பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2005

திண்ணை.காம்

பொது :: 2 மறுமொழிகள் »

கணிதமேதை வீட்டுத் திண்ணைஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1064 முறை) ::

இயற்கை விருந்து

பொது :: 13 மறுமொழிகள் »

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்!

பச்சைப் பசேல்

வண்டாடும் சோலை

வைக்கோல் போர்

ஒளி முழுதும் உனக்கே சொந்தமோ?

:: (பார்வை 954 முறை) ::

இயற்கை எழில்

பொது :: 2 மறுமொழிகள் »

சென்ற திங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றேன். வழியிலும், அவ்வூரிலும் நான் கண்ட காட்சிகள் சில.
சுட்டி விட்டால் விரியும் சமர்த்துப் படங்களவை!

கிராம ரம்மியம்

மன்னிக்கவும்!

மீதமுள்ளதை நாளை இடுகிறேன்.

:: (பார்வை 872 முறை) ::

இன்றும் நாளையும்

என்ன நடக்குது இங்கே :: 4 மறுமொழிகள் »

ப்ளாக்கர்.காம் அளிக்கும் இலவச செவையின் உதவியாலும், முகுந்த் அவர்களின் "எ-கலப்பை" மென்பொருள் மற்றும் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு ஆகியவற்றின் உபயத்தாலும், நம் தோழர்கள் வலைப்பதிவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காசியின் உதவியால் அவையெல்லாம் தமிழ்மணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. ப்ளாக்ஸ்பாட்டில் உள்ளிட்டவுடன், எவ்வித நிபுணத்துவத்தின் தேவையுமில்லாமல் ஒருங்குறித் தமிழ் எழுத்துருவில் வலைப்பதிவாளர்களின் ஆக்கங்கள் "பட்டனைத் தட்டிவிட்டால் தட்டிலே ரெண்டு இட்டிலி விழுவது போல்" தெரிவதால், தமிழ் வலைப்பதிவுகள் நிறைய முளைக்க ஆரம்பித்து விட்டன. என்ணிக்கை கூடுமளவுக்கு தரம் கூடியிருக்கிறதா என்னும் ஆராய்ச்சியை நுகர்வோர் கண்ணோட்டத்திற்கே விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். சுரேஷ் கண்ணன் கூறியிருப்பதுபோல் சிலர் இந்த சேவையை தம் outlet-ஆகவும், வேறு சிலர் toilet-ஆகவும் பாவித்து வருகிறார்கள என்பது சிந்தனை செய்ய வேண்டிய கருத்து! மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 993 முறை) ::

எக்ஸ் திரை

கணினி :: 2 மறுமொழிகள் »

வந்தே விட்டது!

xxxஆமாம். இனிமேல் "பலான" சமாசாரங்கள் - "சரோஜாதேவி கதைகள்" தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை - "XXX" மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.

இந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே நண்பர்களே, "ஆண் குறி" போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்!

:: (பார்வை 1135 முறை) ::

*நன்றி*

பொது :: 3 மறுமொழிகள் »

இந்த வாரக் கடைசிப் பதிவை நேற்றே இட்டுவிடலாமென்றால், நான் இருந்ததோ திருச்சி அருகில் ஒரு ஊரில். அங்கிருந்த ஒரு உலாவும் மையத்தினுள் சென்றால், பழைய கற்காலத்தின் 98-ஐ பாவிக்கும் ஒரு கணினி, முக்கி முனகித் திறந்தது. தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யலாமென்றால், எ-கலப்பையை இறக்க முடியவில்லை. மேலும் "கண்ட்ரோல் பேனல்" என்கிற கர்ப்பக் கிரஹத்தினுள் நுழைய அனுமதியில்லை. நிர்வாகியைக் கேட்டால் கடவுச் சாவி என்னிடம் இல்லையென்கிறார். சரி, உலாவியின் எழுத்துறுக் குறியீடுகளை மாற்றிப் பார்த்தால், அதுவரை தமிழ்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த எழுத்துக்கள், எங்கள் ஊரில் தயிர், மோர், பால், காய்கறிகள் ("பொய்யூர்" கத்தரிக்காய் வியாபாரி உட்பட) கணக்குக்காக சுவற்றில் காட்டாமணி இலையைக் கசக்கிக் கிழிக்கும் கோடுகள்போல் தெரிய ஆரம்பித்தன. என் செந்தமிழ்நாட்டில் தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லையே என்ற வருத்தத்துடன், அருகேயிருந்த உணவு விடுதிக்குள் சென்று அவர்கள் படைத்த சூடான இட்லிகளின் மேல் என்கோபத்தைச் செலுத்தினேன்.

