டேபிள் கிளீன்!

பி.ஜி.வுட் ஹவுஸின் கதைகளில வரும் சீமான்களின் வீட்டு ஊழியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நிறைய சர்ச்சைகள் எழும். அவர்களுக்குள் ஒரு ஏணிப்படி போன்ற அமைப்பு (pecking order) இருக்கும். இது தெரியாமல் எஜமானர்கள் அவர்களிடம் காட்டும் அணுகுமுறை அவர்களுக்கு எற்புடையதாக அமையவில்லையெனில் சில சிக்கல்கள் தோன்றும். அதன் விளவுகளை அவர் மிக்க நகைச்சுவையுடன் வர்ணிப்பார். “வேலட்” என்று அழைக்கப்படும் “கனவானின் தனிப்பட்ட கனவான்” (இதில் இரண்டாவது “கனவான்” எனும் சொல் “உதவியாளர்” என்ற பொருளைக் கொள்ளும். என்றாலும் வுட் ஹவுஸ் “Gentleman’s personal Gentleman” என்றே அழைக்கிறார். இது அவருடைய சிறப்பான சொல்லாட்சி), தவிர சமையல் மற்றும் சில சில்லுண்டி வேலைகளைச் செய்யும் “பட்லர்” (அந்தக் காலத்தில் வெள்ளைக்கார சீமாட்டிகளிடம் அடிமையாக இருந்தபோது, நம் ஆட்கள் பந்தாவுடன் பேசிய “பட்லர் இங்கிலிபீஸ்” நினைவுக்கு வருகிறதா!), மற்றும் தோட்டக்காரர்கள், வாட்ச்மேன் – இப்படி வெவ்வேறு படிநிலைகளில் பல பணியாளர்கள் இருந்தனர்.

இதுபோல் நம்மூரில் உள்ள சாப்பாடு ஹோட்டல்களிலும் காபி கிளப்புகளிலும் பணியாற்றும் சிப்பந்திகளுக்கிடையேயிலும் ஏற்றதாழ்வு இருக்கிறது. நான் குறிப்பிடுவது என்போன்றவர்கள் செல்லும் சாதாரண கஃபேக்களைப் பற்றித்தான் – கார்ப்பொரேட் (விண்மீன்கள் மின்னும்) ஹோட்டல்களைப்பற்றியல்ல. (அதற்காக நான் “பெத்த” ஓட்டல்களுக்கு சென்றதேயில்லை என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். முழுமையான “ஓஸி”யில் எத்தனை முறை சென்றிருக்கிறேன்! இப்பவும் அழைப்பு பலரிடமிருந்து வருகிறது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். காரணத்தை என் முந்தைய பதிவில் காணலாம்.)

முதலாளி என்று ஒருவர் இருப்பார். சிறிய கடைகளில் அவரே கல்லாவில் இருப்பார். அவர் பல தொழில் செய்பவராகவோ அல்லது பல இடங்களில் கடை வைத்து ஆங்காங்கு சென்று காசை அள்ளி சாக்கில் நிரப்பிக் கொண்டு, பிறகு சி.வீ 1, சி.வீ 2, சி.வீ 3 என்று ரவுண்டு வருவதற்கே நேரம் போதாமல் தவிப்பவராகவோ (இடையிடையே மாமியார் வீட்டில் வேறு வாசம்) இருந்தால், கல்லாவில் தன் மனைவியின் (நம்பர் என்ன? – இங்குதான் சிக்கல்) உறவினரையோ அல்லது வைப்பாட்டியின் (இங்கு பிரச்னையே கிடையாது) உறவினரையோ அமர்ந்தியிருப்பார். அபூர்வமாக அம்மணிகளே நேரடியாக வீற்றிருந்து காசு வாங்கிப் போடுவதும் உண்டு.

