பல பில்லியன் டாலர்களைக் கொட்டி உலகிலுள்ள எல்லா பெரிய தொலைபேசி நிறுவனங்களும் சீனாவில் கொண்டுபோய் உற்பத்தித் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொலை தொடர்பு சாதனங்களின் விற்பனை எவ்வளவு தெரியுமா? 1.5 டிரில்லியன் (1500 பில்லியன்) டாலர். அதில் ஆசியா-பஸிபிக் பகுதியின் பங்கு 112 பில்லியன். ஆனால், இந்த பிசினஸில் இந்தியாவின் பங்கு ஏதொ ஓரத்தில் ஒரு விள்ளல்தான்! ஏனெனில் சொல்லிக்கொள்ளும்படியாக இந்தியா தொலைபேசி சாதனங்கள் உற்பத்தி செய்வதில்லை. செல்போன்கள்கூட இறக்குமதிதான்.
அதற்காக நீங்கள் மனம் தளர வேண்டாம். தொலை தொடர்பு என்பது தொலைபேசி, எக்ஸ்சேன்ஞ் போன்ற வன்பொருட்கள்தான் (hardware) என்ற நிலை மாறி, மென்பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இன்டெர்னெட், தொலை தொடர்பு, கணிப்பொறி, மொபைல் போன் இவை எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படும் நாள் நெருங்கி விட்டது. “True convergence” என்கிற “நிர்வாணா” நிலையை சீக்கிரமே அடையப்போகிறோம். அப்போது ஒரே ஒரு சின்ன கையகல எலெக்ட்ரானிக் கருவியை வைத்துக் கொண்டு மேற்கூறிய அனைத்து சித்து வேலைகளையும் விரல் நுணியால் இயக்கும் காலம் இதோ ஓரிரு ஆண்டுகளில் வந்துவிடும். அப்போது மென்பொருள் தான் ஆதிகம் செலுத்தும். ஐ.பி எனப்படும் Internet Protocol (பெரிய மனிதர்கள் கொடுக்கும் ஐ.பி என்பது வேறு ஒன்று!) மூலம் தொலை தொடர்பு முழுவதும் செயல்படும். (இப்போது IP telephony-யின் செயல்பாடு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறது. இதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்).
இந்த சூழ்நிலையில் தொலை தொடர்பில் வன்பொருளின் ஆதிக்கம் 30%-க்கும் கீழே இருக்கும். மென்பொருள்தான் மீதி 70%-ஐ கைக் கொள்ளும். மென்பொருள் என்றால் அங்கு ஆளப்பிறந்தவர்கள் இந்தியர்கள்தானே! நட்டு, போல்ட்டு உற்பத்தியை எங்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளட்டும். மென்பொருள் பின்னுவதில் வல்லுனர்கள் நாம்தானே! Drivers, Firmware என்பது போன்ற மென்பொருள் பொதிகள் பல தொடர்ந்து தேவைப்படும்.
மொத்தத்தில் உற்பத்தி என்றாலே மென்பொருள்தான் என்கிற நிலை ஏற்படும் நாள் தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். ஏதொ ஒரு செயலுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு கருவியை மென்பொருள் மூலம் வேறு பல செயல்களை (சிறிதும் தொடர்பில்லாமலிருந்தும் கூட) செய்யும்படியாக இயக்க முடியும்! பிறகென்ன, மென்பொருள் கம்பெனிகள் பெருகும்; நேரு ஸ்டேடியம் போன்ற இடங்களில் தான் “மேளா” நடத்தி வேலைக்கு ஆளெடுப்பார்கள். அவர்களுக்கு சம்பளமாக மாதா மாதம் ஒரு பெருத்த பொற்கிழியைக் கொடுப்பார்கள். அவர்கள் ஐஸ்கிறீம், அதன்மேல் காபி என்று ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருந்து, சதா டிரெஸ்ஸும், ஷூவும் வாங்கிக் கொண்டு பல பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்குவார்கள். “ஷாதீ-டாட்-காம்” போன்ற வலைத் தளங்கள் இன்னும் பல ஏற்பட்டு அவை அவர்களுக்குத் தகுந்த துணைகளைத் தேடித்தரும் சேவையைச் செய்யும்!