மக்கள்மெய் தீண்டல்

தினமலர் எதிர்ப்பு இயக்கம் ஒன்று வலைப்பூக்களில் மும்முரமாக நடக்கிறது. அதனால் அதில் முனைப்பாக உள்ளவர்கள் தினமலரை ஒருவரி விடாமல் வாசித்து, விமரிசனம் கூடிய வசை பாடலை வலையேற்றிக் கொண்டிருப்பது வாடிக்கை. ஆனால் அதே தினமலரில் சில நல் முத்துக்களும் காணக்கிடைக்கின்றன என்பதனை அந்த முற்போக்காளர்கள் ஒத்துக் கொள்வார்களோ என்னவோ!

அவ்வகையில் தற்போது தினமலரில் வெளிவந்துள்ள ஒரு சிறப்பான, சமூகப் ப்ரக்ஞையுள்ள கட்டுரையைப் படித்தேன். இன்றைய நிலையில் மிக்க அவசியமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல அறிவுரைகளை ஸ்வர்ணா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதன் சுட்டி இதோ:-
“பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்”

சரி, தினமலர் கட்டுரையைப் படித்து விட்டீர்களா?
இனிமேல் என்னுடைய கருத்துக்கள்:-

இப்போதெல்லாம் இன்டெர்னெட் சாட்டிங், செல் போன், ஈமெயில் இது போன்ற ஊடுருவிகள் குழந்தைகளின் மனத்தைக் கெடுக்கின்றன. முன்பின் தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க விஷயங்களைக் கூட மணிக்கணக்காக சாட் பண்ணுகிறார்கள். இதனால் தெளிவான சிந்தனை உள்ளவர்களின் மனங்கள் கூட சலனப்பட்டு விடுகின்றன. எதையும் ஒரு தடவை முயன்று பார்த்தாலென்ன, அதில் என்ன தவறு, என்பது போன்ற எதிமறை உந்துதல்கள் எழுகின்றன. Children tend to rebel against their parents to fall in line with their peers. ஆனால் அந்த வயதில் அவர்களுக்குத் தவறான வழிகாட்டிகள் அமைந்து விட்டால் அவ்வளவுதான் – அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்கள் வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்படும்.

பெண் குழந்தைகள் மட்டும்தான் என்பதில்லை, ஆண் குழந்தைகளுக்குக் கூட மேற்கூறிய “ஸ்வர்ணா கார்னர்” அறிவுரைகள் பொருந்தும். ஏனென்றால் உலகில் பலவித வக்ரங்கள் பெருகிக் கிடக்கின்றன!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய இன்னும் சில முக்கிய வழிமுறைகள்:-

 • தெரிந்தவர், அறிமுகமானவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர், உறவினர் (நெருக்கமாக இருந்தால் கூட), பெரியவர், ஆன்மீக ஈடுபாடு உள்ளவர், காவி உடுத்தியவர்- இது போன்றவர்களிடமும கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது incest போன்ற மிக அருவருப்பான செக்ஸ் வக்ரங்கள் அதிகமாகி விட்டன.
 • எது good touch, எது bad touch போன்ற அறிவுரைகளை பெற்றோர்கள் விவரமாக குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி எந்தெந்த முறைகளைக் கையாண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
 • அதுபோல் யாராவது குழந்தைகளிடம் “ஒரு மாதிரி” நடப்பதாக பெற்றோர் மனதில் தோன்றினால் (அல்லது துளி சந்தேகம் வந்தாலும்) அவர்களை அறவே வெட்டி விடவேண்டும். இதில் நாசூக்கே பார்க்கக் கூடாது. எவ்வளவு பெரியவர்களாகவோ, வேண்டியவர்களாகவோ அல்லது சமுதாயத்தில் அந்தஸ்து மிக்கவர்களாகவோ இருந்தாலும், அவ்வாறான சூழ்நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட உறவைக் கத்தரிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம். மற்றவை அதற்குப் பின்னர் தான்!
 • ஆடை விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கப் பழக்க வேண்டும். தூங்கும்போது கூட விலகாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று விளக்க வேண்டும்.
 • குழந்தைகளை குற்றவாளிகள் (delinquents) போல் நடத்தக் கூடாது. அவர்கள் யார் மேலாவது குறைகளைக் கூறினாலும் தவறு அவர்கள் பக்கம்தான் என்ற mind-set-ஐ ஒழிக்க வேண்டும். திறந்த மனதுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். முழுமையாகக் கேட்கு முன்னரே முடிவெடுக்கக் கூடாது. அப்போதுதான் பயமின்றி நடக்கும் உண்மைகள் வெளி வரும்.
 • பெற்றோர்கள் நண்பர்கள் போல் பழகி சுலபமாக குழந்தைகள் தங்கள் பயங்கள், மனக் குமுறல்கள், தங்களிடம் மற்றோர் நடந்து கொள்ளும் முறைகள் முதலிய வற்றை தயக்கமின்றி வெளியே சொல்லும் சகஜமான சூழ்நிலையை நடைமுறைப் படுத்த வேண்டும். குழந்தைகளோடு மனம் விட்டுப் பேச அன்றாடம் நேரம் ஒதுக்க வேண்டும். இன்று என்ன நடந்தது, யார் யார் என்னென்ன செய்தார்கள் போன்ற leading questions களைக் கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மனம் மிகவும் இறுகிவிடும் – தனக்கு ஆதரவு இல்லை என்ற உணர்வு ஆதிக்கம் கொள்ளும். மேலும், போதுமான வழிகாட்டுதல் இன்மையால் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்கள். இது போன்று மனம் விட்டுப் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்தாமல் “பயம் ஒன்றே ஆயுதம்” என்று பழைய பஞ்சாங்கமாக இருந்தால் அந்த பயத்தைப் பயன் படுத்தியே பல கயவர்கள் குழந்தைகளை அடிமைப் படுத்திவிடும் அபாயம் உள்ளது.
 • நம் குழந்தை சின்னஞ்சிறிசுதானே என்று எண்ணி யாரிடமும் கொஞ்சவோ விளையாடவோ கொடுத்துவிட்டு விலகிச் சென்று விடாதீர்கள். செக்ஸ் வெறியர்கள் பச்சிளம் பாலகர்களைக்கூட விட்டு வைப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் (Beware of pedophiles!). இந்த செக்ஸ் விஷயத்தில் யாரையும் நம்பக் கூடாது. எவரெவர் மனத்துள் எவ்விதமான அழுக்கு குடி கொண்டிருக்கிறது என்பது வெளியில் தெரியாது. “நல்லவன் போலிருப்பான் சண்டாளன்!”

மனித மிருகங்களிடமிருந்து மழலைச் செல்வங்களைக் காப்போம்!

1 Comment


 1. Thanks S.K for giving such an useful link. The so called libereals who constantly attack Dinamalar, wont open their mouth on the skirmishes being carried out by Dinakaran or other yellow journals littering Tamil Nadu. Did somebody say ‘Hypocricy’?

  Thanks
  S.Thirumalai

Comments are closed.