ஆத்ம ஞானம்

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

துளித்துளி

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய்
மெல்லப் போனதுவே
— பட்டினத்தார்

1

Varthaga Ulagamசன் நியூஸ் சேனலில் அன்றாடம் காலை 9-30 மணி முதல் 10-30 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "வர்த்தக உலகம்". இதை நான் முன்பெல்லாம் ஏதோ கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை நிலவரம் பற்றிய நிகழ்ச்சி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருநாள் சேனல் சேனலாக தாவிக் கொண்டிருந்தபோது இந்த நிகழ்ச்சியில் ஒருவர் முதலீடுகளை திட்டமிடுதல் எப்படி என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். பிறகுதான் அறிந்து கொண்டேன், அந்த நிகழ்ச்சி பங்கு வர்த்தகம் மற்றும் ஏனைய முதலீடுகள் பற்றியது என்பதை.

பங்கு மார்க்கெட் செயல்படும் வார நாட்களில் ஷேர்களைப் பற்றியும், வார இறுதியில் ம்யூசுவல் ஃபண்ட், இன்ஷ்யூரன்ஸ், வருமான வரி, கமாடிடீஸ், ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களைப் பற்றியும் அலசும் நேரடி ஒளிபரப்பு இந்த நிகழ்ச்சி. நேயர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு, அன்றாடம் நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் துறை சார்ந்த நிபுணர்களின் பதில்களை பெறுவது இதன் செயல்பாடு.

பங்கு வர்த்தகம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு CNBC-TV18 போன்ற முழுநேர வணிகம் பற்றிய சேனல்கள் மற்றும் பல இணைய தளங்கள் இருந்தாலும், இந்த ஷோ மூலம் நம்மூர் நிபுணர்களின் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் நம் 'தமிழ்கூறும் நல்லுலக' மக்களின் விநோத மனப்பாங்குகள், விசித்திரங்கள், முரண்பாடுகள் (idiosyncrasies & eccentricities) போன்றவற்றை உற்றுநோக்குவது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது!

block.jpgஇந்த நிகழ்ச்சியின் லைவ் ஷோவை மிஸ் பண்ணிவிட்டாலும் யூட்யூபில் (Youtube) காணலாம். பெரும்பாலும் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக upload செய்துவிடுகிறார்கள் என்றாலும் அதற்கு மேலும் தாமதமாவது உண்டு. சில நாட்களின் நிகழ்ச்சிகளை காண முடிவதில்லை. எடிடிங் போன்ற டெக்னிகல் காரணங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை அப்லோடு செய்பவர்கள் அதோடு சேர்த்து ஒரு "முள்"ளையும் வைத்துவிடுகிறார்கள்! அதாவது எந்த ஒரு வலைத்தளத்திலோ, வலைப்பதிவிலோ அந்த Youtube வீடியோக்களை உள்ளிட்டு காண்பிப்பதை தடை செய்திருக்கிறார்கள். அநேகமாக எல்லா யூட்யூபு படங்களும் வெவ்வேறு வலைத்தளங்களில் embed செய்யப்படுவது என்பது சர்வ சாதாரணமான நடைமுறை. இதை பெரும்பாலும் யாரும் தடை போடுவதில்லை. அவற்றின் உரிமையாளர்களுக்கு அது ஒருவித விளம்பரம் தானே என்பதால்.

ஆனால் சன்டிவி காரர்கள் ஏன் embed-ஐ தடுத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஏனெனில் மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: . 1 மறுமொழி#

0

கண் பார்வையில்லாதவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் "பார்த்துக்" கொண்டதைப் பற்றி முன்னொரு கட்டுரை எழுதியிருந்தேன்.

கண்கள் மூலமாக அல்லாமல் ஏனைய புலன்களால் நம் சுற்றுப்புறத்தை உணரும் ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. எங்கே? கண் மருத்துவ மனையில்!

கண் மூடிய தவம்கண்விழிகளை விரிவாக்க (dilation aka dilatation) கண்ணினுள் சில சொட்டுக்களை விட்டு கண்களை மூடிக்கொண்டு சமர்த்தாக உட்கார வைத்துவிட்டார்கள். அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் சிறிது சங்கடம். ஏதாவது பேசாவிட்டால் முகத்திலுள்ள தசைகள் வலிக்கத் தொடங்கிவிடும்!

