ஒவ்வொரு வலியும் சொந்தம்

Knee painரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் – இப்படி தவறாமல் பட்டியலிட்டுக் கொண்டிருப்பார். திடீரென்று அவர், “போதும்டா, எனக்கு எட்டு வண்டு சேர்ந்து குடையற மாதிரி இருக்கு” என்றால் வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் “ஓகோ, இன்னிக்கு வியாழக்கிழமையா” என்பார்கள்.

ஆனால் கதையின் முடிவில் கதாநாயகிக்கு திருமணம் நிச்சயமாகிவிட்ட மகிழ்ச்சியில் கிழமைக்குப் பொருத்தமில்லாமல் வலியை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தார் என்று கதையை முடித்திருப்பார்.

Beach, the butlerபி.ஜி.வுட்ஹவுஸ் படைப்புகள் பலவற்றில் Beach என்ற பெயர் கொண்ட பட்லர் ஒருவர் வருவார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் அவருடைய கால் ஆணி மற்றும் அல்சர் பற்றிய விவரணைதான். அவரிடம் ஏதாவது வேலை ஆக வேண்டுமென்றால், “உங்கள் வயிற்றின் உள்பூச்சு (inner lining of his stomach) எப்படி இருக்கிறது” என்று கேட்டுவிட்டால் போதும். கதை பொன்னியின் செல்வன் பாகம் 1, பகம் 2… என்பதுபோல் போய்க்கொண்டே இருக்கும்!

நிஜ வாழ்க்கையில் நம்மூர் மாது சிரோமணிகள் பலர் இதுபோல் தங்களின் நீண்டகால வலிகளுக்கு (மூட்டு வலி போன்ற) சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் தங்களின் வலிகளைக் குறிப்பிடும்போது குரலில் ஒரு வாஞ்சையும் குழைவும் வந்து சேர்ந்துவிடும் – ஏதோ தங்கள் பேரக் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளைப் பற்றிப் பேசுவது போல. இவற்றில் பல வலிகள் பொய்யாகக் கூட இருக்கும். இவர்களின் உரையாடல்களைக் கவனித்தீர்களானால் அவரவர்களின் நோய்கள் மற்றும் அவை உண்டாக்கும் வலிகளைப் பற்றிய முழு விவரங்களை நீங்கள் அறிந்துகொண்டு விக்கிபீடியாவில் கட்டுரைகூட எழுதலாம்!

அவர்களைப் பற்றியாவது ஏதேனும் குறைவாகப் பேசிவிடலாம். ஆனால் அவர்களது வலிகளைப் பற்றி “அப்படி ஒண்ணும் கடுமையாகத் தெரியவில்லையே” என்று குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்களானால் அவ்வளவுதான்! “Hell hath no fury like a woman scorned” என்னும் பழமொழியை நினைவில் வைத்துக்கொண்டு பேசுங்கள்!

வலி மட்டுமல்ல. அவர்களுக்கு கொடுப்பட்ட விலையுயர்ந்த ட்ரீட்மெண்டுகள், எடுக்கப்பட்ட ஸ்கேன்கள், கன்சல்ட் செய்த ஸ்பெஷலிஸ்ட்கள் – இவை எல்லாமே பெருமை சார்ந்த விஷயங்கள் (part of their snobbishness). டாக்டர்கள் பலர் இந்த வீக்னெஸைப் புரிந்துகொண்டு ஒன்றைரையணா தைலத்தில் குணமாகும் வலிக்குக் கூட whole body scan மற்றும் ஒரு கூடை மருந்து எழுதிக் கொடுத்து கொள்ளையாக கமிஷன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் வலி. ஆர்த்தோ டாக்டர் ஃபிஸியோதெரபி செய்து கொண்டால் குணமாகிவிடும் என்று சொன்னார். ஆனால் அந்த நபருக்குத் திருப்தியில்லை. CT ஸ்கேன் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம். ஏனென்றால் அவருடைய நண்பர் ஒருவர் எந்த வலியாக இருந்தாலும் “எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்துண்டா நல்லது” என்று சொல்லியிருக்கிறாராம்!

இது எப்படி இருக்கு!

2 Comments


  1. நான் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சியை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கட்டுரை.
    வலி சொல்வது ஒரு ஃபேஷன்.

Leave a Reply

Your email address will not be published.