பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2005

எந்த நிலம் சொந்தம்!

பொது :: 4 மறுமொழிகள் »

"சன் டிவி"யின் "சிறப்புப் பார்வை" நிகழ்ச்சியில் சொத்து வாங்குவதில் உள்ள பிரச்னைகளையும், ஏமாற்றல் வேலைகளையும், தலைவிரித்தாளும் லஞ்ச லாவண்யங்களையும் அலசினார்கள். ஒருவர், தான் வாங்கியுள்ள இடத்தை இன்னொருவரும் பதிவு செய்துகொண்டு சொந்தம் கொண்டாடிய சோகக் கதையைக் கூறினார். இன்னொருவர், எந்த இடம், சர்வே நம்பர் எதையுமே கவனிக்காமல் பணம் கொடுத்து விட்டு, வாங்கியயுள்ளதாக நம்பிக் கொண்டிருக்கும் இடம் வேறு, பத்திரத்தில் உள்ள இடம் வேறு என்றாகி, அந்த இடம் உண்மையில் வேறொருவருக்குச் சொந்தம் என்ற நிலையில் மோசம் போய் நிற்கின்ற கதையையும் விவரித்தார்கள்.

பெரும்பாலும் பத்திரங்களில் எழுதியிருக்கும் வாசகங்கள் தெளிவாகப் புரியும் விதத்தில் எழுதப் படுவதில்லை. மக்களும் சொத்தின் விவரப் பட்டியல்கூடப் பார்க்காமல் கையொப்பமிடுகின்றனர். பத்திரங்களை பாமரருக்கும் புரியும் விதத்தில் எழுத ஆரம்பித்து, "பணத்தின் நிறம் வெள்ளை" என்று புரட்சி செய்த அலாக்ரிடி (Alacrity Housing Limited) கம்பேனி தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டது. இந்தத்துறையில் அநேகமாக எல்லோருக்கும் பிடித்தமான பாடல், "கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு"! ஸ்டாம்ப் சிலவு குறைவதற்காக வாங்குபவர்கள் மதிப்பைக் குறைப்பதும், Capital Gains Tax மற்றும் பலவகை வரி ஏய்ப்புக்காக விற்பவர்கள் குறைப்பதும் சர்வ சாதாரணம். ஆனால் சமீபத்தில் Guidance value என்று ஒவ்வோர் இடத்திலும் மார்க்கெட் மதிப்பு என்ன என்பதை நிர்ணயம் செய்து அதன்படி பதிவுக் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் நம் தோழர்கள் ஓட்டைகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பதிவு செய்யும் அலுவலகத்திற்குச் சென்றால் அப்படியே வழுக்கும். அவ்வளவு கிரீஸ்!
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1015 முறை) ::

மாறினேன், மாறினேன்!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

அப்பாடா!
ஒரு வழியாக b2Evolution-லிருந்து Wordpress-க்கு உஜாலாயிட்டேன்!

முதலிலேயே Wordpress-க்கு போய் குடியேறியிருக்கலாம். ஆனால் ஒரு வீம்புக்காக b2Evo-வுக்குத் தாவினேன். ஆனால் Wordpress செயலியின் வளர்ச்சி மின்னல் வேகம்! அதை பல மென்பொருள் வல்லுனர்கள் தினமும் அமுலும், சத்துணவும் போட்டு போஷாக்களித்து வருகிறார்கள். இந்த நிமிடம் வரை அந்த திறந்த நிரல் செயலியின் சமீபத்திய 1.5-என்ற பதிப்பினை 76,551 தடவை தரவிறக்கியுள்ளனர். பலவித plugins, themes, hacks இது போன்றவற்றை மென்பொருள் ஆர்வலர் பலர் உருவாக்கி அளித்து வருகின்றனர். ஆகையால் நானும் குதித்துவிட்டேன். முதலில் ஆங்கிலத்தில், இப்போது தமிழிலும்!

முதலில் அந்த செயலியின் முகப்புச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்ய முற்பட்டேன். l10n, .pot, .po, .mo, poedit என்று புகுந்து புறப்பட்டு, ஒரு வழியாக "தமிழ்(+ஐ)ப் படுத்தி"விட்டேன்! இனிமேல் உங்கள் பாடு!

இது தவிர, b2evo-வில் குடியிருந்த பதிவுகளின் சேர்க்கையை Wordpress-ன் database-க்கு கொண்டுசெல்வது ஒரு பிரசவ வேதனை. அதோடு சேர்ந்து css வேறு சதி செய்தது. "இடது மிதவை", "வலது தொங்கல்" (float: left, float: right) போன்ற குட்டிச் சாத்தான்களின் விஷமம் தாங்க முடியவில்லை. எழுத்துருக்களின் அளவை கொஞ்சம் பெருக்கினால், வலது ஓரத்தில் சமத்தாக ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டியவை யெல்லாம், "பப்பரக்கா"வென்று பாதாளத்தில் விரித்துக் கொண்டு கிடந்தன! "தணல் நரி"யில் நேராகத் தெரிகிறதே என்று பெருமூச்சு விட்டால் அண்ணன் ஐ.ஈ-யில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறிவிடுகிறது. ஏதேனுமொரு் பிற்சேர்க்கையைச் சேர்த்தால் வேறொன்று பிணங்கிக் கொள்கிறது - "சுருட்டுப் பாயும், முரட்டுப் பெண்ணும்" என்பது போல ;)

ஒருபாடாக எல்லாவற்றையும் தட்டிக்கொட்டி சரி செய்து உங்கள்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன்.
இந்த முயற்சியில் எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் காசி, நவன் பகவதி இருவருக்கும் நன்றி!