காது கேட்கிறதுPupil சரியாக விரிவடையவில்லை என்பதால் மூன்று முறை மருந்து இடப்பட்டு, நிறைய நேரம் கண்மூடி தவம் செய்யும் நிலை ஏற்பட்டது.

முதலில் சுற்றி நடப்பது ஏதும் புரியவில்லை. "என்னமோ நடக்குது, மர்மமாயிருக்குது" என்பதுபோல் தான் உணர்ந்தேன். எங்கோ கதவை திறந்தார்கள் "கிறிச்" என்றது. மூடும் சத்தமும் ஒரு சிறிய "டுப்" என்று கேட்டது. எங்கோ சாலையில் ஒரு சைக்கிள் டயர் (+டியூப்) வெடித்தது – அது வெடிச் சத்தம் போலல்லாமல் "படார்" என்று தரையோடு தரையாகத் தேய்த்தது போல் இருந்தது. மேலும் வாசிக்க…

2

Nachiketas Yamaதீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை? கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்.

இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. பேச எடுத்துக்கொண்ட தலைப்பு: "சூப்பர் ஸ்டார்ஸ்"! ஆடியன்ஸ்: 90% மாணவர்கள்.

சூப்பர் ஸ்டார்களாக அவர் தெரிவு செய்தவர்கள்: நசிகேதஸ், ப்ரஹ்லாதன், துருவன்.

பண்டிதர்களுக்காக அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பேசத் தொடங்கினார் அவர். ஆனால் அந்த மூவர் கதைகளையும் மிகச் சுறுக்கமாக, முக்கிய சம்பவங்களையும், குறிப்பிட்டு சுட்டிக் காண்பிக்கவேண்டிய விவரணைகளயும் கூட விட்டுவிட்டு கடகடவென்று கதை சொல்லி முடித்து, சில கர்நாடக சங்கீத வித்வான்கள் சாகித்யத்தை விறுவிறுவென்று ஒப்பேத்திவிட்டு கல்பனா ஸ்வரத்தில் இறங்கிவிடுவதுபோல, "கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறேன்" என்று ஆரம்பித்தார்.

முதலில் பையன்கள் கேள்வி கேட்கத் தயங்கினார்கள். அவர் மீண்டும் மீண்டும் ஊக்குவித்த பிறகு ஒவ்வொருவராக மிகச் சாதாரணமான obvious and banal கேள்விகளை சம்பிரதாயமாக கேட்டு முடித்தார்கள். ஆனால் பௌராணிகர், "என்ன, இவ்வளவுதானா, இன்னும் கேளுங்க (கேட்டுக்கிட்டே இருங்க!)" என்று முடுக்கி விடவே, பசங்க 'ஃபுல் ஃபார்மில்' உற்சாகத்துடன் இறங்கி, கியூவில் நின்று, மைக்கை ஒருவர் கையிலேயிருந்து இன்னொருவர் பிடுங்கி கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்கள்.

சில கேள்விகள், "ஏன் சார், சாமி மூக்கிலேருந்து பன்னிதான் வந்தது, யானை ஏன்சார் வரல்ல" என்பதுபோன்ற 'மொக்கை' கேள்விகளாக இருந்தாலும் மொத்தத்தில் அறிவு பூர்வமான பல கேள்விகளை கேட்டு, பேச்சாளரின் அறிவை, வாசிப்பை நன்கு சோதனை செய்தார்கள் பையன்கள். நரசிம்மர் ஹிரணியனின் வரங்களை எவ்வாறு முறியடித்தார் என்ற விவரங்களை அந்தப் பௌராணிகர் விளக்கவேயில்லை (அதுதான் அந்தப் புராணத்திலேயே முக்கியமான பகுதி) என்பதை ஒரு மாணவர் சுட்டிக்காட்டினார்.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் மேலும் வாசிக்க…

0

மறுமலர்ச்சி எழுத்தாளர் சுஜாதாஎழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார்.

"சிலர், 'இப்ப எதுல எழுதறிங்க?' என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , 'சார்! உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே. சட்டுனு நினைவு வரலை. நீங்க யாரு?' என்கிறார்கள்."

