ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

காப்பியென்றால் பேயும் கேட்கும் ஒரு கப்!

“வைGo” மருவி “வைKo” ஆனதுபோல, காஃபி, “காப்பி”யாகி “சூப்பர்” மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், “சூப்பர்” என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து, பழைய இலக்கியங்கள் எதிலாவது ஒரு புலவர் தன் (“போத்தீஸ்” என்று 200 சைஸ் ஃபாண்டில் எழுதப்பட்ட) பிக் ஷாப்பர் பை சகிதம் வந்து, “மன்னா, உங்கள் அழகைப் பற்றி ஒரு ‘சூப்பர்’ பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். கட்டாயம் 25 பொற்காசுக்குக் குறையாமல் கொடுக்காவிட்டால், எதிரி மன்னன் அணியில் சேர்ந்து விடுவேன்” என்று மிரட்டும் வெண்பா எதாவது கண்டுபிடிக்கலாம். சரி நேயர்களே (அந்தக் காலத்தில் “ரேடியோ சிலோனி”ல் ‘ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம்’ இப்படித்தான் அடிக்கடி சொல்வார்!), இப்போது நாம் கதைப்பது காப்பியைப் பற்றியல்லவா!

காப்பி என்பது “கொட்டை வடிநீர் குளம்பி”யைப் பற்றி மட்டும் குறிப்பிடும் சொல் என்றா நினைத்தீர்கள்? அது பிசகு. தேர்வுகளில் நம் மக்கள் அடிப்பது காப்பி. கையெழுத்து படிய வைக்க கையை ஒடித்ததும் காப்பி (நோட்டு)தான். விளம்பரங்களில் வரும் “நறுக்”கென்ற வாசகங்களை எழுதுபவர்களுக்குப் பெயர் “காபி ரைட்டர்கள்”. ஹிந்தியில் எல்லா நோட்டுப் புத்தகங்களையுமே “காபி” என்றுதான் அழைக்கிறார்கள். அடடா, மறந்துவிட்டேனே, கர்நாடக சங்கீதத்தில் “காப்பி” ராகம் மிகப் பிரபலமானது. “ஜகத்தோத்தாரணா” என்று கணீரென ஒலிக்கும் புரந்தரதாஸர் சாகித்யம் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இதே காப்பி ராகத்தில் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை மறைந்த இசைமேதை ஜி.என்.பி அவர்களின் குரலில் கேட்போமா!

விளைந்த காப்பி பழம்

ஆனால் நாம் குடிக்கும் காப்பியைப் பற்றியல்லவா பேசுகிறோம்!

இந்த காப்பியமுதத்தின் சரித்திரத்தை சற்று பிரட்டிப் பார்த்தோமானால் அதன் தாய் நாடு இன்றைக்கு ஆப்பிரிக்காவின் மிக ஏழைநாடுகளில் ஒன்றான ஈத்தியோப்பியா என்பது தெரியவரும். அங்கு ஒரு ஆடுமேய்ப்பவர் தன் மந்தையில் ஒரு ஆடு அங்கு கிடந்த சிவப்பு நிற பழங்களை உண்டுவிட்டு குஷி கிளம்பி ஆடத்தொடங்கியதைக் கண்டார். அப்போதுதான் அந்தப் பழத்தின் கொட்டையில் ஏதோ “விறுவிறுபூட்டும்” சக்தி இருந்ததை அறிந்துகொண்டனர். அப்போது அதனை முதலில் ஒரு மருந்துப் பொருளாகத்தான் எண்ணியிருந்தார்கள். பின்னாளில் அரபு நாடுகள் காப்பியை பெருமளவில் பயிரிடத் தொடங்கின. 17-ம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு காப்பி அறிமுகப் படுத்தப்பட்டது. கர்நாடகத்திலுள்ள “சிக்மகளூர்” (சின்னப் பெண்ணூர்!) மலைப் பகுதியில் முதலில் பயிரிடப்பட்டது. நல்ல லாபம் கொடுக்கும் தொழிலாக அமைந்ததால் காப்பித் தோட்டங்கள் பல மேற்குத் தொடர்ச்சிமலைப் பிரதேசத்தில் தோன்றின. இப்போது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா தவிர வட கிழக்குப் பிரதேசத்திலும் காப்பி எஸ்டேட்டுக்கள் தோன்றியுள்ளன.