:: (பார்வை 928 முறை) ::

புள்ளி in-தியன்!

பொது :: 3 மறுமொழிகள் »

இணைய தள அமைப்பு பற்றியும், டொமைன் பெயர் பதிவு, தளத் தாழ்வார வாடகை முதலிய ராக்கெட் அறிவியல் விளக்கங்களையும் எழுதப் போகிறேன் என்று முன்பு பயமுறுத்தியிருந்தேன். "எழுதுங்கள் பார்க்கலாம்" என்று காசி அவர்கள் வழிமொழிந்திருந்தார். விலாவாரியாக எழுதலாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உடனடியாக இந்த விஷயத்தில் எழுந்திருக்கும் ஒரு சமீபத்திய மாறுதல் பற்றி முதலில் எழுதிவிட்டு பின்னர் ஆழ உழலாம் என்று எண்ணுகிறேன்.

"டாட் காம்" என்பதுதான் டொமைன்களின் ராஜா போன்றது. இணையத்துக்கே "டாட் காம்" என்கிற பெயர் ஒரு generic name போல் ஆகிவிட்டது ( நகல் எடுப்பதற்கு Xerox-பண்ணுவது என்று சொல்வது போல). .com தவிர .net, .org போன்ற மேல்நிலை தளநிலைகள் (Top Level Domains - TLD's) இருந்தாலும் டாட் காம் என்றால் ஒரு தனி மரியாதைதான் என்பதை மறுக்கமுடியாது. அதனால் ஒரு தளப் பெயரைத் தேர்ந்தெடுக்க முயலும்போது, முதலில் அந்தப் பெயர் டாட் காம் கிடைக்கிறதா என்று தேடுவார்கள். நான் கிச்சு inc என்று ஒரு இன்டெர்னெட் வணிகம் சார்ந்த நிறுவனம் தொடங்க ஆசைப் பட்டேனென்றால் முதலில் என் அபிமான டொமைன் பெயர் பதிவாளரின் இணையக் கடைக்குச் சென்று kichu.com கிடைக்குமா என்று தேடுவேன். அதற்காக அங்கு ஒரு தேடுதல் குப்பி இட்டிருப்பார்கள். அந்தப் பெயரை இன்டெர்னெட் முகவரிகளின் பட்டியலில் (domain name registry database) தேடவேண்டும். அந்த நிரலி, நான் தேடும் பெயர் இன்னுமிருக்கிறதா அல்லது வேறு யாரேனும் அதைப் பிடித்து விட்டார்களா என்று சொல்லிவிடும். இந்த விஷயத்தை ரொம்ப simplistic-ஆக சொல்லிவிட்டென். நிறைய நெளிவுசுளிவுகள் உள்ளன. அது போகட்டும். இப்போது எனக்கு வேண்டிய kichu.com - ன்மேல் யாரோ ஒரு புன்ணியவான் ஏற்கனவே துண்டு விரித்து விட்டான் ("ர்"-எதற்கு வம்பு!), அடுத்து என்ன செய்வது? சரி, kichu.net, kichu.org, kichu.info, kichu.cc, kichu.name - இதுபோல் ஏதாவது (ம்ம், ஏதாவது ஒரு கிழவனுக்கு இரெண்டாம் தாரமாவது கொடுக்க வேண்டியதுதான் என்பதுபோல!)கிடைக்குமா என்று முயற்சி செய்வேன்.

இந்த இடத்தில் தான் ஒரு புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்திருக்கிறது.உண்மையில் இது ஏற்கனவே இருந்ததுதான். ஆனால் அது ஒரு அரசு இயந்திரத்தின் அங்கமாக, பிரபலமாகாமல் இருந்தது. இப்போது அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் போணி பன்ணியிருக்கிறார்கள்.

டாட் இன்நான் கதைப்பது ".in" என்னும் இந்தியாவின் நாடு சார்ந்த (Country Code Internet domain name - ccTLD) டொமைன் பெயரைப் பற்றித்தான். இத்தகைய இந்தியப் பெயர்களை முன்பு தொழில்முறை நிறுவனங்களுக்கு மட்டும் National Centre for Software Technology (NCST) என்ற அரசுத்துறை அலுவலகம் பதிவு செய்து வந்தது. அது ஒரு மாதிரி தேக்க நிலையில் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் நாள் இதனை பெரிய அளவில் விரிவாக்கத் திட்டமிட்டு எல்லோரும் .in டொமைன்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவித்தார்கள். இதற்கான அறிவிப்பை கணினியியல் துறைக்கான மைய அரசு அமைச்சர் வெளியிட்டார்.