இவர்கள் பரவாயில்லை. தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டு விவரம் கேட்கிறார்கள். பலர் அப்படியில்லை. தெரிந்த மாதிரி பாசங்கு செய்யும் அந்த 'பலரை'ப் பற்றி சுஜாதா என்ன சொல்கிறார் பாருங்கள்:

"பலர், 'இப்ப நீங்க எழுதற 'கண்டதும் கேட்டதும்' கல்கில விடாம படிக்கிறேன்' என்பார்கள்."

மகாகவி பாரதிஇதைப் படித்தவுடன் மகாகவி பாரதியின் 'சேவகன்' (கண்ணன் 'எங்கிருந்தோ' வருவதற்கு முந்தையவன்) – "ஏனடா நேற்றைக்கு நீ வரவில்லையென்றால்" சொல்லும் சால்ஜாப்பு நினைவுக்கு வருகிறது: "பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்". தேள் கொட்டியது என்று சொல்லியிருந்தால் அந்த நொண்டிச் சாக்கில் சிறிதளவாவது உண்மை கலந்திருக்கும். அவ்வாறின்றி அக்மார்க் பொய்யாகத்தான் இத்தகைய டுபாகூர் காரணங்கள் அமையும் என்பதை பாரதி எடுத்துக் காட்டியுள்ளார்.

சுஜாதா எழுதிவந்த கட்டுரைத் தொடரின் பெயர் "கற்றதும் பெற்றதும்"; வெளிவந்த பத்திரிக்கை ஆனந்த விகடன்!

இதுபோல் சில பாசாங்கு பேர்வழிகளை கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் கட்டாயம் காணலாம். பாடகர் பைரவியில் ஆலாபனை செய்துகொண்டிருக்கும் போது, நம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர், "ஏன் சார், இது கானடாவா, மோகனமா?" என்று உரக்க கேட்பார்! பேசாமல் வேறு சீட்டைப் பார்க்க போய்விட வேண்டியதுதான். இல்லையென்றால் அடுத்தது மோகனம் பாடும் போது 'இது பைரவியா' என்பார்!

இதைத்தான் 'double whammy' என்கிறார்களோ?

0

பொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு ஆல்பம், கிழிந்து சிதிலமாக இருந்தது. திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷன் அருகில் பிளாட்பாரம் கடையில் வாங்கியதாக நினைவு.

அந்தப் படங்களை மெனக்கெட்டு தோசை வார்ப்ப்பது போல் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து (சரி, மின்வருடி), அதை சரி செய்து, பிகாசாவெப்-ல் அப்லோடு செய்து, இதன் கீழ் இட்டிருக்கிறேன்.

Enjoy!
மேலும் வாசிக்க…

2

Bhaja Govindamஎழுத்தாளர் திரு. சுந்தர்ஜி ப்ரகாஷ் அவர்கள் ஆதி சங்கரரின் "பஜ கோவிந்தம்" என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் சுருக்கமாக மொழி பெயர்த்து அளித்திருந்தார். அதனை வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன.

முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் முன்னுரை நினைவுக்கு வந்தது. நான் மாணவனாக இருந்தபோது அந்த உரையை அவருடைய குரலிலேயே (மிமிக்ரி) பேசி பரிசு பெற்றிருக்கிறேன். "அத்வைத சித்தாந்தத்தை பரப்பிய ஆதி சங்கரர், பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு பல ஆக்கங்களை அளித்திருக்கிறார்; அவற்றில் பஜ கோவிந்தமும் ஒன்று" என்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் இந்த அறிமுகத்தை தொடங்கி, அதன் முத்தாய்ப்பாக "Shri Sanakra has packed into the Bhaja Govindam song, the substance of all Vedanta, and set the oneness of Gnana and Bhakthi to melodious music" என்று இரத்தினச் சுருக்கமாக இந்தப் படைப்பை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

அங்கும் இங்கும் அலைபாயும் நம் "மூட" மனத்தின் அலங்கோலத்தைப் பற்றித்தான் அந்த ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. நிலையில்லாத இகலோக சுகங்களின் ஈர்ப்பு எப்படி நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது, அதனிலிருந்து மீள்வது எவ்வளவு முக்கியம் என்பது இந்த நூலின் அடிநாதமான கருத்து. ஓஷோ ரஜனீஷ் இதற்கு விரிவான உரை ஒன்றை அளித்திருப்பதாக அறிகிறேன். அதனையும் சின்மயானந்தாவின் உரையையும் வாசிக்கவேண்டும். That is part of my Ta-da list!

