இணையத்தில் நானே முதன்முதலில் தமிழில் எழுதி, அதனை வலையேற்றியபின் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பையும், மகிழ்ச்சியும் மனநிறைவையும் என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. ஆனால் இங்கு பரவலாக அன்றாடம் மலர்ந்து நிற்கும் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றைத் தமிழ்மணம் மூலமாகப் படிக்கும்போது பெரும்பாலும் மகிழ்ச்சியும், சில சமயம் விசனமும் தோன்றுகிறது.
சமீபத்தில் சன் டிவி காலை நிகழ்ச்சியில் ஒரு தமிழறிஞரைப் பேட்டி கண்டார்கள். அவர் பல்வேறு மொழிகளில் தென்படும் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் இணைத்து, இதிலிருந்து அது தோன்றியதா, அதிலிருந்து இது கடன் பெற்றதா என்று நாம் குழப்பமடையும் வகையில் விவரித்துக் கொண்டிருந்தார். எல்லா மொழிகளிலும், காலப்போக்கில் மக்கள் பல மொழிபேசும் மக்களுடன் கலந்து உறவாடும்போது பிறமொழிச் சொற்கள் கலப்பது தவிர்க்க இயலாது. இதனை மொழி வல்லுனர்கள் ஒவ்வொரு சொல்லின் ஆணிவேரையும் தோண்டி ஆரய்ந்து இதன் மூலம் அது என்று பதிவு செய்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்த விவரத்தைக் காணலாம். அது அந்த சொல்லைப் பற்றிய மேலதிக விவரம் என்ற அளவில் மட்டும் வாசித்துவிட்டு, அந்தச் சொல் எதைக் குறிக்கிறது, அதனை எந்த முறையில் ஒரு வாக்கியத்தில் இடலாம் என்று மட்டும் தெரிந்து கொண்டு அகராதியை மூடிவிடுகிறோம். மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும், இலக்கியத்தைப் பாடமாகக் கற்பவர்களுக்கும், எழுத்தாண்மைத்துறையில் உள்ளவர்களுக்கும் இந்த etimology, philology என்றழைக்கப்படும் விவரங்கள் பயன்படும். அவ்வளவே. அதனைத்தாண்டி, “இந்தச் சொல் அங்கிருந்து இங்கு வந்ததல்ல, இங்கிருந்துதான் அங்கு சென்றது” என்று சிலர் வாதிடத் தொடங்குவதால்தான் விபரீதமான விளைவுகள் தோன்றுகின்றன. வெள்ளையர்கள் நம் நாட்டை ஆள்வதற்கான தார்மீக நியாயத்தைக் கற்பிப்பதற்காக “ஆரியப் படையெடுப்பு” என்னும் புனைகருத்தை (Aryan invation theory) வெளியிட்டு அதனை எல்லோரும் நம்பும் வண்ணம் பரப்பினார்கள். நம்மிடையே பெருகி நின்ற பிளவுகளுக்கு இது மேலும் தீனி போடுவதுபோல் ஆகியது. அதற்கு ஆதாரமாக ஜெர்மனியிலும், ரஷ்யாவிலும் மற்றும் மத்தியக் கிழக்கு ஆசியாவிலும் வழங்கும் மொழிகளுக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவாக உள்ள சொற்களை வைத்து ஆராய்ச்சி செய்து மாக்ஸ்ம்யுல்லர் போறவர்கள் “அங்கிருந்து வந்தவர்கள்தான் ஆரியர்கள், ஆதிகுடிகள் திராவிடர்கள்” என்னும் கட்டுக்கதைகளைப் பரப்பினார்கள். ஆரியர்கள் படையெடுத்தார்களா, குடியேறினார்களா என்றெல்லாம் வாக்குவாதம் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதனைப் பற்றி பலர் பல புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்கள். கூகிளில் சென்று தேடுங்கள் – 75400 சுட்டிகள் கிட்டும்!
எழுத்து வடிவத்திலோ, ஓசையிலோ ஒத்திருக்கும் சொற்கள் நேரடியாகக் கிட்டவில்லையென்றால்கூட, பல சொற்களைத் தன்னிஷ்டப்படி திரித்து “இதைப்பார், இந்த மொழிச் சொல்போல் இருக்கிறது பார்” என்று சிலர் வித்தை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னமும். எந்தச் சொல் சென்ற வழி “இங்கிருந்து அங்கா, அல்லது அங்கிருந்து இங்கா” என்பது ஒரு முடிவில்லாத வாதம். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பிரிட்டன் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது அந்நாட்டிலிருந்து ஒரு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு இராணுவ மரியாதை தரப்பட்டது. அப்போது ஒரு ராணுவ வீரரைப் பார்த்த இளவரசர், “நீ என்ன, தோற்றத்தில் என்னைப்போலவே இருக்கிறாயே, உன் தாயார் எப்போதாவது பிரிட்டன் வந்திருந்தாரா” என்று வினவினார். அதற்கு அந்த வீரர், “இல்லை. என் தந்தைதான் லண்டன் சென்று வந்திருக்கிறார்” என்றார்.
