சுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல்

வெண் பொங்கல்சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் “ப்ரேக்ஃபாஸ்ட்” என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் ஸ்டேஷனில் வண்டி ஏறித்தான் பொன்மலை செல்லவேண்டும். இரவு சாப்பாடு “மாயவரம் லாட்ஜ்” அல்லது “ஆர்.டி.ஸி”யில்.

அந்த ஆனந்தா லாட்ஜில் ரெகுலராக சாப்பிடுபவர்களுக்கு “பில்” கொடுப்பது கிடையாது. சாப்பிட்ட பிறகு “கல்லா”வில் இருக்கும் கணக்கு நோட்டில் நம் பக்கத்தை எடுத்து நாமாக எவ்வளவு அணாவுக்கு சாப்பிட்டோம் என்று கணக்கு போட்டு எழுதிவைக்க வேண்டியதுதான். அடுத்த மாத ஆரம்பத்தில் கூட்டுப் புள்ளி போட்டு கணக்கை நேர் பண்ணவேண்டும். அநேகமாக யாரும் ஏமாற்றுவது கிடையாது. இப்படி நம்பிக்கையிலேயேதான் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனந்தா லாட்ஜில் டிஃபன் மிக ருசியாக இருக்கும். ஒருநாள் காலையில் “கமகம”வென்று நெய்ப்பொங்கல். நல்ல பசி வேறு எனக்கு. ஒரு “பிடி” பிடித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு “புஸ்தி” மீசைக்காரப் பெரியவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் தன் “அதிர் வேட்டுக்” குரலில், “தம்பி, என்ன காரியம் பண்றீங்க? எங்க வீட்டுப் பையனா இருந்தா இன்னேரம் “பளார்”னு கோட்டறையா அறைஞ்சு, கட்டி வைச்சு புளியம்ப்ளாரால விளாசியிருப்பேன்” என்றார். எனக்கு ஒன்றுமே புரியல்ல. எல்லாரும் வேறே வேடிக்கை பாக்கறாங்க. உடனே அவர், “ஏன் தம்பி, இந்த பொங்கல்ல குந்துமணி கணக்கா முழிச்சுக்கிட்டு இருக்கு பாருங்க, இந்த நெய்யில வறுத்த மிளகையெல்லாம் பொங்கலோட சேர்த்து கண்ணில தண்ணி வற்ற மாதிரி கடிச்சு சாப்பிட்டு விட்டு, அதுமேலயே சுடச்சுட இந்த ஐயர் கொடுக்கற “டிக்காக்ஷண்” காப்பியையும் ஊத்திகிட்டு, அந்த ஆனந்தத்தை அனுபவிக்கறத்துக்காவே அஞ்சு மைல் வண்டி கட்டிக்கிட்டு இங்க வற்றேன் நான். நீங்க என்னடான்னா, “குந்தினாப்ல” ஒரொரு மிளகா எடுத்து எலைக்கு வெளீல போடறீங்களே” என்று கடிந்து கொண்டார்.

அன்று தான் எனக்கு கீதோபதேசம் ஆயிற்று. “ஆகா, எத்தகைய ப்ரஹ்மானந்தத்தை ‘மிஸ்’ பண்ணிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பொங்கலில் ஆழப் புதைந்திருக்கும் ரகசிய ருசிகளை தேடிச் சுவைப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, நாளது வரையில் அந்தத் தேடுதலிலேயே அனவரதமும் ஈடுபட்டு ஒரு முழுநேர வெண்பொங்கல் பக்தனாக மாறியுள்ளேன்.

திருமணமான புதிதில் நாங்கள் மயிலை லஸ் முனையில் மாடியில் இருந்த “சாந்தி விஹார்” ஹோட்டலில் பொங்கல் சாப்பிட்டோம் (இப்போது அந்த ஹோட்டல் இல்லை. ஆனால் அதே பெயரில் உள்ளடங்கி கேண்ட்டின் போல் ஒறு சிறிய கடைதான் இருக்கிறது. Update: அதுவும் இப்போது காணோம்). இன்றுவரை அதே பொங்கல் ருசியைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைக்கவில்லை. இப்போதுகூட என் மனைவி பொங்கல் செய்யும்போதெல்லாம் “என்ன, சாந்தி விஹார் பொங்கல் மாதிரி வந்துடுச்சா?” என்பார். நானும், “அந்த ருசியை நீ மிஞ்சி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது” என்று சொன்னாலும், இன்னும் ஒரு மாத்திரை கம்மியாக இருப்பதாகவே படுகிறது. அரிசி, பயத்தம்பருப்பு, பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, ஜீரகம், நெய் எல்லாம் அதது சரியான அளவில், சேரும் வரிசையில் (sequence), வேகும் பதத்தில் ஒன்றாகச் சேர்ந்து, ஸூபின் மேஹ்தாவின் இசைக்குழுவினர் வாசிக்கும் முத்தாய்ப்புச் சிகரம்போல் (crescendo of his symphony) அப்படியே “ஜிவ்வென்று” ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்கும் ரேஞ்சில் ஒரே தூக்காகத் தூக்கவேண்டும்!

