இறைவனின் குழந்தைகளுடன் ஒரு சந்திப்பு

கடவுளின் குழந்தைஎன் நெஞ்சை நெகிழச்செய்த நிகழ்ச்சியொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒருநாள் மாலை என் அண்டைவீட்டார் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு நான் கட்டாயம் வரத்தான் வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அதுவும் உடனே கிளம்பவேண்டுமென்ற கட்டளை வேறு. என் சமீபத்திய உடல்நிலை பின்னடைவுக்குப்பின் நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதையும் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து வருகிறேன். ஆனால் அந்த நண்பர் மிகவும் வற்புறுத்தியதாலும், இன்ன நிகழ்ச்சி என்பதை சஸ்பென்சாகவே வைத்திருந்ததாலும், சென்றுதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். ஒரே பிரச்னை: நிகழ்ச்சி அரங்கில் எனக்கு ஒவ்வாத வகையில் ஏதேனும் அசௌகரியங்கள் இருந்தால் என்ன செய்வது என்ற விசனம் மட்டும் உறுத்திக் கொண்டிருந்தது.

அங்கு எனக்கு சரியான இருக்கை கிடைத்ததால் யாதொரு பிரச்னையுமின்றி அமர்ந்திருந்தேன். அது ஒரு பள்ளி நடத்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சி. அந்தப் பள்ளி மனநலம் குன்றிய குழந்தைகளுக்கானது (special children). ஆண்களும் பெண்களுமாக சுமார் 25 குழந்தைகள் பாட்டு, நாடகம், நடனம் என்று பலவித நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தனர். சில மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ஒரு பெண் நடனமாடும்போது கூடவே ஒரு ஆசிரியை மிக அருகில் நின்று எந்த நேரமும் அந்தப் பெண்ணை பிடித்துக் கொள்ளத் தயாராக இருந்தார். அதற்குக் காரணம் சென்றமுறை இதுபோல் நடனமாடும்போது அந்தப் பெண் திடீரென்று தன் உடைகளை மேடையிலேயே களைந்துவிட்டு ஓடத் தொடங்கியதாக அறிந்தேன். ஒரு பையன் (ஒரு ஆள் என்றே கூறலாம் – 30-35 வயதிருக்கும்) ஹார்மோனியம் வாசிக்க ஆரம்பித்தான். ஆனால் பாதியிலேயே நிறுத்தி விட்டான். எதிரே என்ன தடை இருக்கிறது என்று கவனியாமல், இடித்துக் கொண்டும் தடுமாறிக்கொண்டும் செல்லத் தொடங்கினான். இப்படி சில நிகழ்வுகள்.

அந்தக் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க என் மனம் பாரமாகி, தொண்டையில் ஏதோ அடைக்கிறார்ப்போல் இருந்தது. அந்த பெண் குழைந்தைகள் பெரியவளானபின் எப்படி சமாளிப்பார்கள் என்கிற எண்ணம் என்னை அழுத்தியது. ஏனெனில் அவர்கள் Autism என்னும் disorder-ஆல் பாதிக்கப் பட்டவர்கள். தன் சுற்றுப்புற நிகழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையில்லாமல் இருப்பார்கள். அந்தப் பெண்களின் பிற்காலம் எப்படி இருக்கும், அதுவும் பெற்றோர்கள் காலத்திற்குப் பிறகு? இந்தக் கேள்வி ஆண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்தானே. என்ன செய்வது. ம்ம்.

அந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், டி.ஸி.எஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது மனைவியும் கடைசி வரை நிகழ்ச்சிகளை ரசித்து, முழு involvement-உடன் கையொலி எழுப்பி உற்சாகம் செய்து, பரிசுகள் வழங்கி, பின் மனம் நெகிழப் பேசினார்கள். அந்த மாலைப் பொழுதை இதுபோன்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டது அவர்களுடைய பாக்கியம்தான் எனவும், அந்தக் குழந்தைகளை தெய்வமாகவே பார்க்கவேண்டும் எனவும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியபின் ஒரு பெரிய துகையை வெளியே தெரியாமல், அந்த நிறுவனத்துக்குக் கொடுத்தனர்.

