ஆத்ம ஞானம்

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

துளித்துளி

விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!

கணினி

நுட்பமான மேட்டர்!

5

hard-diskநேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?

எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. (ஊரெல்லாம் இதைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசுவார்கள்!)

சரி, அந்த பலான கிளுகிளு படங்கள் பப்ளிக்காக வெளியே தெரிய வந்தது எப்படி என்று தினந்தோறும் ”நம்பர் ஒன்” நாளிதழைப் படித்து அறிவைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருக்கும் நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

எல்லாம் அந்த “வண்தகடு” செய்த சேஷ்டைதான்! அதுதான் சார் ஹார்டு டிஸ்க்.

பலான கம்ப்யூட்டர் வாத்தியாருடைய “லாப்டாப்” கணினிக்குள் வைரஸ் புகுந்துவிட்டது. இவர் பண்ணும் ஜல்சாக்களால் பொறாமை கொண்ட எவனோ வைரஸ் அனுபிவிட்டான் என்கிறார் இவர். அந்த லாப்டாப்பின் பழுதை நீக்க திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கணினி ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் வைரைஸை நீக்கியபின் வண்தகட்டினுள் நுழைந்து பார்த்தால், “தோடா” என்று மூக்கில் விரல் வைக்குமளவிற்கு பலான படங்கள் – பல போஸ்களின் (வத்தியார்தான்) பலபல கிளுகிளு இளம் பெண்களுடன் – கொட்டிக் கிடக்கின்றன.

அவ்வளவுதான். மேட்டர் பரவலாக மென்தகடுகள் (CD) மற்றும் செல்ஃபோன் கார்டுகள் மூலம் பல்கிப் பரவத் தொடங்கி விட்டன. ஆசாமி இப்போது கைது!

அது கிடக்கட்டும். இப்போது என் இடுகையின் மேட்டர் என்னவென்றால், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம் அந்தரங்க விஷயங்களை அடுத்தவர் கண்ணுக்கும் கருத்துக்கும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதுதான்.

ஒரு பெண் தன் கணவனிடம் வாழாமல் தனியாக இருந்தார். மணமுறிவுக்கு ஒப்பாமல் கணவனிடமிருந்து ஒருகணிசமான துகையைக் கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவளுடைய செல்ஃபோனை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்தார். அதில் இருந்த கார்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய குறிப்புகள், பான் கார்டு விவரங்கள் இன்னும் சில முக்கிய தரவுகள் பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் சிலரோடு சேர்ந்து இருக்கும் ஃபோட்டோக்களும் இருந்தன. அந்த ரிப்பேர் கடையின் முதலாளி கணவனுக்கு வேண்டியவர். அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பெண்ணின் வழக்கு தோற்றுவிட்டது.

உங்கள் கணிப்பில் ஒன்று முக்கிய விவரமாகத் தோன்றா விட்டாலும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாமல்லவா. அதனால் செல் ஃபோனை பிறரிடம் கொடுப்பதற்கு முன்னால் அதிலுள்ள மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுங்கள். அதற்கு முன் ஃபோன் மெமரியிலுள்ள அனைத்து சமாசாரங்களையும் கார்டுக்கு மாற்றிவிடுங்கள். அதன்பின் ஃபோன் மெமரியை சுத்தம் செய்துவிடுங்கள். நிறைய சேமித்து வைத்திருந்தால் அனைத்தையும் உங்கள் கணினியில் back-up செய்துவிடுங்கள்.

சரி. கணிணியின் Hard disk-ல் முக்கிய கோப்புக்களை (files) நீக்கிவிட்டால் (delete) யாரும் பார்க்க முடியாதே என்கிறீர்களா? ஐயா, நீங்கள் டெலீட் செய்த கோப்புகள் உணமையில் அழிக்கப் படுவதில்லை. அவற்றைப் பற்றிய விவரம் மட்டும் வண் தகட்டின் அட்டவணையிலிருந்து (index) நீக்கப் படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் தகட்டின் அந்த பிரதேசங்களில் வேறு கோப்பு எழுதப்படும் வரை அவை அங்கே பத்திரமாக இருக்கும். இதனால் நீக்கியவற்றை சுலபமாக மீள் கொணரலாம் (Undelete).

தவிர, பழுதான ஹார்டு டிஸ்கிலிருந்து கோப்புக்களை மீட்பதற்காக சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன (data recovery software). இவற்றின் துணை கொண்டு தகடுகளில் ஆழப் பதிந்திருக்கும் 0-களையும் 1-களையும் வெளிக் கொணர இயலும்.

ஆகையால் மகா ஜனங்களே, உங்கள் வண் தகடு பழுதாகிப் போனால், அல்லது அது தேவையில்லை என்று எண்ணினால், யாரிடமும் தானம் கொடுக்காதீர்கள்; பழைய சாமான் வாங்குபவரிடம் போடாதீர்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு சுருட்டிக் கொண்டு கிடக்குமோ! ஹார்டு டிஸ்கை ஒரு நல்ல சுத்தியல் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். மென் தகடுகள், மெமரி கார்டுகளுக்கும் இதே மரண அடி முறைதான் சிறந்தது.

அமேரிக்க தற்காப்பு அமைச்சக அலுவலங்களில் (Pentagon) வண் தகடுகளை நூடில்ஸ் போல் shredding செய்துவிடுவார்களாம்.

மைக்ரோசாஃப்டின் இந்த வலைப் பக்கத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாக பல அறிவுரைகளை எழுதியிருக்கிறார்கள். படியுங்கள்.

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 5 மறுமொழிகள்#

1

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் music collection பற்றி நிறைய பில்டு அப் கொடுத்தார்.

PC-யிடம் சென்று அவர் ஒவ்வொன்றாக தடவித்தடவி கிளிக் செய்து கொண்டிருந்ததிலிருந்தே அவருடைய அனுபவ அறிவு புலப்பட்டது. பிறகு ஒரு பாட்டின் கோப்பின்மேல் கிளிக் செய்தார். கர்ஸர் பாட்டுக்கு உடுக்கடித்துக் கொண்டிருந்ததேயன்றி வேறு ஒன்றும் நடக்கக் காணோம். "என்ன இவ்வளவு நேரம் ஆகிறதே" என்று கேட்டதற்கு அவர் "பொதுவாகவே கம்ப்யூட்டரில் அவ்வளவு நேரம் ஆகும்" என்று இப்படி ஒன்றுமே தெரியாத ஞானசூனியத்திடம் பேசவேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்னார்!

இதனிடையே நான் அந்த கம்ப்யூட்டரின் விவரங்களைப் பார்த்தால் அது Pentium-2 processor, 128 mb RAM வீரியம் கொண்ட அதிவேகக் குதிரை என்பது தெரிந்தது. நண்பரிடம், "இது பழைய கான்ஃபிகரேஷனாக இருக்கிறதே, அப்கிரேடு செய்யுங்களேன். ஃபாஸ்டாக இருக்க்கும்" என்று ஆலோசனை தெரிவித்தேன்.

வதது வினை. உடனே கோபமாக என் பக்கம் திரும்பி, "என் மச்சினன் தன் கையால் பூட்டின கம்ப்யூட்டராக்கும் இது. என்ன ஜோரா லோடு எடுக்குது தெரியுமா?" என்றார்!

சரி, லோடு ஏற்றும் லாரி ரேஞ்சுக்கு கம்ப்யூட்டரைக் கொண்டு சென்ற நிபுணரிடம் பேசி ஒன்றும் ஆகப் போவத்தில்லை என்பதாலும், அவருடைய மைத்துனர் வேறு இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மேலும் கதவிடுக்கிலிருந்து அனல் வீசும் கண்கள் எதோ தெரிந்ததுபோல் ஒரு மனப் பிராந்தி உண்டானதாலும், நான் உடனே ஜகா வாங்கி, ஜூட் விட்டு அம்பேலானேன்!

இவரை விட விஷய ஞானி ஒருவர் எனக்கு ஃபோன் செய்து மிகவும் பதட்டத்துடன், "என் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டைக் கணவில்லை" என்றார். "எந்த வலைத்தளத்திற்குச் செல்ல முயற்சித்தீர்கள், என்ன மெசேஜ் வருகிறது" என்று கேட்டேன். அவர் ஒரு பெருமூச்சு விட்டு, "இண்டெர்நெட்டே வரமாட்டேனென்கிறது. சைட்டுக்கு எப்படிப் போவது" என்றார்.

சுமார் இருபத்தி ஒன்று கேள்விகளுக்குப் பின் நான் தெரிந்து கொண்ட நிலவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடந்தது என்னவென்றால், மனிதர் எல்லா கோப்புகளையும் default-ஆக டெஸ்க்டாப்பில்தான் சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதால் ஸ்கிரீன் முழுவதும் ஒரு அம்புக்குறிக்குக் கூட இடமில்லாத படி ஐகானாக நிரம்பியிருக்கிறது. அவற்றில் உலாவிக்கான (வேறு என்ன – ஐ.யி கண்றாவிதான்!) ஷார்ட்கட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் இருக்கும். அதை கிளிக் செய்து வெப்சைட்டுகளுக்கு அவர் செல்வது வழக்கம். இடையில் அவரோ வேறு யாரோ ஐகான்களை இடம் மாற்றிவிட்டார்கள். அதான் அந்த வல்லுனர் "இண்டெர்நெட்டை"த் தெடிக் கொண்டிருக்கிறார்!

அவர் அதைத் தேடட்டும். நாம் போய் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியாக எதையாவது தேடுவோம்!

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 1 மறுமொழி#

4

கணினி என்பதே இணையத்தினுள் நம்மை இட்டுச் செல்லும் ஒரு ஒடமாகக் கருதப்படும் நிலை வந்து விட்டதைப் பற்றி சென்ற இடுகையில் உரையாடினோம். அவ்வாறு இணையத்தினுள் தளம் தளமாகத் தாவித் தாவித் திரியும்போது, எங்காவது நின்று, நிதானித்து, மனத்தை ஊன்றிப் படித்துப் பார்க்கிறோமா? இல்லையே.

சிறு குழந்தைகள் பலருக்கு கவனக் குறைபாடு (Attention Deficit Disorder) தோன்றுவதுண்டு. கவனம் ஓரிடத்தில் நில்லாமல் அலை பாய்ந்துகொண்டே யிருத்தல். பிறகு சிறிது நாட்களில் அவர்களுக்கு சரியாகிவிடும். ஆனால் இணையத்தில் உலா வருவதால் நமக்கு ஏற்படும் கவனக் குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புக்களே குறைவு என்று தோன்றும் நிலை இருக்கிறது. ஒரு தளத்தில் மேயத் தொடங்கியவுடனேயே அங்கே "பளிச்" என்று மின்னும் ஒரு சுட்டியை கிளிக்கென்று கிள்ளி விட்டு ஒரு வீடியோவைக் காணத் துடிக்கிறது மனம். அங்கே சென்றால் வீடியோ கீழிறங்க நேரம் பிடிக்கிறது (சில சமயம் கழுநீர் மாதிரி கூட இறங்கும்). அந்த நேரத்தில் "டிங்" என்று ஒரு சத்தம் யாஹூவிலிருந்தோ, ஜீடாக்கிலிருந்தோ – அவ்வளவுதான் கவனம் சிதறி வேறிடத்துக்குத் தாவி விட்டது! இப்படி தளத் தவளைகளாய் தத்திக் கொண்டிருந்தால் முழுமையான செய்தியை, அறிவைப் பெறுவதென்பதேது!

இப்படி கிளிக்கிட்டுக் கொண்டே செல்லும்போது இந்த "வெட்டி புரௌசிங்"கிலேயே நெரம் கழிந்து விடுகிறது. இரண்டு, மூன்று மணி நேரம் இணையத்தில் மேய்ந்து விட்ட பிறகு சற்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை யென்பது தெளிவாகும்.