இப்போது வீடுவந்து சேர்ந்துள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று மணிநேரம் என் நட்சந்திர அந்தஸ்து மிளிரும். அதற்குள் நன்றிகளை நவின்றிடலாமென்று அடிக்கிறேன் அவசரமாக!

என்னை சென்ற வார நட்சத்திரப் பதிவாளனாக அங்கீகரித்த காசி அவர்களுக்கும் மதி அவர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள். மேலும் என் பதிவுகளை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும், தம் பதிவுகளில் இவற்றைப் பற்றி எழுதியவர்களுக்கும், வேறு வகைகளில் ஊக்கமளித்தவர்களுக்கும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் "பாரா"ட்டியவர்களுக்கும், இனிமேலும் தொடர்ந்து என் பதிவுகளைப் படிக்கப் போகிறவர்களுக்கும், மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றிகள் சென்றடையட்டும்.

என் பெட்டிக்கடையை இன்னும் செம்மைப் படுத்தி விரிவாக்க, இவ்வித அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளிக்கும் என்று கூறி, அடுத்த பதிவைப் பற்றி யோசிக்கச் செல்கிறேன்.

பெர்னார்ட் ஷா தன்னைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது: (நேரடியான தமிழாக்கமல்ல):

"சிலர் என்னை விரும்பலாம். பலர் என்னை வெறுக்கலாம். ஆனால் யாரும் என்னை ஒதுக்கித் தள்ள மாட்டீர்கள்"

:: (பார்வை 804 முறை) ::

யார் எதிரி?

பொது :: 2 மறுமொழிகள் »

அவர் பெயர் லக்ஷ்மிபதி.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியாயிற்று. யார் பணம் கட்டுவார்கள்? அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா? என்னென்னவோ சின்னச் சின்ன வேலைகளை சிறுமை பார்க்காமல் செய்து பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒன்றும் ஒத்துவரவில்லை. யாரோ பட்டணத்துக்கு அழைத்து வந்தார்கள். வ்யதான ஒருவருக்கு காலையில் தமிழ் தினசரியை உரக்கப் படிக்க வேண்டும். பின் டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப் ஆகிய இடங்களில் பந்து பொறுக்கிப் போட வேண்டும். நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கால் வயிறு அரைவயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. மெட்ராஸ் சரிப்பட்டு வரவில்லை. திரும்பவும் கிராம வாசம். பாடசாலையில் சேர்த்துவிட்டனர் யாரோ. அங்கும் பாதிப் படிப்பில் விட்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். என்ன தொழில்? புரோகிதம்தான். அதற்கு மரியாதையாக "உபாத்யாயம்" என்று அழைப்பார்கள். அதாவது அவர்கள் "வாத்யார்" என்கிற ஸ்தானத்தில் இருப்பார்கள் "எனக்கு தட்சிணை கொடுத்தால் உனக்குப் புண்ணியம்" என்று கூறி எஜமானரிடமிருந்து செய்த வேலைக்கு கூலி பெறவேண்டும். இந்தக் காலம்போலில்லை. ஒரு அமாவாசை தர்ப்பணத்துக்கு நாலணா தட்சிணை என்று பேசி அதையும் கடன் சொல்லிவிடுவார்கள். பிராமண சமுதாயத்துக்குள்ளும் மரியாதை கிடையாது. "முஷ்டி வாங்கி" என்ற பட்டம் வேறே. இதைத் தவிர பெரிய வாத்யார்கள் இவரை வளரவிடவில்லை. "அவனுக்கு என்ன தெரியும்? பிரயோகம் முழுக்கப் படிக்காதவன்" என்ற துர்விமரிசனம்.

பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒருநாள் விட்டுத் தொலைத்தார் அந்தத் தொழிலை. நாலுபேரிடம் கடன் வாங்கி ஒரு சின்ன கூலி அறவை மில் தொடங்கினார். பனஞ்சப்பைக்கு பதில் தென்னஞ்சப்பை போட்டு சிக்கனமாக கட்டினார். மில் வேலைசெய்யத்தொடங்கியது. கலத்துக்கு அரை ரூபாய் கூலி. காசு சேர ஆரம்பித்தது. திருமணமாயிற்று. ஒரு பெண் பிறந்தாள். ஒரு அல்லர் இருந்த இடத்தில் மாவு, மிளகாய் என்று மூன்று அல்லர் சேர்ந்தது. பென்ணின் பெயரை மில்லுக்கு சூட்டி அழகு பார்த்தார்.

மேலும் காசு சேர்ந்தது. சேர்ந்தது காசு மட்டும் அல்ல. பழைய உறவுகளும். லக்ஷ்மிபதிக்கு அடுத்து மூன்று தங்கைகள். அவருடைய சம்பாத்தியத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வந்து சேர்ந்தனர். பழைய மானியத்தில் கிடைத்த ஒண்ணரை வேலி பங்கு சாகுபடி செய்ய ஆரம்பித்தார். (நூறு குழி = ஒரு மா. இருபது மா = ஒரு வேலி. ஒரு வேலி = சுமார் ஆறேகால் ஏக்கர்.)

பத்தாயத்தின் ரொம்பிய நெல். வெள்ளைச் சம்பா, சிகப்புச் சம்பா பின் ஆடுதுறை-27, பயறு, உளுந்து இப்படிப் பெருகியது. வருவோர் போவோர், விருந்தாடி என்று தினத்துக்கும் கல்யாணச் சிலவுதான். ஆனால் லக்ஷ்மிபதிக்கோ, அவருடைய மனைவி, குழந்தைகளுக்கோ வேண்டியதைச் செய்ய ஒருவரும் கிடையாது. உரிமைகள் கைமாறின. இவரும் நம் தாயார் மற்றும் உடன்பிறந்தோருக்குச் செய்வது தன் கடமை என்று தியாகியாக மாறினார். குழந்தைகள் பெருகின. அவருடைய குடும்பத் தேவைகள் பெருகப்பெருக, உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதிகள் குறையுமோ என்ற கவலை தோன்றியது தாயாருக்கு. எப்போதும் அப்பளக் கச்சேரி, முறுக்குக் கச்சேரி, சீடைக் கச்சேரி என்று கூடம், தாழ்வாரம், முற்றம், தொட்டி முற்றம், காம்பிரா உள், ரேழி என்று கிடைக்கும் இடமெல்லாம் வேஷ்டியைப் பரப்பி டின் டின்னாக நிரப்பி உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதியாகும். ஆனால் லக்ஷ்மிபதிக்கொ, அவருடைய குழந்தைகளுக்கோ கண்ணில்கூட காணக்கிடைக்காது. சம்பாதிப்பதுதான் அவர் உரிமை. அனுபவிப்பது இல்லை.

தாயார் லக்ஷ்மிபதியின் குழந்தைகளை வெறுக்க ஆரம்பித்தாள். இவை மட்டும் பிறக்கவில்லையென்றால் தன் இஷ்டப்படி சிலவு செய்யலாமே.ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவன் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது. அவளுடைய வெறுப்பு பல வழிகளில் வெளிப்பட ஆரம்பித்தது. குழந்தைகளுக்கு வாழ்க்கை நரகம்தான்.

இதற்கிடையில் மில் அமைந்திருக்கும் மனைக்கட்டின் மேல் ஒரு வழக்கு. மானிய நிலத்தின்மேல் சக்திவாய்ந்த ஒரு அமைப்பு செய்த ஆக்கிரமிப்பு. அதனால் தொடங்கிய வழக்குகள். அடிக்கடி ஈரங்கி, வாய்தா, நம்பர் கட்டு, வக்கீல், வக்கீல் குமாஸ்தா - அவர் வாழ்க்கைத்தடமே தாறுமாறானது. யாராவது அவரை எதிர்த்து ஏதாவது கேஸ் போட்டவண்ணம் இருந்தார்கள்.

