திரை விலகுமா?

சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவர் ஒரு மூத்த அரசுத்துறை அதிகாரி. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? நடிகர் விவேக். நிகழ்ச்சி தொடங்கி வெகு நேரம் கழித்து, வரவேற்புரையெல்லாம் கடந்து, அந்த அரசு அதிகாரி தன் உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மிகவும் ஆர்ப்பாட்டமாக வந்தார் விவேக் – ஒரு கசமுசா சட்டை, குள்ளமான உருவம், முழு மேக்கப், மேடையில் ஏறியபின் ஒரு பெரிய கும்பிடு!

அந்த அதிகாரி பாவம். அவர் தயாரித்து வந்திருந்த உரையை ஏராளமான புள்ளி விவரங்களுடன் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்வையாளர் மத்தியிலிருந்து தொடர்ந்து கைதட்டல்கள். “ஓ” என்ற இரைச்சல். அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பேச்சில்தான் ஏதோ குறை என்றெண்ணி “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். புள்ளிவிவரங்கள் அவ்வளவாக சுவாரஸியமாக இருக்காதுதான். ஆனாலும் என் கடமையைச் செய்யவேண்டாமா” என்று கூறிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் கைதட்டல், கூச்சல், “விவேக் பேசட்டும்”.

ஆச்சு, அந்த ஆளை விரட்டியாயிற்று. அவரும் “கிரைண்ட்” பண்ணிக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம். விவேக் மைக்கைப் பிடித்தார். “என்னை வாழவைக்கும் ரசிகப் பெருமக்களே!” – பெருத்த கரகோஷம். முதலில் தனக்குமுன் பேசியவரை மறைமுகமாக கிண்டலடித்தார், “என்ன, ரொம்ப நொந்து போயிருக்கீங்களா? அன்ரிஸர்வ்டுல பிரயாணம் பண்ணினவங்க மாதிரி களைச்சுப் போயிருக்கீங்க”. பிறகு அரதப் பழசு இரெயில்வே சம்பந்தமான ஜோக்குகள் சிலவற்றை தட்டுத் தடுமாறி உதிர்த்தார். பிறகு எங்கே விட்டுவிடுவாரோ என்று நினைத்த “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” அயிட்டத்தையும் அவிழ்த்து விட்டார். பிறகு? பிறகென்ன, கைவசம் சரக்கு அவ்வளவுதான். “எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள், நல்ல உள்ளங்களே” என்று விளம்பரம் வைத்தார். சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி, ஒரே சொதப்பல்தான்.

இதிலிருந்து நம் மக்களுக்கு தெளிவாக ஒன்று புரிதல் வேண்டும். நடிகர்களுக்கு வரும் புகழுக்கு முக்கிய காரணம், வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களின் முக்கிய பங்களிப்புதான். அவர்கள் இல்லையெனில் இவர்கள் வெறும் ஓட்டைக் காலணாதான்! ஆனால் நம் மக்கள்தான் சினிமா நடிகர்களின்மேல் உள்ள மோகத்தில் மயங்கியிருக்கிறார்களே! அன்று பல சின்னஞ்சிறிசுகள் விவேக் என்ன உளறினாலும் சிரிப்பு என்று மயங்கி நின்றதைக் கண்டேன். அவரைக் “கண்ணால் காண்பதே எங்கள் பாக்கியம்” என்று முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள் பலர்.

என்று வரும் இவர்களுக்கு விவேகம்?

5 Comments


  1. எஸ்.கே என் கேள்வி, நீங்கள் ஏன் திரைப் பிரபலங்களை அரசு விழாவிற்கு அழைக்கிறீர்கள். முக்கால்வாசிபேர்களுக்கு, அரசும், அரசாங்கமும் என்ன செய்கிறது என்றே தெரியாது. அவர்களை அழைத்துவந்து மேடையில் உட்காரவைத்தால் இப்படித்தான் நடக்கும். சின்னஞ்சிறுசுகளுக்கு விவேக்கினை பார்த்த குஷி, வேறென்ன சொல்ல!


  2. Our people will not change. Hero worship, Matinee idols worship…idhellam romba extremeah irukku.

    I like your website. Can I link you up in mine?

    Thank you

Comments are closed.