நம் எண்ணங்களை அடுத்தவரிடம் சேர்ப்பிக்க உதவும் ஒரு சாதனம் மட்டும்தானே மொழி என்பது? அது அந்த நிலையைத் தாண்டி பல பரிமாணங்கள் எடுத்து இன்று நம் நாட்டின் மக்களைப் பிளவு படுத்தி, அவர்தம் வளர்ச்சியைப் பாதிக்கும் அளவுக்கு பூதாகாரமாகப் பெருகி நிற்கிறது. இன்றைக்கு மென்பொருள்துறையிலும், அழைப்பு மையங்கள் போன்ற BPO துறையிலும் நம் இளைஞர்களுக்கு கிராக்கி இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுக்கு ஆங்கிலம் பேசுவது இயல்பாகக் கைவருகிறது என்பதுதான். மென்பொருள் எழுதுவதை மட்டும் எடுத்துக் கொண்டால் மெக்ஸிகோ, ஃபிலிப்பைன்ஸ், சீனா, லிதுவேனியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் பெருமளவில் அந்தக் “கேக்கை” வெட்டி எடுத்துச் சென்றிருப்பார்கள். நம்மிடையே கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நண்பரொருவரை ஒருமுறை நான் “பேசும் ஆங்கில”த்தில் பயிற்சி அளிக்கும் ஒரு கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவரையும் ஓரிரு வார்த்தைகள் பேச அழைத்தேன். அவர் அன்று கூறியது என்னவென்றால், “வேலைக்கான நேர்காணலின்போது ஆங்கிலத்தில் கொஞ்சமானும் தவறின்றி உரையாட முடிந்ததனால்தான் எனக்கு வேலை கிடைத்தது” என்பதுதான். இதுதான் நிதர்சனமான உண்மை.
இந்தத் தலைமுறையில் நாம் எல்லோரும், அதாவது கணினியைக் கைக்கொண்டு, இணையத்தில் புகுந்து பல தொழில் நுட்பங்களைப் பாவித்து, தமிழில் வலைப்பதிவிடும் சுமார் 450 பேர்கள், மற்றும் அதனைப் பார்வையிடும் இன்னொரு நூறுபேர், ஆங்கில அறிவைப் பெற்று, ஓரளவு நல்ல வேலையுடன், நன்கு வாழ்க்கையில் ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செட்டில் ஆகிவிட்டோம். ஆனால், நம் அடுத்த தலைமுறையினர், சமுதாயத்திலும், பொருளாதார ரீதியிலும் பின் தங்கிய அடுத்த தலைமுறையினர், நம்மைப்போல் அல்லது நம்மைவிட மேன்மையாக வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா என்பதுதான் என் கேள்வி. ஏன் அவர்கள் தமிழில் மட்டும் பயில வேண்டும்? சென்ற மாதம் ஒரு கிராமத்துக்குச் செறிருந்தேன். ஒரு பள்ளி மாணவன் கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் நான் படித்த பகுதி இதோ:-
“லூயிஸ் டிபிராக்ளேயின் பொருண்மையின் ஈரியல்புத் தன்மையைப் பற்றிய ஆய்வானது எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் கட்டமைப்புக்கும், எலெக்ட்ரான் விளிம்பு வளைவின் மூலம் திண்மங்களின் பரப்பின் அமைப்பைப் பற்றி அறிவதற்கும் உதவுகிறது. அவருடைய ஆய்வானது அணுக்கள் மற்றும் மூலக்குறுகள் போன்ற சிறிய துகள்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்”
இதனை எனக்கு விளக்க முடியுமா என்று அந்தப் பையனைக் கேட்டேன். “ஏதோ தேர்வுக்காக உருப்போட்டென். இப்ப அதையெல்லாம் கேக்காதீங்க” என்று எழுந்து சென்றுவிட்டான். குறைந்த பட்சம் சயன்ஸ், கணக்கு போன்றவற்றையாவது ஆங்கிலத்தில் கற்பிக்கலாமே என்று தோன்றியது. என் எண்ணம் தவறா?
சரி. ஆங்கிலத்தை விடுத்து நம்நாட்டு மொழிகளிடம் வருகிறேன். திராவிட மொழிகளாக நாம் ஒத்துக்கொள்ளும் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலுமே சமஸ்கிருதமும், இந்தியும் பெருமளவில் கலந்திருக்கிறது. அந்த மொழிகள் பேசும் பகுதிகளில் வடமொழி எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது. ஆனால் அங்கு தமிழ் எதிர்ப்பு வேரோடி நிற்கிறது என்பது உண்மை. சந்தேகமிருந்தால் குமிளி, தேக்கடி, புனலூர். இடுக்கி பகுதிக்குச் சென்று “நான் பாண்டி” என்று சொல்லிப்பாருங்கள்! கன்னட தேசத்தில் என்ன நடக்கிறது என்பது தெரிய, தொடர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாலே போதும். ஆந்திராவில் “அரவத்”தின் மேல் வெறுப்பு அவ்வளவாக இல்லையென்று சொல்லலாம். அதற்குக் காரணம் ஈ.வே.இராமசாமி நாயக்கரா என்பது எனக்குத் தெரியாது!
நாம் இப்படியே வேற்றுமொழியை விரட்டுவோம் என்று கொக்கரித்துக் கொண்டிருந்தால் நம் அடுத்த தலைமுறையினர் பிறருடைய வெறுப்பை எதிர் நோக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் அல்லவா? ஏன் நாம் அதனைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது? நம் மொழிதான் தொன்மை வாய்ந்தது என்று பறைசாற்றிக் கொண்டிருந்தால் அடுத்தவருக்கு ஒரு காம்ப்ளக்ஸை உண்டுபண்ணுகிறோமல்லவா. மொழியே இனம் என்றால், இலங்கையில் இந்தியாவிலிருந்து குடிபோன தமிழர்கள் மத்தியில் யாழ்வாழ் தமிழர்கள்மேல் ஏன் அவ்வளவு வெறுப்பு? எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியாத இன்னொன்று உண்டு. இலங்கைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்னையின் ஆழத்தை தமிழ்நாட்டில் நன்கு அரிந்தவர் வெகுச்சிலரே. அதனை விளக்குவது, தம் மக்களுக்காக ஆக்க ரீதியில் ஏதாவது இணையத்தின் இணைப்புகள், பாலங்கள் போன்றவற்றைக் கொண்டு உதவிகள் செய்வது போன்றவற்றை விடுத்து, ஏன் சிலர் இங்குள்ள ஜாதி துவேஷத்தைப் பற்றியே பேசி மேன்மேலும் பிளவுகளுக்கும் வெறுப்புனர்வுகளுக்கும் நெய் ஊற்றி வேள்வி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
முதலில் வாயில் கூழாங்கற்களைப் போட்டு தமிழின் ஆதாரமான “ழ”வை உச்சரிக்கப் பழகுவோம் என்று வேண்டி, “வருக வருக, வளமை பெருக” என்று வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!
Permalink
Good post … nice points .. Who cares about the future generation .. Need of the hour is Votes.
Permalink
வாங்க எஸ்.கே நீங்க இந்த வார நடசத்திரமா. வாழ்த்துக்கள். நீங்கள் சொன்னதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. கொஞ்ச நேரம் கழித்து வந்து பதிகிறேன்.
Permalink
///மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலுமே சமஸ்கிருதமும், இந்தியும் பெருமளவில் கலந்திருக்கிறது. அந்த மொழிகள் பேசும் பகுதிகளில் வடமொழி எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது.///
கிச்சு,
வடமொழி எதிர்ப்பு இன்று தீவிரமாய் இல்லாவிட்டாலும், இன்னும் எஞ்சி இருப்பதன் காரணத்தை அறிய் கொஞ்சகாலம் பின்னால்போனால்தான் தெரியும்.
உண்மையில் இது ஆதிக்கம் செலுத்தும் ஒரு மொழியிடமிருந்து தம் மொழியைக் காத்துக்கொள்ளும் பகீரதப் பிரயத்தனப் போராட்டத்தின் எச்சம்தான் அது.