தாயும், உடன்பிறப்புக்களுமே இரத்தம் உறிஞ்சும் அட்டைகளாயின. மனைவியோ விழித்திருக்கும் நேரமெல்லாம் மாமியாரிடம் மொத்து பெற்றுச் சலித்துப் போய் பிறந்த வீட்டை நினைத்தே ஏக்கம் கொள்ள ஆரம்பித்தாள். போனால் திரும்பிவர மனம் வராது. குழந்தைகள் கதி?

இதற்கிடையே மில்லைக் காலி செய்ய நோட்டிஸ். மீண்டும் கோர்ட். கேஸ். பிராது. பொறாமை.

இத்தனைக்கும் இடையில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்தார். அவருடைய ஜாதியிலேயெ ஒருவர் பெட்டிஷன் போட்டார் - லக்ஷ்மிபதியின் பெண் சட்டப்படியான ("சார்தா" சட்டம்) வயது வருவதற்கு முன்னால் திருமணம் நடந்தது என்று.

இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. ஒரு பையன். அவன் தான் இவருடைய நனவாகாத கனவுகளையெல்லாம் பூர்த்திசெய்யப் போகிறான் என்று ஆசையாக இருந்தார். அதுவும் பொய்த்துப் போனது. அவன் ஒரு சோம்பேறியாக, மிகச் சாதாரணமாக இருந்தான். அன்றாட வாழ்வே பிரச்னையாய், ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்க நேர்ந்தாலும் லக்ஷ்மிபதி ஒரு சிந்தனாவாதி. ராஜாஜியின் மார்க்க அரேலியஸ் சிந்தனைகளை வாசிப்பார். தினமணியை ஒரு வரி விடாமல் படிப்பார். பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தார். இசையிலும் ஈடுபாடு உண்டு. படிப்பு அவ்வளவு இல்லையென்றாலும் உலக அறிவு உண்டு. அவருக்கு "கண் பார்த்தால், கை செய்யும்". ஆனால் அவர் மகன் அவ்வளவு சூட்டிகையில்லை. கொஞ்சம் மொத்து. இந்த விஷயத்தில் அவருக்கு பெரிய ஏமாற்றம்.

அவருக்கு அப்போது வயது அறுபது. தன் மக்களுக்கும் சுற்றத்தவருக்கும் அவர் எவ்வளவோ செய்திருந்தும், அவருடைய அறுபது வயது பூர்த்தியானதைக் கொண்டாட யாருக்கும் தோன்றவில்லை. இதற்கிடையில் நீரிழிவு வேறு உறவு கொண்டாடத் தொடங்கியது. இரத்ததில் யூரியா சேர்ந்துவிட்டது. கண்கள் மங்க ஆரம்பித்தன.

லக்ஷ்மிபதி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒருமுறை தீர்க்கமாக நோக்கினார்.

"ரெமாஜென்னின் பாலம்" (The Bidge at Remagen) என்று ஒரு திரைப்படம். இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றியது. ஒரு முக்கியமான பாலத்தைத் தகர்க்க மேஜருக்கு உத்தரவு. வெடியை இயக்கப் போகும் தருவாயில் சில பள்ளிக் குழந்தைகள் பாலத்தின்மேல் நடக்கத் தொடங்கியதைக் கண்டார் அந்த மேஜர். அவர்கள் பத்திரமாகக் கடக்கும்வரை சில நிமிஷங்கள் தாமதம் செய்தார். அதற்குள் எதிரிப் படைகள் பெரும் எண்ணிக்கையில் வந்து பாலத்தைக் கைப்பற்றிவிட்டன. அந்த மேஜரின் படைக்கு பெரும் தோல்வி. உத்தரவுப்படி ஏன் பாலத்தைத் தகர்க்கவில்லை என்று கேள்வி கேட்டு மிலிடரி "கோர்ட் மார்ஷ"லில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் ஒரு மரப்பலகைமுன் நிற்கிறார். அவரை நோக்கி சுமார் பத்து துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன். "சுடு" என்ற ஆணை கேட்டவுடன் அந்தத் துப்பாக்கிகள் இயங்க, அந்த மேஜரின் உடல் சல்லடைக் கண்ணாகி உயிரற்று விழும். மேஜரை அழைத்துச் சென்று அந்த பலிபீடத்தில் நிறுத்தியவர் அவர்கீழ் பணியாற்றிய அதிகாரி. "இறப்பதற்கு முன் கடைசியாக ஒரு இழுப்பு இழுக்கட்டுமே" என்று மேஜர் வழக்கமாக பாவிக்கும் சிகரெட்டைப் பற்றவைத்து அவருடைய குழாயையும் பொருத்தி வாயில் இடுகிறார். அப்போது தலைக்கு மேலே சில போர் விமானங்கள் பறக்கின்றன. அந்த உதவி அதிகாரி மேஜரைப் பார்த்து, "எதிரி விமானங்கள்" என்றார். மேஜர் சிரித்துக் கொண்டே, "நான் இந்தக் கணத்தில் இருக்கும் நிலையில் என் எதிரி யார்?" என்று வினவுகிறார்!

நீங்களே சொல்லுங்கள், லக்ஷ்மிபதியின் எதிரி யார்?

:: (பார்வை 779 முறை) ::

உங்களைப் பாக்கவே முடியலை!

பொது :: Comments Off

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம். ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பற்றியும் எதிர்வரும் இதழ்களில் எழுதுகிறேன்.

ஒருநாள் எனக்கு யார் கண்ணிலும் படாமல் திருச்சியிலிருந்து இரவு இரயிலில் சென்னை செல்லவேண்டி நேர்ந்தது. சாதாரண பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்படாத (unreserved) பொதுப் பெட்டியில் ஏறி சாமான்களுக்கான பலகையில் ஏறிப் படுத்தேன். சளசளவென்று கூட்டம், இறைச்சல். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். பரிசோதகர் வந்தால் கையை மட்டும் நீட்டி டிக்கட்டை காண்பித்தால் போகிறது என்றெண்ணி மூக்கை விடுத்து முகத்தையும் மூடிக்கொண்டேன்.

மணி இரவு பதினொன்றைத் தாண்டியவுடன், இடத்துக்குச் சண்டை போட்டவர்கள் கூட ஒருவர்மேல் ஒருவர் முட்டிக் கொண்டும், இடித்துக் கொண்டும் ஆளாளுக்கு கோழித்தூக்கத்தில் ஆட ஆரம்பித்தார்கள். நானும் சற்றுக் கண்ணயரலாமென்றால் காத்தாடி சுற்றவில்லை. இது போன்ற சூழ்நிலையில் எல்லோரும் பயன்படுத்தும் ஆயுதமான "கட் பாக்கெட்" சீப்பை எடுத்து ஃபேன் பிளேடுகளைத் தட்டி உசுப்பிவிட்டபின் ஒரு வழியாக ஏகப்பட்ட சிணுங்களுடன் சுழல ஆரம்பித்தது. சரி, கொஞ்சம் கண்ணை மூடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்றது. யாரோ ஏறினார்கள். இரண்டு மூன்று பேரிருக்கும். ஏறும்போதே சத்தம் போட்டுப் பேசிக்கொண்டே உள்ளே வந்தார்கள். ஏற்கனவே கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஓரிருவர் புதிதாக நுழைந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் போல. ஒருவர் ஒரே சந்தோஷத்துடன் "வாங்க வாங்க, பாத்து எவ்வளவு நாளாச்சு. மறுபடி உங்களைப் பார்க்கவே முடியாம போயிடுமோன்னு நெனைச்சேன். இப்ப திடீர்ன்னு பார்த்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு" என்று சத்தம் போட்டு முகமன் கூறியபிறகு பல விஷயங்களைப் பற்றிப் பேசத்தொடங்கினர். பெரும்பாலும் அரசுத் துறைகள் சிலவற்றில் உள்ள குறைபாடுகளைப் பற்றியே பேச்சு சுற்றிச்சுற்றி வந்தது. "நமக்கு வரவேண்டிய போஸ்டெல்லாம் வேற கேடகரீக்கு போகுதே, இதை நம்ப விடக்கூடாதுங்க" என்றும் இன்னும் சில செயல்பாடுகளைப் பற்றிய அவர்களின் புகார்கள், குறைகள் போன்றவற்றைப் பற்றிப் பேச்சு, பேச்சு, ஓயாத பேச்சு. சிறிது நேரத்தில் வண்டியின் "க்ளிக்கட்டீ கிளிக்"குடன் இந்த இரைச்சலும் சேர்ந்துகொள்ளவே, இதற்கு காது பழக்கமாகி, லேசாக தூக்கம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் பேசும் சத்தம் ஏற்ற இறக்கமாக இருந்தபடியால், அடிக்கடி விழிப்பு வந்தவண்ணம் இருந்தது.

