செவலையும் திகம்பர சாமியாரும்

செவலை இராமசாமி முதலியார் சத்திரம். நான் தினமும் இந்த இடத்தைத் தாண்டித்தான் அலுவலகத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். ஒரு நாளாவது உள்ளே சென்று அந்த கட்டிடத்தின் சரித்திரத்தை ஆராயலாம் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கெல்லாம் ஒரு குழு சுற்றுப் பயணம் மேற்கொள்வதுபோல் யாராவது செய்ய முயலலாம் என்று எண்ணுகிறேன்.

சரி, இந்த இடத்துக்கும் ஒரு சரித்திரக்கதைக்கும் என்ன தொடர்பு? அது போல் தான் இது! சரி, உங்களுக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரைத் தெரியுமா? ஐயா, மேனகா என்ற திரைப் படத்தையாவது தெரியுமா? இல்லை, திகம்பர சாமியாரையாவது தெரியுமா? தெரியாவிட்டால் தில்லக்கேணி சரவணா லெண்டிங் லைப்ரரி அல்லது ராயப்பேட்டை ஈஸ்வரி லைப்ரெரி, அல்லது உங்கள் பேட்டை நூலகம் (கொஞ்சம் அந்துருண்டை வாசம் அடிக்க வேண்டும்) எங்காவது சென்று வடுவூரார் நாவல்களை வாங்கிப் படியுங்கள். அப்பாடா!

அந்தக் கதைகளில் கும்பகோணத்திலிருந்து வரும் கல்யாண கோஷ்டிகள் எல்லாம் சென்னை பார்க் டவுன் “ராஜா ஸர் செவலை இராமசாமி முதலியார்” சத்திரத்தில்தான் “ரூம்” எடுத்துக் கொண்டு தங்கியிருக்கும். இது அவர் கதைகளில் அடிக்கடி வரும் நிகழ்ச்சி. அந்தக் கட்டிடம் இப்போது தமிழ் நாடு சுற்றுலாத் துறை வசம் “பாரு”டன் காட்சியளிக்கிறது. எங்கே இருக்கிறதா? ஆப்பிரிக்க “செராங்கெட்டி” காடுகளில் வரிக்குதிரை மற்றும் வில்டபீஸ்டடுக்கள் சாரிசாரியாக இடம் பெயருவதுபோல் தினமும் பார்க்கிலிருந்து சென்ட்ரல் போகத் தாண்டுவார்கள் பாருங்கள் அங்குதான்!

சீக்கிறமே அதன் உள்ளே நுழைந்து எதாவது சரித்திரச் சின்னங்கள் மீதமிருக்கிறதா என்று பார்க்கிறேன்.

இதன் சரித்திரம் வேண்டுமா? எஸ். முத்தையா அவர்கள் தி ஹிந்து-வில் எழுதியுள்ளதை நீங்கள் இங்கு வாசிக்கலாம். அவர் எழுதியுள்ளதற்கு மேல் நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்?