எஸ்.வி.வி-யின் “உல்லாஸ வேளை”யில் “சங்கீதப் புளுகு” பற்றி எழுதி யிருப்பார்.
கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட “ஸ்டிரைட் ட்ரைவ்”, “கவர் ட்ரைவ்” என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி, தொடையைத் தட்டி, மேலும் தன் கைகளையோ அல்லது தாம் அமர்ந்திருக்கும் சேர் மேலேயோ உரக்கத் தட்டி, “தப்புத்”தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணர் போல பீலா விடுபவர்கள் அநேகம். நீங்கள் கேட்கும் பாட்டின் இராகம் தெரியவில்லையென்றால் பக்கத்தில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் (பெரும்பாலும் அவர்கள்தான் கொஞ்சம் ஞானஸ்தராக இருப்பார்கள்) “இது என்ன” ராகம்” என்று கேட்டால் ”ஏதோ இந்த ஒரு ராகம்தான் இவருக்குத் தெரியாது போலிருக்கிறது” என்று நினைத்துக் கொள்ள சான்ஸ் இருக்கிறது. ஆனால் நீங்கள் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்கள் பாடப்படும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் சுத்த “ஞான சூனியம்” என்று சந்தேகமில்லாமல் தெரிந்துவிடும் அபயம் இருக்கிறது!
இதைத் தவிர்க்க என் நண்பரொருவர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். திடீரென்று, “இது பேகடாவா, தர்பாரா” என்று கேட்பார். பக்கத்தில் இருப்பவர் தலையில் அடித்துக் கொண்டு, “ரெண்டுமில்லை, கீரவாணி” என்றால், “ஒஹோ, அதான் கொஞ்சம் சாயல் அடிக்கிறதே-ன்னு பாத்தேன்” என்பார். இதனால் அவர் ”இது ஒரும் வெத்து “ஃபிலிம்” கம்பெனி. சும்மா பந்தா காட்டுது” என்று நினைத்துக் கொண்டாலும், பக்கத்தில் இருக்கும் மக்கள், ”ஆஹா, இவ்வளவு ராகத்தின் பெயரெல்லாம் இவர் தெரிந்து வைத்திருக்கிறாரரே” என்று நினைக்கலாமல்லவா. அதற்குத்தான் இந்த டுபாக்கூர் வேலை.
இப்படியும் சிலபேர்!