ஏமாறச் சொன்னது யாரோ!

Fund managers
Image courtesy: The Telegraph
சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (‘பிடுங்கினார்’ என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை).

அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே அந்த வங்கியிலிருந்து (HSBC) சில அதிகாரிகள் அந்த நடிகையை சந்தித்து, உங்கள் பணத்தை நாங்கள் வங்கி மூலமாக நல்ல லாபகரமான முதலீடுகளைச் செய்து ஆண்டுக்கு 24% வருமானம் பெற்றுத் தருகிறோம் என்ற திட்டத்தை முன்வைத்தனர். ஆண்டுக்கு 24%, அதுவும் எந்த ஒரு வேலையும் செய்யாமல்! ஆசை யாரை விட்டது! அப்படியே ஒப்புக்கொண்டு வங்கியினர் நீட்டிய இடத்தில் கையொப்பமிட்டு அந்தப் பணத்தை அவர்கள் இஷ்டப்படி முதலீடு செய்யும் முழு அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்துவிட்டார் அந்த நடிகை!

ஐந்து ஆண்டுகள் கழித்து கணக்குப் பார்த்தால் அவருடைய முதலீட்டில் சுமார் 1.3 கோடி ரூபாய் காலி! எந்தெந்த விதத்தில் அந்த வாடிக்கையாளருக்கு நஷ்டம் வருமோ அத்தனை வகைகளையும் கையாண்டிருக்கின்றனர் அந்த வங்கியினர். வருமானமே இல்லாத ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது – அதுவும் அதிகமான விலையில் வாங்கி குறைவான விலையில் விற்பது, மீண்டும் மீண்டும் முதலீடுகளை மாற்றி, ஒவ்வொரு ஃபண்டாக சுழற்றி அடித்து (toxic churning), ஒவ்வொரு முறையும் entry load, exit load என்று பல வகைகளில் நஷ்டப் படுத்தியிருந்தனர். மேலும் தேவையில்லாத இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்தது போன்ற பல தில்லுமுல்லுகளை அந்த வங்கியினர் செய்ததாக அந்த நடிகை புகார் கொடுத்தார். முதலில் அவர் வங்கி தீர்வாணையத்தில் (Banking Ombudsman) புகார் கொடுத்தபோது, அனைத்து முதலீடுகள் தொடர்பான அப்ளிகேஷன் போன்ற பேப்பர்களிலும் அவருடைய கையெழுத்து உள்ளது, அதனால் ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டனர். பிறகு Moneylife Foundation என்னும் நிறுவனம் இவருக்காக இரண்டு ஆண்டுகள் போராடி, ரிசர்வ் வங்கி மற்றும் SEBI போன்ற நிறுவனங்களுக்கு இவருடைய புகாரை கொண்டு சென்றபின் சமீபத்தில் அந்த வங்கி பாதிக்கப்பட்ட நபருக்கு ஈடு செய்திருக்கிறது, அதன் விவரங்களை வெளியிடக்கூடாது என்ற ஒப்பந்தத்துடன் (விவரங்கள் இங்கே)!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 மனைகளை 1000 பேருக்கு விற்ற ரியல் எஸ்டேட் ‘சதுரங்க வேட்டை’ பற்றி நாணயம் விகடன் விலாவாரியாக எழுதியிருக்கிறது.

17 லட்சம் பேர்களிடமிருந்து 30,000 கோடி ரூபாய் சுருட்டிய சாரதா நிதி நிறுவன மோசடி பற்றியும், 24,000 கோடி சகாரா குழும மோசடி பற்றியும் அனைவரும் அறிவார்கள்.

Cheated by fraudulent schemesPearls Agrotech Corporation (PACL) என்னும் நிறுவனம் மக்களிடமிருந்து ஏராளமான தொகையை நிலம் வாங்கித் தருகிறேன் என்று வசூல் செய்தது. இதில் மோசடி இருக்கிறது, இத்தகைய வசூலை உடனே நிறுத்த வேண்டும் என்று SEBI நிறுவனம் 1998-லிருந்து போராடி வருகிறது. ஆனால் அந்த நிறுவனமோ தன் பெயரை மாற்றிக் கொண்டும், கோர்ட்டுகளில் கேஸ் போட்டுக் கொண்டும் மக்களிடமிருந்து மேன்மேலும் பணம் வசூல் செய்துகொண்டு வந்திருக்கிறது. தமிழ் நாட்டில் கூட பல இடங்களில் சென்ற மாதம்வரை இந்த வசூல் வேட்டை நடந்து வந்ததாக ஒரு பத்திரிக்கையில் வாசித்தேன். சமீபத்தில்தான் செபி (SEBI) இந்த நிறுவனத்திற்கு ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறது – முதலீட்டாளர்களிடமிருந்து இதுவரை வசூல் செய்த ரூ. 49,100 கோடியை மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று!