ஒரு நள்ளிரவில் ஹோசூரிலிருந்து சென்னை செல்ல வேறுவகை ஊர்திகள் கிடைக்காததால் ஒரு லாரியில் ஏறிப் பயணம் செய்ய நேரிட்டது. அப்போது கிருஷ்ணகிரி அருகில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வண்டியை நிறுத்தி, இட்லி, புரோட்டா என்று ஓட்டுநர் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தபோது பார்த்தால், அங்கு நெருக்கியடிக்கும் லாரிக்காரர்கள் கூட்டம். காரணம், கல்லாவில் ஒரு பெண். நெடிய தோற்றம். மலர்ச்சியான முகம். “வழித்து விட்டாற்போன்ற” அழகு, முரட்டு லாரி டிரைவர்களை சரியான அணுகுமுறையுடன் கையாளும் லாவகம் (எல்லோருமே சிறிது மாம்பழம் சப்பிட்டுவிட்டு மணக்க மணக்கத்தான் வருவார்கள்). அதே நேரத்தில் மக்கள் தம் கண்களை கண்டபடி அலையவிட்டாலும், அந்தப் பெண்மணியுடன் சிறிது மரியாதையுடன்தான் பேசினார்கள். ஒருவேளை திரைக்குப்பின்னால் ஒரு மொட்டை “பாஸ்”, தன் அடியாட்களுடன் BJP(படா ஜொள்ளு பார்ட்டி) -க்களை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பாரோ என்னவோ.

சரி. கல்லாவை விட்டு சற்று உள்ளே செல்வோம். மொத்தத்தில் எலோரையும் மேற்பார்வை பார்க்கவென்று சில “சூப்பிரைசர்கள்” இருப்பார்கள். அவர்கள் அதிகாரம்தான் தூள் பரக்கும். பில் எழுதுபவர்கள், வெள்ளையும் சள்ளையுமாக (இப்போது புதிதாக இந்த “இஷ்டயியில்” தொடங்கியுள்ளது) நோட்டுப் புஸ்தகத்தில் ஆர்டர் எடுப்பவர்கள் போன்ற உபரிகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

இந்த சூப்பிரைசர்கள்தான் ஒரு ஹோட்டலின் வணிக வெற்றியை நிர்ணயிப்பவர்கள். கண்ணசைவிலேயே அனைத்துச் சிப்பந்திகளையும் – குறிப்பாக சப்ளையர்களையும், சுத்தம் செய்பவர்களையும் – கட்டிமேய்ப்பதை பல இடங்களில் கண்டிருக்கிறேன். அதற்கு நேர்மாறாக, காட்டுக் கத்தலாய்க் கத்திக் கொண்டும், கண்டபடி ஏசிக்கொண்டும், அந்த சூழலில் நாம் நிம்மதியாக உணவருந்த இயலாதபடி செய்பவர்களையும் பல ஹோட்டல்களில் காணமுடிகிறது.

ஆனால் பெரும்பாலான உணவகங்களில் “டேபிள் க்ளீன்” செய்யும் பையன்களை கண்டபடி (நாயைப் போல்) அடிக்கும் கொடுமை இருக்கிறதே, இதனை என்னால் தாங்கவே முடிவதில்லை. இதுபோல் நடந்த கடைகளில் நான் பலமுறை சண்டையிட்டுக்கொண்டு பாதி சாப்பாட்டில் வெளிவந்திருக்கிறேன். நான் சொன்ன படிநிலைகளில் கடைநிலையில் இருப்பது இந்த க்ளீனர் பையன்கள்தான். எல்லா ஹோட்டல்களிலும் கிளீனர்கள் பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அங்கு பளீரென்று தொங்கும் ஒரு போர்டில் “இங்கு குழந்தை பணியாளர்கள் இல்லை” என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.

