புத்தகப் பரண்

சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்!) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். இது பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தை கீவளூரில் புத்தகக் கடை வைத்திருந்தபோதிலிருந்து தொடர்ந்து வரும் பழக்கம் (சுற்றுவட்டாரத்திலிருக்கும் பல ஊர்களுக்கு புத்தகக்கடையாக எங்களுடையது ஒன்றுதான் இருந்தது. நிகரலாபம் குறைவு என்பதால் பலர் இந்தத் தொழிலில் அப்போது ஈடுபடுவதில்லை). காகிதம், அச்சு மை, வார்ணிஷ் எல்லாம் சேர்ந்து அளிக்கும் ஒருவித வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிறகு முதல் பக்கத்தில் பெயர், தேதி, ஊர் முதலியவற்றை குறிப்பது (Metadata of ownership). மிகவும் பிடித்த ஆசிரியருடையதாயிருந்தால் “பொக்கிஷம்” என்றெல்லாம் எழுதி வைப்பேன்!

சரி. பிறகு? படிப்பதில்லையா? அங்குதான் ஒரு சைத்தான் வந்து தன் விஷமத்தை காண்பிக்கும். ஒரு பிரட்டல் பிரட்டிவிட்டு, “நம்முடைய புக்குதானே, எங்கே ஓடிப்போகப் போகுது; சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம்” என்று சோஃபா, படுக்கை, கணிப்பான் உறைவிடம், (கழிப்பான் தனியிடத்தில் கூட சில சமயங்களில் :)), நாற்காலி (எங்கள் கிராமத்தில் புதிதாக ஒரு நாற்காலி செய்து வந்த போது, முத்லில் அதில் வீற்றிருக்கும் பாக்கியம் செய்த வஸ்து ஒரு தவிட்டு மூட்டை – ஆனால் நான் முன்னேறிவிட்டேன். இப்பொதெல்லாம் அதன்மேல் புத்தகம், நோட்டு, குறுந்தகடு, பஜ்ஜி வைத்த தட்டு, காப்பி கோப்பை இவைதான் வீற்றிருக்கின்றன) என்று “கராத்தே” போல் அல்லாடிக் கொண்டிருக்கும்.

புத்தகங்களின் அடுத்த நிலை “பரலோகம்”தான்! அதாவது “பரண் லோகம்”. “லாஃப்ட்”கள் எதற்கு இருக்கின்றன? சிறிது நாட்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு அந்துருண்டை சகிதம் புதுக் கருக்குக் குறையாமல் மேலேறிவிடும். இப்படி அடுக்கி வைத்து அப்படியே நினைவிலிருந்து அகற்றியவைகள் அநேகம். உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு எம்பலில் கைக்கெட்டுமாறு வைக்கப்பட்டிருந்தால்தான் புத்தகங்கள் படிக்கப்படும். ஏழுகடல், ஏழு ஏணி தாண்டி எடுக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அவை “எழுத்தாணிப்பூச்சி’க்குத்தான் எடுப்புச் சாப்பாடாகும். அன்பர் ஹரி கிருஷ்ணன் அப்படித்தான் ஒருமுழ தூரத்தில் தன் பாரதி பற்றிய நூல்களையும் தொல்காப்பியத்தையும் “ரேக்”கியிருக்கிறார். ஏதேனும் கேள்வி கேளுங்கள். மூன்று நிமிடங்கள்தான் அவருடைய பதில்பெறும் நேரம் (SATA வண்தகடு வேகத்தில் செயல்படுவார்).

சில நாட்களுக்குமுன் இணையத்தில் சிலர் ஒரு படர்ச்சி இழையைத் (meme) தொடங்கினார்கள். “மீம்” என்றழைக்கப்படும் இந்தச் சொல் பலர் கையில் மாட்டிக்கொண்டு மிம்மி, கும்மி என்று வெம்மிக் கொண்டிருந்தது சில காலம். மெறியம் வெப்ஸ்டர் அகராதியிலிருந்து இந்த சொல்லின் சரியான உச்சரித்தல் அறியவேண்டின் இந்த சுட்டியை சிமிட்டினால் கேட்கலாம்! அந்த இழை ஓடிக்கொண்டிருக்கும்போது சில பாசாங்குசர்கள் புத்தகக்கடைப் பட்டியலில் கண்ட அனைத்து நூல்களையும் படித்துவிட்டதாக மளிகைக் கடை “ரோக்கா” போல அட்டவணையிட்டு “மெத்தப் படித்தவர்களாகி” அகமகிழ்ந்தனர் (உண்மையிலேயே தான் படித்த புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்து கொண்டவர்களை நான் பழிக்கவில்லை).

ஐயோ பாவம் ஆண்பால்சரி. நான் ஏதாவது படித்தேனா இல்லையா? அவசரப்படாதீர்கள். இப்போது கிடைத்துள்ள நீண்ட வாரமுற்றில் எத்தையாவது வாசித்துவிடவேண்டுமென்ற உறுதியுடன் நான் எடுத்துக் கொண்ட புத்தகம் வெறும் 160 பக்கங்களைக் கொண்ட நோஞ்சான். ஏனெனில் இப்போதுதான் டேவ் பேர்ரி எழுதிய ஆண்மகர்களின் அதீத குண விசேஷங்களைப் பற்றிய புத்தகத்தைப் படித்து சிரித்து, பின் ஒரு பதிவும் போட்டு முடித்துள்ளேன்.

அப்படி நான் படித்துக் கிழித்த தமிழ்ப் புத்தகம்தான் என்ன? நாளைவரை பொறுங்கள். இப்போது சுடச்சுட “மோர்க்கூழு” அழைக்கிறது!

Leave a Reply

Your email address will not be published.