அந்த நூலின் பதினான்காவது ஸ்லோகம் மிகவும் சுவாரசியமானதாக மற்றும் சமகால நிதர்சனத்திற்கு ஒப்ப அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகத்தை அப்படியே சமஸ்கிருதத்தில் அளிக்கிறேன்:

जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बर बहुकृतवेषः |
पश्यन्नपि च न पश्यति मूढः
ह्युदरनिमित्तं बहुकृतवेषः ||

தமிழில்:

ஜடிலோ முண்டீ லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹு கிருத வேஷ:
பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூட:
ஹி உதர நிமித்தம் பஹு கிருத வேஷ:

Jatilo Mundi

இதன் சுருக்கமான தமிழாக்கம்: மேலும் வாசிக்க…

0

P.B.Sreenivasசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீனிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் கொடுக்கிறார் என்றார்கள். என் ஃபேவரிட் ராஜாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டவர் என்பதால் பி.பி.ஸ்ரீனிவாஸ் எனக்கு பிடிக்காத பாடகராகத்தான் வெகு நாட்கள் இருந்தார்.

ஆனால் அந்த குழைவான bass குரலினிமையை ரசிப்பதை எவ்வளவு நாட்கள் தவிர்க்க இயலும்? "அடுத்த வீட்டுப் பெண்" பாடல்கள்தான் முதன் முதலில் எனக்குப் பிடித்தவை – கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால். சினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமல் கிராமத்தில் வளர்ந்த எனக்கு எங்கள் வீட்டில் இருந்த Tesla ரேடியோ தான் ஒரே இசை ஊற்று. அதன் மூலம் என் செவிகளை வந்தடைந்தவை பல வரலாறு படைத்த பாடல்கள். "காலங்களில் அவள் வசந்தம்", "நிலவே என்னிடம் நெருங்காதே" போன்ற தேனில் தோய்ந்த பாடல்களுக்கு மயங்கவில்லையென்றால் நான் ஒரு ஜடம்தான்!

லேசான nasal குரல் அவருடையது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.

ஜெமினி கணேசன் தவிர பாலாஜி, முத்துராமன் போன்ற பலருக்கு பின்னணி பாடியிருக்கிறார் பி.பி.எஸ். சத்யனுக்கு குரல் கொடுத்த "அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் திருடாதே என்ற படத்தில் சரோஜாதேவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு வாயசைக்கும் "என்னருகே நீ இருந்தால்" என்னும் பாடல் இவர் பாடியதுதான். அதன் வீடியோவைக் காண இங்கே கிளிக்குங்கள் (It will open on an overlay).
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . மறுமொழி இடுக#

0

குழந்தை கடத்தல்

child-lifter.jpgசென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று விட்டாள். இது குறித்து போலீசில் அவர்கள் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை தூக்கிச் சென்ற அந்த மர்ம பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அந்தப் பெண்தான் குழந்தையை திருடியவள் என்று அடையாளம் காட்டப்பட்டாள்.

குழந்தை மீட்பு

இதற்கிடையே ஆவடியில் இருந்து சென்னை வந்த மின்சார ரெயிலில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை பார்த்து விட்டு அது தங்களுடைய குழந்தை தான் என பெற்றோர் உறுதி செய்தனர்.

இந்நிலையில் குழந்தையை திருடிய பெண்ணிட்ம் ஒரு திடீர் குழந்தையைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் கொடுக்க, அவளும் பிடிபட்டாள்; வீடியோ அடையாளம் உறுதி செய்யப்பட்டு அவளிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்டது.

மரபணு சோதனை

dfcf67b6-2b2f-428a-817c-81604ef50411_S_secvpf.gif.jpgஇப்போது கைவசமிருக்கும் இரண்டு குழந்தைகளிடையே எந்தக் குழந்தை அவர்களுடையது என்பதை கண்டு பிடிக்க மரபணு சோதனை (DNA genetic fingerprinting) நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான அனுமதி வேணடி நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர்.

யாருடைய சாயல்?

