பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2008

பிறர் மனத்தில் எற்றிய படிமம்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

நித்யா தன்னம்பிக்கை மிக்கவள். அது தகுதி மற்றும் திட்டமிடல் அடிப்படையில் அமைந்த தன்னம்பிக்கை. எதைச் செய்தாலும் அதை பூர்த்தியாக செவ்வனே செய்து முடிப்பவள் என்று அவள் படிக்கும் கல்லூரியிலும் வீட்டிலும் பெயர் வாங்கியவள். அதனாலேயே அவளுடைய கல்லூரியில் எந்த நிகழ்ச்சியானாலும் அதை நடத்துவதற்கு கூப்பிடு நித்யாவை என்பதுதான் முதலில் காதில் விழும்.

அவள் இளங்கலை பொறியியலை முடிக்கும் நேரம். அனைத்து நதிகளும் கடலில் சங்கமமாகிறாற்போல் எந்த பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் வேலை தேடுவது என்னவோ கணினி மென்பொருள் துறைதான் என்றிருக்கும் இன்றைய நிலையில், நித்யாவோ தான் படித்துக் கொண்டிருக்கும் மின்னியல் துறையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கேற்றாற்போல் ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள்.

நித்யாவின் சுபாவப்படி அவள் தகுந்த முன்னேற்பாட்டுடன் தேர்வுக்குச் சென்றாள். அவளுடைய பாடத்திலும் சரி, நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஆளுமை போன்ற எந்தத் துறையிலும் எல்லோரைக்காட்டிலும் சிறந்த திறமைசாலியாக அவள் விளங்குவாள் என்பதில் அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதுபோல் அவள் பூர்வாங்கத் தேர்வுகளை வெற்றிகரமாகத் தாண்டி நேர்முகத் தேர்விலும் அனைத்து கேள்விகளுக்கும் தீர்மானமன தன்னம்பிக்கையுடன் சரியாக விடையளித்திருந்தாள். அந்தத் தேர்வை தலைமையேற்று நடத்திய நிர்வாகியும் மிகத்திருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினார்.

அந்த நிறுவனம் பெருமை வாய்ந்த ஒன்று. நித்யாவுக்கு நிச்சயம் கிட்டப்போகிற அதிர்ஷ்டத்தை எண்ணி அவளுடைய பெற்றோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ஆனால் வேலைக்கான ஆணையேதும் வரவில்லை. சில காலம் பொருத்துப் பார்த்துவிட்டு அவளுடைய தந்தை விசாரித்துப் பார்த்ததில் அவள் தேர்வு பெறவில்லையென்று தெரிவிக்கப்பட்டது. நித்யா, ஒருபுறம் ஏமாற்றமும், இன்னொருபுறம் தான் தேர்வு பெறாததற்கான காரணத்தை அறியும் ஆவலும் மிக்கவளாக தன் கல்லூரி சீனியர் யாரேனும் அங்கு வேலை பார்த்தால் அவர்கள் மூலம் விவரம் அறியலாம் என்று விசாரிக்கத் தொடங்கினாள்.

அவள் நேர்முகத் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது உண்மை. ஆனால் அவளுடைய பேச்சின் தோரணை, ஓங்கிய குரல், கைகளையும் விரல்களையும் நீட்டி அசைத்துப் பேசும் முறை, சில ஆங்கில சொற்களை வேண்டுமென்றே ஸ்டைலாக உச்சரித்துப் பேசும் பழக்கம் இவையெல்லாம் அந்த நிறுவன மேலாளர்கள் மனத்தில், அவள் பிறரோடு ஒத்துப் போய் அனுசரிக்கத் தயங்கும் தனித்தியங்கி (loner) என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டன. இது நித்யாவின் உண்மையான தோற்றம் இல்லை என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இவ்வுலகில் நீ யார் (உண்மையில்) என்பது முக்கியமல்ல. நீ யாராக பிறரால் அறியப்படுகிறாயோ அதுதான் முக்கியம்.

ஆகையால் பிறர் மனத்தில் நம்மைப்பற்றி எத்தகைய இமேஜை ஏற்படுத்துகிறோம், நம்மை எவ்வாறு இந்த சமூகத்திடம் அறியப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றி இருக்கிறது.

