்டு அவளுடைய தந்தை விசாரித்துப் பார்த்ததில் அவள் தேர்வு பெறவில்லையென்று தெரிவிக்கப்பட்டது. நித்யா, ஒருபுறம் ஏமாற்றமும், இன்னொருபுறம் தான் தேர்வு பெறாததற்கான காரணத்தை அறியும் ஆவலும் மிக்கவளாக தன் கல்லூரி சீனியர் யாரேனும் அங்கு வேலை பார்த்தால் அவர்கள் மூலம் விவரம் அறியலாம் என்று விசாரிக்கத் தொடங்கினாள்.
அவள் நேர்முகத் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது உண்மை. ஆனால் அவளுடைய பேச்சின் தோரணை, ஓங்கிய குரல், கைகளையும் விரல்களையும் நீட்டி அசைத்துப் பேசும் முறை, சில ஆங்கில சொற்களை வேண்டுமென்றே ஸ்டைலாக உச்சரித்துப் பேசும் பழக்கம் இவையெல்லாம் அந்த நிறுவன மேலாளர்கள் மனத்தில், அவள் பிறரோடு ஒத்துப் போய் அனுசரிக்கத் தயங்கும் தனித்தியங்கி (loner) என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டன. இது நித்யாவின் உண்மையான தோற்றம் இல்லை என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இவ்வுலகில் நீ யார் (உண்மையில்) என்பது முக்கியமல்ல. நீ யாராக பிறரால் அறியப்படுகிறாயோ அதுதான் முக்கியம்.
ஆகையால் பிறர் மனத்தில் நம்மைப்பற்றி எத்தகைய இமேஜை ஏற்படுத்துகிறோம், நம்மை எவ்வாறு இந்த சமூகத்திடம் அறியப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றி இருக்கிறது.
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: அக் 2nd, 2008. 2 மறுமொழிகள்.
சீனிராஜ் சிவகுமார் என்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான கவிதைகள் பல ஆக்கி அளித்துள்ளார், தம் "சிவமகா" என்னும் வலைத்தளத்தில். அங்கு உதிர்ந்துள்ளதொரு முத்து இது:
வாழையடி வாழை
வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே
வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும்
விழுக்காடு கூடுவதும் தெரிய வில்லை
வங்கியிலே கேட்டாலும் புரிய வில்லை
இழக்காமல் சேர்ப்பதற்கு முடிய வில்லை
ஏன்தம்பி சரிகிறது நிஃப்டி, சென்செக்ஸ்?
ஒழுங்காக மேற்கல்வி பயின்றி ருந்தால்
ஓடாகத் தேய்ந்திருக்கத் தேவை யில்லைபேஸிக்கும் டீஏவும் ஏறி னாலும்
பேர்பாதி தவணைக்கே போத வில்லை
யோசிச்சு யோசிச்சு செலவு செஞ்சும்
எட்டாம்நாள் அக்கவுன்டில் ஏது மில்லை
ஆசைக்கோர் அரைவேட்டி எடுக்க வில்லை
அவளுக்கோ துணிக்கடையே தீர்ந்து போச்சு
பூசைகள் செய்தாலும் ஏற்ற மில்லை
பூங்காவில் அமர்ந்தாலும் இளைக்கும் மூச்சுகாதுகுத்தல் கல்யாணம் வந்து விட்டால்
கவரோடு போய்நின்று கை குலுக்கிப்
பாதிமுகம் ஒளிப்படத்தில் தெரியு மாறு
பல்வரிசை காட்டிவிட்டு வருவ தற்குப்
போதாது நான்பார்த்த நாலு OT
போகலைன்னா புலம்பிடுவா எம்பொண் டாட்டி
போதிமரம் எங்கிருக்கு சொல்லுங் கப்பா
பொதுவாய்த்தான் கேட்கின்றேன் உதவு மில்ல?இன்பங்கள் துறப்பதற்குப் புத்தன் இல்லை
இருந்தாலும் நச்சரிப்புத் தாங்க வில்லை
பெண்பார்த்த போதெனக்குப் புத்தி தூங்கி
பவுடர் பூ பசப்பலில்தான் விழுந்துட் டேனோ?
உண்பதற்கு வாய்திறக்கும் வேளை யில்தான்
உயிரெடுக்க வாய்திறப்பாள் என்னில் பாதி.
அன்பான சொல்கூடத் தேவை யில்லை
அமைதியாக இருந்தாலே அவள்தான் சாமி.வகையறாக்கள் வந்துவிட்டால் சிரித்து வைத்து
வகைசெய்ய வேண்டுமடா மூன்று நாட்கள்
பகையெல்லாம் இவர்கள்தாம் என்ற போதும்
போய்ச்சேர்ந்தால் வேண்டுமடா எட்டு கால்கள்
மகனுக்கு உதட்டின்மேல் கறுக்கும் போது
மாட்டாமல் உருப்பட்டால் நல்ல வேளை.
மகளுக்குத் தேடவேண்டும் பொன்கொ டுத்து
மத்தபடி மருமவனே உன்ச மர்த்து.
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: ஆக 28th, 2008. மறுமொழி இடுக.




சமீபத்திய மறுமொழிகள்