எந்த நிலம் சொந்தம்!

“சன் டிவி”யின் “சிறப்புப் பார்வை” நிகழ்ச்சியில் சொத்து வாங்குவதில் உள்ள பிரச்னைகளையும், ஏமாற்றல் வேலைகளையும், தலைவிரித்தாளும் லஞ்ச லாவண்யங்களையும் அலசினார்கள். ஒருவர், தான் வாங்கியுள்ள இடத்தை இன்னொருவரும் பதிவு செய்துகொண்டு சொந்தம் கொண்டாடிய சோகக் கதையைக் கூறினார். இன்னொருவர், எந்த இடம், சர்வே நம்பர் எதையுமே கவனிக்காமல் பணம் கொடுத்து விட்டு, வாங்கியயுள்ளதாக நம்பிக் கொண்டிருக்கும் இடம் வேறு, பத்திரத்தில் உள்ள இடம் வேறு என்றாகி, அந்த இடம் உண்மையில் வேறொருவருக்குச் சொந்தம் என்ற நிலையில் மோசம் போய் நிற்கின்ற கதையையும் விவரித்தார்கள்.

பெரும்பாலும் பத்திரங்களில் எழுதியிருக்கும் வாசகங்கள் தெளிவாகப் புரியும் விதத்தில் எழுதப் படுவதில்லை. மக்களும் சொத்தின் விவரப் பட்டியல்கூடப் பார்க்காமல் கையொப்பமிடுகின்றனர். பத்திரங்களை பாமரருக்கும் புரியும் விதத்தில் எழுத ஆரம்பித்து, “பணத்தின் நிறம் வெள்ளை” என்று புரட்சி செய்த அலாக்ரிடி (Alacrity Housing Limited) கம்பேனி தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டது. இந்தத்துறையில் அநேகமாக எல்லோருக்கும் பிடித்தமான பாடல், “கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு”! ஸ்டாம்ப் சிலவு குறைவதற்காக வாங்குபவர்கள் மதிப்பைக் குறைப்பதும், Capital Gains Tax மற்றும் பலவகை வரி ஏய்ப்புக்காக விற்பவர்கள் குறைப்பதும் சர்வ சாதாரணம். ஆனால் சமீபத்தில் Guidance value என்று ஒவ்வோர் இடத்திலும் மார்க்கெட் மதிப்பு என்ன என்பதை நிர்ணயம் செய்து அதன்படி பதிவுக் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் நம் தோழர்கள் ஓட்டைகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பதிவு செய்யும் அலுவலகத்திற்குச் சென்றால் அப்படியே வழுக்கும். அவ்வளவு கிரீஸ்!

சொத்து விஷயத்தில் ஏமாறுவதற்கான வாய்ப்புக்கள் ஏராளம். பொதுவாக வங்கிகளும், வீடுகட்டுவதற்காக கடன் கொடுக்கும் நிறுவனங்களும் அடமானப் பத்திரத்தை (Mortgage deed) பதிவு செய்வதில்லை. மூலப் பத்திரத்தை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள். இதற்கு Equitable Mortgage என்று பெயர். அதனால் ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் கொடுக்கும் வில்லங்க சான்றிதழை மட்டும் பார்த்துவிட்டு சொத்து பற்றிய உரிமை சரியாக இருக்கிறது என்று நம்பினால், நீங்கள் எல்லப் பணமும் கொடுத்து குடியேறிய பிறகு ஒருநாள் வங்கியிலிருந்து நோட்டீஸ் வரும், சொத்தின் மேல் இவ்வளவு கடன் இருக்கிறது என்று. பிறகு நீங்கள் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியதுதான். ஆகையால், சொத்தின் மூலப் பத்திரத்தின் நகலை மட்டும் பார்த்துவிட்டு பணம் கொடுக்காதீர்கள். அசலைப் பார்த்துவிட்டு பணம் கொடுங்கள். பொதுவாக அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்தான் இவ்வகை பிரச்னை அதிகம் வருகிறது. ஏனெனில் அங்கு எல்லோருக்கும் அசல் கொடுக்க முடியாதல்லவா. அதை வைத்து ஏமாற்றுகிறார்கள்.

இன்னொரு வேடிக்கையான விஷயம். சொத்துக்கு உண்மையான உரிமையாளர் தான் விற்பதற்கான பத்திரம் பதிவு செய்ய வருகிறாரா என்று சரி பார்க்கும் பொறுப்பு பதிவாளருக்குக் கிடையாது. அவர் “முழுக்கிரயமும் பெற்றுவிட்டீர்களா” என்றுதான் கேட்கிறார். அதனால்தான் யார் சொத்தையோ யாரோ விற்கிறார்கள். நீங்களே மவுண்ட் ரோடு எல்.ஐ.சி கட்டிடத்தை விற்கிறேன் என்று பத்திரம் எழுதிக் கொண்டுபோனால் கூட பதிவு செய்யும் சாத்தியம் உள்ளது! அதனால் விற்பவர் உரிமை பெற்றவர்தானா என்று சரிபார்த்தல் வாங்குபவர் கடனே!

