மாறினேன், மாறினேன்!

அப்பாடா!
ஒரு வழியாக b2Evolution-லிருந்து WordPress-க்கு உஜாலாயிட்டேன்!

முதலிலேயே WordPress-க்கு போய் குடியேறியிருக்கலாம். ஆனால் ஒரு வீம்புக்காக b2Evo-வுக்குத் தாவினேன். ஆனால் WordPress செயலியின் வளர்ச்சி மின்னல் வேகம்! அதை பல மென்பொருள் வல்லுனர்கள் தினமும் அமுலும், சத்துணவும் போட்டு போஷாக்களித்து வருகிறார்கள். இந்த நிமிடம் வரை அந்த திறந்த நிரல் செயலியின் சமீபத்திய 1.5-என்ற பதிப்பினை 76,551 தடவை தரவிறக்கியுள்ளனர். பலவித plugins, themes, hacks இது போன்றவற்றை மென்பொருள் ஆர்வலர் பலர் உருவாக்கி அளித்து வருகின்றனர். ஆகையால் நானும் குதித்துவிட்டேன். முதலில் ஆங்கிலத்தில், இப்போது தமிழிலும்!

முதலில் அந்த செயலியின் முகப்புச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்ய முற்பட்டேன். l10n, .pot, .po, .mo, poedit என்று புகுந்து புறப்பட்டு, ஒரு வழியாக “தமிழ்(+ஐ)ப் படுத்தி”விட்டேன்! இனிமேல் உங்கள் பாடு!

இது தவிர, b2evo-வில் குடியிருந்த பதிவுகளின் சேர்க்கையை WordPress-ன் database-க்கு கொண்டுசெல்வது ஒரு பிரசவ வேதனை. அதோடு சேர்ந்து css வேறு சதி செய்தது. “இடது மிதவை”, “வலது தொங்கல்” (float: left, float: right) போன்ற குட்டிச் சாத்தான்களின் விஷமம் தாங்க முடியவில்லை. எழுத்துருக்களின் அளவை கொஞ்சம் பெருக்கினால், வலது ஓரத்தில் சமத்தாக ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டியவை யெல்லாம், “பப்பரக்கா”வென்று பாதாளத்தில் விரித்துக் கொண்டு கிடந்தன! “தணல் நரி”யில் நேராகத் தெரிகிறதே என்று பெருமூச்சு விட்டால் அண்ணன் ஐ.ஈ-யில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறிவிடுகிறது. ஏதேனுமொரு் பிற்சேர்க்கையைச் சேர்த்தால் வேறொன்று பிணங்கிக் கொள்கிறது – “சுருட்டுப் பாயும், முரட்டுப் பெண்ணும்” என்பது போல 😉

ஒருபாடாக எல்லாவற்றையும் தட்டிக்கொட்டி சரி செய்து உங்கள்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன்.
இந்த முயற்சியில் எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் காசி, நவன் பகவதி இருவருக்கும் நன்றி!

3 Comments


  1. வாழ்த்துக்கள்.

    (நான் என்னங்க பண்ணினேன்?)


  2. நன்றாக இருக்கிறது உங்கள் பக்கம். நேற்றுத் தான் வோர்ட்பிரஸ் தளத்தில் இருந்து 1.5இன் .pot ஐ இறக்கிப் poEdit மூலம் தமிழ்ப்படுத்த முயன்று கொண்டிருந்தேன். நீங்கள் ஏற்கனவே செய்துவிட்டீர்களென்றால் வோர்ட்பிரஸ் தளத்தில் பிற மொழிப் பக்கங்களில் உள்ளிட்டுவிடலாமே. தமிழ் வலலயுலகிலும் வோர்ட்பிரஸ் பாவனை அதிகரித்துள்ளது. பலருக்கும் பயனாய் இருக்கும். நன்றி.


  3. அட… மொத்தமா WordPressக்கு குடி பெயர்ந்தாச்சா. ஜமாய்ங்க.
    மொழியாக்கம் சம்பந்தமாக செல்வராஜ் விடுத்த அதே கோரிக்கை தான் எனதும்.

Comments are closed.