சுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா?

இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.

இவ்வாறு மிகப் பிரபலமாகியுள்ள தமிழ் இணையம், அனைத்து மக்களின் பங்கெடுப்பும் இல்லாமல் இருந்தால் விருவிருப்பு இருக்காது என்பதால், அதுபோன்ற இணைய தளங்களில் உங்கள் கருத்துக்களை இடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது- இந்த வலைப்பூவில் உள்ளதுபோல!!

ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.

சரி. என் வலைப் பதிவுக்கு வருகிறேன்!

இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், “தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது” என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் – இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?

ஆம். இது பிரச்னைதான்! இதனை எப்படித் தீர்ப்பது?

என்ன யோசிக்கிறீர்கள்! தீர்வு உங்களுக்கு எளிதாகத் தெரிந்ததுதானே! ஏதேனும் விஷயங்கள் தெரிய வேண்டுமானால் சாதாரணமாக என்ன செய்கிறீர்கள்? “கூகிளாண்டவரை” நாடுகிறீர்களல்லவா! அதேபோல்தான் இதற்கும்!

கூகிள் நேரடி தட்டச்சு - Click to enlargeஆம். கூகிள் (Google) இப்போது Transliteration in Tamil முறைப்படி தமிழில் தட்டச்சு செய்ய அவர்களின் தளத்தில் வசதி செய்திருக்கிறார்கள். இந்தத் தளத்திற்குச் சென்று “தமிங்கிலீஷில்” அடித்தால் தமிழில் தெரியும். எல்லாம் அடித்தபின், அதனை மின்வருடி, நகலெடுத்து, என் கருத்துப் பெட்டியில் இட்டால் (copy and paste) முடிந்தது வேலை!

அந்தத் தளத்தில் அந்த சேவையை எங்ஙனம் பயன் படுத்துவது என்பதைப் பற்றி விரிவான செயல் விளக்கம் அளித்துள்ளார்கள்.

உதாரணத்திற்கு, “அம்மா” என்ற சொல்லுக்கு, முதலில் “Ctrl+G” அழுத்தி தமிழை தெரிவு செய்தபின், “ammA” அல்லது “ammaa” என்று தட்டச்சு செய்து பின்னர் “ஸ்பேஸ்” பாரை அழுத்தினால் “அம்மா” வருவாள்! ஏதாவது கால், கீல் நொண்டியானால் அந்த சொல்லின் மேல் கிளிக்கினால் கால், கையெல்லாம் கிட்டும்!

புகுந்து விளையாடுங்கள் அன்பர்களே!! 😆

எஸ்.கே

6 Comments


 1. எஸ் கே அய்யா,

  மிகவும் உபயோகமான ஒரு தகவல். கூகுள் தளத்தில் பார்த்தேன். அருமையாக செய்திருக்கிறார்கள். பலப்பல பொதுவான வார்த்தைகள் எப்படி நாம் டைப் பண்ணினாலும் சரியாக போட்டுவிடுகிறது என்பதே இதன் விசேஷம். நான் இதை ஹிந்தியிலும் டைப் செய்து பார்த்தேன். main, itwar, போல பல தவறான ட்ரான்ஸ்லிட் செய்த போதிலும் அது சரியாக வார்த்தைகளை போட்டது. பலசமயம் வெளியூர், இல்லை புது கம்யூட்டரில் மாட்டிக்கொண்டு தமிழ் இல்லாமல் ஆனால் ப்ளாக்கில் கை துறுதுறுக்கும் போது இது மிகவும் உபயோகமாகும். ஆனால், ரெகுலர் உபயோகத்துக்கு இது கொஞ்சம் ஸ்லோதான். என்னுடைய tam99 தான் அதற்கு சிறந்தது.


 2. ஜெயராமன்,

  நான் இன்னமும் phonetic தான் பயன்படுத்துகிற்றேன். TAM99-ஐ இனிமேல்தான் பழக்கிக் கொள்ள வேண்டும்.

  அதில், மேல்புள்ளிக்கு இன்னொரு கீயைத் தட்டவேண்டியுள்ளதே, அது சிரமமாக இல்லை?

  அன்புடன்,

  எஸ்.கே


 3. எஸ் கே அய்யா,

  ஆமாம். புள்ளிக்கு தனி எழுத்து தேவை. ஆனால், இரண்டு தரம் ஓரே எழுத்தை போட்டால் தானாகவே முதல் எழுத்து புள்ளி போட்டுக்கொள்ளும்.

  மேலும், இதில் எதற்கும் ஷிப்ட் தேவையில்லை. அதனால், ரொம்ப சுலபம், மற்றும் வேகம்.

  நன்றி


 4. மிகவும் நன்றாக உள்ளது. இது வரை நான் எ கலப்பை மூலம் எழுதிக்கொண்டிருந்தேன் அது உங்கள் பதுவுகளில் வேலைசெய்யவில்லை அதனால் ஆங்கிலத்தில் எழுதவேண்டி இருந்தது இப்போது மிகவும் மகிழ்ச்சி .

  நன்றி நண்பரே


 5. ரமா செல்வி,

  நானும் எ-கலப்பை மூலம்தான் பதிவிடுகிறேன். நீங்கள் யூனிகோடைத்தானே தெரிவு செய்தீர்கள்? அது வேலை செய்ய வேண்டுமே!

  தயவுசெய்து மீண்டும் முயற்சித்து என்ன பிரச்னை என்று சொல்லுங்கள்.

  நன்றி,

  எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.