இந்த இடம் ஆவார்ப்பேட்டையில் மாண்புமிகு ஸ்டாலின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கிறது. நீல்கமல்காரர்கள் குப்பைத்தொட்டியை எங்கோ தூக்கியெறிந்து விட்டார்கள். இடம் நாறிக் கொண்டிருக்கிறது.
சார்ந்த வகை: சிங்காரச் சென்னை :: நாள்: ஜன 9th, 2009. மறுமொழி இடுக.
நான் தினமும் இந்த இடத்தைத் தாண்டித்தான் அலுவலகத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். ஒரு நாளாவது உள்ளே சென்று அந்த கட்டிடத்தின் சரித்திரத்தை ஆராயலாம் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கெல்லாம் ஒரு குழு சுற்றுப் பயணம் மேற்கொள்வதுபோல் யாராவது செய்ய முயலலாம் என்று எண்ணுகிறேன்.
சரி, இந்த இடத்துக்கும் ஒரு சரித்திரக்கதைக்கும் என்ன தொடர்பு? அது போல் தான் இது! சரி, உங்களுக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரைத் தெரியுமா? ஐயா, மேனகா என்ற திரைப் படத்தையாவது தெரியுமா? இல்லை, திகம்பர சாமியாரையாவது தெரியுமா? தெரியாவிட்டால் தில்லக்கேணி சரவணா லெண்டிங் லைப்ரரி அல்லது ராயப்பேட்டை ஈஸ்வரி லைப்ரெரி, அல்லது உங்கள் பேட்டை நூலகம் (கொஞ்சம் அந்துருண்டை வாசம் அடிக்க வேண்டும்) எங்காவது சென்று வடுவூரார் நாவல்களை வாங்கிப் படியுங்கள். அப்பாடா!
அந்தக் கதைகளில் கும்பகோணத்திலிருந்து வரும் கல்யாண கோஷ்டிகள் எல்லாம் சென்னை பார்க் டவுன் "ராஜா ஸர் செவலை இராமசாமி முதலியார்" சத்திரத்தில்தான் "ரூம்" எடுத்துக் கொண்டு தங்கியிருக்கும். இது அவர் கதைகளில் அடிக்கடி வரும் நிகழ்ச்சி. அந்தக் கட்டிடம் இப்போது தமிழ் நாடு சுற்றுலாத் துறை வசம் "பாரு"டன் காட்சியளிக்கிறது. எங்கே இருக்கிறதா? ஆப்பிரிக்க "செராங்கெட்டி" காடுகளில் வரிக்குதிரை மற்றும் வில்டபீஸ்டடுக்கள் சாரிசாரியாக இடம் பெயருவதுபோல் தினமும் பார்க்கிலிருந்து சென்ட்ரல் போகத் தாண்டுவார்கள் பாருங்கள் அங்குதான்!
சீக்கிறமே அதன் உள்ளே நுழைந்து எதாவது சரித்திரச் சின்னங்கள் மீதமிருக்கிறதா என்று பார்க்கிறேன்.
இதன் சரித்திரம் வேண்டுமா? எஸ். முத்தையா அவர்கள் தி ஹிந்து-வில் எழுதியுள்ளதை நீங்கள் இங்கு வாசிக்கலாம். அவர் எழுதியுள்ளதற்கு மேல் நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்?
சார்ந்த வகை: சிங்காரச் சென்னை :: நாள்: பிப் 26th, 2005.
இதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை வெகுநாட்கள் நீடித்திருந்தது. ஆனால் அந்த preeminent status-ஐ ஆட்டோ ரிக்ஷாக்கள் பிடித்துவிட்டன.
எப்படி என்கிறீர்களா? இது சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெள்ளிதில் தெரிந்த ரகஸியமே – "சூடு" வைக்கும் சூட்சுமம் போல! (அதில் ஒத்தைச் சூடு, ரெண்டுபல் சூடு என்று பலவகை இருக்காமே – ஆட்டோ பற்றிய டெக்கினிகல் விஷயங்களில் மிக்க ஞானஸ்தரான திரு. அபூல் கலாம் ஆசாத் அவர்களிடம் முழுப்பணமாக ஒத்தை ரூபாயை தட்சிணையாகக்கொடுத்துப் பாடம் கேட்க வேண்டும்). "பட்"டென்று உடைத்துச் சொன்னால் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கும் காவலர்களுக்கும் ஒருவிதமான நெருங்கிய உறவு இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இப்போது latest நிலைமை என்ன தெரியுமா? தண்ணீர் லாரிகள் தான் ஒலிம்பிக்கில் "no-holds-barred" event-ல் தங்கப்பதக்கம் வாங்கி "வையகமெல்லம் வாரியிறையடா தமிழா" என்று மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ரோடெல்லாம் கோடு போட்டுக்கொண்டு தாறுமாறாக ஓடி, ஆட்கொல்லி அரக்கனாக உருவெடுத்து ஆட்சி செலுத்தி வருகிறது. கேட்பாருமில்லை மீட்பாருமில்லை, இறைவனே, நீயாவது பார்த்துப் போப்பா!
இப்போதெல்லம் டிரக்குகள் ரோடு தவிர நடைபாதைகளில்கூட ஏறி யமனின் அன்றாட வேலையைச் சுளுவாக்குகின்றன. ஒருவேளை யமதர்மன் தன் வாகனத்தை நவீனப்படுத்தி லாரியாக மற்றிவிட்டானா? ஆமாம், "நடைபாதை என்றால் என்ன" என்று ஒருவர் கேட்கிறார். (காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: யாராவது pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!)
சார்ந்த வகை: சிங்காரச் சென்னை :: நாள்: ஆக 30th, 2004. 9 மறுமொழிகள்.

சமீபத்திய மறுமொழிகள்