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 66 முறை) ::

சிறு விஷயங்களில் கவனம் தேவை!

நல்வாழ்வு :: மறுமொழி ஒன்று »

சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் முழுமையை எட்ட முடியும் என்று அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்துவிடுகிறோம். எனெனில் அவை நம்மைப் பொருத்தவரை முக்கியமானவை என்னும் பட்டியலில் வரவில்லை. உதாரணத்திற்கு, சட்டைக்குப் பொத்தான்களைப் போடுவது, ஷூ லேஸ்களை சரியாகக் கட்டுவது, சட்டையை பாண்டிற்குள் "டக் இன்" செய்தால் அதனை நேர்சீராகச் செய்வது - இப்படி பலவகை சாதாரணச் செயல்பாடுகளை முக்கியத்துவம் கொடுக்காமல் செய்கிறோம். ஆனால் உணமையில் அவை மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அறியாமலிருப்பது நமக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் நாம் அறிந்தோமில்லை!

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம் நடையுடை பாவனைகளை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் உள்ளார்கள் என்று அறியும்போது நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கும். நாம் நம்மையறியாமல் செய்யும் (sometimes due to nervous habits) அங்க சேஷ்டைகளை மக்கள் கூர்ந்து கவனித்து கிண்டலடிப்பது நமக்கு பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் நாம் சிலரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முன்றாம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை வைத்து கேலி செய்வதைக் காண்கிறோம். நமக்கும் இந்த கதிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

சாதாரணமாக இத்தகைய உரையாடல்களை அன்றாடம் செவிமடுக்கிறோம்:

"அவரா, எப்போதும் பங்கி மாதிரி தொளதொள சட்டை போட்டுகிட்டு வருவாரே, அவர்தானே"
"அந்த மூக்கு நோண்டிதானே"
"நேத்து அந்த 'நாக்கு துருத்தி' வந்திருந்தான்ய்யா"
"ஏனய்யா, அந்த ஆளு தலையை சீவவே மாட்டானா? எப்ப பாத்தாலும் இப்பத்தான் படுக்கையிலேருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கான்"

இதையெல்லாம் விடுங்க. நீங்கள் ஒரு பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்தாலோ அல்லது அங்கு சென்று ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவராயிருந்தாலோ நீங்கள் கட்டாயம் உங்கள், டிரெஸ், உடலசைவு, அனிச்சைச் செயல்கள் இவற்றில் முழுக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் செயல்களை வைத்தே உங்களுக்குப் பட்டப் பெயர் சூட்டிவிடுவார்கள். அதுவும் இப்போதைய இண்டெர்நெட் உலகில் தொழில்நுட்பத்தை வைத்தே உங்களை பாடுபடுத்தி விடுவார்கள்.

என் நண்பர் ஒருவர் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி விட்டு வந்தார். அவர் ரொம்பப் பேசி "கிரைண்டு" பண்ணினாரோ, அல்லது பசங்களுக்கு வெறுப்பேத்தரமாதிரி ஏதேனும் அறிவுரை கொடுத்துவிட்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் சென்று வந்த ஓரிரு நாட்களில் யூடியூபில் (YouTube) ஒரு வீடியோ படத்தை வலையேறிவிட்டார்கள், அந்த கல்லூரி மாணவ மணிகள். அந்த வீடியோ குறும்படத்தில், என் நண்பர் கையைச் சொறிவதும், பிருஷ்ட பகத்தில் சொறிவதும், மூக்கிலிருந்து தங்கப் பாளம் தோண்டுவதும், மேலும் அவர் முகத்தில் தோன்றிய பலவித அஷ்டக் கோணல்களும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டன!