இந்த டொமைன் பதிவுகளார்களை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்காக தனி நிறுவனம் ஒன்றையும் - National Internet Exchange of India (NIXI) தொடங்கியுள்ளார்கள். சுமார் 25 தனியார் நிறுவனங்களை இந்த டாட் இன் டொமைன் பெயர் பதிவாளர்களாக அங்கீகரித்திருக்கிறார்கள் (Accredited Registrars). இவர்கள் .in டொமைன் பெயர்களை விற்கலாம். உங்கள்பெயர்.in என்பதை இரண்டாம் நிலை டொமைன் என்பார்கள். இதனைத் தவிர மூன்றாம் நிலை டொமைன்களான உங்கள்நிறுவனம்.co.in போன்றவைகளையும் பதிவு செய்யலாம். ஒரு ஆண்டுக்கு இந்தப் பெயர்களுக்கான வாடகை ரூ.700-800 - இரண்டாம் நிலைக்கும், ரூ.400-500 - மூன்றாம் நிலைக்கும் வாங்குகிறார்கள். இந்த விலை பதிவாளர்களிடையே மறுபடும்.அவர்கள் செய்யும் மேலதிக உதவிகள், நுகர்வோர் பிரச்னைகள் தீர்வு முதலிய சேவைகளைச் சேர்த்து விலை நிர்ணயித்திருப்பார்கள்.

இதுபோன்ற பதிவாளர் (.in Domain Registrar) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வணிகம் செய்ய நீங்கள் விரும்பினால் அதற்கான தகுதிகள், தேவைகள், முதலீடு முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து விபரங்களும் இந்தச் சுட்டியில் கிடைக்கும்.

இதுவரையில் அங்கீகாரம் பெற்ற பதிவு நிறுவனங்களில் Rediff, Sify போன்ற பெரிய தலைகள் இன்னும் சேவை தொடங்கவில்லை. ஏனெனில் தொடக்கத்தில் சில நாட்கள் sunrise period என்று ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தீர்ப்பதற்காக கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறார்கள். பிப்ரவரி 16 க்குள் இது பக்காவாகியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறிது நாட்களுக்குப் பிறகு கன்ஃபர்ம் பன்ணுவார்கள்.

இப்போதைக்கு இந்த வலைப் பக்கத்தில் கண்டுள்ள நிறுவனங்களில் பல பதிவு செய்யத் தொடங்கி விட்டன. நீங்கள் டாட் இன் தளப் பெயர் ஏதேனும் பதிவு செய்ய விரும்பினால் அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயங்கள் சில:

  1. DNS nameservers மாற்ற வசதி
  2. இணையம் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி
  3. டொமைனின் முழுக் கட்டுபாடும் உங்கள் கையில்
  4. பெயர் திருட்டுப் போகாமலிருக்கப் பூட்டு(Registrar lock).இதனை உங்கள் விருப்பப்படி இடவோ, நீக்கவோ முடிய வேண்டும்.
  5. பிரச்னையின்றி பெயரின் உரிமையை மாற்றும் வசதி(சிலர் படுத்தி விடுவார்கள்!)

இது தவிர சில பதிவாளர்கள் சிறப்பு சேவைகளையும் இனாமாகச் செய்வார்கள்:

  1. டொமமைன் பெயரை இன்னொரு தளத்துக்கு மாற்றுதல்
  2. மின்னஞசல் முகவரி
  3. டொமைன் குடியிருப்பு (parking)
  4. Free dynamic DNS, free nameservers

டொமைன் பெயர் இலாக்காவில் டெக்னிகல் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இவற்றைத் தொடக்கத்திலிருந்து விளக்க முயற்சி செய்கிறேன், எதிர்வரும் பதிவுகளில்!

டாட் காமை விட்டு வெளியில் வந்து இந்தியாவைச் சார்ந்த வலைத்தளமாக விளங்க "டாட் இன்" ஒரு அடையாளச் சின்னம்!

என்ன சுமார் 800 ரூபாய்தானே, எடுங்கள் துண்டை. போடுங்கள் - ஜெயலட்சுமி டாட் இன், ஜெயேந்திரர் டாட் இன் (He is already "in"!), ரஜனிராம்கி டாட் இன்……….
போட்டுத் தள்ளுங்க!

:: (பார்வை 1073 முறை) ::

செவலையும் திகம்பர சாமியாரும்

சிங்காரச் சென்னை :: Comments Off

செவலை இராமசாமி முதலியார் சத்திரம். நான் தினமும் இந்த இடத்தைத் தாண்டித்தான் அலுவலகத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். ஒரு நாளாவது உள்ளே சென்று அந்த கட்டிடத்தின் சரித்திரத்தை ஆராயலாம் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கெல்லாம் ஒரு குழு சுற்றுப் பயணம் மேற்கொள்வதுபோல் யாராவது செய்ய முயலலாம் என்று எண்ணுகிறேன்.

