அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே “புர்”ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!
அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். “ஆகா, என்னே என் பாக்கியம்!” என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!
ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.
ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.
ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. “தோடா!” – என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.
“சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்.”
அவர் கண்கள் கலங்கி இருந்தன.
நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!
இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!
Permalink
Interesting incident. இது மாதிரி நாலு நல்லவர்களை பற்றி பஞ்சாமிர்தம் மாதிரி newspaper-ல் போட்டால் மற்ற பேருக்கும் மனித அபிமானத்துடன் நடந்துகொள்ள ஒரு தூண்டுகோலாக இருக்கும்.
Permalink
நன்றி, ஸ்ரீகாந்த்.
பஞ்சாமிர்த்தத்தில் எப்படி இடுவது என்று தெரிவித்தால் நலம்.
எஸ்.கே