இந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.
மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.
இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.
இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
ஒவ்வொரு மாதமும் ஜிஎன்பியைப் பற்றி சொற்பெருக்காற்றுவதற்காக நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் பேச்சாளர்களில் சிலர் கர்நாட இசைக்கோ, ஜிஎன்பி அவர்களுக்கோ எந்தவித “ஸ்நானப் பிராப்தி”யும் இல்லாதவர்களாக அமைந்திருந்ததுதான் ஒரு தமாஷாக இருந்தது. அந்த விருந்தினர் ஏதேனும் ஒருவகையில் பலர் அறிந்த பெரிய மனிதராக இருந்தால் மட்டும் போதுமா? பேச எடுத்துக் கொண்ட பொருளுக்கு சற்றேனும் தொடர்பு இருக்க வேண்டாமா?
ஒரு மாத நிகழ்ச்சிக்கு பிரபல வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ்.சுவாமிநாதனை அழைத்திருந்தார்கள். அவரை ஏதேனும் வேளாண் கருத்தரங்கிற்கு பேச ஆழைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அவர் பாவம். “நீங்கள் எல்லோரும் ஜிஎன்பியைப் பற்றி மிகவும் சிறப்பாக புகழ்ந்திருக்கிறீர்கள். அதனால் அவர் ஒரு தலை சிறந்த வித்துவானாகத்தான் இருந்திருக்க வேண்டும். நான் அவர் பாட்டைக் கேட்டதில்லை. நான் தான் எப்போதும் பல வெளிநாட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேனே” என்று ஏதோ பேசி ஒப்பெத்தினார். நம்மூர் வழக்கப்படி அதற்கும் சபையோர் அனைவரும் கரவொலி எழுப்பி தங்கள் கடமையைச் செவ்வனே செய்தனர்.
இன்னொருவர் வேறு விதம். என் நண்பர் லலிதா ராம் எழுதியுள்ள ஜிஎன்பியின் சுயசரிதை நூலை கையில் பிடித்துக் கொண்டு “ஜிஎன்பியின் தந்தையின் பெயர் ஜி.விநாராயணசாமி ஐயர்” என்று படிக்க ஆரம்பித்தார். அத்தோடு விட்டாரா. ஜிஎன்பி ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றும்போது அவருக்கு நான் உதவி செய்திருக்கிறேன் என்று சுய புராணத்தை வேறு அவிழ்த்து விட்டார். வயதையும் வருடங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது நிச்சயம் நடந்திருக்கும் சாத்தியம் லவலேசமும் இல்லை என்பது புரியும். ஆனால் சந்தடி சாக்கில் தன் புராணத்தையும் சிந்திவிட்டுப் போகும் போக்கு சாதாரணமாகவே பலரிடம் இருப்பதால் எவரும் அதை லட்சியம் செய்யவில்லை.
இன்னொரு கூத்து நடந்தது. ”சங்கீதப்பிரியா” என்னும் இசை ஆர்வலர்கள் கொண்ட குழுவினர், பதிவு செய்யப்பட்ட ஜிஎன்பி இசையை செவி மடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நகரத்தில் உள்ள பெரிய மனுஷாளின் சபை ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்து விட்டனர். அங்கு ஒரு பிரபல திரைப்பட வரலாற்றாளர் (Film historian) பேச எழுந்து ”சகுந்தலையில் ஏதோ ஜிஎன்பி மூக்கால என்னமோ பாடியிருப்பாரே, பைரவியோ என்னமோ, என்ன அது” என்று எகத்தாளமாகப் பேசி தன் இசை மேதாவிலாசத்தை அறங்கேற்றினார். உண்மையில் அன்று வருகை தந்திருந்த ஜிஎன்பியின் ரசிகர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ரத்தம் கொதித்திருக்கும். நாகரிகம் கருதி அமைதி காத்தனர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!
அப்படி அவர் போகிற போக்கில் குறிப்பிட்ட பாடல் எது தெரியுமா? காம்போதி ராகத்தில் வேறு ஒருவருமே கையாண்டிராத வகையில் இரண்டு நிமிடத்திற்கும் சற்றுக் குறைவான நேரத்தில் அந்த ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் குழைத்து ஜிஎன்பி பாடியுள்ள “எனை மறந்தனன்” என்று தொடங்கும் விருத்தம் (இங்கே கிளிக் செய்து கேட்கலாம்). அதைக் கேட்பதற்காகவே அந்தக் காலத்து நாதஸ்வர வித்வான் திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை மீண்டும் மீண்டும் சகுந்தலை திரைப்படத்தின் அந்தக் காட்சியை மட்டும் பார்த்தாராம். மேலும் மகாராஜபுரம் சந்தானம் தனக்கு இசை கற்பதற்கான ஆர்வம் வந்ததே அந்த காம்போதி விருத்தத்தைக் கேட்ட பிறகுதான் என்று கூறியிருக்கிறார்.
