ஸ்லேட்டுக் குச்சி

கம்ப்யூட்டர் மாணாக்கன்மேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளார்கள். மாணவர்களும் அதே முறையில் பதிலளிக்கிறார்கள். இத்தகைய கணினிப் பயன்பாட்டினால் மாணவர்களுக்கு காகிதம், எழுதுகோல் கொண்டு, மனத்தின் எண்ணங்களை கோர்வையாக்கி, முழுமையான, இலக்கனத்திற்கு உட்பட்ட வாக்கியங்களை பிழையில்லாமல் அமைத்து, நீண்ட கட்டுரைகளை எழுதும் திறன் குறைந்து விட்டதாக பலர் வருத்தப் படுகிறார்கள். “எஸ்.எம்.எஸ்” மற்றும் “சாட்” செய்யும் வகையிலேயே பாடங்களிலும் வார்த்தைகளைக் கீறி, துண்டுபோட்டு துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Laptopஇந்தப் போக்கு சரியானதல்ல என்று பல கல்வியாளர்கள் உரக்க குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் லேப்டாப் மற்றும் இணையத்தின் உபயோகம் நாளுக்கு நாள் மாணவர்களிடையே அதிகமாகிக்கொண்டு வருகிறது. பள்ளிகளில் போர்ட்டல்கள் (Portals = இதற்குத் தகுந்த தமிழ்ச்சொல் என்ன?) உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களோடும், பெற்றோருடனும், உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது. மணவர்களின் தேர்ச்சி நிலையை அவ்வப்போது பெற்றோர்கள் கவனித்துவர இந்த முறை உதவுகிறது.

ஏழைகளின் மடிக்கணினிவளர்ந்த நாடுகளில் மட்டும்தான் பள்ளிகளில் இதுபோன்ற கணினிப் பயன்பாடு இருக்க வேண்டுமா? வளர்ந்துவரும் நாட்டு மாணவர்களுக்கும் குறைந்த விலையில் கணினிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அமேரிக்காவின் எம்.ஐ.டி-ஐச் சார்ந்த திரு. நிகலஸ் நெக்ரோபான்டே (Nicholas Negroponte) என்னும் கணினித்துறை பேராசிரியர், வெறும் 100 டாலர் விலையில் கணினிகளைத் தயாரித்து, அவற்றை தென்னமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் சுமார் ஒன்றரை கோடி ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தக் கணினியின் தனிச் சிறப்பு என்னவென்றால் மின்சாரம் இல்லாத போது இதன்கைப்பிடியை சுற்றி அதனை இயக்க முடியும்!

ஆமாம், நம்மூர் பத்தாயிரம் ரூபாய் கம்ப்யூட்டர் எங்கே கிடைக்கிறது? யாராவது வாங்கியிருக்கிறீர்களா?

அதுசரி, அந்தக் காலத்து சிலேட்டுக்குச்சி (பலப்பம்) மாதிரி இந்த கம்ப்யூட்டர் எல்லாம் உண்மையான கல்வியை கற்பிக்க முடியுமா என்று சில பெருசுகள் கேட்கக்கூடும்! மனக்கணக்கு என்பதே இந்தக் காலத்து மாணவர்களுக்கு தெரியாது என்பது அவர்களின் முக்கியமான அங்கலாய்ப்பு.

எங்களூரில் ஒரு பெரியவர், சாப்பாடான பிறகு, வெற்றிலைப் பெட்டியுடன் தன் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, கண்ணில் பட்ட பையன்களிடமெல்லாம் இந்தக் கணக்கைக் கேட்டுக் கொண்டிருப்பார்:-

ஒன்றரையே அரைக்கால் காசுக்கு ரெண்டரையே அரைக்கால் வாழைக்காய். ரெண்டரையே அரைக்கால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?

நீங்களெல்லாம் கணக்கில் புலியல்லவா. நொடியில் பதில் சொல்லிவிடமாட்டீர்களா! 🙂

4 Comments


  1. portal = வாசல்
    web portal = வலை வாசல்

    நீங்கள் கேட்ட கணக்கின் விடை:

    (21/8)*(21/8)/(13/8) = 441/101; கிட்டத்தட்ட 4.4 வாழைக்காய்

    அன்புடன்,
    இராம.கி.


  2. நன்றி இராம.கி அவர்களே.

    இதுபோன்ற கணினித் தொடர்பான கலைச் சொற்களுக்கு அகராதி எங்கு கிடைக்கும்?

    நானும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். 2.625*2.625/1.625 = 4.24 என்று வந்தது. இதுவும் கிட்டத்தட்ட சரிதானே! கால்குலேட்டரில்தான் போட்டேன். மனக்கணக்காக அல்ல. 🙂

    மனக்கணக்குப் பயிற்சி மறைந்து போவதைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

    அன்புடன்,
    எஸ்.கே


  3. என்னுடைய கணக்கில் ஒரு பிழை இருக்கிறது. அது 441/104 என்று தான் இருக்க வேண்டும். விடை கிட்டத்தட்ட 4.24 என்றுதான் வரும்.

    கணி பற்றிய சிறு சொற்தொகுப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.

    அன்புடன்,
    இராம.கி.


  4. நண்பர் வெங்கடேஷ் மூலம் நீங்கள் கூறிய கலைச்சொல் தொகுப்பைப் பெற்றேன் (pdf).

    அது 1998-ம் வருடத்திய பதிப்பு. புதிய பதிப்பு பற்றி விசாரிக்கிறேன்.

    செய்திக்கு நன்றிகள்

    எஸ்.கே

Comments are closed.