இலவசங்களின் மறுபக்கம்

இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு

(நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.)

உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச “டிவி’, காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.

இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.

சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.

மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. “உழைத் தால் தான் உணவு’ என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.

குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு “டிவி’ தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு “டிவி’க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.