எலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது:
“நேற்று ஒரு பணக்கார பெண்மணி நம் “கோல்டு ப்ளான்” திட்டத்தில் முதலீடு செய்ய மிகவும் ஆசைப்பட்டு அழைத்திருந்தபோது, நீங்கள் அவருக்கு அதை விற்காமல் ஒரு சாதாரண பாலிசியை விற்று விட்டு வந்திருக்கிறீர்கள். அந்தப் பெண்ணிடம் கோல்டு பிளான் வேண்டாம் என்று தீவிரமாக வாதாடியிருக்கிறீர்கள். நம் கம்பெனிக்கு எது மிகவும் லாபம் கிடைக்குமோ அதை விற்பனை செய்யாமல் சொதப்பியிருக்கிறீர்களே, ஏன்?”
“ஐயா, அந்தப் பெண்மணியின் வயது, வருமானம், காப்பீட்டுத்தேவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பாலிசியைத்தானே அவருக்கு அளித்திருக்கிறேன். நமக்கு லாபம் என்பதற்காக ஒரு பெண்ணை ஏமாற்றலாமா, அது நேர்மையான வியாபாரமா?”
“ஓகோ, அப்படியானால் அவ்வளவு தூய்மையான விற்பனையாளர் எங்களுக்குத் தேவையில்லை. எந்த பாலிசியை விற்றால் கம்பெனிக்கு லாபம் கிடைக்குமோ அதை விற்பனை செய்வதுதான் உங்கள் வேலை. தர்மம், நியாயம் பார்க்கும் உத்தமர் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் டிஸ்மிஸ். போகலாம்”
– இது 2014-ல் வெளி வந்த “13 Sins” என்னும் திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகள்.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலுமுள்ள இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே மக்களுக்கு எது நன்மையானது, பொருத்தமானது என்பதை கருத்தில் கொள்ளாமல் தங்கள் நிறுவனத்திற்கு எதில் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றன – அரசுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி உடபட!
இத்தகைய வியாபார தந்திரத்தில் துணை போகிறவர்கள் இன்ஷ்யூரன்ஸ் முகவர்கள் (agents), மற்றும் பாங்க் போன்ற நிறுவன முகவர்கள். ஏனெனில் அப்போதுதானே அவர்களுக்கு நிறைய கமிஷன் கிடைக்கும்!
ஆனால், இந்த நிலைக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மட்டும் காரணமல்ல. நம் மக்களும்தான்!
நீங்கள் காரோ, டூவீலரோ வைத்திருந்தால் அதற்கு இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருப்பீர்கள். பலர் தங்கள் வீட்டைக்கூட இன்ஷ்யூரன்ஸ் செய்கிறார்கள். மேலும் பலர் மருத்துவக் காப்பீடு செய்து கொள்கிறார்கள். அவற்றின் காலக்கெடுவுக்குள் எந்தக் காரணத்தை முன்னிட்டு பாலிசி எடுக்கிறார்களோ அதனதன் தேவை ஏற்படும்போது அவை பூர்த்தி செய்கின்றன – விபத்து, மருத்துவத் தேவை போன்றவை. ஆனால் அந்தப் பாலிசிகளின் காலக்கெடு முடியும் நேரத்தில் ஏதாவது தொகை உங்களுக்கு கொடுக்கிறார்களா, அவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? இல்லையல்லவா? பின் ஆயுள் காப்பீட்டில் மட்டும் “எவ்வளவு பணம் திருப்பிக் கிடைக்கும்?”, “என்ன பெனிஃபிட் கிடைக்கும்?” என்று ஏன் கேட்கிறீர்கள்?
நம் மக்கள் செய்யும் அடிப்படைத் தவறு இதுதான். அத்தனை தவறான பாலிசி விற்பனைகளும் (Mis-selling) இந்தப் புள்ளியில்தான் தொடங்குகின்றன!
ஆயுள் காப்பீடு என்பது ஒரு சிலவு. முதலீடு அல்ல! இந்த அடிப்படை உண்மையை மனத்தில் ஆழப்பதிந்து கொள்ள வேண்டும். சம்பாதிப்பவர்களுக்கு ஏதாவது இடர் நேர்ந்துவிட்டால் அவருடைய வருமானத்தை நம்பியிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு முழுமையான வருவாய்க் காப்பு (financial risk cover) கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஆயுள் காப்பீட்டு பாலிசியின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர பாலிசி எடுப்பவரின் ஆயுட்காலத்தில் என்ன பெனிஃபிட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே கூடாது!
அவ்வாறான தவறான அணுகுமுறையால் காப்பீட்டையும், முதலீட்டையும் கலந்து கிச்சடி கிண்டி ஒரு குறைப் பிரசவத்தை உங்கள் தலையில் கட்டி விடுகிறார்கள்! முழுமையான காப்பீடும் அல்லாமல், முறையான முதலீடும் அல்லாமல் பாலிசிதாரர்கள் போட்ட பணத்திற்கு அடிப்படையில் நஷ்டம் ஏற்படுத்தும் (ஆனால் மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது பெனிஃபிட் காண்பிக்கும்) கீழ்க்கண்ட வகை பாலிசிகள் பெரும்பாலும் விற்கப்படுகின்றன:
- ULIP (Unit Linked Insurance Policy)
- Endowment Policy
- Money-back Policy
மேற்கூறியவற்றில் பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக் கேற்ற ஆயுட்காப்பீடும் கிட்டுவதில்லை. அதிலிருந்து ஒரு பகுதி பிரித்து முதலீடு செய்து முதிர்வு தொகையாகவும், போனஸாகவும் கொடுக்கப்படும் தொகையும் பணவீக்கம் தாண்டிய வருமானமாகவும் அமைவதில்லை. இந்த உண்மையை எந்த ஏஜெண்டும் வெளிப்படையாக சொல்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஒரு பெருத்த கமிஷன் தொகை இத்தகைய பாலிசிகளிலிருந்துதான் கிட்டுகிறது!
