தளப்பெயர்கள் ஜாக்கிரதை!

எங்கே என் திருநாம்?இன்டெர்னெட் டொமைன் பெயர்களைப் பதிவு செய்யும் முறைகளை மேற்பார்வையிட்டு முறைப்படுத்தும் அமைப்பான ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) தற்போது அதன் சட்டதிட்டங்களில் சில மாறுதல்களைச் செய்திருக்கின்றது. அதன்படி உங்கள் டொமைன் பெயரை ஒரு பதிவாளரிடமிருந்து (Registrar) இன்னொரு ரெஜிஸ்ட்ராருக்கு மாற்றும் முயற்சி எழுந்தபின், 5 நாட்களுக்குள் மறுப்பேதும் கூறவில்லையென்றால் அந்தப் பெயர் இன்னொருவருக்கு (புதிய பதிவாளர் மூலம்) மாற்றப்படும். இதற்கு முன் அந்தப் பெயரின் உரிமையாளர் (Administrative contact as per the registry) ஒப்புதல் கொடுத்தால்தான் மாற்ற முடியும் என்ற நிலை இருந்தது,

இந்த மாற்றல் முயற்சியை யார் வேண்டுமானாலும் கன்னம் வைக்க ஆரம்பிக்கலாம். ஒரு பதிவாளரிடம் சென்று ஒரு கணக்குத் தொடங்கி, அங்கே, “Transfer a domain” என்று இருக்கும் சுட்டியை சொடுக்கினால், (அதற்கான கட்டணம் – குறைந்த பட்சம் ஒரு வருட வாடகை – செலுத்திய பின்) அந்த டொமைனின் தற்போதைய பதிவாளருக்கு ஒரு விண்ணப்பம் போகும். உடனே அவர்கள், அந்தப் பெயரின் உரிமையாளர் கொடுத்துள்ள மின்னஞ்சல் விலாசத்துக்கு ஒரு மடல் அனுப்புவார்கள், “என்ன, மாற்றலாமா?” என்று. புதிய பதிவாளரும் ஒரு அஞ்சல் அனுப்புவார், “நீங்கள் ஒப்புகை கொடுக்கிறீர்களா? அப்படியானால் இங்கே கிளிக்கியுங்கள்” என்று. டொமைன் உரிமையாளர் ஒரு ஒலிம்பிக் சோம்பேரியாக இருந்து, என்றைக்கோ கொட்டாவி விட்டுப்போன அஞ்சல் முகவரியை மாற்றாமல் இருந்தால், இந்த மடல்களைக் காணப்போவதில்லை. அவ்வளவுதான், 5 நாள் மறுப்புக் கெடு முடிந்தவுடன், டொமைன் பெயர் “கோவிந்தா” தான்!

Washington Post நிறுவனம் கூட இதுபோல் தன் பெயர் ஒன்றை இழக்கும் நிலை வந்து, பின் எகிறி ஓடிப் பிடித்தார்கள்.

சரி, இதுபோல் டொமைன் திருநாமங்கள் ஜேப்படியாகாமல் தடுப்பதுதான் எப்படி?

பதிவாளர்களிடம் ஒரு பூட்டு இருக்கும். அதைப் போட்டுவிடச் சொல்லுங்கள் (Registrar Lock). ஆனால், அந்தப் பூட்டின் சாவி உங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்களாக மாற்ற விரும்பினால் திறக்க ஏதுவாக இருக்கும்.

Domain registration, hosting, control panel, Zone file, CName, A Name, DNS, Name server, MX records, canonical name, dynamic DNS, IP………….. இது போன்ற e-funda சமாசாரங்களைப் பற்றி எழுத ஆசை!

4 Comments


 1. எழுதுங்க கிச்சு, ஆர்வமா இருக்கேன்.


 2. நல்ல தகவல் கிச்சு. இது பத்தி இன்னும் விபரமாக தெரிந்து கொள்ள சுட்டி இடுங்களேன்.

  நன்றி,

  சாகரன்


 3. (படு) சுட்டிகளை வட்டிலில் எடுத்து வந்து அட்டியின்றி இட்டேனையா இதோ:-


  நெட்கிராஃப்ட் செய்தி

  http://www.netmechanic.com/news/vol7/domain_no11.htm

  http://www.whois.sc/news/2004-11/transfer-policy.html

  அத்தனையும் அருமையான தளங்கள்.
  அடிக்கடி எட்டிப் பார்த்தால, அடித்துச் சொல்வேன் அறிவு கூடுமென்று !

  எஸ்.கே என்பார் என்னை!


 4. காசி எழுதியது:
  // எழுதுங்க கிச்சு, ஆர்வமா இருக்கேன்.//
  ==================================

  செஞ்சிடுவோம்!

  நன்றி.

  எஸ்.கே

Comments are closed.