துளித்துளி

விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே! — பாரதியார்

சரி, விருந்தினராக வந்துள்ளீர்கள். வேறு ஏதாவது தேடிப் பெறுங்களேன், நிறைய எழுதியிருக்கிறேனே! 2005 Archives

3

வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது.

3

சர்தார் வல்லப்பாய் படெல் - இரும்பு மனிதர் இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி, இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் 130-வது பிறந்த நாள். ஒரு தலை சிறந்த நிர்வாகி, நாட்டுப்பற்றே மூச்சாக வாழ்ந்த விவசாயி – அவருடைய தொண்டினை இன்று நினைவு கூர்வோம். நம் பாரத நாட்டின் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் பேணிக் காக்கவும் உறுதி பூணுவோம்.

படேல் அவர்களைப் பற்றி மேலும் அறிய விக்கிபீடியாவை அணுகுங்கள். (ஆங்கிலத்தில்)

மேலும் அவர் ஏன் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆகமுடியவில்லை, அதில் காந்தியின் பங்கு என்ன போன்ற விவரமறிய இங்கே சொடுக்குங்கள். (இதுவும் ஆங்கிலத்தில்)

படேல், the Boss!

படேல் 1947-01-27 தேதியிட்ட Time பத்திரிக்கையின் முகப்பை அலங்கரித்திரிக்கிறார். அவரைப் பற்றி "The Boss" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

0

சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்!) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். இது பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தை கீவளூரில் புத்தகக் கடை வைத்திருந்தபோதிலிருந்து தொடர்ந்து வரும் பழக்கம் (சுற்றுவட்டாரத்திலிருக்கும் பல ஊர்களுக்கு புத்தகக்கடையாக எங்களுடையது ஒன்றுதான் இருந்தது. நிகரலாபம் குறைவு என்பதால் பலர் இந்தத் தொழிலில் அப்போது ஈடுபடுவதில்லை). காகிதம், அச்சு மை, வார்ணிஷ் எல்லாம் சேர்ந்து அளிக்கும் ஒருவித வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிறகு முதல் பக்கத்தில் பெயர், தேதி, ஊர் முதலியவற்றை குறிப்பது (Metadata of ownership). மிகவும் பிடித்த ஆசிரியருடையதாயிருந்தால் "பொக்கிஷம்" என்றெல்லாம் எழுதி வைப்பேன்!

சரி. பிறகு? படிப்பதில்லையா? அங்குதான் ஒரு சைத்தான் வந்து தன் விஷமத்தை காண்பிக்கும். ஒரு பிரட்டல் பிரட்டிவிட்டு, "நம்முடைய புக்குதானே, எங்கே ஓடிப்போகப் போகுது; சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம்" என்று சோஃபா, படுக்கை, கணிப்பான் உறைவிடம், (கழிப்பான் தனியிடத்தில் கூட சில சமயங்களில் :) ), நாற்காலி (எங்கள் கிராமத்தில் புதிதாக ஒரு நாற்காலி செய்து வந்த போது, முத்லில் அதில் வீற்றிருக்கும் பாக்கியம் செய்த வஸ்து ஒரு தவிட்டு மூட்டை – ஆனால் நான் முன்னேறிவிட்டேன். இப்பொதெல்லாம் அதன்மேல் புத்தகம், நோட்டு, குறுந்தகடு, பஜ்ஜி வைத்த தட்டு, காப்பி கோப்பை இவைதான் வீற்றிருக்கின்றன) என்று "கராத்தே" போல் அல்லாடிக் கொண்டிருக்கும்.

புத்தகங்களின் அடுத்த நிலை "பரலோகம்"தான்! அதாவது "பரண் லோகம்". "லாஃப்ட்"கள் எதற்கு இருக்கின்றன? சிறிது நாட்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு அந்துருண்டை சகிதம் புதுக் கருக்குக் குறையாமல் மேலேறிவிடும். இப்படி அடுக்கி வைத்து அப்படியே நினைவிலிருந்து அகற்றியவைகள் அநேகம். உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு எம்பலில் கைக்கெட்டுமாறு வைக்கப்பட்டிருந்தால்தான் புத்தகங்கள் படிக்கப்படும். ஏழுகடல், ஏழு ஏணி தாண்டி எடுக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அவை "எழுத்தாணிப்பூச்சி'க்குத்தான் எடுப்புச் சாப்பாடாகும். அன்பர் ஹரி கிருஷ்ணன் அப்படித்தான் ஒருமுழ தூரத்தில் தன் பாரதி பற்றிய நூல்களையும் தொல்காப்பியத்தையும் "ரேக்"கியிருக்கிறார். ஏதேனும் கேள்வி கேளுங்கள். மூன்று நிமிடங்கள்தான் அவருடைய பதில்பெறும் நேரம் (SATA வண்தகடு வேகத்தில் செயல்படுவார்).

