‘tamil’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

MMDandapanidesikar தேசிகர் தேன்குரல் தேசிகர்

எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 - 1972)

பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். 'பட்டினத்தார்' தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த 'நந்தனார்' படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), 'முதல் தேதி' (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், "ஜகஜனனீ ", "என் அப்பன் அல்லவோ…", "தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்", "வழிமறித்து நிற்குதே", "காண வேண்டாமா" முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் தீர்க்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?"

அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகாளையும் அவர் புனைந்துள்ளர்.

தென்றல் இணைய இதழில் "ஆதி" அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் - குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண 'இசை விருந்து' இருக்க வேண்டும். இதற்கான 'இயக்கம்' வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

… இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் - இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, "ஏன் முடிக்கிறார்?" என்று தோன்றியது.

"நந்தனார்" மற்றும் "திருமழிசை ஆழ்வார்" திரைப்படங்களில் தேசிகரின் பாடல்களைக் கேட்க இங்கே செல்லுங்கள்:-

[1] "சங்கீத யோகம்" - தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு - தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 360 முறை) ::

அபிதான கோசம்

புத்தகப் பரண் :: 2 மறுமொழிகள் »

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது "அபிதான கோசம்" என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், "Asian Educational Services" நிறுவனத்தினர்.

அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-

இது
யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ. முத்துதம்பிபிள்ளையால்
செய்து,

இலங்கை இராஜ்மந்திர சபை
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி
ஸ்ரீமான். பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய
வித்தியாபிமான ஞாபகச்சின்னமாகச் சமர்ப்பித்துப்
பிரகடனஞ் செய்யப்பட்டது.

இந்நூலை ஆக்கியோரான முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம், நாவலர் தோட்டம் முகவரியிட்டு எழுதியுள்ள முகவுரை இவ்வாறு தொடங்குகிறது:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 346 முறை) ::

கர்நாடக இசையும் தமிழிசையும்!

இசை :: 4 மறுமொழிகள் »

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 468 முறை) ::

இனிமே நாங்கதான்!

இசை :: 2 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 408 முறை) ::

சுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா?

கணினி :: 5 மறுமொழிகள் »

இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.

இவ்வாறு மிகப் பிரபலமாகியுள்ள தமிழ் இணையம், அனைத்து மக்களின் பங்கெடுப்பும் இல்லாமல் இருந்தால் விருவிருப்பு இருக்காது என்பதால், அதுபோன்ற இணைய தளங்களில் உங்கள் கருத்துக்களை இடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது- இந்த வலைப்பூவில் உள்ளதுபோல!!

ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.

சரி. என் வலைப் பதிவுக்கு வருகிறேன்!

இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், "தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது" என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் - இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?

ஆம். இது பிரச்னைதான்! இதனை எப்படித் தீர்ப்பது?
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 461 முறை) ::

மலரே மௌனமா….!

இசை :: 5 மறுமொழிகள் »

"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!

வேறென்ன வேண்டும்!

நீங்களும் சிறிது ரசிக்கலாமே!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,
:: (பார்வை 349 முறை) ::

ஒரு ஆட்டோக்காரரின் மனித நேயம்

மனித நேயம் :: 2 மறுமொழிகள் »

அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே "புர்"ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!

அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். "ஆகா, என்னே என் பாக்கியம்!" என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!

ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.

ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.

ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. "தோடா!" - என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.

"சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்."

அவர் கண்கள் கலங்கி இருந்தன.

நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!

இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,
:: (பார்வை 364 முறை) ::

களைகிறது பெரியாரிச மாயை!

தேசீயம் :: 3 மறுமொழிகள் »

ஆம், ஏமாந்தது போதும்!. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!

இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!

  • "பெரியார் ஒரு தமிழ் இன விரோதி" என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், "குருவிகள்" என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன் "தேடற்சரம்" வலைப் பதிவின் மூலம்.
  • "தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய "ஆப்பு" ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், தன் ஆங்கிலக் கட்டுரையில். அதனை தமிழாக்கம் செய்து தன் வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!
  • "சந்திப்பு என்னும் வலைப் பதிவர்" இத்தகைய "தீரா-விட" சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-

    பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!", என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் - இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?

    அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?

  • திராவிட மாயை என்பது ஒரு "விஷச் செடி" என்று துகிலுறித்துக் காட்டுகிறார், தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்.
  • "திண்ணை" இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள இந்தக் கட்டுரை வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
  • ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய "ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை "திண்ணை" வலை இதழில் கட்டுரைகளாக வரைத்திருக்கிறார், "விஸ்வாமித்ரா" அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த சுட்டியில் காணலாம்.
  • ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், தன் "காலச்சுவடு" கட்டுரையில்.

தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயலாற்றும் இயக்கங்களுக்குத் துணைபோகாதீர்கள்.

வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!!

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 518 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in