சரி, உண்மையான ஆயுட்காப்பீடு என்பதுதான் என்ன?
அது “டேர்ம் இன்ஷூரன்ஸ்” (Term Insurance”) என்பதுதான்.
“டேர்ம் இன்ஷூரன்ஸ்” (Term Insurance) தான் முழுமையான இன்ஷூரன்ஸ். மிகக் குறைவான பிரிமியம் கட்டி முழுமையான பாதுகாப்பை உங்களை நம்பியிருப்பவர்களுக்கு அளிப்பது. அதுவும் முகவர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக நீங்கள் வலைத்தளம் மூலமாக (Online) டேர்ம் பாலிசி எடுத்தால் 30%-க்கு மேல் பிரிமியம் மிச்சம் பிடிக்கலாம்.
எல்.ஐ.சி தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம். மத்திய அரசுக்கு சொந்தமானது. ஆனால் அதில் பிரிமியம் தொகை மற்ற தனியார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களை விட இரண்டு பங்கு! இதுபோல் பாலிசிதாரர்களிடமிருந்து வசூல் செய்து, அந்தப் பணத்தை பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது அந்த நிறுவனம்! மேலும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அரசுத்துறை நிறுவனங்ளின் பங்குகளை விற்கும்போது (Disinvestment) அதில் பாதியை பல்லாயிரக் கணக்கான கோடிகளைக் கொட்டி வாங்குவது எல்.ஐ.சி தான் (சமீபத்திய Coal India உட்பட). இந்தப் பணம் பாலிசிதாரர்களைச் சேரவேண்டியது அல்லவா!
இந்த டேர்ம் ஆயுட்காப்பீடு ஒருவருடைய வருமானத்துக்கு ஏற்றவாறு எடுக்கவேண்டும். உதாரணமாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 10 முதல் 15 மடங்குவரை பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பாதித்தால் அவர் 75 லட்சம் ரூபாய் அளவுக்கு டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும். மேலும் வீட்டுக் கடன், கார் லோன் முதலியவை பெற்றிருந்தால் அந்த லோன் தொகைக்கும் சேர்த்து காப்பீடு எடுக்க வேண்டும்.
சரி, காப்பீடு ஆயிற்று. முதலீட்டுக்கு என்ன செய்யலாம்?
அதற்கு உங்கள் நண்பன் ம்யூச்சுவல் ஃபண்டுதான் (Mutual Funds).
பங்கு சார்ந்த ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதை ஒரு ஆண்டுக்குப்பின் திருப்பி எடுத்தீர்களானால், அதில் கிட்டும் இலாபத்திற்கு (Capital Gain) முழுமையான வருமானவரி விலக்கு உண்டு! இத்தகைய ஃபண்டு திட்டங்கள் குறைந்தபட்சமாக 12% முதல் 15% வரை (கூட்டு வட்டி) வருமானம் கொடுத்துக்கொண்டு வருகின்றன. மேலும் வருமான வரி விலக்கு அளிக்கும் (Section 80C) ஃபண்டுகளான ELSS (Equity Linked SAvings Schemes) வகை பங்குத் திட்டங்கள் மிகக் குறைவான Lock-in period (மூன்று ஆண்டுகள் மட்டுமே) கொண்டவை. அதிக வருமானமும் ஈட்டிக் கொடுப்பவை.
பங்கு சார்ந்த ம்யூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் இருக்கிறது, அது வேண்டாம் என்று நீங்கள் கருதினால் கடன் சார்ந்த திட்டங்களில் (Debt Funds) நீங்கள் முதலீடு செய்யலாம். இவற்றை மூன்று ஆண்டுகள் வைத்திருந்து திருப்பி (redemption) எடுத்தால், indexing முறைப்படி உங்கள் லாபம் (Capital Gains) கணக்கிடப்பட்டு அதற்கு வருமான வரி (20%) கட்ட வேண்டும். அந்த மூன்று ஆண்டுகளுக்கான பனவீக்கத்தை உள்ளடக்கி இன்டக்ஸிங் செய்யப்படுவதால் வரித்தொகை மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
இத்தகைய ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்துமே பணவீக்கம் தாண்டிய வருமானத்தை உங்களுக்கு அளிக்கும்.
ஆகையால், உங்களுக்கு வேண்டியது:
- ஆயுட் காப்பீட்டுக்கு டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்
- முதலீட்டுக்கு ம்யூச்சுவல் ஃபண்ட்
முதலீடு என்பது வேறு, காப்பீடு என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது!
பி.கு: யூலிப் பற்றி தனிக் கட்டுரை வரைகிறேன். அவ்வளவு சமாச்சாரம் இருக்கிறது அதில். ஆனால் அது உங்களுக்கு நல்லதல்ல, அறவே தவிருங்கள் என்பதை மட்டும் அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன்!
Permalink
சத்தியமா சொல்றேன்.. நீங்க நல்லா இருப்பீங்க ..
பரவட்டும் விழிப்புணர்வு !!