காணாததைக் கண்டேன்!

கண் பார்வையில்லாதவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் “பார்த்துக்” கொண்டதைப் பற்றி முன்னொரு கட்டுரை எழுதியிருந்தேன்.

கண்கள் மூலமாக அல்லாமல் ஏனைய புலன்களால் நம் சுற்றுப்புறத்தை உணரும் ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. எங்கே? கண் மருத்துவ மனையில்!

கண் மூடிய தவம்கண்விழிகளை விரிவாக்க (dilation aka dilatation) கண்ணினுள் சில சொட்டுக்களை விட்டு கண்களை மூடிக்கொண்டு சமர்த்தாக உட்கார வைத்துவிட்டார்கள். அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் சிறிது சங்கடம். ஏதாவது பேசாவிட்டால் முகத்திலுள்ள தசைகள் வலிக்கத் தொடங்கிவிடும்!

காது கேட்கிறதுPupil சரியாக விரிவடையவில்லை என்பதால் மூன்று முறை மருந்து இடப்பட்டு, நிறைய நேரம் கண்மூடி தவம் செய்யும் நிலை ஏற்பட்டது.

முதலில் சுற்றி நடப்பது ஏதும் புரியவில்லை. “என்னமோ நடக்குது, மர்மமாயிருக்குது” என்பதுபோல் தான் உணர்ந்தேன். எங்கோ கதவை திறந்தார்கள் “கிறிச்” என்றது. மூடும் சத்தமும் ஒரு சிறிய “டுப்” என்று கேட்டது. எங்கோ சாலையில் ஒரு சைக்கிள் டயர் (+டியூப்) வெடித்தது – அது வெடிச் சத்தம் போலல்லாமல் “படார்” என்று தரையோடு தரையாகத் தேய்த்தது போல் இருந்தது.

நீண்ட காதுசிறிது சிறிதாக என் காதுகள் கூர்மையானது போல் உணர்ந்தேன். மெலிதான சப்தங்கள் கூட துல்லியமாக என் செவிப்பறையைத தாக்கத் தொடங்கின. என்னைத் தாண்டி யாரோ சென்றார்கள். பேண்ட் உராயும் ஒலி கேட்டது. அடுத்து சென்றது ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். நேற்று தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூவின் மணம் கொஞ்சம் மங்கலாக வந்தது. அந்தப் பெண்மணி கொஞ்சம் ‘தாட்டி’யாக இருந்திருக்க வேண்டும் – நடக்கும் போது ஏற்பட்ட காற்றின் சலனம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.

தூரத்தில் ஒரு நபர் மொபைல் ஃபோன் மூலம் தன் ஆபீசை நடத்திக் கொண்டிருந்தார். ஏதோ ஸ்டாக் குறைந்திருந்ததாம், அதை சரி செய்யாவிட்டால் இந்தந்த விதமான நரகங்கள் கிட்டும் எனபதை விலாவாரியாக விவரித்து ஒரு உதவியாளரை திட்டிக் கொண்டிருந்தார். சரி, நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம் – மூக்குக் கண்ணாடிக்கு எவ்வளவு பழுக்கப் போகிறதோ என்பது போன்ற topical கவலைகளைப் படுவோம்!

சாதாரணமாக உடலில் ஒரு அங்கம் பழுதடைந்திருந்தால் ஏனைய அவயவங்கள் கூர்மையாகச் செயல்படும் என்று சொல்வார்கள். மேலும் அது போன்ற குறையுள்ளவர்கள் சிறிது மனப் பிறழ்வுடன் பிறரை எதிரியாக பாவித்து ஏதேனும் கெடுதல் செய்ய முற்படுவார்கள், அல்லது கொஞ்சம் குயுக்தியாக திங்க் பண்ணுவார்கள் என்று சொல்வார்கள். “நொண்டிக்கு தூத்தியெட்டு கிருத்திருவம்”, “கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது” என்பது போன்ற பழமொழிகளை எங்கள் கிராமத்தில் பலமுறை கேட்டிருக்கிறேன். குறையுள்ளோருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு சிடுசிடுப்பை (cynical attitude) இவை குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

யாரோ என்னை நெருங்கி வருவதுபோல் இருக்கிறதே – டாக்டரின் உதவியாளர் வந்து இந்த கண்மூடி தவத்திலிருந்து என்னை விடுவிக்கப் போகிறாரா? ம்கூம், அவர் சிறிது தேய்த்து தேய்த்து நடப்பார்; floaters வகை செருப்பு அணிந்திருப்பார். இது என்னவோ ஸ்நீக்கர் ஷூ சப்தம் போல் கேட்கிறது. ஒரு தீர்மானமான நடை – நிச்சயம் ஒரு கொஞ்ச வயசு பையனாகத்தான் இருக்க வேண்டும். என் பக்கத்தில் லேசாக என்னை இடித்தாற்போல் அமர்ந்து கொண்டார், அந்த இளைஞர். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவர்களுக்குத்தான் பிறரின்மேல் தன் உடல் படும்போது தோன்றும் கூச்சம் அவ்வளவாக இருக்காது! ஆமாம், இந்தச் சின்ன வயசிலேயே கண்ணில் என்ன கோளாறு இருக்கும்? ஒருவேளை கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருந்ததால் இருக்குமோ, அல்லது சதா மொபைல் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டோ, அல்லது கட்டை விரலால் ஓயாமல் மொக்கை எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டோ இருந்ததால் இருக்குமோ? இப்போதுதான் வாண்டுப்பசங்க கூட கண்ணாடி போட்டிருக்காங்களே! எல்லாம் ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து, எங்கும் எதிலும் கலப்படம் – இவைதான் காரணம். ம்ம். அது மட்டும் ஆசுபத்திரியாக இல்லாமல் வேறு சாதகமான இடமாக இருந்திருந்தால் இந்நேரம் ஆர்கானிக் ஃபார்மிங் பற்றி ஒரு குட்டி லெக்சர் அடித்திருப்பேன். இப்போ நேரம் தோதாக இல்லை. வாயை மூடிக்கொண்டிப்பது தவிர வேறு வழியில்லை.

கண் பரிசோதனைஒரு வழியாக என் கண்கள் திறந்தன! அகக்கண்கள் திறக்க இன்னும் என் தவம் நிறைவடையவில்லை என்றாலும் அன்று என் விழிப்பறைகள் அகலத் திறந்து அவற்றின் அந்தரங்கங்கள் அந்த மருத்துவருக்கு அங்கை நெல்லியென தெள்ளிதில் வெளிக்காண்பிக்கும் தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் வெகு நேரத்திற்குப் பிறகு மருந்திட்ட கண்களை திறந்தவுடன் சிறிது நேரம் எல்லாமே மங்கலாக இருந்தன. பிறகு அறிவிக்கப்படாத மின்வெட்டு நின்று கரண்டு வந்தவுடன் எல்லாமே பிரகாசமடையும் உள்தமிழ்நாடு போல உணர்ந்தேன்.

இப்போது ஒரு பெரிய மெஷின் முன்னால் என் கண்களின் கோளறு பதிகம் காண மருத்துவர் காத்திருக்கிறார். பிறகு மீண்டும் சந்திப்போம், இணைந்திருங்கள் என் உள்ளங்கையில்!

Leave a Reply

Your email address will not be published.