வலையில் சுட்ட பழம்

என் நண்பரொருவர் தன் வலைப்பூவில் ஒரு புகைப் படத்தை இன்னொரு வலைத் தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தார். அதில் ஒரு சைக்கிள் போட்டி வீரரின் படம் இருந்தது. அவருடைய கைத் தசைகள் முறுக்கேறி நிற்பதைத் துல்லியமாக அந்தப் படம் காண்பித்தது. அந்தப் படத்தை எடுத்தவரின் திறமையைப் பாராட்டி இரண்டு வரி எழுதி அந்தப் படத்தைத் தன் பதிவில் இட்டிருந்தார் என் நண்பர். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் சம்பந்தப்பட்ட புகைப்பட நிபுணர். “என் படத்தை உங்கள் பதிவில் போடாதீர்கள், எடுத்து விடுங்கள் – ஏனென்றால் அதனைப் போடுமுன் என் ஒப்புதலை நீங்கள் பெறவில்லை” என்றார். என் நண்பர் உடனே அதை எடுக்காமல், “என் தளம் வணிகம் சார்ந்தது அல்லவே. வெறும் வலைப்பூதானே, அதில் போட்டாலென்ன” என்று பதிலுரைத்தார். ஆனால் அந்த படக்காரரோ, “முதல் தவறு, என்னிடம் உரிமை பெறாமல் எடுத்துப் போட்டது. இரண்டாவது அதனை எடுக்கச் சொல்லியும் எடுக்காதது. மூன்றாவது ஒரு பொய் – உங்கள் தளத்தில் கூகிள் விளம்பரங்கள் வருகின்றன; அதனால் அது வணிகம் சார்ந்ததாகிறது. உடனே அந்தப் படத்தை எடுக்காவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று எச்சரிக்கை விடுத்தார். அந்தப் படமும் “டாடா” சொல்லி விட்டது.

சமீபத்தில்கூட தமிழ் வலைப் பதிவுகளில் எழுந்த ஒரு சலசலப்பைப் பற்றிப் படித்தேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அருங்கலைகளைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் அது. அவரே பதிப்பித்துள்ளார். அதில் முதலிரண்டு பக்கங்களிலேயே (முன்னுரை, முகவுரை முதலியன) தெளிவாக ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டார், “இந்தப் புத்தகத்தில் அடங்கிய அனைத்து விஷயங்களும் பல இணைய தளங்களிலிருந்து எடுக்கப் பட்டன” என்று!

அந்தப் புத்தகம் விலைக்கு விற்கப் படுகிறது. It is a commercial venture. அதனால் நான் அவரிடம், “இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர் யாரேனும் அந்த வலைத்தள உரிமையாளர்களிடம் போய்ச் சொன்னால் அதனால் பிரச்னை வராதா” என்று கேட்டேன். அதற்கு அவர், “எப்போ இண்டெர்னெட்டில் போட்டார்களோ அதிலிருந்து அவை public domain-ஐச் சேர்ந்தது. யார் வேண்டுமானாலும் எடுத்து ஆளலாம்” என்றார். அவரின் கூற்று சரியல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மேற்கொண்டு வாதம் செய்யவில்லை. இணையத்தில் ஒரு வலைப் பக்கத்தின் வரைவைக் காப்பியடித்ததற்கே பலர் நீதிமன்றம் சென்றிருக்கும் கதைகள் தெரியும். Copyright மற்றும் IPR விஷயத்தில் மேலை நாடுகளில் மிகவும் விழிப்புடனும் வேகத்துடனும் இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். சாதரணமாக எல்லோரும் பாடும் பிறந்த நாள் வாழ்த்தான “Happy Birhthday to you” பாட்டை commercial-ஆகப் பாட வேண்டுமானால் அதன் பதிப்புரிமை வைத்திருப்பவர்களிடம் $500 செலுத்தி ஒப்புதல் பெறவேண்டும் என்பார்கள்!

இந்தப் புத்தக விஷயத்தில் இனிமேல் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன். அவருக்கு உதவியாயிருக்கும்!

1 Comment


  1. தப்பை தப்பில்லாம செஞ்சா அது தப்பே இல்லீங்கண்ணா… தப்பை தப்பா செஞ்சா இந்த மாதிரிக்கா பெரச்னை வந்துருதுங்கண்ணா.

    இந்தாப்பா..ஏதோ தெர்யாம நடந்துர்ச்சி..அடுத்த தபா இந்தமேரிலாம் நடக்காதுபான்னு ஒரு கடுதாசி போட்ருந்தா பெர்ச்னை இல்ல பாருங்க. அத்த வுட்டு..நீ என்னா சொல்றது…நான் இன்னா கேக்றதுன்னு பிலிம் காட்ட சொல்லோ…ஆள்ளாளுக்கு ரவுஸ் காட்றாங்கப்பா.

Comments are closed.