சரி, இந்த இடத்துக்கும் ஒரு சரித்திரக்கதைக்கும் என்ன தொடர்பு? அது போல் தான் இது! சரி, உங்களுக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரைத் தெரியுமா? ஐயா, மேனகா என்ற திரைப் படத்தையாவது தெரியுமா? இல்லை, திகம்பர சாமியாரையாவது தெரியுமா? தெரியாவிட்டால் தில்லக்கேணி சரவணா லெண்டிங் லைப்ரரி அல்லது ராயப்பேட்டை ஈஸ்வரி லைப்ரெரி, அல்லது உங்கள் பேட்டை நூலகம் (கொஞ்சம் அந்துருண்டை வாசம் அடிக்க வேண்டும்) எங்காவது சென்று வடுவூரார் நாவல்களை வாங்கிப் படியுங்கள். அப்பாடா!

அந்தக் கதைகளில் கும்பகோணத்திலிருந்து வரும் கல்யாண கோஷ்டிகள் எல்லாம் சென்னை பார்க் டவுன் "ராஜா ஸர் செவலை இராமசாமி முதலியார்" சத்திரத்தில்தான் "ரூம்" எடுத்துக் கொண்டு தங்கியிருக்கும். இது அவர் கதைகளில் அடிக்கடி வரும் நிகழ்ச்சி. அந்தக் கட்டிடம் இப்போது தமிழ் நாடு சுற்றுலாத் துறை வசம் "பாரு"டன் காட்சியளிக்கிறது. எங்கே இருக்கிறதா? ஆப்பிரிக்க "செராங்கெட்டி" காடுகளில் வரிக்குதிரை மற்றும் வில்டபீஸ்டடுக்கள் சாரிசாரியாக இடம் பெயருவதுபோல் தினமும் பார்க்கிலிருந்து சென்ட்ரல் போகத் தாண்டுவார்கள் பாருங்கள் அங்குதான்!

சீக்கிறமே அதன் உள்ளே நுழைந்து எதாவது சரித்திரச் சின்னங்கள் மீதமிருக்கிறதா என்று பார்க்கிறேன்.

இதன் சரித்திரம் வேண்டுமா? எஸ். முத்தையா அவர்கள் தி ஹிந்து-வில் எழுதியுள்ளதை நீங்கள் இங்கு வாசிக்கலாம். அவர் எழுதியுள்ளதற்கு மேல் நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்?

:: (பார்வை 980 முறை) ::

இது கொஞ்சம் ஓவர்!

பொது :: Comments Off

இந்தப் படத்தைப் பாருங்கள்!எல்லாமே ஓப்பன்!

நடு ரோடிலெ இப்படியா?

இதில என்னமோ விஷயம் இருக்கு!

:: (பார்வை 795 முறை) ::

அரியின் அனுமன் அறிமுகம்

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

அரிய முகங்களின் அறிமுகம் எனக்குக் கிட்டிய அருமையான மாலைப் பொழுது!

ஆம், கிழக்குக் கடலோர மணற்பரப்பில், கிழக்குப் பதிப்பகத்தார் சார்பில் நிகழ்ந்த "அனுமன் வார்ப்பும் வனப்பும்" என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடந்தேறியது.
புத்தக அசிரியர், "இணையத் தமிழ் ஆசான்", "மரபுக் கவிதை மாவீரர்", "ஹரியண்ணா" என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து எனக்கு இரண்டு மடல்கள் அனுப்பினார் பாரா அவர்கள். ஆனால் அவற்றிற்கு பதில் எழுதாமல் இருந்து விட்டேன். நிச்சயமாகச் செல்வது என்று முடிவு செய்து விட்டதால், பதில் எழுதத் தோன்றவில்லை. ஆனால் அது பெரிய தவறு என்பது அவரைச் சந்தித்த பின் தான் தென்பட்டது. அவர் என் வலைத் தளத்தினுள் புகுந்து எல்லாப் பகுதிகளையும் முழுமையாகப் படித்து விட்டு வந்து என்னை மனம்விட்டுப் பாராட்டினார். நான் அந்த அறிமுகத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பி அழைத்திருந்தார். மணிக்கணக்காக வலையில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு இரண்டு வரி எழுதி அனுப்பியிருக்கலாம். இனி கண்ணியம் காக்க வேண்டும் (Netiquette - 'Thou shalt reply all emails sans spam') என்று மெரீனா கடற்கரையில் தீர்மானம் செய்துகொண்டேன். இது கடற்காற்றிலோ, கடல் நீரிலோ கரைந்து போவதல்ல - ஹும்ம்ம்!

காந்தி சிலை அருகே மற்றவர்க்காகக் காத்திருந்த நேரத்தில் பத்ரியும் மதுரபாரதியும் இன்டெர்னெட்டின் தாக்கத்தையும், மற்றும் அதன் நீட்சியின் தேக்கத்தையும் பற்றி உரையாடினர்.

