இரயில் சிநேகம்

நீண்ட இரயில் பயணங்களில் சீக்கிரத்தில் போரடித்துப் போய்விடும். எவ்வளவு நேரம்தான் படிப்பது, வேடிக்கை பார்ப்பது. அதுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் வெளியே பார்க்கக்கூட முடியாது. இதனால் சக பயணிகளிடம் பேச்சுக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வரும். சின்னசின்ன வார்த்தைகள். புன்சிரிப்பு. பின் பேப்பர் பரிமாற்றம். பின் குசல விசாரிப்பு. “எங்க வேலை பாக்கிறீங்க?”- இதிலே ஆரம்பிக்கும். பின் “உங்க வீட்டிலே தண்ணீ வருதா?” (சென்னைவாசியாக இருந்தால் இந்தக் கேள்வியை மூளையின் பங்கெடுப்பு இல்லாமலேயே வாய் தானாகக் கேட்கும்!) போன்ற விசாரிப்புகளைக் கடந்து சிறிது நேரத்தில் பேச்சு நெருக்கமாகிவிடும். இவ்வித உரையாடல்களின் முத்தாய்ப்பாக “நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்” என்ற மன நெகிழ்ச்சியுடனான அழைப்புகள் கொடுக்கப்படும். பலவித பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதிகள் அளிக்கப்படும்.

ஒரு விநோதமான விஷயம் என்னவென்றால், சாதாரணமாக பிறரிடம் மனம் விட்டுப் பேசாத உம்மணாமூஞ்சிகள்கூட இதுபோன்ற நேரங்களில் தங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடும்ப சமாசாரங்கள் போன்றவற்றை கொஞ்சம் மனம் திறந்து பேசுவார்கள். அந்த பயணச் சூழ்நிலை அதுபோல் செய்ய வைக்கிறது என்று என்ணுகிறேன். வண்டியைவிட்டு இறங்குமுன் கையெல்லாம் கொடுத்து உருக்கமாக விடைபெறுதலும் நடக்கும். ஆனால் அவரவர் தத்தம் கூண்டுக்குச் சென்றடைந்தபின் இந்த அறிமுகங்கள் (பெரும்பாலும்) முழுதும் மறந்து போய்விடுகின்றன. ஏன் இப்படி? பயணத்தின்போது நம் மனத்தில் இறுக்கமில்லாத ஒரு நிலை; நம்வாழ்வில் ஒன்றியுள்ள பல அன்றாடப் பிரச்னைகள் தலைதூக்கி “இதோ, என்னைப்பார் முதலில்” என்று கூவாமல் ஒதுங்கியிருப்பது – இது போன்ற சூழ்நிலையால்தான் மனிதன் நீண்ட பயணங்களின்போது தன் அடிப்படை இயல்பிலிருந்து சிறிது வேறுபட்ட அணுகுமுறை கொள்கிறான் என்று என்ணுகிறேன். ஆனால் அன்றாட “ரொட்டீனு”க்கு திரும்பியவுடன் இவையெல்லாம் கவனத்தில் வருவதில்லை. ஆகையால்தான் ஆழமில்லாத உறவுகளைக் குறிக்க “இரயில் சிநேகிதம் போல” என்ற சொற்றொடர் வழக்கிலிருக்கிறது என்று நினைக்கிறேன்.

சில சமயம் இந்த வகை சிநேகம் பயணம் தொடங்குவதற்கு முன்னமையே ஆரம்பிப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு திருமண கோஷ்டி ஒன்று முன்பதிவு செய்தது. மாயவரத்திற்கும் குடந்தைக்கும் இடையே ஏதோ ஒரு ஊருக்கு. வெவ்வேறு நாட்களில் நன்கு, ஐந்து என்று பதிவு செய்தனர். கணினி மூலம் முன்பதிவு முறை வராத காலமது. அதனால் வெவ்வேறு பெட்டிகளில் சேர்ந்தாற்போலல்லாமல் பல இடங்களில் இருக்கைகள் பதிவாகின. சில டிக்கட்டுகள் “காத்திருப்போர்” பட்டியலில் இடம் பெற்றன. ஒரு நாள் அந்த குடும்பத்தலைவர் நிலையத்தின் மேற்பார்வையாளரைச் சந்தித்து, தன் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே பெட்டியில் இடம் கொடுக்கும்படி வேண்டினார். வேறுசில கோரிக்கைகளையும் வைத்தார். மேற்பார்வையாளர் நடைமுறைச் சிக்கல்களை விளக்கிவிட்டு முடிந்தவரை உதவுதாகச் சொனார். அந்த பெரியவரோ, மிக அன்னியோன்னியமாகப் பேசி அப்படியே ஒவ்வொரு சொல்லையும் தேனில் தோய்த்துத் தோய்த்து அவர்முன் படைத்தார். “சார், நீங்கள் எங்கள் குடுமபத்தில் ஒருத்தர் ஆயிட்டிங்க சார். நீங்க குடும்பத்தோட கட்டாயம் என் பையன் கல்யாணத்துக்கு வரணும்சார். இந்தாங்க இன்விடேஷன்” என்று அவரிடமே பெயர் கேட்டு எழுதிக் கொடுத்தார். மேலும் தன் கூட இருந்த உறவினரிடம், “என்ன இருந்தாலும் இரயில்வேக் காரங்க மாதிரி நாணயம், சின்சியரிடி, தொழில் நேர்த்தி, திறமை, கனிவு இதெல்லாம் வேற யாருக்கும் வராதுங்க. மத்த கவர்மெண்டு ஆபீஸுக்கெல்லாம் போய்ப் பாருங்க தெரியும். இப்ப இவர் இருக்காரே, இந்த சூப்ப்ரைசர் வேலைல எவ்வளவு கெட்டிக்காரர், எவ்வளவு நேர்மையானவர்னு வெளீல பேசிக்கறாங்க தெரியுமா?” என்று (உரக்க) சிலாகித்துக் கொண்டார்.

ஆச்சு. பிரயாண நாள் வந்தது. முன்பதிவு சூப்பிரவைசர் ரொம்ப ஸ்டிரிக்ட் பேர்வழி. விதிகளுக்குட்பட்டு என்ன முடியுமோ அவைகளைச் செய்தார். ஆனால் அவை பதிவு செய்பவரின் எதிர்பார்ப்புகளுக்குப் பெரிதும் பின் தங்கித்தான் இருந்தது. அவர் நிலையத்துக்கு வந்து வாக்குவாதம் செய்தார். “இரயில்வே துறையே மிகவும் கெட்டுவிட்டது (Gone to dogs!)” என்றெல்லாம் சர்டிஃபிகேட்களை வாரிவழங்கினார். பின் அதற்கும் மேலே போய், “இந்த எடத்திலே எதோ ஃப்ராடு நடக்குதுன்னு நினைக்கிறேன். உங்களையெல்லாம் வைக்க வேண்டிய எடத்திலே வைக்கணும்” என்று கையை ஆட்டி கோபத்தில் கத்திவிட்டுச் சென்றார். முன்னால் கொட்டிய தேனெல்லாம் காய்ந்துபோய் விட்டது! இதுதான் மனித இயல்பு. இதுபோன்ற பல நிகழ்வுகளை அன்றாடவாழ்வில் சந்திக்கலாம்.

நான் வேலைதொடர்பாக நிறைய இரயில் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். அப்போது பலதரப்பட்ட மனிதகுலப் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறேன். பல பிரபலங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். உடனே நினைவுக்கு வரும் சந்திப்புகளை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அப்போது புனலாய்வு தொடர்பான வேலை எனக்கு. மதுரையிலிருந்து தெற்குநோக்கிச் செல்லும் வண்டியில் முதல் வகுப்பில் ஐந்தாறுபேர் பிரபலங்கள் சேர்ந்து போகிறார்கள் என்று பரிசோதகர் சொன்னார். யார் என்று பார்க்க என் கூண்டிலிருந்து (cubicle) அங்கு சென்றேன். இளையராஜா, கங்கை அமரன், அன்னக்கிளி செல்வராஜ், மலேஷியா வாசுதேவன், டி.எம்.சௌந்திரராஜன் இன்னும் ஓரிருவர் இருந்தனர். நான் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் அவர்களுடன் அமர்ந்தேன். அன்னக்கிளி வெற்றியடைந்த நேரமது. அதில் வரும் சிலபாடல்வரிகளில் எனக்கிருந்த சில சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றேன். டி.எம்.எஸ் நிறையப் பேசினார். தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே வந்த பிரச்னைகளைப் பற்றி விவரித்தார். இவர் அவரைபற்றி ஏதோ சொல்ல அதை அவரிடம் யாரோ வத்திவைக்க, அவர் கஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்தே தயாரிப்பாளரை அழைத்து “டி.எம்.எஸ் எனக்கு இனிமேல் பாடக்கூடாது” என்று சொன்னதாகச் சொன்னார். நான் அவரை “நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை சந்தித்து மனம் விட்டுப் பேசி பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்யவில்லை” என்று கேட்டென். அதற்கு அவருடைய பதில், “ஓரு குளத்துக்கு எத்தனை குண்டியோ, ஒரு குண்டிக்கு எத்தனை குளமோ. யார் விதியை யார் எழுத முடியும்” என்று சொன்னார். எவ்வளவு எரிய இசைமேதையாக இருந்தாலும், கொஞ்சம் பிறருக்காக “அட்ஜஸ்ட்மெண்ட்” செய்து கொண்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது.