இன்னொருவர் தன் உறவினரின் பையனைச் சந்திக்கச் சென்றார். அவன் ஒரு பேச்சிலர். ஒரு லாட்ஜில் ரூம் எடுத்திருந்தான். அவனுடன் ஒரிரு நாட்கள் தங்கியிருந்து சென்றார். பாவம், அவர் குடும்பஸ்தர், பலவித கவலைகள். லாட்ஜிலிருக்கும் காமன் பாத்ரூமுக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு ஏதோ நினைவில் ஃபிளஷ் செய்யாமல் சென்று விட்டார். பாவம், அந்தப் பையன். அவனை கிட்டத்தட்ட ஒரு மாதம் இதை வைத்தே காய்ச்சிவிட்டனர், அந்த லாட்ஜில் தங்கியிருந்தவர்கள். அதனால், மகாஜனங்களே, பாது ரூமிற்குச் சென்றால் ஒரு தடவைக்கு இரண்டு தடவை ஃபிளஷ் செய்து விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மனைவியே உங்களை கிண்டல் செய்வார்!

ஆமாம், ஏதோ இழப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே! அவை அடுத்த இடுகையில்…!

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 183 முறை) ::

உன் சமர்த்து!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

சீனிராஜ் சிவகுமார் என்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான கவிதைகள் பல ஆக்கி அளித்துள்ளார், தம் "சிவமகா" என்னும் வலைத்தளத்தில். அங்கு உதிர்ந்துள்ளதொரு முத்து இது:

வாழையடி வாழை

வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே
வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும்
விழுக்காடு கூடுவதும் தெரிய வில்லை
வங்கியிலே கேட்டாலும் புரிய வில்லை
இழக்காமல் சேர்ப்பதற்கு முடிய வில்லை
ஏன்தம்பி சரிகிறது நிஃப்டி, சென்செக்ஸ்?
ஒழுங்காக மேற்கல்வி பயின்றி ருந்தால்
ஓடாகத் தேய்ந்திருக்கத் தேவை யில்லை

பேஸிக்கும் டீஏவும் ஏறி னாலும்
பேர்பாதி தவணைக்கே போத வில்லை
யோசிச்சு யோசிச்சு செலவு செஞ்சும்
எட்டாம்நாள் அக்கவுன்டில் ஏது மில்லை
ஆசைக்கோர் அரைவேட்டி எடுக்க வில்லை
அவளுக்கோ துணிக்கடையே தீர்ந்து போச்சு
பூசைகள் செய்தாலும் ஏற்ற மில்லை
பூங்காவில் அமர்ந்தாலும் இளைக்கும் மூச்சு

காதுகுத்தல் கல்யாணம் வந்து விட்டால்
கவரோடு போய்நின்று கை குலுக்கிப்
பாதிமுகம் ஒளிப்படத்தில் தெரியு மாறு
பல்வரிசை காட்டிவிட்டு வருவ தற்குப்
போதாது நான்பார்த்த நாலு OT
போகலைன்னா புலம்பிடுவா எம்பொண் டாட்டி
போதிமரம் எங்கிருக்கு சொல்லுங் கப்பா
பொதுவாய்த்தான் கேட்கின்றேன் உதவு மில்ல?

இன்பங்கள் துறப்பதற்குப் புத்தன் இல்லை
இருந்தாலும் நச்சரிப்புத் தாங்க வில்லை
பெண்பார்த்த போதெனக்குப் புத்தி தூங்கி
பவுடர் பூ பசப்பலில்தான் விழுந்துட் டேனோ?
உண்பதற்கு வாய்திறக்கும் வேளை யில்தான்
உயிரெடுக்க வாய்திறப்பாள் என்னில் பாதி.
அன்பான சொல்கூடத் தேவை யில்லை
அமைதியாக இருந்தாலே அவள்தான் சாமி.

வகையறாக்கள் வந்துவிட்டால் சிரித்து வைத்து
வகைசெய்ய வேண்டுமடா மூன்று நாட்கள்
பகையெல்லாம் இவர்கள்தாம் என்ற போதும்
போய்ச்சேர்ந்தால் வேண்டுமடா எட்டு கால்கள்
மகனுக்கு உதட்டின்மேல் கறுக்கும் போது
மாட்டாமல் உருப்பட்டால் நல்ல வேளை.
மகளுக்குத் தேடவேண்டும் பொன்கொ டுத்து
மத்தபடி மருமவனே உன்ச மர்த்து.

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 154 முறை) ::

பண்பாடு

நல்வாழ்வு :: 4 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் How responsible are we towards the society?