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த நிறுவனம் ஏதோ தவறு செய்கிறது என்னும் செய்தி பரவலாக செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் கூட நம் மக்கள் தொடர்ந்து இதில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். இன்னமும்கூட அந்த உண்டியலில் பலர் பணம் போட்டுக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இதிலிருந்து ஜனங்களின் அடங்காத பேராசை வெளிப்படுகிறது. இதுபோன்ற டுபாக்கூர் நிறுவனங்களில் முதலீடு (!) செய்யும் நபர்களிடம் “ஐயா, உஷாராக இருங்கள். தீர விசாரித்து உங்கள் பணத்தை இதுபோன்றவர்களிடம் ஒப்படையுங்கள்” என்று அட்வைஸ் கொடுத்துப் பாருங்கள். “ஏன்ய்யா, நாங்க நாலு காசு பார்த்து முன்னுக்கு வர்ரது பிடிக்கல்லையா” என்று கேட்பார்கள். “கசாப்புக் கடைக்காரரைத்தான் ஆடு நம்பும்” என்று விட்டுவிட வேண்டியதுதான்!

இதுபோன்ற முதலீட்டு துரோகங்களும், மோசடிகளும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மக்களும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எந்தவித efforts-ம் எடுக்காமல் தான் குந்தியிருக்கும் இடத்திலேயே மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர்!

சன் நியூஸ் சேனல் நடத்தும் ‘வர்த்தக உலகம்’ நிகச்சியிலும் பல நேயர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளிலிருந்து அவர்கள் தங்கள் பேராசையால் தவறான முதலீடுகளில் ஈடுபட்டு எப்படி தங்கள் முதலீட்டை இழக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தவிர, காலாவதியான ‘இ-கோல்ட்’ போன்ற திட்டங்களில் கூட முதலீடு செய்யும்படி வாடிக்கையாளர்களிடம் சில வங்கிகள் பரிந்துரைக்கின்றன என்பதும் தெரியவருகிறது.

அந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பல நிபுணர்கள் நேயர்களை இதுபோல் பேராசைக்கு அடிமையாகாதீர்கள் என்றும், உங்கள் பணத்தை யாரிடமும் நம்பி முதலீடு செய்யும்படி கொடுக்காதீர்கள், எந்த பரிந்துரையை யார் கொடுத்தாலும் நீங்கள் அதைபற்றி முழுதுமாகத் தெரிந்து கொண்டு முடிவுகளை எடுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்றாலும் நம் மக்கள் ஈமு கோழி திட்டங்களிலும், பங்குச் சந்தையில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் திட்டங்களிலும் கைக்காசை இழந்து கொண்டிருப்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

திரு. விவேக் கார்வா போன்ற நிபுணர்கள் ஒரு தீர்மானமான கருத்தை முன்வைக்கிறார்கள். அதாவது நீங்கள் எவ்வகையில் முதலீடு செய்தாலும் அதன்மூலம் ஆண்டுக்கு 12% முதல் 15% வரையில் மட்டுமே லாபத்தை எதிர்பாருங்கள். அவ்வப்போது ஏற்ற இறக்கம் இருக்கலாம், ஆனால் நெடுநாள் சராசரியாக பார்க்கும் போது அந்த அளவு வருமானம்தான் அதிகபட்சம் கிட்டும். அதற்குமேல் லாபம் கிடைக்கும் திட்டங்களை யாராவது பரிந்துரைத்தால் அதில் முதலுக்கே ரிஸ்க் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் அவர்களின் அறிவுரை. ஆனால் இதை நம்புபவர்கள் எத்தனை பேர்? திரு. கார்வா அவர்களை தொழில்ரீதியாக கன்சல்ட் செய்ய வருபவர்களில்கூட இதுபோன்ற கன்சர்வேடிவ் அறிவுரையை கேட்டபின், இவர் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, கொள்ளை லாப திட்டங்களை ஆசைகாட்டும் நபர்கள் யார் என்று தேடிச் செல்பவர்கள் பலர் என்கிறார் அவர்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய அரிச்சுவடி அறிவுரைகள் என்னென்ன என்பதை அடுத்த கட்டுரையில் பகிர்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *