வலைவாசம்

Slow internetகுப்பத்தில் வாழும் முறையான கல்வியறிவு கிட்டாதவர்கள்கூட, “நெட்ல ரிசல்ட் பாத்துக்கிணியா பா” என்று கேட்குமளவுக்கு இண்டெர்நெட் சர்வ சகஜமாக நம் அன்றாட வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது. சிறிய கிராமங்களில் கூட “புரௌசிங் செண்டர்கள்” துவங்கப்பட்டு, செல்ஃபோன் வருகையால் காணாமற் போன டெலிஃபோன் பூத்களின் வெற்றிடத்தை நிரப்புகின்றன. இண்டெர்நெட் இந்தியாவில் துவங்கப்பட்ட புதிதில் சொட்டு சொட்டாக சொட்டிகொண்டிருந்த “டயல் அப்” காலம் போய் இப்போது “பிராடு பேண்ட்” வந்துவிட்டது (இதை “ஃபிராடு பேண்டு” என்றும் பாதிக்கப்பட்ட சிலர் அழைக்கிறார்கள்!). டயல் அப் காலத்தில் யாஹூ.காம் என்று கேட்டுவிட்டு இரண்டு இட்டிலி, ஒரு வடை, காப்பி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் யாஹூ வந்து தலையைக் காட்டினலும் காட்டலாம்; அல்லது கனெக்ஷன் கட்டாகியும் அம்போ என்று நிற்கலாம். சரி, அந்தக் கட்டை வண்டிக் காலத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு, இப்பத்தான் நீங்கள் சொன்ன பிராடு பேண்டு வந்துவிட்டதே, பிறகு என்ன, பிச்சுக்கிட்டுப் பட்டையைக் கிளப்ப வேண்டியதுதானே?

அய்யகோ! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள். மின்னல் வேக இண்டெர்நெட் என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா? எலெக்ஷன் நேரத்தில் கையை “ங” வடிவத்திலும் உடலை “§” வடிவத்திலும் வளைத்துக் கொண்டு வந்து நம் வாக்குச் சீட்டை லவட்டிக் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல்தான் இதுவும். 2 எம்பி (MB) என்பார்கள். எம்பிஎம்பிக் குதித்தாலும் அதில் பத்தில் ஒரு பங்கு வேகம் கூடக் கிட்டாது.. 256 கேபிபிஎஸ் என்றால் 30-35 தேறும். இந்தக் குறியீட்டில் அவர்கள் கூறும் “…பி.எஸ்” என்பது Bits per Second தான். “Bytes per second” அல்ல. இன்னொரு முக்கிய உண்மை, அந்த அகலப் பட்டை bandwidth is a shared bandwidth. அதாவது உங்கள் ஏரியாவில் இருக்கும் அனைத்து கனெக்ஷன்தாரர்களின் மொத்த ஸ்பீடு அது. அதனால் உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிட்டுவது அதில் சில்லறைதான். அதனால்தான் ISP (சேவை அளிப்பவர்கள்) எல்லோரும் தங்கள் விளம்பரங்களில் “Upto 2 mbps” என்று போட்டிருப்பார்கள்!

சரி. இப்போது விஷயத்திற்கு வருவோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரெடெரிக் நீட்ஷே என்ற ஜெர்மானிய தத்துவ ஞானி முதலில் தன் கட்டுரைகளை கையால்தான் எழுதிக் கொண்டிருப்பாராம். பிறகு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தன் எழுதும் முறை மட்டுமல்ல சிந்திக்கும் முறை கூட மாறிவிட்டதாகக் கூறுகிறார். ஒரு சாதாரண டைப்ரைட்டரே நம் எண்ண ஓட்டங்களை மாற்ற இயலும்போது, அதைவிட பன்மடங்கு வேகம், மற்றும் கூடுதல் செயல்திறன் கொண்ட கணினியின் தலையீடு நம் மனத்தில் என்னென தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை எண்ணும்போது மலைப்பாக இருக்கிறது.

இன்றைய நிலையில் கணினியின் பயன்பாடு பெரும்பாலும் இணையத்தில் மேய்வதில்தான் உள்ளது. ஆர்க்குட் போன்ற சமூகப் பிணையங்கள் , உடனடி செய்திப் பகிர்வுச் சேவைகள் (Instant Messengers like Yahoo!, Skype), யூடுப் வீடியோக்கள், ஈமெயில் போன்றவை நம் நேரத்தை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் நம் வாழ்க்கை முறையையும், நம் சூழலுடன் நாம் இடைவினை புரியும் தன்மையையும் வெகுவாக மாற்றிவிட்டதைக் காண்கிறோம். இணையம் நம் கைவசம் அளித்துள்ள இன்னொரு முக்கியமான கருவி “கூகிள்” தேடுதளம். இந்த நூற்றாண்டின் மிகப் பயன்பாடுள்ள ஒரு தொழில்நுட்பம் இதுதான் என்று சொல்லலாம். “கூகிள் புரட்சி” என்றே பெயரிடக்கூடிய அளவிற்கு இதன் தாக்கம் உள்ளது.

சிறுவர்களின் பாடங்கள், கணக்குகள், கேள்வி-பதில் முதல் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை வரை மக்கள்ஸ் கூகிளே கதி என்றிருக்கிறார்கள். பல பிரபல எழுத்தாளர்கள் கூகிளாண்டவர் தயவிலேயே பல புத்தகங்களை எழுதி முடித்து விடுகிறார்கள். “அத்துணை செய்தியும் என் விரல் நுனியில்” என்னும் நிலை வந்துள்ளபோது, அது என்னுடைய அடிப்படை எண்ண ஓட்டங்களையும், செயல்படும் திறனையும் மாற்றியமைக்கும் என்பது நிச்சயம்.

இந்த மாறுதல் வரவேற்றத் தக்கதுதானா? ஆம். அது நிச்சயம். இந்தத் தொழில் நுட்பம் மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம். இதுவரை மனித முயற்சியில் கற்பனை செய்து பார்க்க இயலாதவையெல்லம் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. ஆனால் இயற்கை நியதிப்படி எல்லாவற்றிற்கும் ஒரு விலை அளித்தாக வேண்டுமல்லவா! அது என்ன?

அடுத்த இடுகையில்…!

2 Comments


  1. Wow! Interesting. Please do write more

    I sometimes think i spend more time wasting than actually doing anything useful in the internet. If the bandwidth is slow as well, a lot of time could get wasted.


  2. மிகவும் பயனுள்ள தகவல்கள்.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published.