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 201 முறை) ::

கணினி வல்லுனர்கள்

கணினி :: மறுமொழி இனிமேல்தான் »

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் music collection பற்றி நிறைய பில்டு அப் கொடுத்தார்.

PC-யிடம் சென்று அவர் ஒவ்வொன்றாக தடவித்தடவி கிளிக் செய்து கொண்டிருந்ததிலிருந்தே அவருடைய அனுபவ அறிவு புலப்பட்டது. பிறகு ஒரு பாட்டின் கோப்பின்மேல் கிளிக் செய்தார். கர்ஸர் பாட்டுக்கு உடுக்கடித்துக் கொண்டிருந்ததேயன்றி வேறு ஒன்றும் நடக்கக் காணோம். "என்ன இவ்வளவு நேரம் ஆகிறதே" என்று கேட்டதற்கு அவர் "பொதுவாகவே கம்ப்யூட்டரில் அவ்வளவு நேரம் ஆகும்" என்று இப்படி ஒன்றுமே தெரியாத ஞானசூனியத்திடம் பேசவேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்னார்!

இதனிடையே நான் அந்த கம்ப்யூட்டரின் விவரங்களைப் பார்த்தால் அது Pentium-2 processor, 128 mb RAM வீரியம் கொண்ட அதிவேகக் குதிரை என்பது தெரிந்தது. நண்பரிடம், "இது பழைய கான்ஃபிகரேஷனாக இருக்கிறதே, அப்கிரேடு செய்யுங்களேன். ஃபாஸ்டாக இருக்க்கும்" என்று ஆலோசனை தெரிவித்தேன்.

வதது வினை. உடனே கோபமாக என் பக்கம் திரும்பி, "என் மச்சினன் தன் கையால் பூட்டின கம்ப்யூட்டராக்கும் இது. என்ன ஜோரா லோடு எடுக்குது தெரியுமா?" என்றார்!

சரி, லோடு ஏற்றும் லாரி ரேஞ்சுக்கு கம்ப்யூட்டரைக் கொண்டு சென்ற நிபுணரிடம் பேசி ஒன்றும் ஆகப் போவத்தில்லை என்பதாலும், அவருடைய மைத்துனர் வேறு இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மேலும் கதவிடுக்கிலிருந்து அனல் வீசும் கண்கள் எதோ தெரிந்ததுபோல் ஒரு மனப் பிராந்தி உண்டானதாலும், நான் உடனே ஜகா வாங்கி, ஜூட் விட்டு அம்பேலானேன்!

இவரை விட விஷய ஞானி ஒருவர் எனக்கு ஃபோன் செய்து மிகவும் பதட்டத்துடன், "என் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டைக் கணவில்லை" என்றார். "எந்த வலைத்தளத்திற்குச் செல்ல முயற்சித்தீர்கள், என்ன மெசேஜ் வருகிறது" என்று கேட்டேன். அவர் ஒரு பெருமூச்சு விட்டு, "இண்டெர்நெட்டே வரமாட்டேனென்கிறது. சைட்டுக்கு எப்படிப் போவது" என்றார்.

சுமார் இருபத்தி ஒன்று கேள்விகளுக்குப் பின் நான் தெரிந்து கொண்ட நிலவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடந்தது என்னவென்றால், மனிதர் எல்லா கோப்புகளையும் default-ஆக டெஸ்க்டாப்பில்தான் சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதால் ஸ்கிரீன் முழுவதும் ஒரு அம்புக்குறிக்குக் கூட இடமில்லாத படி ஐகானாக நிரம்பியிருக்கிறது. அவற்றில் உலாவிக்கான (வேறு என்ன - ஐ.யி கண்றாவிதான்!) ஷார்ட்கட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் இருக்கும். அதை கிளிக் செய்து வெப்சைட்டுகளுக்கு அவர் செல்வது வழக்கம். இடையில் அவரோ வேறு யாரோ ஐகான்களை இடம் மாற்றிவிட்டார்கள். அதான் அந்த வல்லுனர் "இண்டெர்நெட்டை"த் தெடிக் கொண்டிருக்கிறார்!

அவர் அதைத் தேடட்டும். நாம் போய் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியாக எதையாவது தேடுவோம்!

