நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை – ஓதுவித்து – அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.
அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” – பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு. பிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.
ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.
பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:
“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”
காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!
இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:
- சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,
- ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,
- பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,
- மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,
- சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது
- பெரிய இடத்து சம்பந்தம்
இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.
சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.