காப்பிக் கொட்டையில் பல விதங்கள் உள்ளன. தரத்திலும் வேறுபாடு இருக்கிறது. இந்திய காப்பி வாரியம் நல்ல தரமான காப்பிக் கொட்டைகளை நேரடியாக விற்றுவருகிறது. இவற்றில் முக்கியமான காபி வகைகள்:

 • ரோபஸ்டா
 • அரேபிகா செர்ரி
 • ப்ளேண்டேஷன் ‘ஏ’
 • பீபிரி

இவற்றில் “பீபிரி”தான் ஒசத்தி. எங்கள் அம்மா 60% பீபிரி + 40% Pl.A என்ற விகிதத்தில் கலந்து வறுத்து வைத்துக் கொள்வார். காப்பி போடும் சமயத்தில் கையால் அறைக்கும் இயந்திரத்தில் போட்டு அவ்வப்போதைய தேவைக்கு அறைத்துக் கொள்வார். இதனால் காப்பியின் மணம், குணம் ஏதும் குறையாது.

சிலருக்கு “சிக்கரி” சேர்த்தால்தான் பிடிக்கும். வேறு சிலருக்கோ “ப்யூர்” காப்பிதான் வேண்டும். சிக்கரித்தூள், காப்பி போலல்லாமல், அதன் செடியின் வேரைக் காயவைத்து, வறுத்துப் பொடியாக்குவதன் மூலம் பெருவது. சிக்கரியில் “கேஃபீன்” இல்லை. ஆனால் அதனை காப்பியுடன் கலந்தால் “கும்”மென்று ஒரு “வறுபட்ட” வாசனை தூக்கி நிற்கும். அதனால் இந்தக் கலவையை பலர் விரும்புகின்றனர். மேலும் அது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள். விலையும் காப்பியைவிட மிகக் குறைவு. ஆகையால் சுமார் இருநூறு ஆண்டுகளாக காப்பியுடன் சிக்கரி கலந்து அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. 80% காஃபீ + 20% சிக்கரி “பிளெண்ட்” என்பது இப்போதெல்லாம் “பில்டர் காப்பி”ப்பொடியின் நிலையான அலகாகிவிட்டது.

The cup that peps you up

இன்றைய காலகட்டத்தில் காப்பிக் கொட்டையை வாங்கி, வீட்டில் வறுத்து அரைப்பது என்பது இயலாத வேலை. ஆகையால் காப்பிப் பிரியர்கள் வீட்டிலெல்லம் பொடிதான் வாங்குகிறார்கள். ஆனால் காப்பிப்பொடி கடைகளில், நாம் நமக்குப் பிடித்த வகை காப்பிக் கொட்டையை தெரிவு செய்து, கண்ணெதிரே அரைத்து வாங்கலாம். கூடியவரை பொடி அரைத்த ஒரு மாதத்திற்குள் பயன் படுத்தினால்தான் மணம் போகாமல் இருக்கும். சிலர் 15 நட்களுக்கு ஒரு முறை பொடி வாங்குகிறார்கள். நான் வெகுகாலமாக பெங்களூரிருக்கும் “கோத்தாஸ்” காப்பிப் பொடியைத்தான் பயன்படுத்திவந்தேன். இப்போது சில நாட்களாக “கல்மனே” என்கிற பிராண்டுக்கு மாறி விட்டேன். அது ஏ ஒன் காப்பிங்க.

தென்னக இரெயிவேயில் “ஐ.ஆர் ரூம்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட உணவகங்களிலெல்லாம் “டிகாக்ஷன்” காப்பிதான் கொடுப்பார்கள். அந்த சுவைக்காகவே ரயிலடிக்கு மக்கள் வருவார்கள். குளிர் சாதன வகுப்பு வசதி வருவதற்கு முன்னால் முதல் வகுப்புப் பயணிகளுக்கு “1 pot TC” (‘டிகாக்ஷன் காபி’. ஆனால் சரியான ஆங்கிலச் சொல் ‘decoction’) என்று காலையில் வண்டி வரும் நிலையத்திற்கு தந்தி மூலம் தெரிவிப்பார்கள். இப்போதெல்லாம் “டிகாக்ஷன் காப்பி” என்று யாரும் அழைப்பதில்லை. “பில்டர் காப்பி” என்கிறார்கள். அது சரிதான். காப்பிக்கு பில்டர், இட்லிக்கு கிரைண்டர் போல் ஒரு முக்கியமான சாதனம்.