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 273 முறை) ::

படப்பொருத்தம் பாரீர்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

என்ன பொருத்தம்!

என்ன பொருத்தம்!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 302 முறை) ::

இந்திரா கான் இந்திரா காந்தியான கதை!

என்ன நடக்குது இங்கே :: 6 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

நன்றி: ஜெயா டிவி.

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 351 முறை) ::

இணையம் என்றொரு போதை!

கணினி, நல்வாழ்வு :: 3 மறுமொழிகள் »

கணினி என்பதே இணையத்தினுள் நம்மை இட்டுச் செல்லும் ஒரு ஒடமாகக் கருதப்படும் நிலை வந்து விட்டதைப் பற்றி சென்ற இடுகையில் உரையாடினோம். அவ்வாறு இணையத்தினுள் தளம் தளமாகத் தாவித் தாவித் திரியும்போது, எங்காவது நின்று, நிதானித்து, மனத்தை ஊன்றிப் படித்துப் பார்க்கிறோமா? இல்லையே.

சிறு குழந்தைகள் பலருக்கு கவனக் குறைபாடு (Attention Deficit Disorder) தோன்றுவதுண்டு. கவனம் ஓரிடத்தில் நில்லாமல் அலை பாய்ந்துகொண்டே யிருத்தல். பிறகு சிறிது நாட்களில் அவர்களுக்கு சரியாகிவிடும். ஆனால் இணையத்தில் உலா வருவதால் நமக்கு ஏற்படும் கவனக் குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புக்களே குறைவு என்று தோன்றும் நிலை இருக்கிறது. ஒரு தளத்தில் மேயத் தொடங்கியவுடனேயே அங்கே "பளிச்" என்று மின்னும் ஒரு சுட்டியை கிளிக்கென்று கிள்ளி விட்டு ஒரு வீடியோவைக் காணத் துடிக்கிறது மனம். அங்கே சென்றால் வீடியோ கீழிறங்க நேரம் பிடிக்கிறது (சில சமயம் கழுநீர் மாதிரி கூட இறங்கும்). அந்த நேரத்தில் "டிங்" என்று ஒரு சத்தம் யாஹூவிலிருந்தோ, ஜீடாக்கிலிருந்தோ - அவ்வளவுதான் கவனம் சிதறி வேறிடத்துக்குத் தாவி விட்டது! இப்படி தளத் தவளைகளாய் தத்திக் கொண்டிருந்தால் முழுமையான செய்தியை, அறிவைப் பெறுவதென்பதேது!

இப்படி கிளிக்கிட்டுக் கொண்டே செல்லும்போது இந்த "வெட்டி புரௌசிங்"கிலேயே நெரம் கழிந்து விடுகிறது. இரண்டு, மூன்று மணி நேரம் இணையத்தில் மேய்ந்து விட்ட பிறகு சற்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை யென்பது தெளிவாகும்.

நம்மை இன்னும் ஆழமாக இந்தப் புதை மணலில் உள்ளிழுத்துக் கொண்டிருப்பவை, "ப்ளாக்" என்றழைக்கப்படும் வலைப் பதிவுகள்தான்! ஐந்து நிமிஷத்தில் பதிவை அமைத்து விட்டு (Push-button Publishing), ஏதேதோ மனதில் பட்டதைக் கொட்டி விடுவார்கள். அதில் இன்னும் பலர் சென்று அங்கேயிருக்கும் கருத்துப் பெட்டியில் அவர்கள்தம் மேதா விலாசத்தைக் காண்பிக்க ஏதோ உளறி வைப்பார்கள். அதோடு நிற்பதில்லை. இணையத்தின் பெயரறியா நிலையைப் (anonymity) பயன்படுத்தி ஒருவருக்கொருவர் கண்டபடி திட்டிக் கொண்டிருப்பர். இதை சுவாரசியமாக ரசித்துப் படித்துக் கொண்டிக்கும் சிலர் அரிப்பை அடக்க முடியாமல், நாய் கரண்டுக் கம்பத்தைக் கண்டால் "சிர்ர்க்" என்று சிறிது பீய்ச்சுமே அதைப்போல் எதோ இரண்டு வார்த்தைகள் சிந்தி விட்டுச் செல்வர். அவ்வளவுதான். மனம் அங்கேஏயே சுற்றும். நம் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினை வந்திருக்கிறதா பார்ப்போமே"!