அது தவிர ஜிஎன்பியைப் பற்றி ஒருவர் தயாரித்துள்ள டிவிடியை ஒரு நாள் காண்பித்தார்கள். அதில் ஆடியோவும் சரியில்லை, வீடியோவும் சரியில்லை. ஒரு டாகுமெண்டரி எப்படி தயாரிக்கக் கூடாது என்பதற்கு அது ஒரு உதாரணம் என்றுதான் அதைக் கண்டவர்கள் பலர் விமரிசித்தனர்.
சரி. ஜிஎன்பியைப் பற்றி அறியாதவர்கள்தான் அவ்வாறு எதோ பேசி சமாளித்தனர். ஆனால் அவருடன் பழகியவர்கள், வேறு வகையில் தொடர்பு கொண்டவர்கள், அவரால் ஆதாயமடைந்தவர்கள் – இந்த வகையினர் பேசியவைதான் இன்னும் கொடுமையாக இருந்தது.
ஒரு பெரிய மனிதர் தன் தந்தைக்கு ஜிஎன்பி கால் பிடித்துவிட்ட பெருமையை சொல்லி மகிழ்ந்தார். மேலும் ஜிஎன்பியின் நல்ல தரத்துடன் கூடிய பாடல் பதிவுகள் பல அவருடைய ரசிகர்களுடைய சேமிப்புகளில் இருக்கும் நிலையில், அந்த நபர் ஒரு திராபையான ரெகார்டிங்கைப் போட்டு வலுக்கட்டாயமாக வந்திருந்தோரைக் கேட்க வைத்து, அதற்குச் சிகரம் வைத்தாற் போல் அதைப் பற்றிய விவரங்களையும் தப்பும் தவறுமாகச் சொல்லி பேஜார் பண்ணியது ஒரு காமெடியாக இருந்தது!
ஜிஎன்பியின் ஆதாமார்த்த நண்பராக அறியப்பட்ட இன்னொருவர், தனக்குச் செல்லமான ஒரு மிருதங்க வித்வான் பக்கவாத்தியம் வாசித்ததால்தான் ஜிஎன்பிக்கு பெருமை வந்தது என்று சரித்திரத்தையே மாற்றி எழுத முற்பட்டது அந்த மேதையின் நினைவுக்கு அவர் செய்த துரோகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் பல கச்சேரிகளில் ஜிஎன்பியுடன் பின்பாட்டுப் பாடிய அவருடைய சீடர் ஒருவர் பேசும்போது தன் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து ஜிஎன்பி வீட்டிலேயே தங்கியிருந்து அவரிடமிருந்து சங்கிதம் கற்று அவருடன் பாடிவந்த கதையைச் சொல்லிவிட்டு, அவருடைய வேலையில் புரோமோஷன் ஆகி “கிளாஸ் ஒன்” ஆபீசர் ஆனதால் அவருடன் கச்சேரிக்கு தொடர்ந்து “உடன் பாடுவது” இயலாது என்று விலகிவிட்டதாக அறிவித்தார். அந்த நேரம் அடுத்தடுத்து நேர்ந்த இதயக் கோளாறினால் ஜிஎன்பியின் உடல் நிலை மிகவும் தளர்ந்துபோன காலகட்டம். அப்போது கட்டாயம் அந்த சீடருடைய உதவி அவருக்குத் தேவைப்பட்டிருக்கும். ஆனல் அதற்காக அந்த சீடர் தன் சொந்த வாழ்வின் முன்னேற்றத்தை தியாகம் செய்ய முடியுமா? அதை விடுங்கள். அதற்குப் பிறகு அவர் சொன்னதுதான் “சுரீரென்று” மனத்தைத் தைத்தது.