காப்பி சிறப்பாக அமையவேண்டுமானால் அதன் செய்முறை சரியாக இருக்கவேண்டும். தண்ணீரில் காப்பித் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பின் மேலாக வடித்தும் காப்பி போடலாம். ஆனால் அது தரமில்லாத காப்பி. அதே போல “தயார்நிலை காப்பித்தூள்” (Instant coffee) என்பதும் ஒரு போலி காப்பிதான்! அதைக் குடிக்கும்போது ஏதோ ஒரு வேதியக் கரைசலை பருகுவது போன்ற உணர்வுதான் தோன்றும். இயல்பான காப்பியின் மணத்துக்கும் அதற்கும் வெகுதூரம். காப்பி பில்டரில் வடிகட்டி வரும் காப்பிதான் சிறந்தது, உண்மையானது. இப்போதுமின்சாரத்தில் சுடவைக்கும் பில்டர்கள், காப்பி “பெர்கொலேட்டர்கள்” போன்றவை பாவிக்கப் படுகின்றன. அவைகள் மூலமாகவும் சரியான சுவையைப் பெறமுடிகிறது. நீராவியில் வடித்து செய்யப்படும் “எஸ்பிரஸ்ஸோ” காப்பி ஒரு தனிச்சுவை.

Filter

இதோ ஒரு காப்பி அரிச்சுவடி:

 1. காப்பிப் பொடி நைஸாக அரைக்கப் படக்கூடாது. சிறிது கொரகொரப்பாகத்தான் இருக்க வேண்டும்.
 2. பில்டரின் துளைக்கண்கள் பெரிதாக இருந்தால், பொடியை அதனுள்போட்டு, சிறிது அழுத்திவிட்டு பின் சுடுநீர் விட்டால் காப்பியின் சாறு சரியாக இறங்கும்.
 3. கொஞ்சம் கெட்டியாக பொடியை அழுத்தியிருந்தால் டிகாக்ஷன் இறங்காது. அப்போது, பில்டரின் மேல் விளிம்பில் லேசாகத் தட்டலாம். அல்லது சிறிது நேரம் மூடாமல் விட்டு சொட்டத் தொடங்கியவுடன் மூடலாம். ஆனால் சாதாரணமாக சுடுநீர் வார்த்தவுடன், பில்டரை முடவேண்டும். இல்லையென்றல், வெளிக்காற்று அழுத்தத்தில் சீக்கிறம் சாறு இறங்கிவிடும்
 4. காப்பி பில்டரின் மேல் பாதி அதன் அடிப்பகுதியுடன் இறுக்கமாகப் பொருந்தியிருந்தால்தான், அதனூடே காற்றுப் புகுந்து அங்கு நடக்கும் இயக்கங்களை மாற்றாமல் இருக்கும். இதற்காக பில்டரின் துளை பாகத்தை லேசாக சூடு காட்டிவிட்டு பின் அழுத்தினால், விரிவடைந்த பாகம் இறுகிப் பொருந்தும்.
 5. பில்டரின் மேல்பாகத்தில் மூன்றில் ஒரு பாகம் அளவுக்கு பொடி போடவேண்டும் – அதாவது அழுத்தியபிறகு. அப்போதுதான் மீதி பாகத்தை நிரப்பும் நீர் சரியான விகிதத்தில் இருக்கும்.
 6. தண்ணிரை முழுதுமாக “தளபுள தளபுள” என்று கொதித்தபின் தான் பில்டரில் விட வேண்டும். “முத்துக் கொதி”யெல்லாம் போதாது
 7. கொதித்த நீரை விடும்போது, ஒரே இடத்தில் “சொர்”ரென்று விடக்கூடாது. அந்த இடத்தில் குழி விழுந்து பில்டர் அடிகூட தென்படும் சாத்தியம் இருக்கிறது. பரவலாக சுற்றியபடி பொடிமேல் விடவேண்டும்.
 8. முதலில் சொட்டும் வடிநீர்தான் “கள்ளிச் சொட்டு” என்றழைக்கப்படுகிறது. இது வீட்டின் எஜமானர்களுக்கே உரியது – அது மாமியாராக இருக்கலாம், மருமகளாகவும் இருக்கலாம். சில வீடுகளில் “வீட்டுத் தலைவர்” என்று ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ள நபராகவும் இருக்கலாம். 🙂 ஆனால் அந்த முதல் மரியாதை சொட்டுக்களில்தான் காபி ரசம் முழுதாக இறங்கியிருக்கும்.
 9. முதலில் ஊற்றிய வெந்நீர் வடிந்தபின் மீண்டும் நீர் ஊற்றாதீர்கள். அப்படி காப்பித்தூளின் சாரை முழுதுமாக உறிஞ்சவேண்டும் என்று தோன்றினால், முதல் சுற்று டிகாக்ஷனை ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு நீரை விடுங்கள். இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏனென்றால் இரண்டாவது சுற்றில் இறங்கும் டிகாக்ஷனில் உயிரே இருக்காது. அதை வேண்டுமானால் மாமியாருக்கோ, விருந்தினருக்கோ கொடுத்து சீக்கிறம் விரட்டப் பயன்படுத்தலாம்! அடுத்தமுறை தமிழ்ப்பதிவு நண்பர் யாரேனும் உங்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களின் தரம், நெருக்கம் இவற்றுக்குத் தகுந்தாற்போல், “முதல் டிகாக்ஷனா, இரண்டாவதா” என்பதை முதலிலேயே மனைவியிடம் (சில வீடுகளில் கணவனிடம்) காதைக் கடித்துவிட்டால் நல்லது. குழம்பியில் குழப்பம் கூடாது பாருங்கள்!
 10. பாலை வெகுநேரம் காய்ச்சினால் காப்பியில் ருசியிருக்காது. சீரான வெப்பத்தில், ஒரு முறை பொங்கும்போதே இறக்கி, டிகாக்ஷனை விடவேண்டும். “லாலா” கடை சட்டியில் வத்தவைச்சு, வத்தவைச்சு பாலில் “மலாய்” மிதக்க வைத்துக் கொடுப்பது போன்ற பக்குவம் காப்பி வேலைக்கு ஆகாது.
 11. காய்ச்சிய பாலை காப்பி கலக்க எடுக்கும்போது ஆடையை விலக்கிவிட்டு ஊற்ற வேண்டும். இல்லாவிடில் காப்பி பருகும்போது “திப்பி திப்பி”யாக வாயில் தென்படும். அதனால் காபி பருகும் சுகமே பாதிக்கப்படும்.
 12. காப்பி கலந்த பிறகு ஓரிரண்டு ஆத்தலிலேயே நுரை வரும்படி செய்யவேண்டும். திருப்பி திருப்பி ஆத்தினால் சூடும் போய்விடும், சுவையும் ஓடிவிடும்.
 13. காப்பியை சூடாகத்தான் சாப்பிடவேண்டும். குளிந்த காப்பி என்பது “காப்பி” என்னும் பொதுவான கட்டமைப்பின்கீழ் வராது. அது வேறே ரகம்.
 14. டவரா, டம்ப்ளர் பீங்கான் கப்பில் காப்பி சாப்பிடுவது “ஸ்டைலா”க இருந்தாலும், டவரா, டம்ப்ளரில் ஆத்திப் பருகுவது உங்களின் ரசனையை அதிகரிக்கும். சிலர் கைசூடு பொறுக்க மாட்டார்கள். அவர்கள் இரண்டு சுவர்கொண்ட பாத்திரத்தை பாவிக்கலாம். எங்கள் மாவட்ட ஓட்டல்களில் காப்பி நிரம்பிய டம்ப்ளரை டவராவினுள் தலைகீழாக கவிழ்த்து, ஆனால் காப்பி துளிக்கூட கீழே சிந்தாமல் கொண்டு வருவார்கள்.
 15. சிலர் காப்பி பருகும்போது எருமைமாடு தொட்டியிலிருந்து கழுநீர் உறிஞ்வுவதுபோல் “சர்”ரென்று உறிஞ்சி, மூச்சு விட்டு, பிறகு மீண்டும் உறிஞ்சுவார்கள். வேறு சிலர் வாயில் டம்ப்ளர் படாமல் காப்பியை தூக்கிக் குடித்து அந்த சூடான காப்பி வாயின் கீழண்ணதில் விழும் சுகத்தை அனுபவிப்பார்கள்.
 16. காப்பி பருகும் முன் ஏதாவதொரு காரமான பணியாரத்தை உண்டுவிட்டு – அது சூடாயிருந்தால் இன்னும் நலம் – அதன் பிறகு காப்பியை நாக்கின்மேல் ஊற்றினால் அப்போது கிடைக்கும் விறுவிறுப்பே தனிதான்! மிளகாய்ப் பொடி சேர்ந்த இட்லி-தோசை, காரா சேவு இது போன்றவற்றை கொஞ்சமாவது வாயில் போட்டு மென்னலாம். முதலில் ஏதாவது இனிப்பை உண்டிருந்தால் இது நிச்சயம் தேவை. இல்லாவிட்டால் காபி அதிகப்படியாக கசப்பதுபோல் தோன்றும்.
 17. டிகாக்ஷன் மிகுதியாகி விட்டால் (அதை வெளியே கொட்டுவதற்கு மனமில்லாமலிருந்தால்) குளிர்ப் பெட்டியில் வைக்கலாம். ஆனால் மீண்டும் அதை பாவிப்பதற்கு முன்னால் அடுப்பில் வைத்து சூடு செய்து, அதை இரண்டு ஆற்று ஆற்றிவிட்டு பிறகு கலந்தால் காப்பி சுவை கிடைக்கும். இல்லாவிட்டல் “புளியங்கொட்டை” சுவைதான். பெரும்பாலும் பெரிய மனுஷாள் வீட்டில் வேலையாட்கள் வேண்டா வெறுப்பாகப் போட்டுக் கொடுக்கும் காப்பி இந்த ரகம் தான்.

காப்பியில் சீனி போடாமல் அருந்தினால்தான் காப்பி சுவையை அனுபவிக்கலாம். சிலர் “சக்கரை தூக்கலா” என்று கேட்டு வாங்கி, காப்பியை ரஸ்னாவாக்கி குடிப்பார்கள். இதுபற்றி ஒரு சட்டம் தேவை – காப்பிக்கு இவ்வளவுதான் சர்க்கரை போடலாம் என்று. பொதுவாக அரை சீனியில்தான் பருகவேண்டும். என்னைப் போன்ற பலர் சீனிபோடாமல் குடிக்கப் பழகிக் கொண்டோம். காப்பி கிளப்களில் பரிமாறுபவரிடம் “சர்க்கரை இல்லாமல்” என்று முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். சில ஓட்டல்களில் சர்க்கரை இட்ட பால், இடாத பால் என்று வெவ்வேறு பாத்திரத்தில் வைத்திருப்பார்கள். ஒருமுறை என் இரெயில்வே நண்பர்களுடன் திருச்சியில் ஒரு ஓட்டலுக்குச் சென்றிருந்தபோது, காப்பி கொண்டு வந்தவர் எல்லோருக்கும் கேட்கும்படி “யாருங்க இங்க ‘வித்தவுட்டு’?” என்று கத்தினார்!

சமையல் வல்லுனர்கள் தங்களுக்கே உரித்தான சிறப்பு பரிபாஷையில் காப்பியை இருவகைப் படுத்தி பிரென்சு மொழியில் இவ்வாறு அழைக்கிறார்கள்:

 • café noir (காஃபே ந்வா) = பார் சேர்க்காத காப்பிக் கருப்பன்
 • Café-au-lait (காஃபே ஓ லே) = பால் அல்லது க்ரீம் சேர்க்கப்பட்ட சமர்த்துக் காப்பி

பல நாடுகளில் (இலங்கை உட்பட) காப்பியில் பால் கலக்காமல்தான் கருங்காப்பியாகப் பருகுகிறார்கள். ஆனால் பல நாடுகளில் பால் அல்லது க்ரீம் தனியாக கொடுக்கிறார்கள்.

முன்பெல்லாம் நிறைய “இந்தியா காப்பி ஹௌஸ்” கிளப்புகள் இருந்தன. நல்ல காப்பி கிடைக்கும். காப்பியை “சிப்”பிக் கொண்டே கதை பேசிவிட்டு வரலாம். இப்போது “காஃபி டே”, “பரிஸ்டா” போன்ற மேட்டுக்குடி ரக காப்பிக் கடைகள் பெருகிவிட்டன. அங்கு சென்றால், அழைப்பு மன்றங்களில் (வேறு ஏதேனும் சொல் உள்ளதா?) பணிபுரியும் அழகுப் பெண்கள், அமெரிக்க ஆங்கிலம் அவர்களின் அதரங்களில் தவழ அங்கே அமர்ந்திருப்பதை கண்களால் விழுங்கி, ஜொள்ளிட்டுக் கொண்டே காப்பி சிப்பலாம்!

அமேரிக்கர்கள மொடாக் காப்பிப் பிரியர்கள். ஸ்டார்பக்ஸ் போன்ற கூடங்களுக்குச் சென்றால் பல வகை (லாட்டெ கூட்டே என்று) காப்பி கிடைக்கும். எங்கு சென்றாலும் ஒரு ராக்ஷச சைஸ் காகித லோட்டாவில் காப்பி கொடுப்பார்கள். எனக்கு அங்கு கொலம்பியன் காப்பிதான் மிகவும் பிடித்தது.

காப்பி நம் உடல்நலத்துக்கு நிறைய நன்மைகளை செய்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியின்படி அது நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது என்கிறார்கள். அது தவிர காப்பியில் கலந்துள்ள “கேஃபீன்” என்ற வேதியப் பொருள், “வயாகரா” செய்யும் சித்து வேலையெல்லாம் செய்யும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சி எலிகளின்மேல் தான் நடந்து கொண்டிருக்கிறதாம் (அதுவும் பெண் எலிகள்மேல்!). ஆகையால் மக்கள் அதை “ட்ரை” பண்ணுவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுக்கவேண்டும்! இந்த கூற்று மட்டும் உண்மை என்று நிலைநாட்டப் பட்டால் மக்கள் “டீகேஃப் (decaf)” என்பதையே மறந்து விடுவார்கள்.

இந்திய காப்பி வாரியம்
காப்பி சாஸ்த்ரா

இந்திய காப்பி வாரியம் (Coffee Board) சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேல் சிறந்த சேவை புரிந்து கொண்டிருக்கிறது. காப்பி விளைவிப்பது, பாதுகாப்பது, கொட்டைகளின் பராமரிப்பு, எஸ்டேட் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் காப்பி தயாரிப்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்பான சேவையை அளித்து வருகிறது. காப்பி தொடர்பான அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, காப்பி பற்றி பல பயிற்சி முகாம்களை நிகழ்த்துகிறது. “காப்பி சாஸ்த்ரா” என்பது அவற்றில் ஒன்று. பல புத்தகங்களையும், செய்தி இதழ்களையும் வெளியிட்டு வருகிறது. தவிர, அமர்வுகள், பொருட்காட்சிகள், கருத்தரங்கங்கள் அரங்குகள், உரைக்கோவைகள் இவைபோன்ற பலவித நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

காப்பி பற்றிய விவரங்களங்கிய இன்னொரு வலைத்தளம் இது.

இந்தியாவில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில்தான் காபி அதிகமாக பாவிக்கப் படுகிறது. ஏனைய இடங்களில் டீதான் ஆட்சி செய்கிறது. என்ன இருந்தாலும் காப்பி, காப்பிதான். டீ, டீதான். பானக்களின் சமுதாயப் படிநிலையில் காப்பி மேல் படியில் நிற்கிறது என்பது திண்ணம்.

ஒரு வாய் ஜாவா

இந்தோநேஷியாவில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் காப்பி பயிரிடப்படுகிறது. காப்பி பிரியர்கள் சேர்ந்து வடிவமைத்த “ஜாவா” என்கிற மென்பொருள் உருவாக்கு மொழி இன்று கணினித்துறையெங்கும் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

The cup that peps you up!

லக்ஷ்மி எழுதிய “அரக்கு மாளிகை” நாவலில் மாயியார் குளித்துவிட்டு தன் புடவையை அரைச்சுற்று சுற்றிகொண்டு வரும்போது மருமகள் ஆவி பறக்கும் காப்பியை டவரா, டம்ப்ளரில் கொண்டுவந்து நீட்டுவாள். அதை வாங்கி ஒரு அரை ஆத்து ஆத்தி அப்படியே (தூக்கி) வாயில் விட்டுக் கொள்வாள். மாமியாரின் அன்றைய மூடு எப்படி அமையும் என்பதை அந்தக் கணம்தான் நிச்சயிக்கிறது. காப்பியை மட்டும் சரியாகப் போடத்தெரிந்து விட்டால் அந்தக் கால மாமியார்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம். கல்யாணங்களில் கூட காப்பி அமையவில்லையென்றால் நிச்சயம் தகராறுதான். காலை விடிவதே காப்பி குடிப்பதற்குத்தான் என்பது பலருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. இப்போதுகூட ஒரு கையில் ஹிண்டு பேப்பர்(அது இப்போதெல்லாம் Anti-Hindu வாக மாறிவிட்டதாகக் கேள்வி!), இன்னொரு கையில் காப்பி கப்! இது ஒரு “டாம்-ப்ராம்” (Tam-Brahm) கலாச்சாரமாக (அதுவும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்) தொடங்கி இப்போது பரவலாக கையாளப்படுகிறது.

My cuppa

“பெட் காப்பி” சாப்பிடுவது என்ற ஒரு அருவருக்கத்தக்க பழக்கம் நம் சமூகத்தில் பலரிடம் உள்ளது. பல திரைப்படங்களில் கூட கதாநாயகனோ, கதாநாயகியோ இதுபோல் பல் தேய்க்காமல் சாப்பிடுவதாகக் காண்பிக்கிறார்கள். இதனால் இந்த சுகாதாரமற்ற முறைக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. நாள் முழுவதும் கண்டது, களியது எல்லாம் கடித்து விழுங்கிவிட்டு, பற்களிடையே ஆங்காங்கே தோன்றியிருக்கும் “கைபர், போலன்” கணவாய்களில் ஒட்டிக்கொண்டு அமிலக்கலவையாக ஊறிக்கிடக்கும் ஊத்தையை, காப்பியை கொண்டு கழுவி வயிற்றுக்குள் தள்ளும் இந்த அநாகரிகத்தை எதிர்த்து ஒரு மனித நெக்லேஸ் போராட்டமே நடத்தவேண்டும். “நாங்கள்தான் இரவு படுக்கப் போகுமுன்னேயே பல் விளக்கிவிட்டோமே” என்று (உண்மையில் செய்கிறார்களோ இல்லையோ) பலர் வாதிட்டு தன் சோம்பேரித்தனத்துக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். அப்படியே படுக்கப் போகுமுன் விளக்கினாலும் இரவு தூங்குகையில் நம் வாயினுள் நிகழும் வேதிய மாற்றங்கள், பல் துலக்கும் பிரஷுக்கு எட்டாத இண்டு இடுக்குகளில் சிக்கியிருக்கும் உணவுத் துகட்கள் பல நுண்ணுயிர்களுடன் சேர்ந்து அதனால் தோன்றும் கழிவுப் பொருட்கள் இவைகளை நீக்கி பற்களை சுத்தம் செய்யாமல் எதையுமே வாய்க்குள் போடுவது உடல்நலத்துக்குக் கேடு என்பது ஒருபுரம்; அந்தப் பழக்கமே ஒரு அருவருக்கதக்கது என்பது இன்னொன்று.