பின் மணற்பரப்புக்குச் சென்று சுண்டல், பஜ்ஜி வகயறா மற்றும் பலவகை கூச்சல்கள், இரைச்சல்கள் நடுவே வட்டம் போட்டு அமர்ந்து வாசகர் வட்டம் அமைத்தோம். ஆனால் சுண்டல் பையன்கள் எங்களை வட்டமிடுவதைத் தடுக்க முடியவில்லை. முருகன் அவர்கள் தன் பேச்சிடையே இவ்வளவு சிறிய பையன் சுண்டல் விற்று வயிர் வளர்க்க வேண்டியிருக்கிறதே என்று விசனப் பட்டார்.

இரா, முருகன் அவர்களும் மதுர பாரதி அவரகளும் நூலைப் பற்றியும், ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் கருத்துச் செரிவுடன் பேசினார்கள். ஆங்காங்கே ஹரியும் விளக்கங்கள் கூறினார்.

முருகனும், மதுரபாரதியும் ஹரியின் நூலின் நடையைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மிக எளிமையாக இருக்கிறது, இலக்கியமே தெரியாத பாமரனுக்குக் கூட தெளிவாகப் புரியும்படி அமைந்திருக்கிறது என்று கூறினார்கள். அப்போதுதான் புரிந்தது என்னை ஏன் அங்கு அழைத்திருந்தார்கள் என்பது!

வால்மீகியை விட கம்பன் இன்னும் ஆழமாக பாத்திரங்களின் பரிமாணத்தை விரிவு செய்திருக்கிறார் என்றும், அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வரும்போது கால மாறுபாட்டை (change of time zone) கம்பன் விவரித்திருப்பது அவனுடைய அறிவியல் கண்ணோட்டத்தை காண்பிக்கிறது என்பதையும் ஹரி உணர்ச்சியுடன் விளக்கினார். இலங்கைத் தீவும் இமைய மலையும் ஒரே நேர்க் கோட்டில் இருப்பதால், அவற்றின் longitude ஒன்றாக இருக்கும் என்று வாஞ்சிநாதன் எடுத்துக் காட்டினார் என்றும், அதனால் ஹரி, நம் கூகிள்நாதனின் உதவியுடன் "மேரு மலை" ஆப்பிரிக்காவின் "கிளி மாஞ்சாரோ" மலைத் தொடரில் இருக்கக் கூடும் என்று அறிந்ததாகவும் விளக்கினார்.

முருகன் அந்த நூலை முழுதும் படித்திருந்தார். நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினார். மதுரபாரதி தனக்கும், ஹரி அவர்களுக்கும் உள்ள வெகுநாள் நட்பையும் ஆதி நாட்களில் இலக்கியம் கற்ற சிறப்புக்களைப் பற்றியும், அவர் ஹரியை எழுதத் தூண்டியதையும் நினைவு கூர்ந்தார்.

அனுமனைப் பற்றி நான் சிந்திப்பது, பெருமாள் கோயில் செல்லும் போதும் communication பற்றி கூட்டங்களில் பேச முற்படும்போதும் தான். அனுமன் ஒரு communication expert. எனக்குத் தெரிந்த ஒரே வரி கம்ப இராமயணத்தில் இதுதான் - "கண்டேன், கற்பினுக்கரசியைக் கண்டேன்". இதற்கு பலவிதமான விளக்கங்களையும் அவ்வப்போது கொடுத்து வந்திருக்கிறேன். (அது இப்போ வேண்டாமே!)

ஆனால் சாதாரணமாக மற்ற கடவுளர்களைப் பற்றி கொஞ்சம் கொச்சையாக விமரிசிப்பவர்கள் கூட அனுமனிடம் சிறிது ஜாக்கிரதையாகப் பேசுவர். அனுமன், இராகு, சனி போன்ற கடவுட்களிடம் பொதுவாக மக்கள் பயத்துடன் இருப்பர்.

இராமாயண கதா பாத்திரங்களில் அனுமனைத் தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் ஹரி அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்; அவற்றை கிழக்குப் பதிப்பகதார் வெளியிட வேண்டும் என்று அன்பர் அனைவரும் வேண்டிக் கொண்டனர்.

முடிவாக பத்ரி அவர்கள், தான் எப்படி ரா.கா.கி-யின் அறிமுகத்தால் தமிழ்ப் புத்தக பதிப்புத் தொழிலில் இறங்கினார் என்பதையும் தங்கள் எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டார். கிழக்குப் பதிப்பகத்தார், நல்ல content மற்றும் packing - உடன் நூல்களை வெளியிடுகிறார்கள், எழுத்தளர்களுக்கு ராயல்டியை தவறாமல் வழங்குகிறார்கள் என்பதையும் பலர் பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.

அனுமனின் துதியில் நாம் வேண்டிக் கொள்வது, புத்தி, பலம், யஸஸ்(செல்வம்), தைரியம், பயமின்மை, உடல் நலம், மனத் திண்மை, சொல்வன்மை இவையெல்லாம் அனுமன் நமக்கு அருளட்டும் என்பதுதான். அவை அனைத்தும் ஹரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வீடு திரும்பினேன். வரும் வழியில் மதுரபாரதியுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது ஒரு போனஸ்.

இகாரஸ் பிரகாஷ், வள்ளியப்பன், இரு பெண் கவிஞர்கள், சுவடு சங்கர், தேசிகன், அருட் செல்வன், அரவக்கோன், சந்த வசந்தம் அதிபர்,……… முக்கியமான யாரையாவது விட்டு விட்டேனா? மன்னியுங்கள். இப்போது மணி நள்ளிரவு 12.

ரோல்காலுடன் போட்டோக்களும் பத்ரி போட்டுவிடுவாரே. பார்க்கலாம்.

:: (பார்வை 817 முறை) ::

தளப்பெயர்கள் ஜாக்கிரதை!

பொது :: 4 மறுமொழிகள் »

எங்கே என் திருநாம்?இன்டெர்னெட் டொமைன் பெயர்களைப் பதிவு செய்யும் முறைகளை மேற்பார்வையிட்டு முறைப்படுத்தும் அமைப்பான ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) தற்போது அதன் சட்டதிட்டங்களில் சில மாறுதல்களைச் செய்திருக்கின்றது. அதன்படி உங்கள் டொமைன் பெயரை ஒரு பதிவாளரிடமிருந்து (Registrar) இன்னொரு ரெஜிஸ்ட்ராருக்கு மாற்றும் முயற்சி எழுந்தபின், 5 நாட்களுக்குள் மறுப்பேதும் கூறவில்லையென்றால் அந்தப் பெயர் இன்னொருவருக்கு (புதிய பதிவாளர் மூலம்) மாற்றப்படும். இதற்கு முன் அந்தப் பெயரின் உரிமையாளர் (Administrative contact as per the registry) ஒப்புதல் கொடுத்தால்தான் மாற்ற முடியும் என்ற நிலை இருந்தது,

இந்த மாற்றல் முயற்சியை யார் வேண்டுமானாலும் கன்னம் வைக்க ஆரம்பிக்கலாம். ஒரு பதிவாளரிடம் சென்று ஒரு கணக்குத் தொடங்கி, அங்கே, "Transfer a domain" என்று இருக்கும் சுட்டியை சொடுக்கினால், (அதற்கான கட்டணம் - குறைந்த பட்சம் ஒரு வருட வாடகை - செலுத்திய பின்) அந்த டொமைனின் தற்போதைய பதிவாளருக்கு ஒரு விண்ணப்பம் போகும். உடனே அவர்கள், அந்தப் பெயரின் உரிமையாளர் கொடுத்துள்ள மின்னஞ்சல் விலாசத்துக்கு ஒரு மடல் அனுப்புவார்கள், "என்ன, மாற்றலாமா?" என்று. புதிய பதிவாளரும் ஒரு அஞ்சல் அனுப்புவார், "நீங்கள் ஒப்புகை கொடுக்கிறீர்களா? அப்படியானால் இங்கே கிளிக்கியுங்கள்" என்று. டொமைன் உரிமையாளர் ஒரு ஒலிம்பிக் சோம்பேரியாக இருந்து, என்றைக்கோ கொட்டாவி விட்டுப்போன அஞ்சல் முகவரியை மாற்றாமல் இருந்தால், இந்த மடல்களைக் காணப்போவதில்லை. அவ்வளவுதான், 5 நாள் மறுப்புக் கெடு முடிந்தவுடன், டொமைன் பெயர் "கோவிந்தா" தான்!

Washington Post நிறுவனம் கூட இதுபோல் தன் பெயர் ஒன்றை இழக்கும் நிலை வந்து, பின் எகிறி ஓடிப் பிடித்தார்கள்.

சரி, இதுபோல் டொமைன் திருநாமங்கள் ஜேப்படியாகாமல் தடுப்பதுதான் எப்படி?

பதிவாளர்களிடம் ஒரு பூட்டு இருக்கும். அதைப் போட்டுவிடச் சொல்லுங்கள் (Registrar Lock). ஆனால், அந்தப் பூட்டின் சாவி உங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்களாக மாற்ற விரும்பினால் திறக்க ஏதுவாக இருக்கும்.

Domain registration, hosting, control panel, Zone file, CName, A Name, DNS, Name server, MX records, canonical name, dynamic DNS, IP………….. இது போன்ற e-funda சமாசாரங்களைப் பற்றி எழுத ஆசை!

:: (பார்வை 823 முறை) ::

வோர்ட்பிரஸ் 1.5 ஒரு ஜாக்பாட்!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

வோர்ட்பிரஸ்
Wordpress ஒரு சிறப்பான வலைப்பதிவு மென்பொருள் நிரல். பி.எச்.பி மற்றும் மை-எஸ்க்யூஎல் (PHP & MySql) போன்ற திறமூல மென்கலன்களைக் கொண்டு இயங்குவது. முழுவதும் இலவசமாகக் கிடைக்கும் இந்த இயற்பொதி முழுவதுமாக வளர்ந்து 1.5 என்ற திறனிலக்கை எட்டியுள்ளது.

ப்ளாக்கர் போன்ற சேவைகளை பாவிக்காமல் நீங்களே உங்கள் வலைத்தளத்தை குடியேற்றி நிரல்களின் செயல்படுத்த இயலுமானால் இந்த வோர்ட்பிரஸ் ஒரு வரப்பிரசாதம்.

நவன் பகவதியின் வலைப்பூ மற்றும் என் ஆங்கில சோம்பேரிப் பின்னல்கள்முதலியன இந்தக் கோப்பின் மூலம் இயக்கப் படுபவை.

மேல்விவரம் வேண்டுமானால் ஒரு கூச்சல் போடுங்கள்!

:: (பார்வை 789 முறை) ::

வலையில் சுட்ட பழம்

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

என் நண்பரொருவர் தன் வலைப்பூவில் ஒரு புகைப் படத்தை இன்னொரு வலைத் தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தார். அதில் ஒரு சைக்கிள் போட்டி வீரரின் படம் இருந்தது. அவருடைய கைத் தசைகள் முறுக்கேறி நிற்பதைத் துல்லியமாக அந்தப் படம் காண்பித்தது. அந்தப் படத்தை எடுத்தவரின் திறமையைப் பாராட்டி இரண்டு வரி எழுதி அந்தப் படத்தைத் தன் பதிவில் இட்டிருந்தார் என் நண்பர். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் சம்பந்தப்பட்ட புகைப்பட நிபுணர். "என் படத்தை உங்கள் பதிவில் போடாதீர்கள், எடுத்து விடுங்கள் - ஏனென்றால் அதனைப் போடுமுன் என் ஒப்புதலை நீங்கள் பெறவில்லை" என்றார். என் நண்பர் உடனே அதை எடுக்காமல், "என் தளம் வணிகம் சார்ந்தது அல்லவே. வெறும் வலைப்பூதானே, அதில் போட்டாலென்ன" என்று பதிலுரைத்தார். ஆனால் அந்த படக்காரரோ, "முதல் தவறு, என்னிடம் உரிமை பெறாமல் எடுத்துப் போட்டது. இரண்டாவது அதனை எடுக்கச் சொல்லியும் எடுக்காதது. மூன்றாவது ஒரு பொய் - உங்கள் தளத்தில் கூகிள் விளம்பரங்கள் வருகின்றன; அதனால் அது வணிகம் சார்ந்ததாகிறது. உடனே அந்தப் படத்தை எடுக்காவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்" என்று எச்சரிக்கை விடுத்தார். அந்தப் படமும் "டாடா" சொல்லி விட்டது.

சமீபத்தில்கூட தமிழ் வலைப் பதிவுகளில் எழுந்த ஒரு சலசலப்பைப் பற்றிப் படித்தேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அருங்கலைகளைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் அது. அவரே பதிப்பித்துள்ளார். அதில் முதலிரண்டு பக்கங்களிலேயே (முன்னுரை, முகவுரை முதலியன) தெளிவாக ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டார், "இந்தப் புத்தகத்தில் அடங்கிய அனைத்து விஷயங்களும் பல இணைய தளங்களிலிருந்து எடுக்கப் பட்டன" என்று!

அந்தப் புத்தகம் விலைக்கு விற்கப் படுகிறது. It is a commercial venture. அதனால் நான் அவரிடம், "இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர் யாரேனும் அந்த வலைத்தள உரிமையாளர்களிடம் போய்ச் சொன்னால் அதனால் பிரச்னை வராதா" என்று கேட்டேன். அதற்கு அவர், "எப்போ இண்டெர்னெட்டில் போட்டார்களோ அதிலிருந்து அவை public domain-ஐச் சேர்ந்தது. யார் வேண்டுமானாலும் எடுத்து ஆளலாம்" என்றார். அவரின் கூற்று சரியல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மேற்கொண்டு வாதம் செய்யவில்லை. இணையத்தில் ஒரு வலைப் பக்கத்தின் வரைவைக் காப்பியடித்ததற்கே பலர் நீதிமன்றம் சென்றிருக்கும் கதைகள் தெரியும். Copyright மற்றும் IPR விஷயத்தில் மேலை நாடுகளில் மிகவும் விழிப்புடனும் வேகத்துடனும் இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். சாதரணமாக எல்லோரும் பாடும் பிறந்த நாள் வாழ்த்தான "Happy Birhthday to you" பாட்டை commercial-ஆகப் பாட வேண்டுமானால் அதன் பதிப்புரிமை வைத்திருப்பவர்களிடம் $500 செலுத்தி ஒப்புதல் பெறவேண்டும் என்பார்கள்!

இந்தப் புத்தக விஷயத்தில் இனிமேல் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன். அவருக்கு உதவியாயிருக்கும்!

:: (பார்வை 867 முறை) ::

தோலினுள் நுழைந்தது துகள், தொலைந்தது இவ்வுலகம்!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

"சிக்"கென்ற "சிப்"! "வெரிசிப்" என்று அழைக்கப்படும் ஒரு சில் துகளை ("VeriChip", a miniaturised, implantable radio frequency identification device (RFID) about the size of a grain of rice, that has the potential to be used in a variety of personal identification, security, financial, and potential healthcare applications.) மனிதத் தோலினடியில் செலுத்தி அந்த மனிதனின் செயல்பாடுகள், அவனுடைய உடல்நிலை மாறுதல்கள் போன்றவற்றை கணினி மூலம் கண்காணிக்கும் செயல் பாட்டினை அமெரிக்க அரசாங்கம் (America's Food and Drug Administration) ஏற்பாடு செய்திருக்கிறது.

வெறி பிடிக்காமலிருந்தால் சரி! அந்த நுண்துகளை ($200) ஊசிமூலமாக தோலினடியில் செலுத்தியபின், அது தொடர்ந்து அதன் தனிப்பட்ட முகவரியினை ரேடியோ அலைகளாக வெளிப்படுத்தியபடி இருக்கும். இந்த செய்திகளைப் பெருவதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கருவி இந்த அலைகளை உள்வாங்கி கணினி மூலமாக பலவித செயல்பாடுகளுக்கு பயன் படுத்தப் படும் என்கிறார்கள்.

இப்போது மருத்துவ ஆய்வுக்காக மட்டும் இந்த technology பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும், இந்த சிப் முறையை அமல் படுத்தியபின் தனிமனிதன் இனிமேல் தன்னிச்சையாக செயல்படவே முடியாது, அவனுடைய் சுதந்திரம் பறிபோய்விடும் (privacy-threatening) என்ற எதிர்க்குறலகள் உரக்கவே ஒலிக்க ஆரம்பித்து விட்டன. அந்தச் சில் பொருத்தப்பட்ட மனிதனின் என்ணங்கள், செயல்கள் எல்லாவற்றையும் இன்னொருவர் முழுமையாக கண்டறிவது மட்டுமல்லாமல் அந்த மனிதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சாத்தியம் இருப்பதால், இந்த முடிவை பலர் எதிர்க்கிறார்கள்.

இது தவிர பல உடல்நிலைக் கோளாறுகளை இந்தக் கருவி உண்டாக்கக் கூடும் என்றும், இதனைச் செலுத்துவதுதான் சுலபமே தவிர வெளியெடுப்பது மிகவும் கடினம், அதற்காக பெரியதொரு அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும், அதனால் பல பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது போன்ற கருத்துக்கள் பல விஞ்ஞானிகள் மூலமாக வெளிவந்த வன்ணம் இருக்கின்றன.

ஆனால் இந்தத் துகள் செலுத்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியும் (trackability) என்பதால், பிணைக்கைதிகளாக கடத்தப்படுவோமோ என்று அஞ்சும் பலர் இந்தத் துகளை உட்செலுத்திக் கொள்ள மிக ஆவலாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மெப்ஸிகோ நாட்டில் இந்தக் காரணத்திற்காகவே பலர் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்று தெரிகிறது. நம் நாட்டிலும் இன்றைய நிலைமையைக் கருத்தில் கொண்டு பீகாரில் பலர் இதனை வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்!

பிரச்னை இப்போது வேறு பாதையில் திசை திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பைபிளில் சொல்லியுள்ளபடி நெற்றியிலோ வலது கையிலோ ஒரு குறி ஏற்படும்போது சைத்தானின் ஆதிக்கம் அதிகமாகி உலகம் அழிந்துவிடும் (Apocalypse) என்கிற நம்பிக்கையில் அதில் குறிப்பிட்டுள்ள "குறி" இந்த வெரிசிப்தான் என்று சொல்கிறார்கள் சிலர். அதனால் இந்த வெரிசிப்பை சைத்தானின் குறியீட்டு என்ணான "666"-உடன் ஒப்பிடுகிறார்கள் (mark of the beast).

தோன்றுவது எல்லாமே ஒரு நாள் அழியவேண்டியவைதானே என்ற கருத்தில், இதற்கெல்லாம் கவலைப் படாமல் வெரிசிப் இப்போது போடு போடென்று போடுகிறது. சீக்கிறத்திலேயே கடைகளுக்குச் சென்று சமான்களை எடுத்துப் போட்டுக் கொண்டு பணம் கொடுக்காமலேயே "ஹாயா"க கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம் - ஆமாம், கையில் தான் பை இருக்குமே, எப்படி வீசுவது என்று கேட்கலாம் (உங்கள் பெயர் மூர்த்தியா?), சரி பையை தோள்பட்டையில் மாட்டிக் கொள்ளுங்களேன்! அவற்றின் மதிப்பு உங்கள் வங்கிக் கணக்கில் கழிக்கப் படும். அதான் உங்கள் ஜாதகம் முழுவதையும் உங்கள் புறங்கை சில்லு அதன் அண்ணனிடம் ஒப்பித்துவிட்டதே!

:: (பார்வை 954 முறை) ::

 

5-ல் இது-4«12345»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in