என்னை இந்தப் பொங்கல் பைத்தியம் நன்றாகப் பிடித்துக் கொண்டு விட்டது. நள்ளிரவில் எங்கேயோ தூரத்தில் “பொங்கல்” என்று கிசுகிசுத்தால் போதும். அரக்கப் பரக்க எழுந்து லஜ்ஜையில்லாமல் உங்கள் கூட “எங்கே எங்கே”யென்று ஓடிவருவேன். என் உறவினரெல்லாம், “ஏண்டா, இன்னும் ‘பொங்கல் பொங்கல்’-னு அலையறையாடா” என்று கிண்டலடிக்கும்போதெல்லாம் என் மனைவி தலையில் தட்டிக் கொள்வார்.

ஒரு முறை பொங்கல் திருநாளன்று தியாகராஜ ஆராதனை உத்சவம் சென்றிருந்தேன். மதியம்தான் மாதம் பிறக்கப் போகிறது எனபதால் சாவகாசமாகப் பூஜை செய்யலாமென்று கச்சேரிகளைக் கேட்டுவிட்டு, தஞ்சை செல்ல பஸ் ஏறிய நான் சாலை திருப்பத்தில் திருவையாறு ஹோட்டல் ஒன்றில் “சுடச் சுட நெய்ப் பொங்கல்” என்று சாக்பீஸால் எழுதப்பட்ட போர்டைக் கண்டவுடன் குதித்து இறங்கி விட்டேன். முற்றிய கேஸ்தான்!

அதேபோல சாக்பீஸ் போர்டை இன்று சென்னையில் மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில்தான் காணலாம். அங்கும் முன்பு பொங்கல் நன்றாக இருந்தது. இப்போது ரொம்ப “கமர்ஷியலாக” ஆகிவிட்டது.

நீங்களும் ஒரு வெண்பொங்கல் அபிமானியா? சென்னையில் இன்றைய தேதியில் இரண்டு இடங்களை சிபாரிசு செய்வேன்:

  1. *டிரைவின் வுட்லேண்ட்ஸ்
  2. **எழும்பூர் ஹோட்டல் அசோகா

5 விண்மீன் விடுதிகளில் போய் உருசி தேடாதீர்கள். அந்தத் தாரகைகளின் எண்ணிக்கை குறிப்பதே, அங்கு உணவுப் பொருட்கள் எவ்வளவு வாரங்கள் ஆழுறை கொள்கலனில் (Deep freezer) உறங்கிக் கிடந்தது என்பதைத்தான்!

இன்னொன்று தெரியுமா? திருவெல்லிக்கேணி ரத்னா கஃபே யில் இட்லி-சாம்பார் அணைக்கட்டு (கட்டம் கட்டி வெட்டுடா தமிழா!) மட்டும்தான் சிறப்பு என்றெண்ணி வெண்பாவெல்லாம் பாடுகிறார்கள் பலர். ஆனால் அங்கு நல்ல பொங்கலும் கிடைக்கும் என்பது பலர் அறிவாரில்லை (ஒரு ஸ்பூன் நெய் கேட்டு அதன்மேல் ஊற்றிக் கொள்ளுங்கள்- அந்த சுதந்திரமெல்லாம் தனியாகப் போனால்தான் கிட்டும். “கொலஸ்ட்ரால்” மந்திரத்தை காதில் ஓதுபவர்கள் எழுமுன்னே நடையைக் கட்டுங்கள்!). ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை காலாற நடந்து சென்று ருசித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

ம்ம். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. என்போன்ற பரம ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, *டிரைவ் இன்னில் ஞாயிற்றுக் கிழமைதோறும் மாலையிலும் பொங்கல் போடுகிறார்கள். மேலும் வாரம் 3 நாட்கள் மதியத்திலும் பொங்கல் எட்டிப் பார்க்கிறது. பி.பி.ஸ்ரீனிவாசோடு நீங்களும் சேர்ந்து சாப்பிடலாம்!

