ராஜகீயம்!

கதலிவனம்இன்று மனைவிக்கு பிறந்த நாள். மகள் சென்னைஆன்லைன்.காம் மூலமாக அனுப்பியுள்ள மலர்க்கொத்து வந்து சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெலிவரி கிடையாதாம்.

சரி ஏதாவது புதிதாக செய்வோம் என்று தேடியதில், ஒரு இயற்கை உணவகத்திற்கு சென்றாலென்ன என்று தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் எங்கும் நிறைந்திருக்கும் “குடிசை”, “முக்கு” கடைகளில் கிடைக்கும் (“சார், உங்களுக்காக சிறப்பு சலுகை. இரெண்டு வாங்கினால் ஒரு குட்டியூண்டு வெக்கி இலவசம்”) “சப்புச்சரவு” வரட்டி போன்ற பன்ரொட்டிமேல் சீஸால் மெழுகி “பீட்ஸா” என்றழைக்கப்படும் வஸ்து வேட்பாளராக வராமலிருந்தால் சரி என்று நிம்மதியாக இருந்தேன். தவிர “சுத்த சைவ” ஓட்டல்களின் அசுத்தங்களையும், ஐந்து, ஆறு தாரகைகள கொண்ட உணவகங்களில் ஆழுறை நிலையில் (deep freeze) வைக்கப்பட்டு சூடேற்றப்பட்ட உயிரில்லாத “பொஃப்fபே” (வயிற்றுக்கு “பெப்பே”) சாப்பாட்டையும் அனவரதமும் உள்ளே தள்ளிச் சலித்த எனக்கு, இயற்கை உணவு ஒரு மாறுதலாக இருக்குமே என்று தோன்றியது. முன்பெல்லாம் இயற்கை உணவு என்று சொன்னால் எங்கோ படித்த “People who eat natural food will die of natural causes” என்ற வாசகத்தை ஒப்பித்துவிட்டு அந்த தத்துவத்தையே கிண்டல் செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெட்டர் ஹாஃப் “பிட்டர் ஹாஃப்” ஆவதற்கு முன் “சரி”யென்றேன்.

சரி, சுருங்கச் சொல்வதானால் கேரளத்தைச் சேர்ந்த “ச்சோலையில்” நிறுவனத்தாரின் “சஞ்சீவனம்” நடத்தும் “கதலிவனம்” என்னும் முழுமையான இயற்கை உணவு நிலையத்திற்கு புறப்பட்டேன். இதற்காக காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் சாப்பிட்டு பக்குவமான பசியைத் தயார் நிலையில் வைத்திருந்தேன்.

கண்ணுக்குக் குளிர்ச்சியான சூழல். பணிவான உபசரிப்பு. முழு உணவுக்கு “ராஜகீயம்” என்று பெயரிட்டிருக்கிறார்கள். நம் உடலுக்கு எதெது தீங்கு செய்யாதோ, அவற்றையே பயன்படுத்தியுள்ளனர். சில பொருட்களை அறவே தவிர்த்துள்ளனர்.

சரி சாப்பாடு வருது. முதலில் ஒரு சிறிய கப்பில் ஒரு துண்டு நேந்திரம்பழம். இது வயிற்றை பக்குவப் படுத்தவாம். நிச்சயம் அது “படுத்தாது” என்றார்கள்! பிறகு ஏழுவகை சாறுவகைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை அவர்கள் கூறும் வரிசையில் சாப்பிட்டால் நலம் என்கிறார்கள். இரெண்டு பழங்கள், இரெண்டு காய்கள், சிவப்பு அரிசி வடித்த கஞ்சி, மோர் போன்ற திரவம் இப்படி.

பிறகு சமைக்காத, ஆனால் பலவகை பக்குவங்களுக்கு உட்படுத்தப்பட்ட காய்கறிகள் (ஸலாட்) ஐந்து வகை. அதில் வாழைத்தண்டு கூட்டுபோல் ஒன்று இடுகிறார்கள் – ஆகா அமுதம்போல் இருக்கிறது. அது தவிர, முள்ளங்கி, முளைப்பயிறு, வெள்ளரிக்காய், பப்பாளி, பருப்பு, கோஸ் மற்றும் பொடி செய்யப்பட்ட வேர்க்கடலை (ருசியே வேறு மாதிரி இருக்கிறது).