இப்போது நிறைய அரை “இருட்டு” ஹோட்டல்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. நம் ஜேபியிலிருந்து நம்மையறியாமல் “டப்பு” அவர்களின் கல்லாவுக்கு ஊர்ந்து செல்ல ஏதுவாகத்தான் அந்த இருட்டு. சாப்பிடும் பதார்த்தத்தில் கூடுதல் புரதச்சத்து சேர்ப்பதற்காக ஸ்பெஷலாக கரப்பான் பூச்சி பொறித்துப் போடப்பட்டிருந்தால் அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமலிருப்பதற்காகவும் இந்த இருட்டு பயன்படுவது ஒரு fringe benefit. (மெய்யாலுமேங்க, உங்களுக்கு நல்ல சத்துணவு வேணுமின்னா, ஒரு புஷ்டியான கரப்பைப் பிடித்துவந்து அதன் முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும் இரண்டு “ஆன்டென்னா”க்களைப் பிடித்துத் தூக்கி, கடலைமாவுக் கரைசலில் தோய்த்து, அப்படியே எண்ணையில் பொறித்து – வேண்டுமானால் சுவைக்காக சட்னியில் ஒரு “டச்” பண்ணி – “லபக்”கென்று வாயில் போட்டுப் பாருங்கள்! ). இம்மாதிரி இருட்டு ஹோட்டல்களிலும், “ரெஸ்டரான்ட்” களிலும் (மற்றும் “மிலிடரி” ஹோட்டல்களிலும்) ஒரு பழக்கம் இருக்கிறது – அதாவது சப்ளை செய்பவரே நம் எச்சில் தட்டுக்களையும் எடுத்துச் செல்வார். இது எனக்கு ஒவ்வாதது. பலர் சாப்பிட்ட எச்சில்தட்டுக்களை கையில் எடுத்துச் சென்றுவிட்டு அந்தக் கையைக் கழுவாமலேயே அடுத்து நாம் உண்ணவேண்டிய பதார்த்தத்தையும் எடுத்து வந்தால் சாப்பிடப் பிடிப்பதில்லை.

சில ஹோட்டல்களில் தட்டு எடுப்பவர் ஒருவர், டம்ப்ளர் எடுப்பவர் மற்றொருவர், துடைப்பவர் வேறொருவர் என்றிருக்கும். மயிலையில் குளத்தருகே, தென்மாடவீதியில் ஒரு ஹோட்டலில் (நான் படிக்கும் காலத்தில் இதற்கு “டேங்க் உடுப்பி” என்று பெயர்) இருக்கைகள் மிக நெருக்கமாகப் போடப்பட்டிருக்கும். இடையிடையே இந்தக் கிளீனர்கள் கையில் பெரிய இரும்பு வாளியுடன் போனவண்ணம் வந்தவண்ணமாக இருப்பார்கள். மேலும் நாம் சாப்பிடும் மேஜைக்கு அருகிலேயே எச்சில்தட்டு நிறைந்த வாளியை முகத்தருகே காண்பித்தவண்ணம் இருப்பார்கள். “தம்பி, கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன். என்னவோபோல இருக்கிறது” என்று சொன்னால் அவர் நகர்ந்து விடுவார். ஆனால், உடனே அடுத்தவர் அங்கு வந்து நின்றுவிடுவார். அங்கு கிளீனர் : சப்ளையர் விகிதாசாரம் கூடவோ என்று தோன்றுகிறது. நுங்கம்பாக்கம் ஹை ரோடு, ஸ்டெர்லிங் ரோடு முனையில் இருக்கும் ஒரு உணவகத்தில் மதியம் சாப்பாட்டு நேரத்தில் நல்ல கூட்டமிருக்கும். அப்போது சென்றால் இந்த “மிச்சில்சீப்பவர்கள்” நம்மை எச்சில் வாளியாலும், தங்கள் புஜத்தாலும் இடித்துக் கொண்டே சென்றவண்ணம் இருப்பார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டினாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள். ஒரு மாதிரி திமிருடன் பதில் சொல்வார்கள். ஒருவேளை அவர்களுக்கு நல்ல கைதேர்ந்த யூனியன் தலைவர் கிட்டிவிட்டாரோ என்னவோ!