ரவா பொங்கலைப் பற்றி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி யிருக்கிறேன். சீக்கிறமே நான் கண்டறிந்த இரகஸியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!
—————-

* டிரைவ் இன் மூடியாகிவிட்டது. அது சென்னைவாசிகளுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. ம்ம் 🙁
** சமீபத்தில் எக்மூர் அசோகா ஹோட்டல் அபிநந்தன் ரெஸ்டரான்ட் சென்றிருந்தேன். பொங்கல் ரொம்ப so so. நல்ல குக் எல்லோரும் திருமண காண்டிராக்டுக்கு சென்றுவிட்டார்கள் போல!

11 Comments


  1. ஆஹா, ஆஹா! எங்க வீட்டில் ஒன்று ஐமீன் ஒருவர் இருக்கிறார் என்று நினைத்தால் இன்னும் எத்தனை பொங்கல் அபிமானிகள்?
    வாரம் தோறும் ஹைகொலஸ்ட்ரால் பொங்கலை ஆக்கிப் போட்டுக் கொண்டு, சுமாராய் இருக்கு என்று சர்டிப்பிக்கேட் வாங்கும்,
    ஒரு துர்ப்பாக்கியவதி.
    பி.கு அப்படியே, தோசைக்கு மிளகாய் பொடித் தொட்டு சாப்பிட்டுவிட்டு, சூடாய் டிகிரி காப்பியை உள் இறக்கினால், அது
    அல்லவா சொர்க்கம்!


  2. உஷா,

    நன்றி. இன்னொரு பொங்கல் ரசிகர் மன்றத் தலைவர் இருப்பதைக் காண மிக்க மகிழ்ச்சி.

    தோசையைப் பற்றி சொன்னீர்களல்லவா. இதே போல் இட்லிக்கும் பொருந்தும்படியாக ஒருமுறை சாவி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

    என் தோசை பற்றிய கட்டுரை (ஆங்கிலத்தில்) இங்கே.
    வாசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

    இதுபோல் தமிழிலும் தோசை, இட்டிலி பற்றி எழுத ஆசை. ஆனால் நீங்கள்தான் வேண்டாமென்கிறீர்கள்!

    அன்புடன்

    எஸ்.கே


  3. எஸ்.கே.,
    நல்லா இருக்கு உங்க பொங்கல்

    வெண்பொங்கலுக்கு மிளகாப்பொடிய விட, வத்தக்குழம்பு இன்னும் நல்ல காம்போங்கறது என் கட்சி!

    அந்த மீசைக்காரர் சொன்னது சரிதானே. மிளகும், முந்திரியும் சேத்துக்கடிச்சா சொர்க்கமே.

    பொங்கலோடு நிறுத்தினா எப்படி? இட்லி தோசை பத்தியும் போடுங்க.


  4. நன்றி, இராமனாதன்.

    இட்லி, தோசை வேகுது.

    சீக்கிறமே எலைல வந்து விழும்!

    எஸ்.கே


  5. இட்லி தோசை வரபடி வரட்டும்.

    வத்தக்குழம்ப விட்டதுக்கு இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்! :))


  6. ஐயா வத்தக் குழம்பின் வம்புக் காதலரே,

    ஒரு முழுப் பதிவே விள்ளாமல் விரியாமல் வ.கு-வுக்கு டெடிகேட் செய்துவிடலாம்.

    ஆமாம், பொங்கலுக்கு வத்தக் குழம்பை தொட்டுகிட்டால் நல்லாத்தான் இருக்கும் போலிருக்கே – அந்த புளிப்பு கலந்த உறைப்பும், பொங்கலின் சமர்த்தான ருசியும் – ரசிகரய்யா நீர்!

    கும்பகோனம் மடத்துத் தெரு வெங்கடா லாட்ஜில் பொங்கலுடன் “கொத்ஸு” போடுவார்கள். அது தனி காம்போ!

    கொச்சியில் ஒரு நண்பர் வீட்டில் எனக்கு ஸ்பெஷலாக “மிளகூட்டல்” பொங்கலுடன் துணையாக வந்தது.

    இப்படி பல மனைவிகள் பொங்கலின் அந்தப்புரத்தில்!


  7. அப்படி வாருமய்யா வழிக்கு :))

    வத்தக்குழம்பும் சுட்டப்பளம் பற்றி மறந்து போய் மிளகாய்ப்பொடியை பற்றி கூறியதற்காகவே வத்தக்குழம்பின் virtues களை எடுத்துக்கூறும்படி ஆயிற்று!

    //மிளகூட்டல்//
    நம்மூரு முளகு குழம்பு மாதிரியா? அதுவும் பொங்கலுக்கு கலக்கலா இருக்குமே?

    //வத்தக் குழம்பை தொட்டுகிட்டால் நல்லாத்தான் இருக்கும் போலிருக்கே //
    இதவரைக்கும் டரை செஞ்சே பார்த்ததில்லியா? Missing something in life என்று கூறி வ.கு. புராணத்தை முடித்துக்கொள்கிறேன். :))))


  8. எஸ்கே : நானும் பொங்கல் ரசிகன் தான். பெங்களூரு வுக்கு ஒரு முறை போயிருந்த போது, ஒரு செல்·ப் சர்வீஸ் ஓட்டல் மெனுவிலே பொங்கல் என்று பார்த்து விட்டு, அரக்கபரக்க, ஓடிப் போய் வாங்கினால், பொங்கலை ஜக்கில் மொண்டு தட்டில் ஊற்றிக் கொடுத்தார்கள். பொங்கல்னா மெட்ராஸ் தான். பாண்டி பஜார் கீதா க·பே? பாரிமுனை நியோ ரங்கவிலாஸ்?

    //என்ன, சாந்தி விஹார் பொங்கல் மாதிரி வந்துடுச்சா?” என்பார். நானும், “அந்த ருசியை நீ மிஞ்சி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது” என்று சொன்னாலும்//

    இதல்லாம் பொது வாழ்க்கையிலே சகஜமுங்க 🙂

    //5 விண்மீன் விடுதிகளில் போய் உருசி தேடாதீர்கள். அந்தத் தாரகைகளின் எண்ணிக்கை குறிப்பதே, அங்கு உணவு எவ்வளவு வாரங்கள் ஆழுறை கொள்கலனில் உறங்கிக் கிடந்தது என்பதைத்தான்.//

    அய்யோ… நெசமாவா?

    //திருமணமான புதிதில் நாங்கள் மயிலை லஸ் முனையில் மாடியில் இருந்த “சாந்தி விஹார்” ஹோட்டலில் பொங்கல் சாப்பிட்டோம் //

    ஆஹா சாந்திவிஹார்…. பக்கத்திலேயே வித்யா விஹார்னு ஒரு புஸ்தகக் கடை இருக்கும். மந்தவெளிலேந்து பொடி நடையா வருவோம். அப்ப பார்த்திருக்கேன்.. அந்த வயசுல, நம்ம பட்ஜெட்டுக்கு சாந்தி விஹார்லாம் ரொம்ப ஜாஸ்தி..:-)

    //ரவா பொங்கலைப் பற்றி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி யிருக்கிறேன்.//
    ரவா பொங்கலா? சுத்த வேஸ்ட்


  9. பிரகாஷ் அவர்களே, வருக வருக!

    கர்னாடகாவில் போய் பொங்கல் என்றால், கூடவே ஸ்ட்ராவும் செர்த்து ஆர்டர் செய்யவேண்டும். அப்படியும் விடாமல் சிலசமயம் கேட்பதுண்டு. “‘பொங்கல்’ என்று பெயரிட்டு எதைக் கொடுத்தாலும் என் கணவர் சாப்பிட்டுவிடுவார்” இது என் மனைவி என்னைப் பற்றி விமரிசிக்கும் பயோ-டேட்டாவின் ஒரு முக்கிய குறிப்பு.

    நீங்கள் கூறிய இரண்டு இரண்டு உணவகங்களிலும் ஒரு “பொங்கல்” சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

    ரவா பொங்கலுக்கு சில ஸ்பெஷல் பக்குவம் தேவைப்படுகிறது. அவை முழுமையாகக் கையாளப்படாததால்தான் பலரால் அதன் இயல்பான சுவையைக் கொணர முடிவதில்லை.

    நீங்களே பாருங்கள், என் ஆராய்ச்சியின் முடிவில் ரவா பொங்கலைப் பற்றிய உங்கள் கருத்து அப்படியே உல்டா ஆகப்போகிறது – தேர்தல் நெருங்கும்போது கூட்டணி மாறுவதுபோல்!


  10. இராமனாதன்,

    ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டீர்கள்!

    எஸ்.கே

Comments are closed.