சாதரணமாக பிறந்த குழந்தையை பார்க்க வரும் பெரிசுகள் தவறாமல் உதிர்க்கும் கருத்துக்கள் அக்குழந்தை யாரை "உரித்து" வைத்திருக்கிறது என்பது பற்றித்தான். "அப்படியே அம்மா மூஞ்சியையே உரிச்சு வெச்சிருக்கு பாரு" என்று தாய் வழி உறவுகளும், "நம்ப ராஜு மாதிரியே பெரிய கண்ணு பாரு இந்த நொங்குக்கு" என்று தந்தையின் வீட்டு பெரிசுகளும் ("ம்க்கும், அந்த மேட்டு நெத்தியை கொள்ளாமல் இருந்தால் சரிதான்" – இது கிராஸ் டாக்!), மற்றும் அத்தை, மாமாக்களின் அங்க அடையாளங்களை அந்த பிஞ்சுக் குழந்தையின் மேல் ஏற்றி, குழந்தையை தங்கள் குடும்பத்துடன் இணைத்து ஏற்றுக்கொண்டு விடுவது தான் நம் மரபு.

சில நாட்கள் சென்ற பின் அக்கம் பக்கத்தார் குழந்தை வந்து பார்த்து விட்டு "பையன் அப்பன் மாதிரியே ஜொள்ளு விடரான் பாரு" என்று அந்த மூத்த ஜொள்ளனை ஓரக் கண்ணால் பார்த்தபடி கிசுகிசு கமெண்டுகளும் அரங்கேறும்!

மேலை நாடுகளில் தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு Smart Tag மூலம் மாறி விடாதபடி இணைப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். கண்காணிப்பும் பலமாக இருக்கும். அது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இங்குள்ள மருத்துவ மனைகளிலும் அமையப்போவது எப்போது!

யாருக்கு அப்பன் யாரோ!

DNA double helixஇன்னொருவர் மூலம் தனக்குப் பிறந்த குழந்தையை அது தன் கணவன் மூலம்தான் உண்டானது என்று நம்ப வைத்து வளர்ப்பதை "Paternity Fraud" என்று அழைக்கிறார்கள். “Maternity is always certain, paternity is a matter of inference” என்ற legal maxim அடிப்படையில் தாலி கட்டிய கணவன் தந்தை எனும் பட்டம் பெறுகிறான், அதற்கு அவன் chromosome தானம் செய்யாமல் இருந்தால் கூட! இது கொடுமைதான், என்ன செய்வது! இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க மரபணு சோதனைதான் சரியான வழி என்று பலர் வாதிடுகிறார்கள். ஆனால் பல நீதிபதிகள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. இதன் விளைவு – தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்" கதைதான்!

ஆனால் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக எண்ணிக் கொண்டு ஒரு தாய் அதனை பால் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? சிறிது வளர்ந்த பிறகுதான் வண்டவாளம் பல்லை இளிக்கும். அதுவரை குயில் குஞ்சுகளை தனதாக வளர்க்கும் காக்கையின் நிலைதான் அந்த தாய்க்கு!

அப்பா டக்கர் குயிலார்!

மேலும் வாசிக்க…

1

நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.

Pawns of peace

அது என்ன "அமைதிக்கான அடமானங்கள்"? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது "Pawns of Peace" என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!

"Pawn" என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:

  1. அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது
  2. செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர்
  3. பிறரால் "பகடைக்காயாக" பயன்படுத்தப்படுதல்

மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் "pawn" என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . 1 மறுமொழி#

1

Do a barrel roll in googleஇப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே "கூகிள் செய்வது" என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது "ஸெராக்ஸ்" செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand name becoming generic.

சரி, இப்போது "Do a barrel roll" என்னும் சொற்றொடரை கூகிளில் தேடுங்கள். என்ன ஆகிறது உங்கள் புரௌசர் (உலாவி)? ஒருமுறை குட்டிக்கரணம் அடிக்கிறதா? இல்லையென்றால் நீங்கள் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பாவிப்பவராக இருக்கவேண்டும்; அல்லது அரதப் பழசான உலாவியை பயன்படுத்துபவராக இருக்கவேண்டும்! (கூகிள் குரோம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்திப் பாருங்கள்)

இப்போது "tilt" அல்லது "askew" என்னும் சொற்களை கூகிளில் தேடுங்கள். உங்கள் புரௌசர் சற்றே வலப்புறம் நாணிக் கோணிக்கொண்டு நிற்கிறதா?

அடுத்ததாக "ascii art" என்னும் சொல்லைத் தேடுங்கள்? என்ன ஆகிறது?

சார்ந்த வகை: இணையம் :: நாள்: . 1 மறுமொழி#

22-ல் இது-112345...கடைசி »