அன்றிரவு எனக்கு உணவு, உறக்கம் எதுவுமே பிடிக்கவில்லை. நினைவுகள் அந்தக் குழந்தைகளையே சுற்றி வந்தன. இதுபோல் ஒரு குழந்தை இருந்துவிட்டால் அந்தப் பெற்றோர்களின் வாழ்வு அதற்குப் பிறகு ஒளியிழந்து இருளாகிப் போகாதா, இதென்ன கொடுமை? ஏன் அதுபோன்ற குறைகளை ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்தான், அவன் தான் கருணாமூர்த்தியாயிற்றே. பதில் தெரியவில்லையே.

அப்பாடி இந்த வரையில் நமக்கு அதுபோன்று அமையாமலிருக்கிறதே (knock on wood) என்ற நிறைவுதான் மிஞ்சி நின்றது. அது ஒரு சுயநல சிந்தனைதான் என்றாலும் அதுபோல் நினைக்காமலிருக்க முடியவில்லையே!

கிடைத்த சுக வாழ்வை அனுபவிப்போம். வீணான சச்சரவுகள், மன மாச்சரியங்கள், பிறரைப் பழித்தல், கேடு நினைத்தல், மனம் நோகச் செய்தல் போன்ற தவறான செயல்களையும், எதிர்மறை சிந்தனைகளையும் அறவே நீக்கி மனித நேயம் வளரப் பாடுபடுவோம்.

ஆமென்.

7 Comments


  1. மனதைக் கனக்க வைத்த பதிவு.


  2. பொதுவாகவே நமது அன்றாட வாழ்க்கையிலும் இது போன்ற எதிர்பாராத சந்திப்புகள் நிறையவே வருகின்றன. நாம்தான் அவைகளை பார்க்க உணர மறுக்கிறோம். நமது சித்தத்தை சிறை பிடித்து வைத்திருக்கும் சில வகை கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து நாம் விடுபட்டு சாதாரண மனிதனாக அடிப்படை மனித நேயத்துடன் வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். இரக்கத்தன்மை, சகிப்புத்தன்மை ஆகிய இரண்டுதான் மிக முக்கிய குணங்கள் அமைதிக்கும் அன்பிற்கும்.

    ஏதோ என் மனதிற்கு பட்டவை.

    நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.


  3. //இதுபோல் ஒரு குழந்தை இருந்துவிட்டால் அந்தப் பெற்றோர்களின் வாழ்வு அதற்குப் பிறகு ஒளியிழந்து இருளாகிப் போகாதா,.//

    முதலில் நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். உண்மையில் என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவன் என் மகன்.

    //இதென்ன கொடுமை? ஏன் அதுபோன்ற குறைகளை ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்தான், அவன் தான் கருணாமூர்த்தியாயிற்றே. பதில் தெரியவில்லையே.//

    வாழ்வில் கட்டம் நேர்ந்தால், பாவ புண்ணியம் என்று சிந்திப்பது கலாச்சார சிந்தனைப் பிறழ்ச்சி.

    //அப்பாடி இந்த வரையில் நமக்கு அதுபோன்று அமையாமலிருக்கிறதே (knock on wood) என்ற நிறைவுதான் மிஞ்சி நின்றது.//
    குறைகள் ஏற்படுவது இயற்கை என்று அறிந்து, எல்லோரிடமும் ஏதாவது குறை இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும்.

    அதுவே குறை பட்டவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் மாற்றாகும்.


  4. இது போன்ற குழந்தைகள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். இப்படி பாதுக்காக்கப்படும் குழந்தைகளை தவிர்த்து, அனாதைகளாக அலையும் குழந்தைகளை நினைக்கையில் தான் மனம் மிகவும் வேதனை அடைகிறது. அக்குழந்தைகளுக்காக சேவை செய்பவர்களை நாம் வணங்க வேண்டும். அதற்கு தனி மனப்பக்குவம் வேண்டும்.


  5. வீணான சச்சரவுகள், மன மாச்சரியங்கள், பிறரைப் பழித்தல், கேடு நினைத்தல், மனம் நோகச் செய்தல் போன்ற தவறான செயல்களையும், எதிர்மறை சிந்தனைகளையும் அறவே நீக்கி மனித நேயம் வளரப் பாடுபடுவோம்.

    Well Said :))) – Baby Pavan’s Father

Leave a Reply

Your email address will not be published.