நம்மை இன்னும் ஆழமாக இந்தப் புதை மணலில் உள்ளிழுத்துக் கொண்டிருப்பவை, "ப்ளாக்" என்றழைக்கப்படும் வலைப் பதிவுகள்தான்! ஐந்து நிமிஷத்தில் பதிவை அமைத்து விட்டு (Push-button Publishing), ஏதேதோ மனதில் பட்டதைக் கொட்டி விடுவார்கள். அதில் இன்னும் பலர் சென்று அங்கேயிருக்கும் கருத்துப் பெட்டியில் அவர்கள்தம் மேதா விலாசத்தைக் காண்பிக்க ஏதோ உளறி வைப்பார்கள். அதோடு நிற்பதில்லை. இணையத்தின் பெயரறியா நிலையைப் (anonymity) பயன்படுத்தி ஒருவருக்கொருவர் கண்டபடி திட்டிக் கொண்டிருப்பர். இதை சுவாரசியமாக ரசித்துப் படித்துக் கொண்டிக்கும் சிலர் அரிப்பை அடக்க முடியாமல், நாய் கரண்டுக் கம்பத்தைக் கண்டால் "சிர்ர்க்" என்று சிறிது பீய்ச்சுமே அதைப்போல் எதோ இரண்டு வார்த்தைகள் சிந்தி விட்டுச் செல்வர். அவ்வளவுதான். மனம் அங்கேஏயே சுற்றும். நம் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினை வந்திருக்கிறதா பார்ப்போமே"!

வலைப் பதிவு எழுதுவோரும் இப்படித்தான். ஏதோ மேதாவித்தனமாக எழுதுவதாக என்ணிக் கொண்டு இரண்டு பத்தி கிறுக்கி விட்டு, கூகிளில் தேடி இரண்டு படங்க்களையும் போட்டுவிட்டு. சிலந்தி வலை பின்னி விட்டுக் காத்திருப்பதுபோல் யாராவது மறுமொழி ("பின்னூட்டம்" என்றும் சிலர் அழைப்பர். ஆனால் அந்தச் சொல் "ஒரு மாதிரி" பொருளைத் தோற்றுவிப்பதால் அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்). இடுவார்களா ஏன்று காத்திருப்பது சிலர் வழக்கம்.

எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான். ஆனால் நம்மால் அந்தத் தகவல் ஒன்றையும் நிதானமாகப் பொறுக்கி உள்வாங்கத்தான் இயலவில்லை.

முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு "ஹாயா"க எங்காவது போய் ஒவ்வொரு பக்கமாகப் படித்து, அதில் ஆழ்ந்து, அந்த உணர்வுகளைத் துய்த்து, அந்த கதா பாத்திரங்களாகவே மாறி, கற்பனையில் துய்ந்து … ஆகா அந்த அனுபவம் போல் வருமா!

சரி சரி . நேரமாகி விட்டது. எனக்கு இன்னும் இரண்டு வலைப் பதிவுகள் எழுதியாக வேண்டும்!

2

Slow internetகுப்பத்தில் வாழும் முறையான கல்வியறிவு கிட்டாதவர்கள்கூட, "நெட்ல ரிசல்ட் பாத்துக்கிணியா பா" என்று கேட்குமளவுக்கு இண்டெர்நெட் சர்வ சகஜமாக நம் அன்றாட வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது. சிறிய கிராமங்களில் கூட "புரௌசிங் செண்டர்கள்" துவங்கப்பட்டு, செல்ஃபோன் வருகையால் காணாமற் போன டெலிஃபோன் பூத்களின் வெற்றிடத்தை நிரப்புகின்றன. இண்டெர்நெட் இந்தியாவில் துவங்கப்பட்ட புதிதில் சொட்டு சொட்டாக சொட்டிகொண்டிருந்த "டயல் அப்" காலம் போய் இப்போது "பிராடு பேண்ட்" வந்துவிட்டது (இதை "ஃபிராடு பேண்டு" என்றும் பாதிக்கப்பட்ட சிலர் அழைக்கிறார்கள்!). டயல் அப் காலத்தில் யாஹூ.காம் என்று கேட்டுவிட்டு இரண்டு இட்டிலி, ஒரு வடை, காப்பி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் யாஹூ வந்து தலையைக் காட்டினலும் காட்டலாம்; அல்லது கனெக்ஷன் கட்டாகியும் அம்போ என்று நிற்கலாம். சரி, அந்தக் கட்டை வண்டிக் காலத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு, இப்பத்தான் நீங்கள் சொன்ன பிராடு பேண்டு வந்துவிட்டதே, பிறகு என்ன, பிச்சுக்கிட்டுப் பட்டையைக் கிளப்ப வேண்டியதுதானே?

அய்யகோ! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள். மின்னல் வேக இண்டெர்நெட் என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா? எலெக்ஷன் நேரத்தில் கையை "ங" வடிவத்திலும் உடலை "§" வடிவத்திலும் வளைத்துக் கொண்டு வந்து நம் வாக்குச் சீட்டை லவட்டிக் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல்தான் இதுவும். 2 எம்பி (MB) என்பார்கள். எம்பிஎம்பிக் குதித்தாலும் அதில் பத்தில் ஒரு பங்கு வேகம் கூடக் கிட்டாது.. 256 கேபிபிஎஸ் என்றால் 30-35 தேறும். இந்தக் குறியீட்டில் அவர்கள் கூறும் "…பி.எஸ்" என்பது Bits per Second தான். "Bytes per second" அல்ல. இன்னொரு முக்கிய உண்மை, அந்த அகலப் பட்டை bandwidth is a shared bandwidth. அதாவது உங்கள் ஏரியாவில் இருக்கும் அனைத்து கனெக்ஷன்தாரர்களின் மொத்த ஸ்பீடு அது. அதனால் உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிட்டுவது அதில் சில்லறைதான். அதனால்தான் ISP (சேவை அளிப்பவர்கள்) எல்லோரும் தங்கள் விளம்பரங்களில் "Upto 2 mbps" என்று போட்டிருப்பார்கள்!

சரி. இப்போது விஷயத்திற்கு வருவோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரெடெரிக் நீட்ஷே என்ற ஜெர்மானிய தத்துவ ஞானி முதலில் தன் கட்டுரைகளை கையால்தான் எழுதிக் கொண்டிருப்பாராம். பிறகு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தன் எழுதும் முறை மட்டுமல்ல சிந்திக்கும் முறை கூட மாறிவிட்டதாகக் கூறுகிறார். ஒரு சாதாரண டைப்ரைட்டரே நம் எண்ண ஓட்டங்களை மாற்ற இயலும்போது, அதைவிட பன்மடங்கு வேகம், மற்றும் கூடுதல் செயல்திறன் கொண்ட கணினியின் தலையீடு நம் மனத்தில் என்னென தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை எண்ணும்போது மலைப்பாக இருக்கிறது.

இன்றைய நிலையில் கணினியின் பயன்பாடு பெரும்பாலும் இணையத்தில் மேய்வதில்தான் உள்ளது. ஆர்க்குட் போன்ற சமூகப் பிணையங்கள் , உடனடி செய்திப் பகிர்வுச் சேவைகள் (Instant Messengers like Yahoo!, Skype), யூடுப் வீடியோக்கள், ஈமெயில் போன்றவை நம் நேரத்தை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் நம் வாழ்க்கை முறையையும், நம் சூழலுடன் நாம் இடைவினை புரியும் தன்மையையும் வெகுவாக மாற்றிவிட்டதைக் காண்கிறோம். இணையம் நம் கைவசம் அளித்துள்ள இன்னொரு முக்கியமான கருவி "கூகிள்" தேடுதளம். இந்த நூற்றாண்டின் மிகப் பயன்பாடுள்ள ஒரு தொழில்நுட்பம் இதுதான் என்று சொல்லலாம். "கூகிள் புரட்சி" என்றே பெயரிடக்கூடிய அளவிற்கு இதன் தாக்கம் உள்ளது.

சிறுவர்களின் பாடங்கள், கணக்குகள், கேள்வி-பதில் முதல் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை வரை மக்கள்ஸ் கூகிளே கதி என்றிருக்கிறார்கள். பல பிரபல எழுத்தாளர்கள் கூகிளாண்டவர் தயவிலேயே பல புத்தகங்களை எழுதி முடித்து விடுகிறார்கள். "அத்துணை செய்தியும் என் விரல் நுனியில்" என்னும் நிலை வந்துள்ளபோது, அது என்னுடைய அடிப்படை எண்ண ஓட்டங்களையும், செயல்படும் திறனையும் மாற்றியமைக்கும் என்பது நிச்சயம்.

இந்த மாறுதல் வரவேற்றத் தக்கதுதானா? ஆம். அது நிச்சயம். இந்தத் தொழில் நுட்பம் மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம். இதுவரை மனித முயற்சியில் கற்பனை செய்து பார்க்க இயலாதவையெல்லம் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. ஆனால் இயற்கை நியதிப்படி எல்லாவற்றிற்கும் ஒரு விலை அளித்தாக வேண்டுமல்லவா! அது என்ன?

அடுத்த இடுகையில்…!

2

கணிப்பொறி ஏண்றாலே விண்டோஸ் என்னும் நிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். "லைனக்ஸ்"/"லினக்ஸ்" என்னும் இயங்குதளத்தின் (Operating System) பயன்பாடு தற்போது மிக வேகமாக வளர்ந்து வருவது பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தக் களத்தில் சென்று சிறிது எட்டி நோக்கினால் நாம் மனதை குழப்பத்திலாழ்த்தும் வகையில் பலதரப்பட்ட சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக:

  1. இலவச மென்பொருள் (Free Software)
  2. தனியுரிமை மென்பொருள் (Proprietary Software)
  3. மூடிய மூல மென்பொருள் (Closed Source Software)
  4. மூடிய ஆணைமூல மென்பொருள் (Closed Source Code)
  5. திறந்த மூல மென்பொருள் (Open Source Software)
  6. திறந்த ஆணைமூல மென்பொருள் (Open Source code)
  7. கட்டற்ற மென்பொருள் (Software without any control- Totally free)
  8. கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள் (FOSS – Free and Open Source Software)

மேற்சொன்னவை அனைத்தும் மிகுந்த தத்துவ, கோட்பாட்டு சார்ந்த பொருளுடையவைகளாகவும், அவற்றைக் கையாளும்போது ஏதேனும் தவறான சொல்லாட்சியை அமைக்க நேர்ந்தால் அது பலர் மனங்களில் பெருங்குழப்பம் விளைவிக்கும் தாக்கம் கொண்டவையாகவும் அமைவது ஒரு நிதர்சனமான உண்மை. இத்தகைய சொற்பயன்பாடு குறித்த தெளிவான விளக்கங்களை தமிழ்க் கணினி அமைப்பில் பெருந்தொண்டாற்றிவரும் திரு. மு.மயூரனின் பதிவில் வாசித்து இதுகுறித்த தங்கள் புரிதல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவர், "GNU/Linux – சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!" என்னும் தூக்கிவாரிப்போடும் தடாலடி தலைப்புடன் பல விளக்கங்களை அளித்திருக்கிறார்.

இதைப் படித்தபின்னும் என்ன, தலை சுற்றுகிறதா? முதலில் அப்படித்தான் இருக்கும். இங்கேயே சற்று கைநனைத்து, சிறிது பங்களியுங்கள். நாளடைவில் நீங்களே இத்தகைய பரிபாஷையில் வல்லுனராகிவிடுவீர்கள்! ஆனால் இதனைத் தாண்டி அடுத்த திறக்கில் லைசன்ஸ், GPL, CC, Linus Torvalds vs Richard Stallman – இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி அல்லுசில்லாகி சுருண்டு மடங்கினால் நான் ஜவாப்தாரியல்ல! :lol:

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 2 மறுமொழிகள்#

6

இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.

