இணைய தள அமைப்பு பற்றியும், டொமைன் பெயர் பதிவு, தளத் தாழ்வார வாடகை முதலிய ராக்கெட் அறிவியல் விளக்கங்களையும் எழுதப் போகிறேன் என்று முன்பு பயமுறுத்தியிருந்தேன். “எழுதுங்கள் பார்க்கலாம்” என்று காசி அவர்கள் வழிமொழிந்திருந்தார். விலாவாரியாக எழுதலாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உடனடியாக இந்த விஷயத்தில் எழுந்திருக்கும் ஒரு சமீபத்திய மாறுதல் பற்றி முதலில் எழுதிவிட்டு பின்னர் ஆழ உழலாம் என்று எண்ணுகிறேன்.
“டாட் காம்” என்பதுதான் டொமைன்களின் ராஜா போன்றது. இணையத்துக்கே “டாட் காம்” என்கிற பெயர் ஒரு generic name போல் ஆகிவிட்டது ( நகல் எடுப்பதற்கு Xerox-பண்ணுவது என்று சொல்வது போல). .com தவிர .net, .org போன்ற மேல்நிலை தளநிலைகள் (Top Level Domains – TLD’s) இருந்தாலும் டாட் காம் என்றால் ஒரு தனி மரியாதைதான் என்பதை மறுக்கமுடியாது. அதனால் ஒரு தளப் பெயரைத் தேர்ந்தெடுக்க முயலும்போது, முதலில் அந்தப் பெயர் டாட் காம் கிடைக்கிறதா என்று தேடுவார்கள். நான் கிச்சு inc என்று ஒரு இன்டெர்னெட் வணிகம் சார்ந்த நிறுவனம் தொடங்க ஆசைப் பட்டேனென்றால் முதலில் என் அபிமான டொமைன் பெயர் பதிவாளரின் இணையக் கடைக்குச் சென்று kichu.com கிடைக்குமா என்று தேடுவேன். அதற்காக அங்கு ஒரு தேடுதல் குப்பி இட்டிருப்பார்கள். அந்தப் பெயரை இன்டெர்னெட் முகவரிகளின் பட்டியலில் (domain name registry database) தேடவேண்டும். அந்த நிரலி, நான் தேடும் பெயர் இன்னுமிருக்கிறதா அல்லது வேறு யாரேனும் அதைப் பிடித்து விட்டார்களா என்று சொல்லிவிடும். இந்த விஷயத்தை ரொம்ப simplistic-ஆக சொல்லிவிட்டென். நிறைய நெளிவுசுளிவுகள் உள்ளன. அது போகட்டும். இப்போது எனக்கு வேண்டிய kichu.com – ன்மேல் யாரோ ஒரு புன்ணியவான் ஏற்கனவே துண்டு விரித்து விட்டான் (“ர்”-எதற்கு வம்பு!), அடுத்து என்ன செய்வது? சரி, kichu.net, kichu.org, kichu.info, kichu.cc, kichu.name – இதுபோல் ஏதாவது (ம்ம், ஏதாவது ஒரு கிழவனுக்கு இரெண்டாம் தாரமாவது கொடுக்க வேண்டியதுதான் என்பதுபோல!)கிடைக்குமா என்று முயற்சி செய்வேன்.
இந்த இடத்தில் தான் ஒரு புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்திருக்கிறது.உண்மையில் இது ஏற்கனவே இருந்ததுதான். ஆனால் அது ஒரு அரசு இயந்திரத்தின் அங்கமாக, பிரபலமாகாமல் இருந்தது. இப்போது அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் போணி பன்ணியிருக்கிறார்கள்.
நான் கதைப்பது “.in” என்னும் இந்தியாவின் நாடு சார்ந்த (Country Code Internet domain name – ccTLD) டொமைன் பெயரைப் பற்றித்தான். இத்தகைய இந்தியப் பெயர்களை முன்பு தொழில்முறை நிறுவனங்களுக்கு மட்டும் National Centre for Software Technology (NCST) என்ற அரசுத்துறை அலுவலகம் பதிவு செய்து வந்தது. அது ஒரு மாதிரி தேக்க நிலையில் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் நாள் இதனை பெரிய அளவில் விரிவாக்கத் திட்டமிட்டு எல்லோரும் .in டொமைன்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவித்தார்கள். இதற்கான அறிவிப்பை கணினியியல் துறைக்கான மைய அரசு அமைச்சர் வெளியிட்டார்.
இந்த டொமைன் பதிவுகளார்களை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்காக தனி நிறுவனம் ஒன்றையும் – National Internet Exchange of India (NIXI) தொடங்கியுள்ளார்கள். சுமார் 25 தனியார் நிறுவனங்களை இந்த டாட் இன் டொமைன் பெயர் பதிவாளர்களாக அங்கீகரித்திருக்கிறார்கள் (Accredited Registrars). இவர்கள் .in டொமைன் பெயர்களை விற்கலாம். உங்கள்பெயர்.in என்பதை இரண்டாம் நிலை டொமைன் என்பார்கள். இதனைத் தவிர மூன்றாம் நிலை டொமைன்களான உங்கள்நிறுவனம்.co.in போன்றவைகளையும் பதிவு செய்யலாம். ஒரு ஆண்டுக்கு இந்தப் பெயர்களுக்கான வாடகை ரூ.700-800 – இரண்டாம் நிலைக்கும், ரூ.400-500 – மூன்றாம் நிலைக்கும் வாங்குகிறார்கள். இந்த விலை பதிவாளர்களிடையே மறுபடும்.அவர்கள் செய்யும் மேலதிக உதவிகள், நுகர்வோர் பிரச்னைகள் தீர்வு முதலிய சேவைகளைச் சேர்த்து விலை நிர்ணயித்திருப்பார்கள்.
இதுபோன்ற பதிவாளர் (.in Domain Registrar) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வணிகம் செய்ய நீங்கள் விரும்பினால் அதற்கான தகுதிகள், தேவைகள், முதலீடு முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து விபரங்களும் இந்தச் சுட்டியில் கிடைக்கும்.
இதுவரையில் அங்கீகாரம் பெற்ற பதிவு நிறுவனங்களில் Rediff, Sify போன்ற பெரிய தலைகள் இன்னும் சேவை தொடங்கவில்லை. ஏனெனில் தொடக்கத்தில் சில நாட்கள் sunrise period என்று ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தீர்ப்பதற்காக கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறார்கள். பிப்ரவரி 16 க்குள் இது பக்காவாகியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறிது நாட்களுக்குப் பிறகு கன்ஃபர்ம் பன்ணுவார்கள்.
இப்போதைக்கு இந்த வலைப் பக்கத்தில் கண்டுள்ள நிறுவனங்களில் பல பதிவு செய்யத் தொடங்கி விட்டன. நீங்கள் டாட் இன் தளப் பெயர் ஏதேனும் பதிவு செய்ய விரும்பினால் அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயங்கள் சில:
- DNS nameservers மாற்ற வசதி
- இணையம் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி
- டொமைனின் முழுக் கட்டுபாடும் உங்கள் கையில்
- பெயர் திருட்டுப் போகாமலிருக்கப் பூட்டு(Registrar lock).இதனை உங்கள் விருப்பப்படி இடவோ, நீக்கவோ முடிய வேண்டும்.
- பிரச்னையின்றி பெயரின் உரிமையை மாற்றும் வசதி(சிலர் படுத்தி விடுவார்கள்!)
இது தவிர சில பதிவாளர்கள் சிறப்பு சேவைகளையும் இனாமாகச் செய்வார்கள்:
- டொமமைன் பெயரை இன்னொரு தளத்துக்கு மாற்றுதல்
- மின்னஞசல் முகவரி
- டொமைன் குடியிருப்பு (parking)
- Free dynamic DNS, free nameservers
டொமைன் பெயர் இலாக்காவில் டெக்னிகல் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இவற்றைத் தொடக்கத்திலிருந்து விளக்க முயற்சி செய்கிறேன், எதிர்வரும் பதிவுகளில்!
டாட் காமை விட்டு வெளியில் வந்து இந்தியாவைச் சார்ந்த வலைத்தளமாக விளங்க “டாட் இன்” ஒரு அடையாளச் சின்னம்!
என்ன சுமார் 800 ரூபாய்தானே, எடுங்கள் துண்டை. போடுங்கள் – ஜெயலட்சுமி டாட் இன், ஜெயேந்திரர் டாட் இன் (He is already “in”!), ரஜனிராம்கி டாட் இன்……….
போட்டுத் தள்ளுங்க!
Permalink
ஜெயலட்சுமி், ஜெயேந்திரர், அடுத்தது நானா? மன்னிச்சு வுட்டுடுங்க சாமி!
Permalink
பின்ன என்னங்க, ஃபோனும் பண்ணறதில்ல, ஒண்ணும் காண்டேக்ட் பண்றதில்ல, அதான்!
Permalink
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.
.com. .net .org முதலியன .in-ஐ விட கொஞ்சம் சல்லிஸாகக் கிடைக்கும் – சுமார் ரூ.400 – 450க்கு.
.info இன்னும் மலிவு: சுமார் ரூ.150 தான்!
ஆனால் .in என்றால் ஒரு அடையாளம் கிடைக்கிறது. அதுவும் இந்திய நாடு பற்றியதாக வலைத்தளம் இருந்தால், இது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
.uk. .au, .us முதலியவை அந்த்தந்த நாடுகளில் மிகப் பிரபலம். அதுவும் .uk டொமைன்கள் பதிவு செய்தல், host DNS மாற்றுவது போன்றவை மிகச் சிக்கலானது. ஆனாலும் அங்கு தன் நாட்டின் identity-ஐ மிகவும் விரும்புகிறார்கள்