அதற்கு முன்னால் பேசிய பலர் ஜிஎன்பியின் பரந்த மனத்தையும், பணம் பண்ணுவதை அவர் ஒரு பெரிய நோக்கமாகக் கொள்ளாதவர் என்றும், தன்னோடு தொடர்புள்ள அனைவருக்கும் அவர் வாரி வழங்கிய வள்ளல் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்திருந்தனர். மேலும் தன் சிஷ்யர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, சம்பிரதாயமான பழங்காலத்து வித்வான்களைப் போல தனக்கு வேஷ்டி துவைத்துப் போட வைத்தவர் இல்லை என்றும் புகழ் பாடினார்கள். இதுபோல் பலருக்கும் – தன் பக்க வாத்திய்க்காரர்கள் உட்பட – அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே வாரி வழங்கியது உணமையிலேயே போற்றத்தக்கதுதானா என்பதில் எனக்கு சில கருத்துவேற்றுமைகள் உள்ளன. இந்த உலகத்தில் தனக்கு மிஞ்சித்தான் தருமம் எல்லாம். எதிலும் ஒரு கணக்கு வேண்டும். சுறுக்குப் பையை இறுக்கிப் பிடிப்பதில் தவறேதுமில்லை. பத்து குழந்தைகளைப் பெற்ற பெரிய குடும்பஸ்தர் தன் எதிர்காலத்திற்காக பணம் சேர்த்துவைக்க வேண்டியது கடமை. பக்க வாத்தியக்காரர்களுக்கு என்ன நியாயமோ அதை ஏமாற்றாமல் கொடுத்தால் போதுமானது. மெயின் வித்துவானுக்கு இணையாகவொ அல்லது அதற்கு அதிகமாகவோ கொடுப்பது சரியில்லை, அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். அதைப் பற்றி பிரிதொரு நாள் பேசுவோம். இப்போது அந்த சிஷ்யர் உதிர்த்த முத்துக்கு வருவோம்!
ஜிஎன்பி மிகவும் தாராள மனதுள்ளவர், சீடர்களை நண்பர்கள்போல் நடத்தி அவர்களுடைய முன்னேற்றாத்திற்கு மிகவும் உதவியாக இருப்பார், அதனால்தான் ஜிஎன்பியின் காலத்திலேயே டி.ஆர்.பாலு, எம்.எல்.வி போன்ற சீடர்கள் பிரபலமாக முடிந்தது, என்றுதான் அனைவரும் பேசினார்கள். இந்த சாதனை வேறு எந்த வித்வானுக்கும் கிடையாது என்ற உணமையையும் பலர் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட அந்த சீடருக்கு இது பொறுக்கவில்லை போலும். “அப்படி ஒரு பெருமையை தன் குருவுக்கு கொடுத்துவிடக் கூடாது” என்பதற்காகவே அதுபோல் பேசியவரை பார்த்து அவர் சொல்கிறார், “நான் வேஷ்டி தோய்ச்சும் போட்டிருக்கிறேன்” என்று! “This was the most unkindest cut of all” என்பது என் தாழ்மையான அயிப்பிராயம். ஜிஎன்பியின் வீட்டில் உண்டு, அவருடைய நிழலில் அனுபவித்து, ஒரு பரந்த மனதுடைய பெரிய மனிதரால் பயனடைந்து முடிந்தபின், அவர் காலமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி அவருடைய பெருமைக்கு இழுக்கு வரும்படியான விமரிசனம் ஒன்றைச் செய்யலாமா? இப்படியும் சில செய்நன்றி மறந்த மனிதப் பிறவிகள்!
இதோ நாள் நெருங்கி விட்டது. அடுத்த மாதம் ஜிஎன்பியின் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கப் போகிறது. அதைப் பற்றி ஆனந்த விகடனில் ஒரு சில கிசுகிசுக்கள் வந்திருந்த்தாக அறிகிறேன். நான் இன்னும் அதை வாசிக்கவில்லை. படித்தபின் அதைப்பற்றி என் விமரினங்களை எழுதுகிறேன்.
அதுவரை பொறுத்திருங்கள்!
ஒரு டிஸ்கி:
இக்கட்டுரையில் என் விமரிசனங்கள் மூலம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் இண்டியன் ஃபைனார்ட்ஸ் அமைப்பின் அர்ப்பணிப்பையோ, ஈடுபாட்டையோ குறைகூறவில்லை. அவர்கள் சிரத்தையுடன் தான் செய்கிறார்கள். ஆனால் பங்களிப்பாளர்களை சரியாகத் தேர்வு செய்யவேண்டும் என்பது என் விருப்பம். மேலும் நூற்றாண்டு விழாக்குழுவின் அமைப்பாளர் திரு. மண்டலம் சுப்பிரமணியம் அவர்களும், இசைப் புரவலர் திரு. நல்லி குப்புசாமி செட்டி அவர்களும் மிகவும் ஈடுபாட்டுடன் ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை நடத்தி வருவது பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.
Permalink
சகுந்தலை சினிமாவில் எம் எஸ் பாடிய பாட்டுக்களில் மட்டும் வித விதமான சங்கதிகள் வரும்படியகவும், ஜி ஏன் பி பாடும் பாட்டுகளில் மொட்டையாக சங்கதிகளே வராமலும் செய்திருந்தார்களாம்.(ப்ரேமையில், மனமொகனாங்க). ஆதனால் காம்போதி விருத்தத்தை பாட ஒப்புக்கொண்டார்களாம்