“குலதெய்வம்” திரைப்படத்தில் வரும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் “வேலையத்த மச்சான்” பற்றிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது:

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார் – வாய்
கொப்பளிக்கும் முன்னே கொஞ்சம் காப்பியையும்
குடித்துவிட்டார்
குளிக்காமல் சாப்பிட்டு
ஏப்பம் விட்டார் – தன்னைக்
குழந்தைப் போல்
எண்ணிவிட்டார் – எங்க
சின்ன மச்சான்

திரைப்படங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதுபோல் இந்தப் “படுக்கையறை காப்பி”யையும் கட்டாயமாகத் தடை செய்யவேண்டும். மருத்துவர்கள் கவனிப்பார்களா!

Read my English article on the Kumbakonam Degree Coffee shop called “Only Coffee” here.

10 Comments


 1. டீவிரவாதியான என்னை காஃபீயவாதியாக மாற்றிவிடும்போல் இருக்கிறதே உங்கள் பதிவு. காபி தயாரித்து அருந்துவதில் இத்தனை விஷயம் இருக்கிறதா?


 2. “டீவிரவாதியான என்னை காஃபீயவாதியாக மாற்றி”
  ==========================

  கூல்!

  நன்றி.

  எஸ்.கே


 3. Dear SK

  Excellent Post. Verey interesting and informative. I learnt few tips from your Cofee Post. I dont like any of the coffees served in America. Still using the Kothas packed in vaccumed package. I once developed a software for Coffe Board’s requirements for cofee curing plants. In that process travelled to several cofee curing plants in Mangalore, Chockmagaloor, Madikare areas and studied the entire cofee processing business process flow. During that study I had the wonderful experience and privileage of visiting so many cofee estates in western ghats. I never tasted such a quality coffee anywhere else afterwards. In those days such a high varities were used to be exported and Indians get the next level coffee seeds only. All coffee growers had to sell their seeds only to Coffee board. So many regulations. Even an estate owner had to get the Coffee board’s permission to take a bag of coffee seeds for his own home use. Now they deregularized the market, but the competetion is heavy. New markets from countries like Vietnam joined and reduced the price in global market. Several south American coffee groweres were thrown into acute poverty and begging because of the globalized market and competetion.

  Kaa Naa Su used to walk several kilometers for a good cofee. Thi Ja and so many writers were so fond of cofee. In Moga Mull Thi Ja would describe how they used to drink coffee in Kumbakonam college days, in Chombu. Ira Murugan did a small reasearch on the days when coffee was introduced to Tamil bramins and wrote about that in his Arasoor Vamsam. In Madurai Visalam Coffee, a road side coffee shop chain is very famous. In those days each little town owned one famous coffee joint.

  Thanks for a wonderful post

  Regards
  Sa.Thirumalai


 4. காப்பியை இந்தக் கலக்கு கலக்குறீங்களே..
  கலக்கல் பார்ட்டியா இருக்கீங்க..


 5. காப்பிக்கும் டீக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. டீயில் எதை வேண்டுமானாலும் கலக்கலாம். இஞ்சி தட்டிப் போடலாம். ரோஜா இதழ்களைப் போடலாம். எல்லாத்தியும் தாங்கும். காப்பி தொட்டாச்சுருங்கி. வறுக்கும் போது கொஞ்சம் கூடுதலாக வறுத்திருந்தால் பொசுங்கின நாத்தம் அடிக்கும். தொண்டைக்குள்ள இறங்கவே இறங்காது. அரைக்கும்போது நைசாக அரைத்துவிட்டால், டம்ளர் அடியில் வண்டலாகப் பொடி தங்கும். ‘கடேசி வா’ காப்பிய குடிக்கவே முடியாது.

  கொட்டையை வறுத்தல், பொடி அரைத்தல், பில்டருக்குள் பொடியைப் போடும்போது அமுக்காமல் போடுதல், வென்னீரைப் பொடியின்மேல் பட்டும் படாமலும் விடுதல், பாலை சரியான நேரத்தில், சரியான பதத்தில் எடுத்தல், எவ்வளவு டிகாக்கஷனுக்கு எவ்வளவு பால், எவ்வளவு தண்ணீர் என்று சரியான விகிதத்தில் கலத்தல் என்று ஒவ்வொரு நிலையிலும் பக்குவமாகச் செய்ய வல்ல மஹாபக்விகளுக்கு மட்டுமே காப்பியார் வசப்படுவார். அந்த விஷயத்தில் தேநீருக்கு அவ்வளவு சிரமப்பட வேண்டாம்.

  சர்க்கரை இல்லாமல் காப்பி குடிதத்தவனுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். ஒரு முறை குடித்துவிட்டால், அப்புறம் “உயிருள்ளவரை ஒரு சீனியில்லை அவர் என்னீக்கும் காப்பிய விடமாட்டார்” என்று ‘நான் ஆணையிட்டால் பாடத்தொடங்கிடுவாங்க என்பது உத்தரவாதம்.

  அது சரி. டிகிரி காப்பிய எங்க காணும்? நீங்க டிகிரி வாங்கிட்டா போறுமா?


 6. காபி பற்றி காஃபி(ஹிந்தி) விதயங்கள்.

  பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு 🙂 (அந்த மணிக்கும் இந்த மணியனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை :)))


 7. திருமலை, ராம்கி,

  பாராட்டுதலுக்கு நன்றிகள்.

  ஹரி கிருட்டினர்,

  காபி பற்றிய மேலதிக விவரங்களுக்கு நன்றி.
  “டிகிரி” பற்றி எழுத மறந்து விட்டேன். பால்:நீர் விகிதம் சரியான அளவு என்று “பால் மானி” (இவர் “பேமானி”யின் ஒன்று விட்ட சகோதரர்) அதாவது “லேக்டோமீட்டர்” மூலம் கண்டறிந்து “கெட்டியான பால்” என்று சான்றிதழ் பெற்ற பாலை பாவித்தால் அதுதான் “டிகிரி காப்பி”. தண்ணிப்பாலில் கூட நிறைய சக்கரையைக் கலந்து விட்டால் பால்மானி டிகிரி தூக்கிக் காண்பிக்குமாம்!

  எல்லாத் துறைகளிலும் நுணுக்கங்கள் நிறைந்திருக்கின்றன.
  ===========

  மணியன்,

  காஃபீ நன்றிகள். காப்பியை இணையம் வழியாக ஊற்றி உங்களுக்கு அனுப்ப வழியிருக்கிறதா?

  நீங்கள் என் “கடைகழி மகளிர்” இடுகையில் வரும் சமூக நல சேவகர் மணி அவர்களைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்! 🙂

  எஸ்.கே


 8. Excellent SK.

  anbudan
  nara


 9. ஆஹா… எஸ்.கே.

  வழக்கம்போலக் காலைக் காஃபியுடன் கணினி திறந்ததும் வயித்துலே பாலை( டிகிரி)
  வார்த்தாப்புலே ஒரே காஃபி வாசம் !!!!! அனுபவிச்சுப் படிச்சேன்.

  சமீபத்துலே பாண்டி பஜார்லே காஃபிக் கடையைத்தேடி வாசம் புடிச்சுக்கிட்டேப் போய்
  அந்த நரசுஸ் காஃபிக் கடையைக் கண்டு பிடிச்சுத் தூள் வாங்கியாச்சு. அப்பக் கிடைச்ச
  விவரம் 500 கிராம் பொடிக்கு 50 கிராம் சிக்கிரியாம். சிக்கிரி மட்டும் தனியாக் கிடைக்குது.
  அதையும் வாங்கியாச்சு.

  நீங்க இங்கே வந்தீங்கன்னா, அதையெல்லாம் கலந்து நீங்க ‘போடப்போற’ டிக்காஷனைவிட்டு
  தமிழ்மணத்தைப் பத்திப் பேசிக்கிட்டே அந்தக் கள்ளிச் சொட்டைக் குடிக்கலாம்!!


 10. நேற்று ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் என்னைப்போல் திருவாரூர் பக்கத்துக்காரர். மனைவியிடம், காப்பியை ” ஒரு குட்டி ஆத்து ஆத்திக் கொண்டா” என்றார்.

  ஓகோ, இப்படியும் ஒன்று இருக்கிறதோ என்று தோன்றியது!

Leave a Reply

Your email address will not be published.