இன்னொரு (ஆன்மீக) அம்மா!

நாட்டில் இதுவரை தோன்றியுள்ள “அம்மா”க்கள் படுத்தல்களே தாங்க முடியவில்லை! விதவிதமான அம்மாக்கள் – அம்மாக்கு பூசாரியாக இருந்தவர் தானே அம்மா என்று பரிணாம வளர்ச்சி பெற்றவர், “அம்மா பகவான்”, ஜில்லெல்லாமுடி அம்மா, அமிர்தானந்த அம்மா – இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்!

இப்போது லேடஸ்டாக சேர இருப்பது “முத்துலட்சுமி அம்மா”!

ஆம், அரசியலா, ஆன்மீகமா என்ற குழப்பத்தின் முடிவில் தமிழ் மர(ற)க் காவலன் வீரப்பன்(ர்) மனைவி தேர்ந்தெடுத்திருப்பது “ஆன்மீகம்”தான்! முதலில் அரசியலில் ஈடுபட்டு அரசியாகப் போகிறேன் என்று குரல் கொடுத்தார். அப்புறம் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ஆன்மீகம்தான் மிகச் சிறந்தது, நம் நாட்டில் வளம் கொழிக்கும் துறை அதுதான் என்று முடிவு செய்துவிட்டார். முதற்கட்டமாக “பிரஜாபீட ப்ரஹ்ம குமாரி”களுடன் சேர்ந்து மலைச் சாரலில் போய் தவம் செய்யப் போகிறார். பிறகு வேரொரு பெயரில் முழு “அம்மா”வாக அவதாரமெடுத்து வந்து பக்தர்களூக்கு அருள் பாலிக்கப் போகிறார். வீரப்பன் சரித்திரத்தில் தன் அருள்வாக்கினால் கண்டு பிடித்தவற்றையெல்லாம் சேர்த்து என்னவெல்லாம் படையலிடப் போகிறார்களோ தெரியவில்லை.

முடி அலங்கார நிலையத்தில் கிடைத்த நெற்றிக்கண் பழுப்பு இதழில் வீரப்பன் மனைவியின் உதவியுடன்தான் அவனைப் பித்தார்கள் என்று (அத்துடன் ஒரு கில்மா உபகதையுடன்) படித்தேன். இதுபோல் வீரப்பன் வேட்டை பற்றிய பல சுவாரஸ்ஸியமான கதைகளைத் தொகுத்து இணையத்தில் யாராவது வெளியிடலாமே : சு.ரா – வே.சா; ர.ஸீ – ஜெ.மோ சம்வாதங்களைவிட இது பல மடங்கு விறுவிறுப்புடன் இருக்கும். “எரிஞ்ச கட்சி – எரியாத கட்சி” லாவணி போல, “வீரப்பன் சுட்டானா, சுடப்பட்டானா”, “பிடித்துச் சுட்டார்களா, சுட்டுப் பிடித்தார்களா” இப்படி ஊருக்கு ஊர் பட்டி மன்றம் வைக்கலாம் – லியோனி, பாப்பையா போன்றவர்கள் புகுந்து விளையாடலாம்.

இப்படி வீரப்பன் விவகாரமே ஒரு குடிசைத் தொழிலாகி பல பேருக்கு வேலை கிடைக்கும். ஆகா, இருந்தும் கொடுத்தான் வீரப்பன், செத்தும் கொடுத்தான் வீரப்பன் என்று வில்லுப்பாட்டு படிக்கலாம்.

நான் இப்பவே வரப்போகும் அம்மாவுக்கு சிஷ்ய கோடியாக கையில் அப்ளிகேஷனுடன் தயாராகிவிட்டேன்!

1 Comment


  1. |அம்மாவுக்கு சிஷ்ய கோடியாக கையில் அப்ளிகேஷனுடன் தயாராகிவிட்டேன்!|

    :):)

    ஆன்மீகமா..? நேற்று மாலைமலர்/முரசில் நான் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்று அம்மையார் அவர்கள் திருவாய் மலர்ந்திருந்தாரே? உங்களுக்கு யார் சீட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு திராவிட கட்சி சீட் கொடுத்தால் நிற்பேன் என்று வேறு சிக்னல் கொடுத்திருக்கிறாரே?

    வெங்கடேச பண்ணையார் வீட்டம்மா மாதிரி தனக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார் போலும்.

    எதற்கும் தொண்டராவதற்கும் தயாரக இருங்கள் :-))

Comments are closed.