அன்று இந்தி எதிர்ப்பு வந்ததற்கான காரணத்தை அறிய நாற்பதாண்டுகள் பின்னால் போனால்தான் தெரியும். குறைந்த பட்சம் உ.பி, பீகாரில் யாராவது நண்பர்கள் இருந்து அவர்களிடம் சிலநாட்கள் பேசிப்பாருங்கள் ஏனென்று புரியும் அதற்கான நியாயத்தை உணரமுடியும்.
கர்நாடகாவில் தமிழுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று பொதுவாய்ச் சொல்லிவிட இயலாது. உண்மையில் பெங்களூர் போன்ற சில இடங்களைத் தவிர மற்ற கர்நாடக மக்கள் மென்மையானவர்கள் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதக் கலப்பால் உருவானவை. இன்னும் சொல்லப்போனால் தமிழின் சாயலை மிக அதிகம் கொண்டிருப்பவை.
இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடுகளைக் காண இயலாது. தமிழின் வரலாறு சமஸ்கிருதத்துக்கு இணையான வரலாறைக் கொண்டது. சமஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபட்டது, தனித்தன்மையைக் கொண்டது. தமிழ் ஒட்டாமல் போனதுக்குக் காரணம் இதுவும் ஒன்று.
இந்தி எதிர்ப்பு என்பது அம்மொழியின் மீது வந்த வெறுப்பல்ல, மாறாக அந்த மொழி பேசும் மக்களின் ஆதிக்க மனப்பான்மையால் தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய எதிர்ப்பேயாகும். இன்றும் பட்டம் பல பெற்ற ஆய்வு செய்துகொண்டிருக்கும் உ.பி. பீகார், ம.பி சேர்ந்த படிப்பாளிகள் சிலர் இந்தி இந்தியர்களின் “தாய்மொழி” என்று தீவிரமாய் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நானே நேரில் கண்டிருக்கிறேன். தாய்மொழிக்கும், தேசியமொழிக்கும், அலுவல் மொழிக்கும், செம்மொழிக்கும் வித்தியாசம் பல பட்டம் பெற்றவர்களுக்குக் கூடத் தெரியவில்லை. அங்குள்ள் சாதாரண மக்களின் கதி ???.
Permalink
அந்த இளவரசர் ஜோக்… ஹா, ஹா, ஹா. :-))
Permalink
அந்தப்பெட்டிக்கடை ஜோக்… ஹா, ஹா, ஹா. :-))
Permalink
தமிழ் வாழ்க – ஒரு பின்னூட்டு
தமிழ் வாழ்க என்ற தலைப்பில் திரு கிச்சு பதிந்த பதிவிற்கான பின்னூட்டு, பெரிதாய் இருந்ததால் இங்கு இடமுடியவில்லை. எனவே இதை என்னுடைய வளவில் தனிப்பதிவாக்குகிறேன். பொறுத்துக் கொள்க!
http://valavu.blogspot.com/
அன்புடன்,
இராம.கி.
Permalink
கிச்சு அவர்களே ஆங்கிலம் கற்கவேண்டியது அவசியம்தான் அதை மறுப்பதற்கில்லை.ஆனால் தமிழை அழிந்துவிடாமல்(வாழும் மொழியாக)வைத்திருப்பது அதைவிட அவசியமல்லவா?மொழி ஒரு ஊடகம்தான் என்றில்லை இன்று தமிழால் நான் உங்களுக்கு விளங்கப்படுத்தக் கூடிய சில உணர்வுகளை சத்தியமாக ஆங்கிலத்தில் விளங்கப்படுத்த முடியாது அவ்வாறே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்.சந்தைப் பொருளாதாராத்தில் ஆங்கிலம் கருவியாக இருக்க முடியுமே தவிர வாழ்வாக முடியாது.
Permalink
//முதலில் வாயில் கூழாங்கற்களைப் போட்டு தமிழின் ஆதாரமான “ழ”வை உச்சரிக்கப் பழகுவோம் என்று வேண்டி, “வருக வருக, வளமை பெருக” என்று வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!//
வலைப்பூவின் இவ்வார நட்சத்திரம் கிச்சு அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன். வாயப்பயம் என்று சொல்லும் காலம்போய் வாழைப்பழம் என தேன்தமிழில் அனைவரும் பேசும் காலம் வருமென்று நம்புவோம்.
Permalink
மூர்த்தி.. ‘தேன் தமிழில்’ தானே…?! ஆமாமாம்…. இப்போவெல்லாம் வலைப்பதிவுகளின் பின்னோட்டத்தில் தேன் தமிழ் தான் பூந்து வெளையாடுது!!
கிச்சு சார்… கலக்குறீங்க..! இந்த வார நட்சத்திரமா!!