ஏனிந்த அவசர வாழ்க்கை? ஏன் இவ்வளவு பரபரப்பு?
நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன?
நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும்?
“அடுத்த வீட்டுப் பெண்”ணில் வரும் “எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது அப்ப அப்போ அப்படி அப்படிதானே நடக்கும்” என்கிற வசனம் என் மனத்துக்கு மிக்க இசைவானது! (யார் அந்த நடிகர் – பக்கிரிசாமியா?)
வாழ்வில் அவசரமே கூடாது என்கிற இந்த எண்ண அலையை பிறிதொரு தொடர்பில் என் ஆங்கில வலையின்பால் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் கோனேரிராஜபுரம் சுப்புணி. அவரை ஒருமுறை “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டேன். வெகு நிதானமாக என்னைப் பார்த்து “சும்மாத்தான் இருக்கிறேன்” என்றார். அவரைப் பார்க்க எனக்கு பொறாமையாக இருந்தது. ஆகா, “சும்மா” இருக்கும் அந்த அற்புத சுகத்தை நம்மால் அனுபவிக்க இயலவில்லையே என்கிற தாபம் மேலிட்டது.
எங்கள் ஊரில் பலர் இவ்வாறு பேசக்கேட்டிருக்கிறேன்.
“வர்ர ஆனில சின்னப்பயலுக்கு கல்யாணம் பண்ணீட்லாம்னு இருக்கேன்”
“யாரு அந்த ‘ஓடும்புள்ள ஒடியாரும்புள்ளையா’ இருப்பானே அவனா? செத்த நேரம் செவனேன்னு இருக்கமாட்டானே. என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் இப்ப?”
“சும்மாத்தான் இருக்கான்”
(அதுவே ஒரு உத்தியோகம் போலும்!)
கிராம வாழ்க்கையின் முக்கிய அங்கமே அவசரமின்மைதான். எங்கள் ஊரில் தங்கள் நிலத்தை சொந்த சாவடி செய்பவர்கள்கூட அவ்வளவு சுறுசுறுப்பாக ஓடிவிடமாட்டார்கள். காவேரியில் பொங்கி, வெண்ணாறு நிரம்பி, வெட்டாற்றில் வடிந்து, பின் “ஷட்ரஸு” திறக்கப்பட்டு ஓடம்போக்கியாற்றில் தண்ணி வந்து, வடிகால் வழியாக நம் “பங்கி”ல் தலைகாட்டியபிறகு சாவகாசமாக குறுவை, தாளடி, நாற்றங்கால் என்று வேலையைத் தொடங்குவார்கள். ம்ம்ம். அது அந்தக் காலம். இப்பெல்லாம் அங்கே ஏது தண்ணீர்!