இதுபோல் ஓரிரு கடைகள் தவிர, பெரும்பாலும் இந்த சுத்தி செய்யும் பையன்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குறியது என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்கும். ஒருமுறை ஒரு பெரிய உணவகத்தில் ஒரு “பையன்” தன் கவனக் குறைவால் நான் குடிப்பதற்காக வைத்திருந்த ரசத்தை என் மேல் கொட்டிவிட்டுப் பதறி நின்றான். எனக்கு எழுந்ததே கோபம்! இங்கு ஒரு உளவியல் உண்மையைக் கவனிக்கவேண்டும். பெரும்பாலும் நம் கோபங்கள் செல்லுபடியாகாத நிலையில்தான் இருக்கும். ஏனெனில் எதிராளி நம்மைக் காட்டிலும் பலவானாக இருப்பார். அல்லது செல்வாக்கில் மிக்கவராக இருப்பார் – உதாரணத்திற்கு, நம் மனைவிமார்கள் மற்றும் நம் கீழ் பணியாற்றுபவர்கள்! அதுபோல் அவ்வப்போது எழுந்து, மழுங்கி, பதுங்கிக் கிடக்கும் கோப உணர்ச்சி, இதுபோல் தற்காப்பு வலிமையற்ற பாவ ஜன்மங்கள் ஏதேனும் எசகுபிசகாக நம்மிடம் மாட்டும்போது, மனத்தின் ஆழத்தில் கும்பிக் கிடக்கும் அத்தனை கோப உணர்ச்சிகளும் பொங்கிப் பீரிட்டு எழுந்து, அதனை முழுதும் வெளிக்காட்டுவதன்மூலம் ஒரு வடிகாலாய் அமைந்து, நம் மனம் அதன்மூலம் ஒரு சமநிலையைப் பெற முயலும். இதுபோன்ற giving vent to the pent-up anger என்பது இயற்கையே. அதுபோல் நானும் “இருக்குமிடம் தெரியாமல் இடுங்கிக் கிடக்கும்” என் கண்கள் சிவக்க (ஒரு கற்பகோடி காலம் முன்பு, என் காதலி ஒருத்தி என் திருமுகத்தைப் பற்றிக் கொடுத்த விமரிசனம்: “கரப்பு நக்கிய புருவம், நெல்லில் கீறியது போன்று இருக்குமிடம் தெரியாத கண்கள், சப்பை மூக்கு, சாளவாய்……”. சரி, இதென்ன தடம் புரண்டு செல்கிறது!), அவனைத் திட்டலாம்., பிறகு மேனேஜரைக் கூப்பிட்டு புகார் செய்யலாம் என்ற முனைப்புடன் முறுக்கேறி நிற்கையில், அந்தப் பையன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான். அப்போது என் மனத்தில், “இந்தக் கெடுதலைவிட பல மடங்கு கடுமையான தீங்கு செய்தவர்களையே நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் சிரித்துப் பேசிப் பழகிக் கொண்டிருக்கிறோமே, இந்தச் சிறுவனைத் தண்டித்து நமக்கென்ன கிரீடமா வந்துவிடப் போகிறது” என்ற ஞானோதயம் தோன்றியது. அடுத்த கணம் அவனைப் பார்த்து ஒரு சிறிய புன்முறுவலுடன் “பரவாயில்லைப்பா” என்றேன். அப்போது அந்த அந்த சிறுவனின் முகத்தில் ஒரு ஒளி தோன்றியது. அதுபோதும். என் வாழ்நாளில் நானும் அபூர்வமாக ஒரு நற்செய்கை புரிந்துவிட்டேன் என்ற மனநிறைவுடன் அங்கிருந்து சென்றேன்.

இந்தப் “பையன்கள்” எப்போதும் பலவித சிறுமைகளை எதிர்கொல்ள நேர்கிறது. சும்மாவானும் சப்ளையர் பையன்கள் (இவர்கள் ஒரு படி மேல்நிலையில் உள்ளவர்கள்) இவர்கள் தலையில் தட்டிவிட்டுச் செல்வார்கள். மேலும் மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் போன்றோரை திருப்திப் படுத்த இவர்கள் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறதோ, இரவானால் இவர்கள் நிலை என்ன – ஹோட்டலுக்குச் சென்றால் இதுபோல் சிந்தனை செய்து கொண்டிருப்பது என் வழக்கம். என் மனைவி அடிக்கடி “ஏதாவது குருட்டு யோசனை செய்யாமல் வந்த வேலையைக் கவனியுங்கள்” என்று கடிந்து கொள்வது வாடிக்கையாகி விட்டது.

அடுத்த முறை நீங்களும் ஒரு உணவகத்துக்குச் செல்லும்போது, இந்தக் கடைநிலை ஊழியர்களைப் பற்றி சிறிது சிந்தியுங்கள்!