சில நாட்களுக்குமுன் இணையத்தில் சிலர் ஒரு படர்ச்சி இழையைத் (meme) தொடங்கினார்கள். "மீம்" என்றழைக்கப்படும் இந்தச் சொல் பலர் கையில் மாட்டிக்கொண்டு மிம்மி, கும்மி என்று வெம்மிக் கொண்டிருந்தது சில காலம். மெறியம் வெப்ஸ்டர் அகராதியிலிருந்து இந்த சொல்லின் சரியான உச்சரித்தல் அறியவேண்டின் இந்த சுட்டியை சிமிட்டினால் கேட்கலாம்! அந்த இழை ஓடிக்கொண்டிருக்கும்போது சில பாசாங்குசர்கள் புத்தகக்கடைப் பட்டியலில் கண்ட அனைத்து நூல்களையும் படித்துவிட்டதாக மளிகைக் கடை "ரோக்கா" போல அட்டவணையிட்டு "மெத்தப் படித்தவர்களாகி" அகமகிழ்ந்தனர் (உண்மையிலேயே தான் படித்த புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்து கொண்டவர்களை நான் பழிக்கவில்லை).

ஐயோ பாவம் ஆண்பால்சரி. நான் ஏதாவது படித்தேனா இல்லையா? அவசரப்படாதீர்கள். இப்போது கிடைத்துள்ள நீண்ட வாரமுற்றில் எத்தையாவது வாசித்துவிடவேண்டுமென்ற உறுதியுடன் நான் எடுத்துக் கொண்ட புத்தகம் வெறும் 160 பக்கங்களைக் கொண்ட நோஞ்சான். ஏனெனில் இப்போதுதான் டேவ் பேர்ரி எழுதிய ஆண்மகர்களின் அதீத குண விசேஷங்களைப் பற்றிய புத்தகத்தைப் படித்து சிரித்து, பின் ஒரு பதிவும் போட்டு முடித்துள்ளேன்.

அப்படி நான் படித்துக் கிழித்த தமிழ்ப் புத்தகம்தான் என்ன? நாளைவரை பொறுங்கள். இப்போது சுடச்சுட "மோர்க்கூழு" அழைக்கிறது!

3

National Portal of India

இன்று இந்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளம் (Portal) இன்று வெளிவந்திருக்கிறது.

http://india.gov.in/

நல்ல முயற்சி. சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நல்ல வேகமும் கூட. ஒரே தளத்தில் அனைத்து அரசுத் துறைகளைப்பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெறுவது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இப்போது சில சுட்டிகள் தொங்குகின்றன. நாளடைவில் சரியாகிவிடும் என்று நம்பலாம். எல்லா மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால் இந்த வசதியை அனைத்து அரசு சார்ந்த பணிகளுக்கும், செய்திகள் பெறுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

NIC – யின் முயற்சி பாராட்டுதற்குறியது!

சார்ந்த வகை: பொது :: நாள்: . 3 மறுமொழிகள்#

இது ஒரு அவசரப் பதிவு.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள் பக்கமும் நான் செல்லவில்லை – தமிழ்மணம், தமிழோவியம் உட்பட. வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருப்பதால். என் பெட்டிக்கடையும் மூடித்தான் கிடக்கிறது.

இந்நிலையில் இன்றுகாலை என் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் – என் பெயரில் பலருடைய பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன என்றும் அவை என்னால்தான் எழுதப்பட்டன என்று பல அன்பர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும். நான் இன்னும் அவற்றை வாசிக்கவில்லை. இந்த சிற்றூரிலிருக்கும் கணினி மையத்தில் தமிழ் பார்க்க வசதியில்லை. அவை எவ்வளவு மோசமாக எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை.

"தமிழா" மூலம் சுற்றி வளைத்து இதனை எழுதுகிறேன்.

இதனால் சகலவிதமான வலைப்பதிவாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்:

1. சமீபத்தில் முகமூடி, அருண், குழலி மற்றும் பலருடைய வலைப்பூக்களில் "எஸ்கே", "SK" போன்ற பெயர்களில் இடப்பட்டுள்ள எந்த பின்னூட்டமும் நான் எழுதியதல்ல.

2. நான் வலைப் பதிவுகளில் கருத்து எழுதி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. அதற்கு முன்புகூட ஏதோ ஓறிரு முறைகள்தான் எழுதியுள்ளேன். ஆனால் என் பெயரில், என் முழு விலாசத்துடன், வலை உரலுடன் தான் எழுதுவேன்.

3. இப்போது "எஸ்கே" என்ற பெயரில் எழுதும் நபர் அந்த பெயரில் எழுதும் இன்னொருவராக இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே என் பெயரை கெட்ட எண்ணத்துடன் பயன்படுத்தும் மன நோயாளியாக இருக்கலாம்.

4. ஆனால் நான் அவனி(ரி)ல்லை.

5. இன்னும் ஒரு வாரம் சென்றபின் எல்லாவற்றையும் படித்துவிட்டு மேற்கொண்டு மறுப்புரைகள் தேவையெனில் எழுதுகிறேன்.

என் கவலையெல்லாம் ஒன்றுதான்.

இந்த தமிழ் வலைப்பதிவு சான்ற உலகத்தில் பல நல்ல உள்ளங்களை இணையம் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த நட்பை நான் மிகவும் போற்றுகிறேன். அவர்கள் இத்தகைய பின்னூட்டங்களைப் படித்துவிட்டு என்மேன் தப்பயிப்பிராயங்கள் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்பதுதான்.

நன்றி.

எஸ்.கே (கிச்சு)

5-ல் இது-512345