"மெட்ராஸிலே எங்க தங்கப் போறீங்க, மாரிமுத்து கூடவா?"

"மறுபடி எப்போ பாக்கலாம்?"

சரி, இதுக்குமேல் தாக்குப் பிடிக்கமுடியாது. இறங்கிப் போய் அவர்களை ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான். "ஏன் இப்படி இறைஞ்சு கத்தறீங்க. மெதுவாகப் பேசக்கூடாதா" என்று சூடாகக் கேட்டுவிடவேண்டியதுதான் என்று கருவிக்கொண்டு கோபத்துடன் இறங்கி, யாரையும் மித்தித்துவிடாதபடி கவனமாகத் தாண்டி, கதவுப் பக்கம் வந்தேன்.

அப்படியே உறைந்து நின்றேன்.
நான் செய்ய நினைத்த செயலை என்ணி வெட்கப்பட்டு நின்றேன்.

அவர்கள் எல்லோரும் கண் பார்வை இல்லாதவர்கள்!

:: (பார்வை 825 முறை) ::

இரயில் சிநேகம்-2

பொது :: 2 மறுமொழிகள் »

பயணங்களில் பிரபலங்கள் அனைவருமே மனம் திறந்து பேச மாட்டார்கள். சிலர் மிகவும் "ரிசர்வ்டாக" இருப்பார்கள். ஆனால் சகஜமாக உரையாடும் எல்லோரிடமும் நான் ஒரு பத்திரிக்கையாளனைப் போல் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவது வழக்கம். அவர்களும் சளைக்காமல் பதில் சொல்வார்கள். ஆனால் நான் நச்சரிப்பதில்லை. எனக்கென்ன, பொழுது போக வேண்டும். ஏதோ நாட்டு நடப்பு தெரிந்துகொண்டது போலும் அமையவேண்டும், அவ்வளவுதானே!

அதுபோல் என்னுடன் திறந்த மனத்துடன் உரையாடிய இன்னொருவர் திரு. ப. நெடுமாறன் அவர்கள். அவருடன் நெடுநேரம் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அப்போதுதான் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சோர்வில் இருந்தார். அதற்கு முன்னால் இந்திரா காந்தியை ஒரு தாக்குதலிலிருந்து காப்பாற்றியதால் "மாவீரன்" என்ற பட்டப்பெயர் பெற்றிருந்தார். அவர் பேசியது கொஞ்சம், ஆனால் படித்துக் கொண்டிருந்தது நிறைய. கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருந்துகொண்டேயிருந்தது. மதுரையின் சரித்திரத்தைப் பற்றி நிறைய விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டில் பெரிய வல்லமை பெர்ற அரசுகளாகத் திகழ்ந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் ஏன் வீழ்ச்சியடைந்தன, பிற்காலத்தில் நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாபுகள், மற்றும் குறுநில மன்னர்கள் கூறு போட்டு ஆளக்கூடிய நிலை ஏன் ஏற்பட்டது, ஏன் தமிழ் மன்னர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டுக்கொண்டே காலம் கழித்தனர் - இப்படியெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்தேன். எல்லாவற்றிற்கும் பொறுமையுடனும், புன்சிரிப்புடனும் பதில் அளித்தார். நம்மிடையே ஒற்றுமையின்மை, போர்முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வெளிநாடுகளுடன் தொடங்கிய வணிக பாதிப்புகள், பேராசைகள், துரோகங்கள் போன்ற பலவற்றைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். என் கருத்து அவருக்கு உடன்பாடில்லையென்றால் சிரித்துக் கொண்டே மறுத்துவிடுவார். அதனால் உரையாடல் நெருடலில்லாமல் தொடர முடிந்தது.
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1031 முறை) ::

