உங்களுக்குத் தெரியுமா – “மணப்பாறை முறுக்கு” – அது முறுக்கே அல்ல!
முறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு”?
வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா?! இங்கே நீங்கள் பார்ப்பதுதான் “மணப்பாறை முறுக்கு” என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். இதை “முள்ளுத் தேன்குழல்” என்றும் அழைப்பார்கள். இதற்குப்போய் முறுக்கென்று பெயரிடலாமா!
இதோ இங்கே நீங்கள் காண்பதுதான் “முறுக்கு”!
பதப்படுத்திய மாவை கையால் முறுக்கியபடி (spin) திருகுசுருள் (spiral) போல் வடித்து பின் எண்ணையில் வறுத்து எடுக்கும்போது கிடைப்பதுதான் “முறுக்கு”. நம் திருமணங்களில் 7 சுற்று (மற்றும் அதற்கு மேலும்) முறுக்கு சீர் வரிசையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்! முறுக்கு சுற்றும் கலை கைவந்தவர்கள் வெகு சிலரே. திருவல்லிக்கேணியில் பட்சணங்கள் செய்யும் ஒரு வல்லுனர் தன் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் முறுக்கு சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன்!
அது சரி, ஆனால் ஒரிஜினல் சுவையுடன் கூடிய “மணப்பாறை முறுக்கு” இப்போது கிடைப்பதில்லை தெரியுமோ!?
அந்த புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கின் சரித்திரப் பின்னணியை சற்றே பிரட்டிப் பார்ப்போம்!
மணப்பாறை முறுக்கின் பிறப்பிடம் திருச்சி – திண்டுக்கல் தடத்தில் இருக்கும் மணப்பாறை இரெயில்வே நிலைய கேண்டீன்தான்! சுமார் 1930-ல் இரெயில்வே காண்டிராக்டர் கிருஷ்ண அய்யர் மற்றும் மணி அய்யர் அவர்களால் அறிமுகப்படுத்தபட்டது இந்த ‘முறுக்கு’. அதன் சிறப்பான சுவையின் ரகசியம், மணி அய்யருடைய கண்டுபிடிப்பான இருமுறை பொறித்தெடுக்கும் முறைதான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்!
அப்போதுதான் அத்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியிருந்த காலம். எல்லா டிரெயின்களுமே நீராவி எஞ்சின்களால் இழுக்கப்பட்டன. அந்த தடத்தில் செல்லும் எஞ்சின்களுக்கு மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் தான் நீர் நிரப்பும் இடம் (Watering station). அதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தண்ணீர் வளைவு குழாயை மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனில் காண முடிந்தது (இப்போது உள்ளதா என்று தெரியாது). இஞ்சினுடைய “டெண்டரி”ல் தண்ணீர் நிரப்ப சுமார் அரை மணிநேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் முறுக்கு பிசினஸ் சுறுசுறுப்பாக நடக்குமாம்!
பிற்காலத்தில் டீசல் எஞ்சின் வந்தபிறகு பயணிகள் அந்த சுவையான முறுக்கை வாங்கிச் செல்ல ஏதுவாக மணப்பாறை வழியாகச் செல்லும் எல்லா புகைவண்டிகளுமே குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வந்து நின்றனவாம்!
மணப்பாறையில் விளையும் பச்சரிசி ஒரு தனிச்சுவையை ஊட்டுகிறது. மேலும் தேங்காய் எண்ணையில் பொறிக்கப்பட்டதும் இதன் சுவையை இரட்டிப்பாக்கியது என்று வரலாறு கூறுகிறது. மேலும் அந்த ஊரில் கிடைக்கும் உப்பு நீரும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
ஆனால் அந்தவகை முறுக்கின் ஆதிகர்த்தாவாகிய மணி ஐயரின் குடும்பம் தற்போது அங்கு இல்லை. ஆனால் ரயில் நிலையத்தில் இருக்கும் கேண்டீன் (ஸ்டால்) இன்னமும் அந்த டிரேட்மார்க் முறுக்கை தயாரித்து விற்று வருகிறது. வாடிக்கையாளர்களும் வாங்கி சுவைக்கின்றனர். ஆனால் ஒரிஜினல் ஒன்று இருந்தால் போலி நூற்றுக்கு மேல் இருக்கும் அல்லவா? ரெயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஒரிஜினல் ஸ்டாலுக்கு சிறிதும் தொடர்பில்லாத பலர் “மணப்பாறை முறுக்கேய்ய்ய்ய்…” என்று வண்டித் தொடரைச் சுற்றி விற்கிறார்கள். அவர்களிடமும் ஏமாந்து வாங்கித் தின்றபிறகு “முன்ன மாதிரி இல்லைங்க” எங்கு அங்கலாய்க்கிறார்கள் மக்கள்! மேலும் மணப்பாறை பஸ் நிலையம் மற்றும் அந்த ஊர் முழுவதுமே ஒரே “முறுக்கு” வியாபாரம்தான்!
சரி, இப்போது பெயருக்குப் பொருத்தமான முறுக்குக்கு வருவோம்!
அச்சினுள் மாவை இட்டு ஓட்டை உள்ள தட்டு வழியாக பிழிந்து செய்யப்படும் மணப்பாறை ‘முறுக்கு’ போன்ற தேன்குழலிருந்து முறுக்கிக்கொண்டிருக்கும் முறுக்கு வகையை வேறுபடுத்திக் காண்பதற்காக இதை “கை முறுக்கு”, “சுத்து முறுக்கு” என்று சிலர் அழைக்கிறார்கள். இத்தகைய முறுக்கை எப்படி சிலர் சுற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்!
தேன்குழல் பிழிவது போலேயே மாவை அச்சில் வார்த்து பிழியும்போது அதிலிருந்து வெளிவரும் மாவு முறுக்கிக் கொண்டே வரும் வகையில் மிக லகுவாக கைமுறுக்கை செய்யும் அச்சு ஒன்றை வடிவமைக்க என் தாயார் முயற்சித்து வருகிறார்கள். அதன் அடிப்படை டிசைன்கூட அவர்களிடம் ரெடியாக இருக்கிறது. அது சீக்கிரமே செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்!
இப்போது முறுக்கு சுற்றும் மெஷின் கூட வந்துவிட்டது பாருங்கள்!