சிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் கொடுக்கிறார் என்றார்கள். என் ஃபேவரிட் ராஜாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டவர் என்பதால் பி.பி.ஸ்ரீனிவாஸ் எனக்கு பிடிக்காத பாடகராகத்தான் வெகு நாட்கள் இருந்தார்.
ஆனால் அந்த குழைவான bass குரலினிமையை ரசிப்பதை எவ்வளவு நாட்கள் தவிர்க்க இயலும்? “அடுத்த வீட்டுப் பெண்” பாடல்கள்தான் முதன் முதலில் எனக்குப் பிடித்தவை – கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால். சினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமல் கிராமத்தில் வளர்ந்த எனக்கு எங்கள் வீட்டில் இருந்த Tesla ரேடியோ தான் ஒரே இசை ஊற்று. அதன் மூலம் என் செவிகளை வந்தடைந்தவை பல வரலாறு படைத்த பாடல்கள். “காலங்களில் அவள் வசந்தம்”, “நிலவே என்னிடம் நெருங்காதே” போன்ற தேனில் தோய்ந்த பாடல்களுக்கு மயங்கவில்லையென்றால் நான் ஒரு ஜடம்தான்!
லேசான nasal குரல் அவருடையது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.
ஜெமினி கணேசன் தவிர பாலாஜி, முத்துராமன் போன்ற பலருக்கு பின்னணி பாடியிருக்கிறார் பி.பி.எஸ். சத்யனுக்கு குரல் கொடுத்த “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் திருடாதே என்ற படத்தில் சரோஜாதேவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு வாயசைக்கும் “என்னருகே நீ இருந்தால்” என்னும் பாடல் இவர் பாடியதுதான். அதன் வீடியோவைக் காண இங்கே கிளிக்குங்கள் (It will open on an overlay).
“பாதை தெரியுது பார்” என்ற படத்தில் அவர் பாடியுள்ள “தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் சோலையிலே, சிட்டுக் குருவி பாடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது” என்ற பாட்டு செம ஸ்லோ டெம்போவில் நம்மை வருடிக் கொண்டே கிறங்க வைக்கும். அப்படியே காதலியோடு கைகோத்துக் கொண்டு slow waltz ஆடிக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்!
“சூப்பர் சிங்கர்” போட்டிகளில் இன்றும் இவரது எவர்கிரீன் பாடல்கள் பல ஒலித்துக் கொண்டிருப்பதும், அவருடைய பாடல்கள் அடங்கிய சிடிக்கள் நிறைய விற்றுக் கொண்டிருப்பதும் அவர் பெருமையை தொடர்ந்து பறைசாற்றும்!
கண்ணதாசனின் செறிவு மிக்க தத்துவப் பாடல்கள் பலவற்றை பாடியவர் என்ற பெருமை பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு உண்டு:
“ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்” – அப்படியே நம்மை சோகத்தில் உருக வைக்கும்.
“எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!”
என்று தொடங்கும் இப்பாடலின் ஈற்றடியைக் கேளுங்கள்:
“கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!”
” மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்”
என்று தொடங்கும் பாடலில்,
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்….
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்…
இழைந்தோடும் அந்த வரிகள்… பின் “ம்ம்ம்ம்ம்” என்ற ஹம்மிங்கோடு “மௌனமே..” என்று பல்லவி தொடரும். ஆகா, எங்கோ கொண்டு செல்கிறது என்னை!
அவரை டிரைவ்-இன் உட்லண்ட்ஸில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். “பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ்” என்ற பட்டப்பெயர் யரோ அவருக்கு சூட்டியிருந்தாலும் அவர் மிகவும் மென்மையானவர். பழகுவதற்கு எளிமையானவர். அவருடைய குல்லாவைப் பற்றிக் கேட்டபோது “நான் எனக்கு மட்டும்தான் குல்லா போட்டுக் கொள்வேன். பிறருக்கு போட மாட்டேன்” என்றார்! அவர் இயற்றி ஓ.எஸ்.அருண் பாடியுள்ள ஹிந்தி/உருது கஜல் பாடல்கள் கொண்ட இரு ஆடியோ கேஸட்டுகளை அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். நிறைய நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதிய வண்ணம் இருப்பார். கலர் கலராக பலவித பேனாக்களை பாகெட்டில் சொறுகி வைத்திருப்பார்.
தி.நகர் பஸ் நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் போது வழியில் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள அவருடைய வீட்டு வாசலில் இருந்த பெயர்ப் பலகை அறிவித்த அவருடைய கல்வி “B.Com, Hindi Paravin” (or, is it Visharad?) என்று பார்த்த நினைவு இருக்கிறது!
ஒரு பன்முக சாதனையாளராக விளங்கினார் பி.பி.எஸ் அவர்கள். மேளகர்த்தாரகங்களையும், ஜன்ய ராகங்களையும் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக “வைர ஊசி” என்னும் ஒரு “Info-graphics” ஒன்றை உருவாக்கினார் என்று ஒரு செய்தியில் படித்திருக்கிறேன்.
“எதிர் நீச்சல்” படத்தில் நாகேஷுக்கு அவருடைய குரல் ஒத்து வரவில்லை (“தாமரை கன்னங்கள்”). தொடக்கத்தில் அவர் கொடுக்கும் ஹம்மிங் கொஞ்சம் நாகேஷின் முகத்தோற்றத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கும்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் ஹிந்தியிலும் ஆயிரக்கணக்கில் பாடியவர்; அதுவும் கன்னட எம்ஜிஆர் ராஜ்குமாருக்கு முழுதுமே இவர்தான் பாடியிருக்கிறர். கஜல்கள் பல இயற்றியவர் – இப்படி பல பெருமைகள் பெற்ற இவர் கடைசி காலத்தில் அவ்வளவு வசதியாக இல்லை என்று அறிந்த போது மிகவும் விசனமாக இருந்தது.
காற்றில் மிதந்து வருகின்றன இவ்வரிகள் அவருடைய வெல்வெட் போன்ற குரலில்:
“எங்கே வாழ்கை தொடங்கும்,
அது எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை, இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது!”
Permalink
Brilliant & thoroughly exhaustive, to say the least….