இவற்றைத் தொடர்வது அரை வேக்காட்டில் சமைக்கப்பட்ட காய்கறிகள். அதில் கீரை வகைகள், முருங்கைக்காய் இன்னும் சில. பின் வருவது கறி, கூட்டு, அவியல் தினுசுகள்.

காய்கறிகளை ஆசைதீர உண்டபின் அரிசி எட்டிப் பார்க்கிறது. கேரள ஸ்பெஷல் சிகப்பு அரிசி மற்றும் நல்ல சன்னரக வெளுப்பு அரிசியும் உண்டு. சாம்பாரில் (எதிலுமே) துவரம் பருப்பு கிடையாது. பாசிப் பருப்புதான். மோர்க்குழம்பும், ஜீரக ரசமும் நாக்கில் நீர் ஊரூம் வண்ணம் அத்தனை ருசி!

எதிலும் தாளிப்பு கிடையாது. மிதக்கும் எண்ணை கிடையாது. கோயம்பேட்டில் எது சல்லிசாகக் கிடைக்கிறது என்று பார்த்து, கழிவுகளையும் கணுக்களையும் தேடி வாங்கி வந்து ஏதோ காய் என்று ஒன்று இடம்பெற வேண்டுமே என்று சமைத்துப் போடும் உணவு விடுதிகள் மத்தியில், காய்கறிகளுக்காகவே சாப்பிடத்தூண்டும் இப்படி ஒரு உணவகம்!

கடைசியில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேனுடன் உங்கள் சாப்பாடு பூர்த்தியாகிறது. (இடையில் வந்த ஒன்றிரண்டு பதார்த்தங்களை குறிப்பிட மறந்திருப்பேன்)

ஆகா, உண்மையிலேயே அது ஒரு ராஜ கீதம்தான்!

7 Comments


 1. இது போன்ற ஒரு உணவகம் சென்னையில் இருப்பதைக் கேள்விப்படும் பொழுது ஆச்சிரியமாகவும், மகிழ்வாகவும் உள்ளது. சென்னை வரும்பொழுது அங்கு செல்ல முயற்சிக்கிறேன்.

  இந்த அறிமுக/விமர்சன பதிவிற்கு நன்றி.

  உங்கள் வீட்டம்மையாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ஜேகே


 2. chennaiyil ippadi oru iyartkai unavagam iruppathuk kuritthu arivathi makizchi Unavu vilai athikamo! “Rahulgandi hotel” cheithiai vida ithu bayanullathu!


 3. நன்றி அப்துல்லா.

  “ராஜகீயம்” என்று நான் குறிப்பிட்டுள்ள முழு சாப்பாடு ரூ.75. அது தவிர ரூ.50, 60 விலையிலும் சாப்பாடு கிடைக்கும். தனித்தனியாக சூப்புகள், கலந்த சாதம் போன்றவையும் இருக்கின்றன.

  மேலதிக விவரங்களுக்கு அவர்களது வலைத்தளத்தை அணுகுங்கள்.


 4. படிக்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு. மணிவேறு 12 ஆச்சு:-) சென்னை வந்தால் ஒருமுறை இங்கு போய்ச் சாப்பிடுவேன். தகவலுக்கு நன்றி.


 5. சென்னைக்கு வந்த பின்பு நல்ல சாப்பாடு கொண்டு நாளாச்சு. இந்த இடம் எங்கே இருக்கிறது என்று என் போன்ற புது சென்னைவாசிகளுக்கு சொல்லுங்களேன்…


 6. முத்துகுமார்,

  “சோலையில் சஞ்சீவனம்” இயற்கை உணவகங்கள் கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் உள்ளன:-

  1. முகப்பேர்:

  1st Foor, AMM Towers, Block 1, Thiruvalluvar Road,
  (Opp. Spartan School) Chennai – 600 037.
  Phone : 91-44-2624 3249, 50 & 51, 5571 8418

  2. அடையாறு :

  15, Indira Nagar, 1st Main Road, Chennai – 600 020.
  Phone : 91-44-5571 8423 / 5571 8424

  எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.