ஒரு அறிவித்தல்

பொது :: 2 மறுமொழிகள் »

என் வலைப்பூ பற்றிய ஒரு அவசர அறிவித்தல்

வயாக்ரா, பயாக்ரா என்று கொள்ளை கொள்ளையாக வேண்டாத எரிதங்களால் என் பின்னூட்டப் பெட்டிகள் நிரம்பி, என் பேண்ட்விட்தையும் காலியாக்கிய நிலையை மாற்றவேண்டி பலதரப்பட ஸ்பாம் எதிர்ப்பு நிரல்களைப் பாவித்தேன். அவை குதிரைப்படை, யானைப் படை, காலாட்படை சகிதம் வந்து எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டன. அதன் விளைவாக நல்ல பின்னூட்டங்களும் தடைபட்டுப் போயின. என் பதிவுகளுக்கு விழும் எதிர்வினைகளே மிகக்குறைவு. அவற்றையும் இந்த "ஸ்பாம் கர்மா"க்கள் அழித்து விட்டால் காற்றுவாங்க வேண்டியதுதான். அது தவிர, கருத்துகளைப் பதிவு செய்தவர்களும் என்னைத் தவறாக எண்ணியிருப்பார்கள். அதனால் உடனே என் தளத்தின் கொல்லைப்புரம் (back end) சென்று எட்டிப் பார்த்தேன். அங்கு "பத்து பின்வினைகளை நான் விழுங்கி விட்டேன்" என்று அந்த எரித எதிர்ப்பு நிரல் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. "அடடா, இன்னும் எவ்வளவு போயிருக்குமோ தெரியவில்லையே. இந்த மாமியார்கள் மட்டும் இல்லாமலிருந்தால் டோண்டுவை மிஞ்சியிருக்கலாமே" என்ற கவலையுடன், கிடைத்த பத்தை காப்பியெடுத்து பதிவு செய்துள்ளேன்.

ஆனால் இந்த எரிதங்களும் ஒருவகை நல்ல கைங்கர்யங்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. "நம்மை யாரும் கண்டுகொள்வதில்லை" என்று எப்போதாவது தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த எரிதங்களை வாசியுங்கள். உங்கள் மேல்தான் அவர்களுக்கு எத்தனை அக்கறை! "மனம் தளராதீர்கள். இளஞ்சிட்டுக்களுக்கும் நீங்கள் பூர்ண திருப்தி அளிக்கலாம்", "உங்கள் மனைவி உங்களின் புதிய பரிமாணத்தை அறியப் போகிறார்கள்", "இன்றோடு உங்கள் கடன் தொல்லை காலி' - போன்ற தெம்பூட்டும் அறிவிப்புகளை அளிக்க யாரால் முடியும்? உங்கள் அண்ணன் தம்பிகளால் அளிக்க முடியுமா? ஆகையால் "ஸ்பாம்"கள் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதில் பெரும் தொண்டு புரிகின்றன என்ற கருத்துடன் எல்லா படைகளையும் வேலையைவிட்டு நீக்கி விட்டேன்.

ஆகையால் கருத்துக் காடவராயர்களே, வாருங்கள், வாருங்கள்!கொட்டுங்கள் உங்கள் திட்டுக்களை! :)

( இரயில் சினேகம் -2 வரும். காத்திருங்கள்!)

:: (பார்வை 941 முறை) ::

 

5-ல் இது-2«12345»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in