இவ்வாறு மிகப் பிரபலமாகியுள்ள தமிழ் இணையம், அனைத்து மக்களின் பங்கெடுப்பும் இல்லாமல் இருந்தால் விருவிருப்பு இருக்காது என்பதால், அதுபோன்ற இணைய தளங்களில் உங்கள் கருத்துக்களை இடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது- இந்த வலைப்பூவில் உள்ளதுபோல!!

ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.

சரி. என் வலைப் பதிவுக்கு வருகிறேன்!

இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், "தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது" என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் – இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?

ஆம். இது பிரச்னைதான்! இதனை எப்படித் தீர்ப்பது?
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 6 மறுமொழிகள்#

3

ஐ-யி டாப்ஐ.யி-யில் மட்டும் ("ஐயோ" இல்லை; "ஆயி" யும் இல்லை, வெறும் 'ஐயி') – நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) – தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி "கீய்ச்சின" மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், சிஃபியின் தமிழ்ப் பக்கங்கள் போன்றவை சில எடுத்துகாட்டுக்கள்.

சரி. நீங்கள் தீநரி பாவிக்கும் ஆசாமி. திடீரென்று திண்ணையில் கட்டுரை ஒன்றைப் படிக்கவேண்டுமென்று தோன்றுகிறது. நீங்கள் ஐ.யி-யைத் தேடி "கிளிக்கெட்டி கிளிக்" செய்து சிரமப்பட வேண்டாம். இருக்குமிடத்திலிருந்தே தீநரியை ஐ.யி-யாக உரு மாற்றலாம். இந்த ரசவாத வித்தை புரியும் தீநரியின் நீட்சிக் கோப்பு (Extension) "ஐயி டாப்" (IE Tab) என்று அழைக்கப்படுகிறது. இதனை இந்தத் தளத்திலிருந்து பெறலாம்.

அந்தக் கோப்பை நிறுவியபின் உலாவியின் வலது அடிப்புறத்தில் ஒரு ஐகான் தெரியும். அதனை கிளிக் செய்தால் உலாவியின் எஞ்சின் மாறும். இதன் செயலாக்கத்தை உங்கள் வசதிக்கேட்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இனியென்ன, இதுவரையில் தீநரியை பாவிக்காதவர்கள், உஜாலாவுக்கு மாறவேண்டியதுதானே!

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 3 மறுமொழிகள்#

2

நான் அடிக்கடி வாசிக்கும் செய்தி வலைத்தளங்களில் ஒன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். சிறிது நேரத்திற்கு முன் அங்கு சென்றால் நான் கண்டது இதைத்தான். என்னவாயிற்று?

newindpress

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 2 மறுமொழிகள்#

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 2 மறுமொழிகள்#

சாலிடேர் சீட்டுநியூ யார்க் அரசு அலுவலத்தில் பணி புரிந்து (!) வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா? அதை மேயர் ப்ளூம்பெர்க் பார்த்தூட்டார். அவ்வளவுதான். சீட்டைக் கிழிச்சூட்டார். நம்மூர்ல ஆப்பீஸ் கம்ப்யூட்டர்ல என்னென்னமோ (வெளையாட்டெல்லாம்) பாக்கறாங்க – சாலிடேர் வெளையாண்டது பெரிய தப்பா?

என்னதான் தமிழா இருந்தாலும் ஆபீஸில கூடாதப்பா!அது சரி. நம்மாளுங்க கொள்ளைபேரு ஆபீஸ்லதான பதிவுப் போர், பின்னூட்ட லாவணிக் கச்சேரியெல்லாம் நடத்தறாங்க – எல்லாரும்னு சொல்லல்லீங்க – இதேதடா வம்பாயிருக்கு! அதனால தோழர்களெல்லாம் கொஞ்சம் கவனமா இருக்கறது நல்லது.

திறந்த கதவு
அனல் பறக்குது

சார்ந்த வகை: கணினி :: நாள்: #

2-ல் இது-112