கணினி வல்லுனர்கள்

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் music collection பற்றி நிறைய பில்டு அப் கொடுத்தார்.

PC-யிடம் சென்று அவர் ஒவ்வொன்றாக தடவித்தடவி கிளிக் செய்து கொண்டிருந்ததிலிருந்தே அவருடைய அனுபவ அறிவு புலப்பட்டது. பிறகு ஒரு பாட்டின் கோப்பின்மேல் கிளிக் செய்தார். கர்ஸர் பாட்டுக்கு உடுக்கடித்துக் கொண்டிருந்ததேயன்றி வேறு ஒன்றும் நடக்கக் காணோம். “என்ன இவ்வளவு நேரம் ஆகிறதே” என்று கேட்டதற்கு அவர் “பொதுவாகவே கம்ப்யூட்டரில் அவ்வளவு நேரம் ஆகும்” என்று இப்படி ஒன்றுமே தெரியாத ஞானசூனியத்திடம் பேசவேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்னார்!

இதனிடையே நான் அந்த கம்ப்யூட்டரின் விவரங்களைப் பார்த்தால் அது Pentium-2 processor, 128 mb RAM வீரியம் கொண்ட அதிவேகக் குதிரை என்பது தெரிந்தது. நண்பரிடம், “இது பழைய கான்ஃபிகரேஷனாக இருக்கிறதே, அப்கிரேடு செய்யுங்களேன். ஃபாஸ்டாக இருக்க்கும்” என்று ஆலோசனை தெரிவித்தேன்.

வதது வினை. உடனே கோபமாக என் பக்கம் திரும்பி, “என் மச்சினன் தன் கையால் பூட்டின கம்ப்யூட்டராக்கும் இது. என்ன ஜோரா லோடு எடுக்குது தெரியுமா?” என்றார்!

சரி, லோடு ஏற்றும் லாரி ரேஞ்சுக்கு கம்ப்யூட்டரைக் கொண்டு சென்ற நிபுணரிடம் பேசி ஒன்றும் ஆகப் போவத்தில்லை என்பதாலும், அவருடைய மைத்துனர் வேறு இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மேலும் கதவிடுக்கிலிருந்து அனல் வீசும் கண்கள் எதோ தெரிந்ததுபோல் ஒரு மனப் பிராந்தி உண்டானதாலும், நான் உடனே ஜகா வாங்கி, ஜூட் விட்டு அம்பேலானேன்!

இவரை விட விஷய ஞானி ஒருவர் எனக்கு ஃபோன் செய்து மிகவும் பதட்டத்துடன், “என் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டைக் கணவில்லை” என்றார். “எந்த வலைத்தளத்திற்குச் செல்ல முயற்சித்தீர்கள், என்ன மெசேஜ் வருகிறது” என்று கேட்டேன். அவர் ஒரு பெருமூச்சு விட்டு, “இண்டெர்நெட்டே வரமாட்டேனென்கிறது. சைட்டுக்கு எப்படிப் போவது” என்றார்.

சுமார் இருபத்தி ஒன்று கேள்விகளுக்குப் பின் நான் தெரிந்து கொண்ட நிலவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடந்தது என்னவென்றால், மனிதர் எல்லா கோப்புகளையும் default-ஆக டெஸ்க்டாப்பில்தான் சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதால் ஸ்கிரீன் முழுவதும் ஒரு அம்புக்குறிக்குக் கூட இடமில்லாத படி ஐகானாக நிரம்பியிருக்கிறது. அவற்றில் உலாவிக்கான (வேறு என்ன – ஐ.யி கண்றாவிதான்!) ஷார்ட்கட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் இருக்கும். அதை கிளிக் செய்து வெப்சைட்டுகளுக்கு அவர் செல்வது வழக்கம். இடையில் அவரோ வேறு யாரோ ஐகான்களை இடம் மாற்றிவிட்டார்கள். அதான் அந்த வல்லுனர் “இண்டெர்நெட்டை”த் தெடிக் கொண்டிருக்கிறார்!

அவர் அதைத் தேடட்டும். நாம் போய் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியாக எதையாவது தேடுவோம்!

1 Comment


  1. this is how we are in the initial stage but later we become master in it like BILLGATES

Leave a Reply

Your email address will not be published.