உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!
- "ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்" என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?
- இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?
- கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய கூற்று சரியா?
- நேரடியாக கச்செரிகளில் கேட்கும்போது நன்றாக இருந்த பாட்டு ரெகார்டு செய்து கேட்டால் நன்றாக இருப்பதில்லையே, ஏன்? ஒருவேளை நேரில் கேட்கும்போது visual effect தூக்கலாக இருப்பதால் பாடுபவர்களின் குறைகள் நம் மனத்தில் பதிவாவதில்லையோ!
- கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடகர்களும் பக்க வாத்தியக்காரர்களும் மைக்செட் – சவுண்டு டெக்னீஷியன்களிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்களே, ஏன்?
- பி.ஜே.பி தன் தனித்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சியின் B Team போல் ஆகிவிட்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்களே, இது முற்றிலும் சரியா?
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஜூன் 3rd, 2009. 1 மறுமொழி.
நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை – ஓதுவித்து – அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.
அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” – பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு.
பிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.
ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.
பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:
“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”
காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!
இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:
- சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,
- ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,
- பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,
- மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,
- சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது
- பெரிய இடத்து சம்பந்தம்
இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.
சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: மே 28th, 2009. மறுமொழி இடுக.
குப்பத்தில் வாழும் முறையான கல்வியறிவு கிட்டாதவர்கள்கூட, "நெட்ல ரிசல்ட் பாத்துக்கிணியா பா" என்று கேட்குமளவுக்கு இண்டெர்நெட் சர்வ சகஜமாக நம் அன்றாட வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது. சிறிய கிராமங்களில் கூட "புரௌசிங் செண்டர்கள்" துவங்கப்பட்டு, செல்ஃபோன் வருகையால் காணாமற் போன டெலிஃபோன் பூத்களின் வெற்றிடத்தை நிரப்புகின்றன. இண்டெர்நெட் இந்தியாவில் துவங்கப்பட்ட புதிதில் சொட்டு சொட்டாக சொட்டிகொண்டிருந்த "டயல் அப்" காலம் போய் இப்போது "பிராடு பேண்ட்" வந்துவிட்டது (இதை "ஃபிராடு பேண்டு" என்றும் பாதிக்கப்பட்ட சிலர் அழைக்கிறார்கள்!). டயல் அப் காலத்தில் யாஹூ.காம் என்று கேட்டுவிட்டு இரண்டு இட்டிலி, ஒரு வடை, காப்பி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் யாஹூ வந்து தலையைக் காட்டினலும் காட்டலாம்; அல்லது கனெக்ஷன் கட்டாகியும் அம்போ என்று நிற்கலாம். சரி, அந்தக் கட்டை வண்டிக் காலத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு, இப்பத்தான் நீங்கள் சொன்ன பிராடு பேண்டு வந்துவிட்டதே, பிறகு என்ன, பிச்சுக்கிட்டுப் பட்டையைக் கிளப்ப வேண்டியதுதானே?
அய்யகோ! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள். மின்னல் வேக இண்டெர்நெட் என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா? எலெக்ஷன் நேரத்தில் கையை "ங" வடிவத்திலும் உடலை "§" வடிவத்திலும் வளைத்துக் கொண்டு வந்து நம் வாக்குச் சீட்டை லவட்டிக் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல்தான் இதுவும். 2 எம்பி (MB) என்பார்கள். எம்பிஎம்பிக் குதித்தாலும் அதில் பத்தில் ஒரு பங்கு வேகம் கூடக் கிட்டாது.. 256 கேபிபிஎஸ் என்றால் 30-35 தேறும். இந்தக் குறியீட்டில் அவர்கள் கூறும் "…பி.எஸ்" என்பது Bits per Second தான். "Bytes per second" அல்ல. இன்னொரு முக்கிய உண்மை, அந்த அகலப் பட்டை bandwidth is a shared bandwidth. அதாவது உங்கள் ஏரியாவில் இருக்கும் அனைத்து கனெக்ஷன்தாரர்களின் மொத்த ஸ்பீடு அது. அதனால் உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிட்டுவது அதில் சில்லறைதான். அதனால்தான் ISP (சேவை அளிப்பவர்கள்) எல்லோரும் தங்கள் விளம்பரங்களில் "Upto 2 mbps" என்று போட்டிருப்பார்கள்!
சரி. இப்போது விஷயத்திற்கு வருவோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரெடெரிக் நீட்ஷே என்ற ஜெர்மானிய தத்துவ ஞானி முதலில் தன் கட்டுரைகளை கையால்தான் எழுதிக் கொண்டிருப்பாராம். பிறகு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தன் எழுதும் முறை மட்டுமல்ல சிந்திக்கும் முறை கூட மாறிவிட்டதாகக் கூறுகிறார். ஒரு சாதாரண டைப்ரைட்டரே நம் எண்ண ஓட்டங்களை மாற்ற இயலும்போது, அதைவிட பன்மடங்கு வேகம், மற்றும் கூடுதல் செயல்திறன் கொண்ட கணினியின் தலையீடு நம் மனத்தில் என்னென தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை எண்ணும்போது மலைப்பாக இருக்கிறது.
இன்றைய நிலையில் கணினியின் பயன்பாடு பெரும்பாலும் இணையத்தில் மேய்வதில்தான் உள்ளது. ஆர்க்குட் போன்ற சமூகப் பிணையங்கள் , உடனடி செய்திப் பகிர்வுச் சேவைகள் (Instant Messengers like Yahoo!, Skype), யூடுப் வீடியோக்கள், ஈமெயில் போன்றவை நம் நேரத்தை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் நம் வாழ்க்கை முறையையும், நம் சூழலுடன் நாம் இடைவினை புரியும் தன்மையையும் வெகுவாக மாற்றிவிட்டதைக் காண்கிறோம். இணையம் நம் கைவசம் அளித்துள்ள இன்னொரு முக்கியமான கருவி "கூகிள்" தேடுதளம். இந்த நூற்றாண்டின் மிகப் பயன்பாடுள்ள ஒரு தொழில்நுட்பம் இதுதான் என்று சொல்லலாம். "கூகிள் புரட்சி" என்றே பெயரிடக்கூடிய அளவிற்கு இதன் தாக்கம் உள்ளது.
சிறுவர்களின் பாடங்கள், கணக்குகள், கேள்வி-பதில் முதல் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை வரை மக்கள்ஸ் கூகிளே கதி என்றிருக்கிறார்கள். பல பிரபல எழுத்தாளர்கள் கூகிளாண்டவர் தயவிலேயே பல புத்தகங்களை எழுதி முடித்து விடுகிறார்கள். "அத்துணை செய்தியும் என் விரல் நுனியில்" என்னும் நிலை வந்துள்ளபோது, அது என்னுடைய அடிப்படை எண்ண ஓட்டங்களையும், செயல்படும் திறனையும் மாற்றியமைக்கும் என்பது நிச்சயம்.
இந்த மாறுதல் வரவேற்றத் தக்கதுதானா? ஆம். அது நிச்சயம். இந்தத் தொழில் நுட்பம் மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம். இதுவரை மனித முயற்சியில் கற்பனை செய்து பார்க்க இயலாதவையெல்லம் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. ஆனால் இயற்கை நியதிப்படி எல்லாவற்றிற்கும் ஒரு விலை அளித்தாக வேண்டுமல்லவா! அது என்ன?
அடுத்த இடுகையில்…!
சார்ந்த வகை: கணினி, மனித மனம் :: நாள்: ஜூன் 23rd, 2008. 2 மறுமொழிகள்.







சமீபத்திய மறுமொழிகள்