வலைப் பதிவு எழுதுவோரும் இப்படித்தான். ஏதோ மேதாவித்தனமாக எழுதுவதாக என்ணிக் கொண்டு இரண்டு பத்தி கிறுக்கி விட்டு, கூகிளில் தேடி இரண்டு படங்க்களையும் போட்டுவிட்டு. சிலந்தி வலை பின்னி விட்டுக் காத்திருப்பதுபோல் யாராவது மறுமொழி ("பின்னூட்டம்" என்றும் சிலர் அழைப்பர். ஆனால் அந்தச் சொல் "ஒரு மாதிரி" பொருளைத் தோற்றுவிப்பதால் அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்). இடுவார்களா ஏன்று காத்திருப்பது சிலர் வழக்கம்.

எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான். ஆனால் நம்மால் அந்தத் தகவல் ஒன்றையும் நிதானமாகப் பொறுக்கி உள்வாங்கத்தான் இயலவில்லை.

முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு "ஹாயா"க எங்காவது போய் ஒவ்வொரு பக்கமாகப் படித்து, அதில் ஆழ்ந்து, அந்த உணர்வுகளைத் துய்த்து, அந்த கதா பாத்திரங்களாகவே மாறி, கற்பனையில் துய்ந்து … ஆகா அந்த அனுபவம் போல் வருமா!

சரி சரி . நேரமாகி விட்டது. எனக்கு இன்னும் இரண்டு வலைப் பதிவுகள் எழுதியாக வேண்டும்!

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 358 முறை) ::

வலைவாசம்

கணினி, மனித மனம் :: மறுமொழி ஒன்று »

Slow internetகுப்பத்தில் வாழும் முறையான கல்வியறிவு கிட்டாதவர்கள்கூட, "நெட்ல ரிசல்ட் பாத்துக்கிணியா பா" என்று கேட்குமளவுக்கு இண்டெர்நெட் சர்வ சகஜமாக நம் அன்றாட வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது. சிறிய கிராமங்களில் கூட "புரௌசிங் செண்டர்கள்" துவங்கப்பட்டு, செல்ஃபோன் வருகையால் காணாமற் போன டெலிஃபோன் பூத்களின் வெற்றிடத்தை நிரப்புகின்றன. இண்டெர்நெட் இந்தியாவில் துவங்கப்பட்ட புதிதில் சொட்டு சொட்டாக சொட்டிகொண்டிருந்த "டயல் அப்" காலம் போய் இப்போது "பிராடு பேண்ட்" வந்துவிட்டது (இதை "ஃபிராடு பேண்டு" என்றும் பாதிக்கப்பட்ட சிலர் அழைக்கிறார்கள்!). டயல் அப் காலத்தில் யாஹூ.காம் என்று கேட்டுவிட்டு இரண்டு இட்டிலி, ஒரு வடை, காப்பி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் யாஹூ வந்து தலையைக் காட்டினலும் காட்டலாம்; அல்லது கனெக்ஷன் கட்டாகியும் அம்போ என்று நிற்கலாம். சரி, அந்தக் கட்டை வண்டிக் காலத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு, இப்பத்தான் நீங்கள் சொன்ன பிராடு பேண்டு வந்துவிட்டதே, பிறகு என்ன, பிச்சுக்கிட்டுப் பட்டையைக் கிளப்ப வேண்டியதுதானே?