கங்கை அமரன் கலகலப்பாகப் பேசினார். ஆனால் இளையராஜா அதிகமாகப் பேசவில்லை கொஞ்சம் ரிசர்வ்டாக இருந்தார். திடீரென்று அவர் ஒரு ஜோக் அடித்தார் பாருங்கள்! “பிறருக்கு எந்தப் பெருமை வந்தாலும் பிடிக்காது ஒருவருக்கு. அவர்கள் எது சொன்னாலும் அதைவிட சிறப்பான அனுபவம் தனக்கு நிகழ்ந்திருக்கிறது என்று உடனே இடைமறித்துச் சொல்வார். ‘நான் சென்றவாரம் லக்னௌவிலிருந்து வந்த ஒரு மாம்பழம் சாப்பிட்டேன், பிரமாதமாயிருந்தது’ என்று நீங்கள் சொன்னால் உடனே அவர், ‘இதென்ன மாம்பழம், நான் சாப்பிட்டததா? நேத்தைக்குத்தான் ஒரு கூடை வந்தது எல்லாம் எக்ஸ்போர்ட் குவாலிடி’ என்பார். ‘நேற்று அழகான பெண் ஒருவரைச் சந்தித்தேன். என்ன அழகு தெரியுமா, அப்படியே ரவிவர்மா படம் மாதிரி இருந்தாங்க’ என்று சொன்னால், ‘அது என்ன பிரமாதம் நான் கூடத்தான் போன வாரம் ஒரு ஃபிரெஞ்ச் பெண்ணைச் சந்தித்தேன்’ – இது மாதிரித்தான். சரி. இவரை எப்படியாவது வாரவேண்டும் என்பதற்காக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து திட்டமிட்டு ஒருவர் தன் கதையைத் தொடங்கினார். ‘நான் ஒருமுறை ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்றிருந்தபோது. பொது இடம் ஒன்றில் படுத்திருந்தேன், நடு இரவில் திடீரென்று……”

என்னவாயிற்று?
இந்த (அசிங்கமான) ஜோக் சென்சார் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தப் பதிவை பல பெண்களும் பெரிய மனிதர்களும் வாசிக்கக் கூடும் என்பதால். 🙂

இதை முழுசாகத் தெரிந்தவர்கள் தனக்குள் சிரித்துக் கொள்ளலாம். தெரியாதவர்கள் என்னிடம் (நேரிடையாக) தனியாகக் கேட்டுக் கொள்ளலாம். பின்னர் ஒருமுறை இளையராஜாவைச் சந்திக்கும்போது அவரிடம் இதை நினைவு படுத்தினேன். அவர் காதைப் பொத்திக் கொண்டு “சுவாமி சரணம்” என்று எழுந்து போய்விட்டார்!

பயணங்கள் முடிவதில்லை! 🙂

7 Comments


  1. கிச்சு அவர்களே,

    நல்ல சுவாரசியமான பதிவு. சரளமான நடை. உங்களது பல பதிவுகளை படித்துள்ளேன். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். அந்த ஜோக்கை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் :)) நன்றி!!!

    என்றென்றும் அன்புடன்
    பாலா


  2. எஸ்கே… இந்த மாதிரி ஆளாளுக்கு ‘அது என்னதுங்க’ என்று கேட்பதற்கு, ஒரு மறுமொழியாகவே போட்டுருங்க 🙂


  3. Dear BS 😉

    “பாலா”-ன்னு பெயர் இருந்தாலே இப்படித்தானோ! 🙂

    போட்டுடலாம்தான். ஆனா எல்லாரும் “ச்ச்சீச்சீ”-ன்னுவாங்களே, பரவாயில்லையா?


  4. ஒரு எச்சரிக்கை வாசகம் போட்டு எழுதிடுங்க.இந்த மாதிரி ஜோக்கெல்லாம் தெரிஞ்கிலைனா தலை வெடிச்சிடும்.அப்படியே முடிஞ்சா “சுஜாதா”-வோட மெக்சிகன் சலவைகாரி ஜோக்கும் போடுங்க.


  5. வணக்கம் கிச்சு
    உங்கள் பதிவு நல்லாயிருக்கு.
    “இரயில் சினேகிதம் போல” என்பதற்கு நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
    சில சமயங்களில் மறக்க முடியாத இரயில் சந்திப்புகளும் நிகழத் தவறுவதில்லை.
    எனக்கு நிறையவே உண்டு.

    நட்புடன் சந்திரவதனா


  6. சுவாரஸ்யமான பதிவு. இரயில் பயணங்களில் பிரபலமான மனிதர்களை விட சாமான்ய மனிதர்களுடன் நேரும் அனுபவங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை..அதை பற்றியும் யாரவது எழுதலாம்


Comments are closed.