திரு. ஞானியார் ரசிகவ் அவர்களின் “இரட்டை முதுகலைப் பட்டதாரிகளை”ப் பற்றிய இந்தப் பதிவைப் படித்தவுடன் என்னுடைய அனுபவங்களையும் பதிக்கலாமென்று எண்ணினேன்.
முன்பெல்லாம் திருச்சி கோட்டை இரெயில்வே நிலயத்திற்குப் போகும் வழி மிக இருட்டாயிருக்கும். இரு பக்கமும் புதராக வேறு இருக்கும் (இப்போது முழுதுமாக உருமாறிவிட்டது). பொழுது சாய்ந்தபிறகு யார் அந்தப் பக்கம் போனாலும் அங்கு அலைந்து கொண்டிருக்கும் “அழகிகள்” கையைப் பிடித்து இழுத்து விடுவார்கள். இதனால் விளக்கு வைத்தபிறகு அந்தப் பக்கம் போவதை பெரும்பாலும் எல்லோரும் தவிர்ப்பார்கள் – வாடிக்கையாளர்களைத் தவிர.
ஒரு முறை என் ரூம்மேட்டை ஜங்ஷன் சென்று ரயிலேற்றிவிட்டு அவனுடன் கோட்டை வரை வந்து, பின் அங்கு இறங்கி டாடா காட்டிவிட்டு வெளிவந்தேன். இரவு சுமார் 10 மணியிருக்கும். ஸ்டேஷனிலிருந்து மெயின் ரோடு வரையிலான பாதையை வேகவேகமாகக் கடக்க முற்பட்டேன். இருட்டில் முகம் தெரியாத பூதங்கள் இரண்டு என்னை வழிமறித்தன. “டேய், என்னடா ஓடர? இதோ பார், அந்த ஐயா எப்படி எங்களோட வர்ரார் பாரு. நீயும் வாடா. காசை அப்பறம் கொடு. வாடா” என்றபடி கையைப் பிடுத்து வலிக்கத் தொடங்கினார். எனக்கு நடுங்க ஆரம்பித்தது. கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். “ஓடராம் பாருடா, டேய், ஒனக்கு சாமானம் இல்லே?” இப்படிக் கூப்பாடு போட ஆரம்பித்தனர். தெப்பக்குளக்கரையில்தான் என் ஓட்டம் நின்றது. அதற்குள் வியர்த்து விட்டது. அப்பா, அன்றைக்கு எனக்கு இரத்தக் காட்டேரியெல்லாம் கனவில் வந்தன.
நான் வசித்த ஆண்டார் தெரு முனையும், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதியும் இதுபோன்ற பரத்தமை வணிகத்திற்குப் பேர்பெற்றது. அப்போதெல்லாம் இவ்வளவு கடைகளோ, பர்மா பஜாரோ கிடையாது. அங்கு வசித்தவர்கள் இந்தக் கரைச்சலை ஒழித்து, அந்த ஏரியாவுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைப்பதற்காக ஒன்றுகூடி திரு. ஐயன் பெருமாள் கோனார் தலைமையில் ஒரு குழு அமைத்து சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பிறகு இது குறைந்தது. வெகு நாட்கள் அங்கிருந்த ஒரு தெரு முக்கில் “விபசார வீடுகளுக்கு வருபவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப்படும்” என்ற போர்டைப் பார்த்திருக்கிறேன். அதுபோல் சின்னக் கடைத்தெரு பகுதியையும் குறிப்பிடுவார்கள். அங்கெல்லாம் ஒரு முறை சென்று என்னதான் செய்கிறார்கள் என்று (ஒரு பூராயத்திற்காக) பார்க்கவேண்டுமென்று ஆசை. ஆனால் போதுமான தைரியமில்லை. நல்ல பிள்ளையாகவே வளர்ந்ததுதான் காரணமோ என்னமோ!
அந்தக் காலத்தில் விராலிமலை போகிறேன் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அதேபோல் சென்னையில் கோடம்பாக்கம் போகிறேன் என்றாலும் அதுதான் பொருள்.
ஒரு நள்ளிரவில் மதுரையில் ஸ்டேஷனில் இறங்கி விடுதியை நோக்கி டவுன் ஹால் ரோடு வழியாகச் செல்லும்போது ஒருவன் என் கூடவே மரியாதையாக நடந்து வந்து, “சார், என்ன சார் வேகமா போறீய்ங்க. இப்பவே பாதிராவு ஆச்சில்ல, இனி போய் என்ன செய்ய? என் கூட வாங்க. இந்த மணி தொழில்ல சுத்தமில்ல. மத்த பயலுகள்ளாம் சும்மா 16 வயசு, 18 வயசுன்னு பொய் சொல்லிட்டுத் திரியுவாங்க. இந்த மணிகிட்ட அதெல்லாம் கிடையாது. கியாரெண்டியா 25-க்கு தாண்டாது. அயன் சரக்கு. உங்களை மாதிரி பெரிய அதிகாரிகளுக்கின்ன கொணாந்தது. வாங்க, ரூம்பெல்லாம் போட்டு வைச்சிருக்கான் இந்த மணி” என்று கேன்வாஸ் பண்ண ஆரம்பித்தார். அப்பெல்லாம் நான் தெளிஞ்சுட்டேன், பயந்தெல்லாம் ஓடல்ல. “அப்பா மணி, இப்ப ரொம்ப டயர்டா இருக்கு. ரூமுக்கு போய் தூங்கணும். நாளைக்கு பார்க்கலாம்” என்றேன். அவர் கொஞ்சமும் மனம் கோணாமல் “நாளைக்கு இந்த முக்கில வந்து ‘மணீ’ன்னு ஒரு குரல் கொடுங்க. ஓடி வந்துடுவமில்ல”. என்றார். இன்னும் எனக்கு மணியின் சேவையைப் பெறும் பாக்கியம் கிட்டவில்லை!
சில நாட்களுக்குமுன் என் மனைவி வெளிநாடு சென்றிருந்தபோது என் நண்பரொருவர் ஒரு செல்பேசி எண்ணைக் கொடுத்து, ஒரு பெயரையும் கூறி, “வார முடிவில் இந்த எண்ணுக்கு டயல் செய்து, ‘ஒரு நதி கடலைத் தேடுகிறது’ என்று (ஆங்கிலத்தில்) சொல். பிறகு அவளே பேசுவாள். உனக்கு கம்பெனி கொடுப்பாள். கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்” என்றான். எனக்கு ஒரே த்ரில் (திகிலும் கூட). அதையே யோசித்தவண்ணம் படுத்தேன். லேசில் தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து பேப்பரைப் புரட்டினால், தன்னைக் காதலிக்கவில்லை யென்பதற்காக ஒரு நல்ல பெண்ணின் கைப்பேசி என்ணை, இதுபோல் “கால்கேர்ல்” நம்பர் என்று பலரிடம் கொடுத்து, அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான் என்று ஒரு செய்தி வந்திருந்தது. அவ்வளவுதான்! அந்த என்ணை நாளது வரையில் அழைக்கவில்லை என்றாலும் அந்த எண் என் டயரியில் இன்னமும் இருக்கிறது என்னவோ உண்மை! 😉
ஆனால் எனக்கென்னவோ இந்த விலைமாதர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் நிச்சயமாக ஒரு தேடுதலினாலோ, திமிரினாலோ இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டர்கள். அவர்கள் அந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றே நினைக்கிறேன். பேங்காக்கில் இதுபோல் “ஜில்பாஞ்சி” எல்லாம் நிறைய இருக்குமாம். தெரிந்தவர்கள் விளக்கலாம்! 🙂