அய்யகோ! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள். மின்னல் வேக இண்டெர்நெட் என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா? எலெக்ஷன் நேரத்தில் கையை "ங" வடிவத்திலும் உடலை "§" வடிவத்திலும் வளைத்துக் கொண்டு வந்து நம் வாக்குச் சீட்டை லவட்டிக் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல்தான் இதுவும். 2 எம்பி (MB) என்பார்கள். எம்பிஎம்பிக் குதித்தாலும் அதில் பத்தில் ஒரு பங்கு வேகம் கூடக் கிட்டாது.. 256 கேபிபிஎஸ் என்றால் 30-35 தேறும். இந்தக் குறியீட்டில் அவர்கள் கூறும் "…பி.எஸ்" என்பது Bits per Second தான். "Bytes per second" அல்ல. இன்னொரு முக்கிய உண்மை, அந்த அகலப் பட்டை bandwidth is a shared bandwidth. அதாவது உங்கள் ஏரியாவில் இருக்கும் அனைத்து கனெக்ஷன்தாரர்களின் மொத்த ஸ்பீடு அது. அதனால் உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிட்டுவது அதில் சில்லறைதான். அதனால்தான் ISP (சேவை அளிப்பவர்கள்) எல்லோரும் தங்கள் விளம்பரங்களில் "Upto 2 mbps" என்று போட்டிருப்பார்கள்!

சரி. இப்போது விஷயத்திற்கு வருவோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரெடெரிக் நீட்ஷே என்ற ஜெர்மானிய தத்துவ ஞானி முதலில் தன் கட்டுரைகளை கையால்தான் எழுதிக் கொண்டிருப்பாராம். பிறகு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தன் எழுதும் முறை மட்டுமல்ல சிந்திக்கும் முறை கூட மாறிவிட்டதாகக் கூறுகிறார். ஒரு சாதாரண டைப்ரைட்டரே நம் எண்ண ஓட்டங்களை மாற்ற இயலும்போது, அதைவிட பன்மடங்கு வேகம், மற்றும் கூடுதல் செயல்திறன் கொண்ட கணினியின் தலையீடு நம் மனத்தில் என்னென தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை எண்ணும்போது மலைப்பாக இருக்கிறது.

இன்றைய நிலையில் கணினியின் பயன்பாடு பெரும்பாலும் இணையத்தில் மேய்வதில்தான் உள்ளது. ஆர்க்குட் போன்ற சமூகப் பிணையங்கள் , உடனடி செய்திப் பகிர்வுச் சேவைகள் (Instant Messengers like Yahoo!, Skype), யூடுப் வீடியோக்கள், ஈமெயில் போன்றவை நம் நேரத்தை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் நம் வாழ்க்கை முறையையும், நம் சூழலுடன் நாம் இடைவினை புரியும் தன்மையையும் வெகுவாக மாற்றிவிட்டதைக் காண்கிறோம். இணையம் நம் கைவசம் அளித்துள்ள இன்னொரு முக்கியமான கருவி "கூகிள்" தேடுதளம். இந்த நூற்றாண்டின் மிகப் பயன்பாடுள்ள ஒரு தொழில்நுட்பம் இதுதான் என்று சொல்லலாம். "கூகிள் புரட்சி" என்றே பெயரிடக்கூடிய அளவிற்கு இதன் தாக்கம் உள்ளது.

சிறுவர்களின் பாடங்கள், கணக்குகள், கேள்வி-பதில் முதல் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை வரை மக்கள்ஸ் கூகிளே கதி என்றிருக்கிறார்கள். பல பிரபல எழுத்தாளர்கள் கூகிளாண்டவர் தயவிலேயே பல புத்தகங்களை எழுதி முடித்து விடுகிறார்கள். "அத்துணை செய்தியும் என் விரல் நுனியில்" என்னும் நிலை வந்துள்ளபோது, அது என்னுடைய அடிப்படை எண்ண ஓட்டங்களையும், செயல்படும் திறனையும் மாற்றியமைக்கும் என்பது நிச்சயம்.

இந்த மாறுதல் வரவேற்றத் தக்கதுதானா? ஆம். அது நிச்சயம். இந்தத் தொழில் நுட்பம் மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம். இதுவரை மனித முயற்சியில் கற்பனை செய்து பார்க்க இயலாதவையெல்லம் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. ஆனால் இயற்கை நியதிப்படி எல்லாவற்றிற்கும் ஒரு விலை அளித்தாக வேண்டுமல்லவா! அது என்ன?

அடுத்த இடுகையில்…!

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 353 முறை) ::

பெண்கள் ஜாக்கிரதை

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:

  1. இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் - அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.
  2. ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர்.
  3. ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.
  4. ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.

இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.

அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் - ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.

கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 435 முறை) ::

 

4-ல் இது-11234»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in