மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் கூட நாளது தேதியில் மற்றொரு மண்ணுளிப் பாம்பு திட்டத்தில் தன் கைக்காசை இழக்க மக்கள் தயாராகத்தான் இருப்பார்கள். பிறகு டிவி கேமரா முன் தோன்றி “அரசு என்ன செய்கிறது” என்று கேள்வி கேட்பார்கள்!
இதே மனப்பாங்கைத்தான் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டிலும் நம் ஜனங்கள் கடைப் பிடிக்க எத்தனிக்கிறார்கள். எவ்வளவு முறை எச்சரித்தாலும் ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்கும் intra-day trading முறைதான் பலருக்கு பிடித்தமாக இருக்கிறது. ஒரே வாரத்தில் உங்கள் பணம் இரெண்டு மடங்கு பெருகும் என்று யாராவது கூறினால் உடனே அதை நம்பத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பங்கு வர்த்தகம் என்பது நீண்டகால அடிப்படையில் பொறுமையுடன் கையாள வேண்டிய முதலீடு என்னும் உண்மை யாருக்கும் அவ்வளவாக ஒப்புதல் இல்லை! பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவுடனும், கட்டுப்பாட்டுடனும் முதலீடு செய்து, நீண்டநாள் காத்திருந்தால்தான் நீங்கள் சொத்து சேர்க்கலாம். இந்த creation of wealth என்னும் கோட்பாட்டை கடைப்பிடிக்கும் பலர் நிச்சயம் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். பங்குச் சந்தை ஒரு முதலீட்டு முறையாக மட்டும் அணுகுபவர்களுக்கு அது சிறந்த, நேர்மையான, லாபம் கொடுக்கும் தொழில். ஆனால் அதையே சூதாட்டமாகவும் கையாளுபவர்கள் பலர். லாபம் கிடைத்தல் கொள்ளையாகவும், அடுத்த நாள் கைக்காசும் போய் நடுத்தெருவில் நிற்கும் நிலையும் ஏற்படும். Intra-Day Trading செய்து காசு பார்த்தவர்களே கிடையாது என்று பல நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். என்றாலும் அதுதான் பங்கு வர்த்தகம் என்று மெஜாரிடி பேர்கள் நம்புகிறார்கள்! பேராசை இல்லையெனில் பீதி – இந்த சுழற்சியில் சிக்கி நஷ்டம் அடைபவர்கள்தான் பெரும்பான்மையினர்!
“வர்த்தக உலகம்” நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் பலர் கீழ்க்கண்ட உப்புமா பங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு “அவற்றை விற்கலாமா, வைத்துக்கொள்ளலாமா, விலை ஏறுமா” என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்:
- Suzlon enegy
- IVRCL
- GMR Infra
- JP Associates
எவ்வளவு முறை உஷார் படுத்தினாலும் ஏன்தான் இத்தகைய பங்குகளையே வாங்குகிறார்களோ தெரியவில்லை! டிவி நிகழ்ச்சியில் ஒருவர் ஒரு கதை சொன்னார். காய்கறிக் கடையில் ஒரு பெரியவர் கத்தரிக்காய் வங்க வந்தார். கடைக்காரரின் மகன் பொறுக்கிக் கொடுக்க எத்தனித்தான். அவனைத் தடுத்த கடைக்காரர், “ஐயாவே நல்ல காயாகப் பொறுக்குவார்ரா. நீ ஒண்ணும் ஹெல்ப் பண்ண வேண்டாம்” என்றார். பிறகு அந்த வாடிக்கையாளர் சென்றவுடன் பையனுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறார் – “பாத்தியா, அவர் எப்படி முத்தல் கத்தரிக்காயா பாத்து பொறுக்கி எடுத்துகிட்டு போறார்னு!” இப்படித்தான் இருக்கிறது நம் மக்கள் பங்கு பொறுக்குவதும்!
அந்த டிவி நிகழ்ச்சியில் அநேகமாக தினமும் கேள்வி கேட்கும் வாடிக்கையை வைத்துக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தன் குரலை தானே கேட்டு ஆனந்திப்பவர்கள்! குறிப்பிட்ட கருத்தோ, கேள்வியோ ஏதும் இல்லாமல் பெரிய மேதாவி போல் எதோ சொல்வார்கள். தனக்கும் பங்கு மார்க்கெட் பற்றிய அறிவு உள்ளது என்பதை பறைசாற்றுவதாகத்தான் அந்த பங்கெடுப்புக்கள் இருக்கும். இப்படியும் சிலர்.
இன்னும் சிலர், அடிக்கடி விளித்து Tata Motors, SBI, MRF, L&T, ITC, Page Industries போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளை தான் கைவசம் வைத்திருப்பதை அறிவித்துவிட்டு, சும்மா ஒப்புக்கு கேள்வி கேட்பதுபோல் ‘மேற்கொண்டு என்ன செய்யலாம்’ என்று கேட்டு ஏனையோரை வெறுப்பேற்றுவார்கள்!
—-
“Investors making purchases in an overheated market need to recognize that it may often take an extended period for the value of even an outstanding company to catch up with the price they paid.”
– Warren Buffett
Permalink
மிகச் சரியான பார்வை. டே ட்ரேடிங் செய்து பணம் சம்பாதித்தவர் ஒருவராவது காட்ட முடியுமா என்று பலரும் காட்டுக் கத்தலாய் கத்தியும் அதிலேயே போய் ஏன் விழுகிறார்களோ!
அதுவும் இப்போது தமிழ் மணத்தில் தினமும் எழுதித் தள்ளும் புல்ஸ்ட்ரீட் (புல்ஷிட் என்று வைத்திருக்கலாம்) தளத்தில் இந்த முறையில் குறைந்த முதலீட்டில் ஒரு கோடி (ஆமாம்.. கோடி தான்) சம்பாதிப்பது எப்படி என்று கணக்கு காட்டியிருப்பார் பாருங்கள்.. எப்படித்தான் கூசாமல் இப்படி சொல்ல முடிகிறதோ!