சொத்து பற்றிய விஷயங்களில் அவசரப்படாதீர்கள். நிதானமாக அணுகுங்கள். விற்பவர் என்னதான் அவசப் படுத்தினாலும் சில அடிப்படை விஷ்யங்களில் காம்ப்ரொமைஸ் கூடாது. சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள். கடன் கொடுக்கும் நிறுவனங்கள் எல்லா ஆணவங்களையும் சரிபார்ப்பார்கள் என்றாலும் சுவாந்தார் நீங்கள், முதல் பொறுப்பு உங்களுக்குத்தான் என்பதை மறந்து விடாதீர்கள். கடன் பத்திரங்களில் பொடி எழுத்துக்களில் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் ஒருதலைப் பட்சமான வாசகங்களைப் படித்தால் தலையைச் சுற்றும்!

நீங்கள் சொத்து வாங்கும் அல்லது விற்கும் இடத்தின் guidance value அறிய வேண்டுமா? தமிழக அரசு இதனை இணையத்தில் கொடுக்கிறது இந்தச் சுட்டியில்.

இப்போது வில்லங்க சான்றிதழையும் இணையம் மூலம் பெற தமிழக அரசின் பதிவுத்துறையினர் வழி செய்திருக்கிறார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சட்டப்படி நிலம் அரசுக்குத் தான் சொந்தம். The absolute owner of land is the state. ஆம், எல்லா நிலமும் அரசுக்குச் சொந்தமானதுதான். உங்கள் உரிமை ஆண்டு அனுபவிக்கும் freehold உரிமை அளவில்தான்! அதனால்தான் பொது உபயோகத்திற்காக (ரோடு போட, ரயில் விட) நிலத்தை ஆர்ஜிதம் செய்வது அரசின் ஏகபோக உரிமை. மார்க்கட் மதிப்பில் பணம் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆனால் வழிவிடமாட்டென் என்று சொல்ல முடியாது. இது எல்லா நாட்டிற்கும், எல்லா காலகட்டத்திற்கும் பொதுவானது.

முன்பு ராஜாக்கள் ஆண்ட காலத்தில் பல கோயில்களுக்கும், மதம் சார்ந்த நிருவனங்களுக்கும் நிறைய நிலங்களையும், ஏன், பல கிராமங்களையுமே மானியமாக எழுதி வைத்தார்கள். நாகூர் தர்காவுக்குக் கூட இந்து அரசர் ஒருவர்தான் எராளமான சொத்துகளை அளித்திருக்கிறார். அது தவிர “கௌல்” பட்டாக்களையும், ஜமீந்தார், பாளையக்காரர் போன்ற குறுநில மன்னர்களையும் தன் ஊர்க்காரர்களுக்கு அளித்தனர். நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆண்டபோது ஆந்திராவிலிருந்து நாயுடுக்களையும், ரெட்டியார்களையும், ராஜுக்களையும் இங்கு குடியேற்றி, அவர்களை ஜமீந்தார்களாகவும், பாளயக்காரர்களாகவும், பெரிய மிட்டா மிராசுகளாகவும் ஆக்கிவிட்டுப் போயினர். கட்ட பொம்மன் (பொம்மு) முதல் கோபலசாமி நாயுடு வரையில் எல்லாருமே இது போன்றவர்கள்தான்!

4 Comments


  1. அருமையான பதிவு. மிகவும் உபயோகமக இருந்தது! தொடர்ந்து எழுதுங்கள்!
    நிறைய பேர் இப்போது அயல் நாடுகிளில் இருந்து வாங்குவதால் இது போன்ற விஷயங்கள் மிகவும் பயனுள்ளவை!!!


  2. பயனுள்ள பதிவு எஸ்.கே. ஸார். நன்றி!

    கனடாவில் வசிக்கும் குடும்ப நண்பர் ஒருவர் திருச்சியில் நிலம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்த பதிவை அவருக்கு அனுப்பியிருக்கிறேன்.


  3. # Dear Sir

    Very useful post. Due to lack of information and the continuing fear, many NRIs could not invest in India without any fear. I could not resist envying America on this issue.

    Thanks
    S.Thirumalai


  4. உபயோகமுள்ள நல்ல பதிவு. நிறைய தகவல்களை சொல்லியிருந்தீர்கள்.
    நிலம்/வீடு வாங்கும்போது, அது அரசாங்கதின் திட்டங்களில் ஆளுகை செய்யப்பட உள்ளதா என்று தெரிந்துகொள்வது நல்லது. (உதாரணதிற்கு, வாங்கும் நிலம் சாலை விரிவாக்கதில் வருகிறதா)

    பயனுள்ள இம்மாதிரியான பதிவுகளை வரவேற்கிறோம்

Comments are closed.