அவதானம்

தசாவதானி இராமையாஅது தொலைக் காட்சி இங்கு வராத காலம். வானொலிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சும்மா திருகிக் கொண்டிருந்தபோது, இப்போது “அவதானம்” என்னும் நிகழ்ச்சி கேட்கப் போகிறீர்கள் என்ற அறிவிப்பு வந்தது. அது அஷ்டாவதானமா, தசாவதானமா என்று நினைவில்லை. இராமையா என்பவர் நிகழ்த்தினார். தொடர்ச்சியாக ஒன்றுக்கும் இன்னொனற்றுக்கும் தொடர்பு இல்லாத பல செயல்களில் அவரை ஈடுபடச் செய்கிறார்கள். அவர் அவற்றை கோர்வையாக நினைவில் இருத்தி பதிலளிக்கிறார்.

ஒருவர் அவருடைய முதுகில் ஒரு பூவை ஒத்தி ஒத்தி எடுக்கிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளின் முதலடி கூறிவிட்டு ஈற்றடி என்னவென்று வினவுகிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் கேட்கிறார். இதுபோல் பல செயல்கள். இதெல்லாம் முடிந்த பிறகு அவர் வரிசையாக பதிலளிக்கிறார். அடுத்த முறை அந்த வரிசைக் கிரமத்தை மாற்றுவார்கள்.

இத்தனைக்கும் அவர் கண் பார்வை இல்லாதவர். பிறவியிலிருந்தல்ல – இடையில் ஏற்பட்ட நோயின் தாக்கத்தால். அவருடைய மனைவியும் வந்திருந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கண்பார்வை இழப்பதற்கு முன்னால் அவர் தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்த்ததை நினைவில் கொண்டு, அந்த முகத்துடனேயே அவரை இன்னமும் காண்கிறேன் என்று இராமையா அவர்கள் கூறியபோது அதனைக் கேட்டவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்தது.

முன் காலத்தில் அரசர்கள் இந்த அவதானக் கலையைப் போற்றி வளர்த்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

தற்காலத்தில் நினைவாற்றலை அதிகப்படுத்த மாத்திரைகள் வந்துவிட்டன! ஆனால் இதற்கான பிரத்யேக பயிற்சிகளை சிலர் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; விவரம் தெரியாது.

என் பக்கத்து வீட்டுப் பையன் சொல்கிறான், “இதென்னங்க ஜுஜுபி. நாங்கள்தான் ஒரொரு தேர்வுக்கும் உருத்தட்டி ஒப்பிக்கிறோமே” என்கிறான்!

———–

மேலதிக தகவல்கள்:

அந்த “தசாவதானி”யின் பெயர் ராமையா நாடார். கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். இவர் தூர்தர்ஷனிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தற்போது இவருடைய மகன் இராம.கனகசுப்புரத்தினம் என்பவர் பதினாறு கவனகராக (அவதானி) இருக்கிறார். அவர் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். “கவனகர் முழக்கம்” என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார்.

6 Comments


 1. அடேடே வாங்க, வாங்க சைபர்பிரம்மா அவர்களே. நான் விடுத்த கோரிக்கையை ஏற்று திரும்ப வலைப்பூ உலகுக்கு வந்த உங்களுக்கு நல்வரவு.

  நீங்கள் சொன்ன அவதானத்தை நான் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய ஹைப்பர் லிங்குகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்


 2. மிக்க நன்றி, டோண்டு அவர்களே.

  எந்த ஹைபர்லிங்குகளைக் குறிப்பிடுகிறீர்கள்? (நான் கொஞ்சம் மெர்குரி வேப்பர் லேம்ப்!)


 3. சன் டிவியின் தங்க வேட்டை பார்த்ததுண்டா ,அதிலும் ஒரு விதமான அவதான சுற்று இருந்தது.. இப்பொழுது அந்த சுற்றை (ரம்யா கிருஷ்ணனையும் சேர்த்து) தூக்கிவிட்டார்கள் என நினைகிறேன் .. அதில். ஒரு காட்சிப் படம் காட்டப்படும். கூடவே ஒரு கதையும் சொல்லப்படும். அதினிடையே , வித்தியாசமான வண்ணங்கள காட்டப்படும் , ஒலிகள் எழுப்பப்படும். கடைசியில், நீங்கள் பார்த்த ,படத்தில் வந்த நாய்க்குட்டியின் நிறம் என்ன ,என்ற ரீதியில் கேள்விகள் கேட்பார்கள்..


 4. ஹைப்பர் லிங்குகளில் க்ளிக்கினால் கணினி திரை ஒரு புது திரைக்கு மாறுகிறது அல்லது ஒரு புது திரை தனியாக திறக்கிறது அல்லவா?

  அதே போல என் வாழ்க்கையில் சில சொற்களை நான் கேட்ட உடனேயே என் பழைய ஞாபகங்களை புதுப்பிக்கும். அது முக்கால் வாசி என்னுடன் பேசுபவர் சம்பந்தப்பட்டதாக இருக்கும், அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி சமயத்தில் நான் கூட இருந்திருக்கக்கூட மாட்டேன். எப்படியோ எங்கோ சுழன்று எங்கள் இருவரையுமே ஆச்சரியப்பட வைத்து வைத்திடும்.

  உதாரணத்துக்கு சில சுட்டிகள் தருவேன். பதிவுகளுடன் அவற்றுக்கான பின்னூட்டங்களும் முக்கியமே.

  http://dondu.blogspot.com/2006/10/blog-post_10.html
  http://dondu.blogspot.com/2006/10/2.html
  http://dondu.blogspot.com/2006/11/recent.html
  http://dondu.blogspot.com/2006/11/blog-post_09.html
  http://dondu.blogspot.com/2006/11/blog-post_24.html#comments

  அன்புடன்,
  டோண்டு ராகவன்


 5. நன்றி, ஜீவன் அவர்களே.

  தங்க வேட்டை பார்த்ததில்லை. ஒரு மாதிரி பொறாமையாக இருக்கும்!

  நிமோனிக்ஸ்(mnemonics) முறை மூலம் நினைவுக்குக்குக் கொண்டுவரும் பயிற்சியை சிலர் நடத்துகிறார்கள்.


 6. “ஸ்பாம் கர்மா” என்ற நிரலியின் தவறான செயல்பாட்டினால் ஒரு அசிங்கமான பின்னூட்டம் நுழைந்து வெளிவந்து விட்டது தவறுக்கு வருந்துகிறேன். இனி இதுபோல் நடக்காமல் கவனமாக இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *